Thursday, September 17, 2009

சொல்லத் துடிக்குது மனசு...


நட்பு என்னும் ஒற்றை சொல்லில் எத்துனை ஆயிரம்
அர்த்தங்கள்...அபத்தங்கள்..அற்புதங்கள்..சுகங்கள்.. சுவடுகள்..சுமைகள்..காயங்கள்..


எப்போதும், நாம் யாரும், இவருடன் தான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி செல்வது கிடையாது. அது தானாக கனியும் மாயக் கனி. தொடக்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும், இரு உள்ளங்கள் காலம் என்னும் காற்றில் கரைந்து போய்.. நட்பு எனும் சாற்றை பருக தன்னை தயார் படுத்தி கொள்கின்றன. சிறு வயதில் ஏற்பட்ட பல இழப்புகள் எனக்கு எதன் மீதும் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. கடற்கரையின் மிக அருகில் என் வீடு.. பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவர்கள் என் வீட்டிற்கு வந்து வாடா பீச்சுக்கு போயிட்டு வரலாம் என்று என்னை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தாலும் கூட ஒரு குழுவாக கடற்கரைக்கோ, அல்லது வேறு எங்கோ எனக்கு செல்வதில் அப்போது உடபாடு ஏற்பட்டதில்லை.


என் மனம் அப்போது தனிமையைத்தான் அதிகம் விரும்பியது. ஆனால் காலப் போக்கில் மனதில் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய மறைய, மனதுக்குள் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய ஏதோ ஒரு புதிய உறவு தேவைப்பட்டது. அது சக மனிதர்களாக இருக்கலாம். புத்தகங்களாக இருக்கலாம். புதிய இடமாக இருக்கலாம். புதிய பள்ளியாக இருக்கலாம். ஏதோ ஒன்று மனம் புதிதாய் விரும்பியது. அந்த நேரத்தில் எனக்கு பெரிதும் கைக் கொடுத்தது புத்தகங்கள். என்னுடைய முதல் நண்பன் இவன்தான் யாராலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. காரணம் சிறு வயதிலேயே நாம் பலருடன் நட்பை கொண்டாடி இருப்போம், அது நட்பு என்று தெரியாமலேயே!!


அப்படிதான் எனக்கும், ஆனால் எனக்கு நினைவுத் தெரிந்து நான் பெற்ற முதல் நண்பன் வீரா. அவன் மரணத்திற்கு பின்னர் அந்த இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது. மனம் சகித்துக் கொண்ட அத்துனை துயரங்களுக்கும் பின்னாளில் மருந்தாய் அமைந்தது புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்கள் மட்டுமே ஓரளவிற்கு என் நண்பன் வீராவின் இடத்தை பூர்த்தி செய்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.


நமக்கு இருக்கும் அதே பழக்கங்கள் நாம் சந்திக்கும் வேறு யாருக்காவது இருக்குமானால் நாம் அவரை மனதளவில் நேசிக்கத் தொடங்கி விடுவோம். அதற்கு உறவு முறை பின்னாளில் தான் தெரிய வரும். அப்படி எனக்கு கிடைத்த நண்பன் அய்யனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு ஜூனியராய் இருந்தவன். எதையோ கற்றுக் கொள்ள வேண்டும், புதிது புதிதாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எங்கள் இருவரையும் இணைத்த, பிணைத்த பொருளானது.
அணுகுண்டு தயாரிப்பது, லேசர் கருவிகள் செயல்படும் விதம் என அறிவியலின் சகல பரிமாணங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அப்போது எங்களுக்கு கட்டுக்கடங்காமல் இருந்தது. அதற்காகவே நூலகத்திற்கு சென்று பல புத்தகங்களை புரட்டி பார்த்ததுண்டு.


நான் ஒரு தலைப்பு கொடுப்பதும், அந்த தலைப்பின் கீழ் அய்யனார் ஒரு கட்டுரை எழுதி, சில நாட்கள் கழித்து என்னிடம் கொடுப்பதும், என எங்கள் அறிவுப் பசிக்கு அளவே இல்லாமல் போனது. பொதுவாக அறிவியலில் கேள்வி கேட்கும் தன்மையை ஒரு நிலைக்கு மேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கே கேள்விக் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை. சகல விசயங்களையும் கேள்விக் கேட்டு அதற்கான விடை தேடும் பணியை முடுக்கி விடுவோம்.


வானம் என்கிற ஒன்றே இல்லையென்றும், அண்டம் என்பது எல்லைகளற்ற ஒரு வெளி என்றும் அப்போதே நாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருந்தோம். எரி நட்ச்சத்திரங்கள், வால் நட்ச்சித்திரங்கள் என்று பல அண்ட ஆச்சரியங்களை ஆராய்ந்துக் கொண்டே எங்களின் பல இரவுப் பொழுதுகள் கழிந்ததுண்டு.


சுஜாதாவின் அறிவியல் புத்தகங்களை அப்போது தேடி தேடித் படிக்கலானோம். ஆனால் சிலக் காலங்களில் அறிவியலின் மீது இருந்த அதிகப்படியான காதல் கொஞ்சம் குறைந்து இலக்கியங்கள் மீது கொஞ்சம் ஆர்வம் திரும்பியது. மு. வரதராசனார் எழுதிய அகல்விளக்கு நாவலை நாங்கள் இருவரும் படித்தது இன்றி பலர் படிக்கவும் காரணமாய் இருந்தோம். இன்று வரை அந்த நாவலை குறைந்த பட்சம் மூன்று, முறையாவது படித்து இருப்பேன். அப்துல் ரகுமானின் பித்தன், ஆலாபனை கவிதைகளை ஒவ்வொரு வரிகளாக சொல்லி அதன் சுவையை அள்ளி அள்ளி பருகினோம். காம உச்சத்தில் காதலியின் இதழில் வடியும் உமிழ் நீரின் சுகத்தை எங்களுக்கு இலக்கியங்கள் கொடுத்தது.


இன்றும் எங்களின் நட்பின் அடி நாதமாய் திகழ்வது புத்தகங்களுமே, நல்ல எண்ணங்களுமே..
நான் பட்டப் படிப்பு முடித்ததும், எங்களின் குடும்பத்தின் வறுமை கோடுகள் பெரிதாக ஆரம்பித்தது. இருக்க இடம் கூட இன்றி நாடோடிகளாய் கொஞ்சக் காலம் திரிந்தோம். (வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். போக இடமின்றி ஆளுக்கு ஒரு இடமாய் திரிந்த அந்த நொடிப் பொழுதுகள் இன்னும் மனதுக்குள் கனன்றுக் கொண்டே இருக்கிறது)


அப்போது நான் என் அக்கா வீட்டில் இருந்தேன். என் அம்மா அப்பா எல்லோரும் என் அத்தையின் வீட்டில் இருந்தார்கள். ஒரு இரவில் நான் இருக்கும் தெருவில் இரண்டு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொள்ளப்பட அந்த தெருவே போர்க்களமாய் மாறியது.
அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது.. நண்பன் அய்யனாரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும், அந்த நேரத்தில் நான் அவன் அருகில் இருக்க வேண்டும் என்றும் அந்த அழைப்பு பணித்தது. மரணத்தின் வலிகளை, அது தரும் வேதனைகளை மிக நன்றாக அனுபவித்தவன் நான். நெஞ்சம் பட படைக்க உடனே அவனை பார்ப்பதற்காக கிளம்பினேன். ஆனால் எங்கள் தெருவில் நடந்த பிரச்சனைகளால் என்னால் இரவில் வெளியே செல்ல இயலவில்லை. மனம் முழுதும் நண்பனின் சோக முகமே நிரம்பி இருந்தது. காலை விடிந்த உடன் அவரசரமாய் கிளம்பினேன்..
அப்போதும் ஒரு அழைப்பு..


அன்று காலை பத்து மணியளவில் ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்விற்காக வர சொல்லி பணித்தது அந்த அழைப்பு.. நிலைமையை எடுத்து கூறியும் இன்றே கடைசி நாள்.. என்று கூறி விட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த வேலை உணவுக்காக அல்லல் பட்டுக்கொண்டிருந்த காலம் அது. உடனடியாக நண்பன் வீட்டிற்கு சென்றேன். மருத்துவ மணியில் இருந்து இன்னுமா வரவில்லை என்று சொன்னார்கள். சரி அதற்குள் நேர்முகத் தேர்வை முடித்து விடலாம் என்று ஓடினேன். திரும்பி வந்து பார்த்த போது, சடங்குகள் முடிந்து விட்டது. இறுதி வரை அவன் தந்தையின் முகத்தை கூட நான் பார்க்க வில்லை. துக்க நேரத்தில் என் நண்பன் சாய்ந்துக் கொள்ளும் அளவிற்கு என் தோள்கள் வரம் பெற்று வர வில்லை போல் இருக்கிறது. வாழ்க்கையின் வசீகர விளையாட்டில் நாங்க இருவர் மட்டுமே அடிக்கடி சிக்கிக் கொள்வது எனக்கு கொஞ்ச வியப்பாகவே இருந்தது.


ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி தன்னுடைய பட்டப் படிப்பை மிக வெற்றிகரமாய் முடித்த என் நண்பன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சமபளத்தில் வேலைக்கு சேர்ந்தான். மிக வறுமையான சூழலில் அவன் படித்து அந்த நிலையை எட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவன் முடித்தான். அந்த நொடிப் பொழுது என் மனதில் நம்பிக்கை எனும் வண்ணத்து பூச்சி வெவ்வேறு வண்ணங்களுடன் சிறகடித்துப் பறந்தது. அவன் பெற்ற நான் பெற்ற வெற்றியாகவே எனக்கு பட்டது.


இக்கட்டான காலத்தில் அவனுக்கு ஆறுதல் கூட சொல்ல இயலாத நான் எப்படி இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னை இணைத்துக் கொள்வது.. என்று மனம் ஒவ்வொரு முறையும் என்னை கேள்வி கேட்கும். இப்போதும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மானம் கூனிக் குருகும். காரணம் மிக தேவையான ஒரு சூழ்நிலையில் நான் அவன் தேடும் நிலையில் நடந்துக் கொண்டேனே.. அவன் கரங்கள் பற்றி நானல்லாவா அவனுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும்.. என்று மனம் இப்போதும் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து கொண்டே இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் என் நண்பனை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவன் தன்னம்பிக்கைக்கும், விடா முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.. இன்னொரு முறை இதே நண்பனைப் பற்றி மீண்டும் எழுதுகின்றேன்.


Thursday, August 6, 2009

வாசமில்லா மலர்கள்...



நீ எனக்கு நிழல் கொடுக்காத மரம்,
என்றாலும் பல பேருக்கு நான்
நிழல் கொடுக்க காரணமாய்
அமைந்தாய்..



சில மனிதர்களை பார்த்த அடுத்த கணமே நமக்கு பிடித்து விடும். ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பழகினாலும் மனம் ஒன்றாமலேயே அவர்களுடன் பழகிக் கொண்டிருப்போம்.
ஒருவர் மீது நமக்கு காதலோ, மதிப்போ ஏற்பட எது காரணமாய் இருக்கிறது என்பதை யாராலும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. நாம் ஒருவர் மீது அதீத பாசத்துடன் இருப்போம். ஆனால் அவரோ நம்மிடம் ஏனோ தானோ என்றுதான் பழகுவார்.


நாம் அவர் மீது பாசத்தை பொழியவும், அவர் நம் மீது வெறுப்பை உமிழவும் சில நேரங்களில் காரணமே இல்லாமல் போகலாம். எந்த ஒரு மனிதரும் நம்முடன் இறுதி வரை வந்துவிடுவது இல்லை என்கிற ஒரே ஒருக் கூற்றை நம் மனதில் பதிய வைத்துக் கொண்டால் பல நேரங்களில்
வாழ்வில் சிக்கலே இருக்காது.


நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தும்போது எங்கள் பள்ளிக்கு புதிதாக ஒரு தமிழாசிரியர் வந்தார். உத்திராபதி. இதேப் பெயர்தான் எனது சித்தப்பாவுக்கும். ஆனால் அது வரை இந்தப் பெயரை பற்றி சிந்தித்தது இல்லை. காரணம் என் சித்தப்பா எனக்குள் ஹீரோவாக இல்லை. சிறுவர்கள் மனதில் நாம் ஹீரோவாக நாமும் சிறுவர்களாக மாற வேண்டி இருக்கும். தந்தை, மகன் என்ற பாகுபாடின்றி பழகும் குடும்பத்தில் பையனுக்கு அவனது அப்பாதான் எப்போதுமே ஹீரோவாக இருப்பார். காரணம் அப்பா, தன்னை மகன் வயதுக்காரராகவே மாறி இருப்பார்.


ஆனால் ஒருவர் மனதில் நாம் ஹீரோ வாக வேண்டுமென்றால் அவர்கள் வயதுக்கு நாம் மாற வேண்டும் என்பது மட்டுமே நியதி இல்லை. சில நேரங்களில் நாம் அவர்கள் வயதுக் காரர்கள் அல்ல என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வயதுக் காரர்கள் உலகமும் வெவ்வோறு. குழந்தைகள் உலக இதில் தனித்துவமானது. அதில் ஒருபோதும் உங்களால் நுழைய இயலாது. அதில் நீங்கள் நுழையாத வரைதான் குழந்தைகள் மனதில் ஹீரோ.


என் தமிழாசிரியரும் அப்படியே. அவர் ஆசிரியர் என்பதை மறந்து மாணவர்களுடன் மாணவராகவே பழகி வந்தார். ஒன்பதாம் வகுப்பில் அவர் தமிழ் பாடம் எடுக்கும்போது சில மாணவர்கள் தங்களை மறந்து அவரது பாடத்தினை கவனிப்பார்கள். அதில் நானும் ஒருவன். அவரது கம்பீரமும், பலத்த துறை அறிவும் எங்களை வியக்க வைத்தது. போகிற போக்கில் பல விசயங்களை அள்ளித் தெளித்துவிட்டு செல்வார். பாடத்திற்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல விசயங்களை உள் நுழைப்பார்.


வடக்கே வீசும் வாடை, தெற்கே வீசும் தென்றல். என்று ஒரு நாள் மிக வேகமாக ஏதோ ஒரு பாடம் எடுக்கும்போது கூறி சென்றார். எனக்கு மிக வியப்பாக இருந்தது. காற்றில் இதமான தென்றல் என்றால் எந்தப் பக்கம் இருந்து வரும், வாட்டி வதைக்கும் வாடைக் காற்று எந்தப் பக்கம் வரும் என்பதெல்லாம் அந்த வயதில் எங்களுக்கு மிகப் புதிதான செய்திகள்.


மிக வெகுளியாக நான் இருந்த அந்தக் காலக் கட்டத்தில் ஒரு சிலருக்கு என் மேல் கோபம் மட்டுமே வரும். ஒன்னும் தெரியாத வெகுளி என்று எல்லோரும் என்னை ஏளனம் செய்வார்கள். ஆனால் எனது வெகுளித் தனத்திற்கு கூட மிக லாவகமாக கையாண்டவர் அவர். எல்லோரும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்றுக் கூறும்போது, "என்ன அவனுக்கு தெரியாது.. உனக்கு எல்லாமே தெரியுமா? அவன் ஒரு பெக்கூலியர் டைப் உன் வேலையப் பாரு டா என்பார். அந்த வயதில் எனக்கு பெக்கூலியர் என்றால் என்ன என்றேத் தெரியாது. இவரும் நம்மை ஏதோ திட்டுகிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இன்னொரு ஆசிரியரிடம் அதற்கான விளக்கத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்ட பின்னர் தான் எனக்கு அவர் மேல் இன்னும் மதிப்பு கூடியது. என் சக மாணவன் ஆனந்த் அந்த வயதில் படு சுட்டியாகவும், சுறு சுறுப்பாகவும் இருப்பான். நல்ல நிறம், நல்ல அழகு என என்னிடம் இல்லாத அனைத்தும் அவனிடம் இருந்தது. என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று நன்றாக படிப்பேன். ஆனால் அது அவனிடமும் இருந்தது. அவனும் நன்றாக படிப்பான்.


பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவனை மிக நன்றாகத் தெரியும். என்னை சக மாணவர்களுக்கே யார் எனத் தெரியாது. ஆனால் இந்த நிலை எதிர்பாராத விதமாக வகுப்பின் மாணவத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்படியே மாறிப் போனது. நானும் பள்ளி அனைவரது மனதிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கியக் காரணம் ஒன்பதாம் வகுப்பின் என்னுடைய் வகுப்பு ஆசிரியர் திரு. பிலிப், மற்றும் தமிழாசிரியர் திரு. உத்திராபதி இருவரும் என்றால் மிகையாகாது. (இவர்கள் எல்லோரையும் தாண்டி என நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் என் ஆசிரியர் திருமதி புஷ்பராணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.)


எல்லோரும் ஆனந்த் புகழ் பாட என் தமிழ் ஆசிரியரும், வகுப்பாசிரியரும் மட்டுமே என்னை முன்னிலைப் படுத்தினார்கள். எனது தேர்வுத் தாள் திருத்தும்போது என் தமிழாசிரியர் என்னை அழைத்து எங்கே என்ன பிழை செய்துள்ளேன். எதனால் மதிப்பெண்கள் குறைகின்றன என பல ஆலோசனைகள் வழங்குவார். என்னை அழைக்கும்போது ஆனந்த் கூட வருவான். "உன்ன யாரு வர சொன்னா. நீ போ" என்று கூறிவிட்டு, நீதான் அவன கூட்டிட்டு வந்தியா? என்று என்னிடம் செல்லமாகக் கோபப் படுவார். எல்லோரும் முன்னிலைப் படுத்தும் ஒருவனை ஒதுக்கிவிட்டு இவர் என்னை முன்னிலைப் படுத்தும்போது என் மனதில் இனம் புரியாத ஒருவித மகிழ்ச்சி ஏற்படும்.


நீ போ. என்று அவனை சொல்லும்போது என் உதடுகளில் பூக்கும் அந்த மெல்லியப் புன்னகை என் வில்லத்தனத்தின் சான்று. எனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க செய்வதற்காகத்தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார் அப்போது எனக்கு தெரியாது. இப்போது உணர்கிறேன்.


ஒரு முறை பள்ளியில் இருந்து இன்ப சுற்றுலா சென்று இருந்தோம். எந்த இடம் என்பது சரியாக நினைவில் இல்லை. திருச்சியாக இருக்கும் என்று ஒரு உள்ளனர்வு. அன்று ஒரு இரவில் எங்கள் அனைவரையும் ஒரு கோவிலில் தங்க வைத்தனர். எல்லா மாணவர்களும் தூங்கிவிட்டனர். நான், ஆனந்த் தமிழாசிரியர் மூவர் மற்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு பன்னிரண்டு மணி, நல்ல குளிர். "போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசிரியர் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். சக மாணவர்கள் நின்றுப் பேசவேப் பயப்படும் ஒருவர், யாராவது முழித்து இருந்தால் கூட டேய் தூங்கு என்று அதட்டுவார். அவரே எங்களை டீ குடிக்க அழைத்து சென்றது எனக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது. நல்லக் குளிர் காலம், லேசான சாரல். இரவு பன்னிரண்டு மணி. மூவரும் டீ குடிக்க கிளம்பினோம். ஆனால் கோவில் கதவு சாத்தப்பட்டிருந்தது. வேறு ஒரு ஆசிரியரிடம் சாவி இருந்தது. யாரையும் எழுப்ப விரும்பாததால் என் தமிழாசிரியர் இருவரையும் எகிறிக் குதிங்கடா என்றார். ஆனந்த் எகிறிக் குதித்துவிட்டான். ஆனால் என்னால் முடிய வில்லை. எங்கே கதவின் கம்பிகள் என்னைக் கிழித்து விடுமோ என்று பயந்து கொண்டு "நான் வரல சார்.. நீங்கப் போயிட்டு வாங்க என்றேன்" ஒரு பார்வை மட்டுமே பார்த்தார். அடுத்த கணம் நான் கேட்டிற்கு அடுத்தப் பக்கம் நின்று இருந்தேன்.


சாரல் மழையில், நடுங்கும் குளிரில், டீ குடித்துக் கொண்டே மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அப்போது இசைப் பற்றி ஓரளவிற்கு அறிவு இருந்தது. ஆனந்திற்கு இசைப் பற்றி ஒன்றும் தெரியாது. வேண்டும் என்றே நான் இசைப் பற்றி பேச்சு எடுத்தேன். இளையராஜா பற்றி நானும் தமிழாசிரியரும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தோம். இளையராஜா அன்னக்கிளி படத்தில் அறிமுகம் ஆனதில் இருந்து சிம்பனி இசையமைக்க சென்றது வரை பேசிக் கொண்டிருந்தோம். சிம்பனி என்றால் என்ன என்று ஆனந்த் கேட்க காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நான் அவனுக்க விளக்க ஆரம்பித்தேன்.


"இளையராஜாவின் புகழ் எல்லாம் தேவா வெள்ளையம்மா (படம் பெயர் சரியாக நினைவில் இல்லை) படத்தில் அறிமுகம் ஆகிற வரைக்கும் தாண்டா" என்று என் தமிழாரிசியர் பேச்சை தொடர்ந்தார். அவர் தேவா ரசிகர் என்பது எனக்கு பின்னர்தான் எனக்கு தெரியும். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வரும் "ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற பாடலை அவர் ரசித்துப் பாடும்போது நாங்களே மெய் மறந்துப் போவோம். தேவாப் பற்றி தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.


டீக் குடித்து முடித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழித்துக் கொண்டிருப்பவனுக்கு இரவு நீண்டதாகத் தெரியும் என்பார் புத்தர். ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன், மனம் விரும்பும் செயல்களை செய்துக் கொண்டிருந்தால் ஒரு இரவல்ல அனைத்து இரவுமே நமக்கு நொடிப் போல் நகர்ந்து விடும்.


இசை, அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகள் பற்றியும் அன்று நாங்க விவாதம் நடத்தினோம் (அது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்) முழு அளவில் இல்லை என்றாலும் கூட எங்களுக்கு தெரிந்தது வரை பேசிக் கொண்டிருந்தோம்.


இன்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள என் தமிழாசிரியர் என் மனதில் தன்னம்பிக்கை உதிக்கவும், என்னை நானே உணரவும் காரணமாய் இருந்தவர்.


பின் தங்கி இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் இதுப் போன்று ஒரு ஆசிரியர் கிடைப்பார் என்றால் படிப்பு எல்லா மாணவர்களுக்கும் சுகமாய் இருக்கும். சுவையாய் இருக்கும்.


அவர் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவர் பற்றி பேசுவோம்.


Sunday, August 2, 2009

சலனமற்ற வார்த்தைகள்



வார்த்தைகள் வசீகரமானவை. அவை வக்கிரமானவையும் கூட. வார்த்தைகள் வாசமிக்கவை. அவை வலுவானவையும் கூட. வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சலனமுள்ள வார்த்தைகள் சில நேரங்களில் சலனமற்றும் போய் விடுகின்றன.


தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் எந்த ஒரு பொருளும், உயிரும் மிக அழகானதாக தோற்றமளிக்கக் கூடியவை. சூரியன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது சூரியன். இல்லையேல் அது மடிந்துப் போன நட்சத்திரம். மனிதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அவன் மனிதன். இல்லையேல் அவன் பிணம். இயங்கிக் கொண்டே இருபது அழகு என்றாலும் ஒருவகையில் இயங்காமல் இருப்பதும் அழகுதான். குட்டைபோல் தேங்கி இருக்கும் நீரும், தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நதி நீரும் ஒரே குணங்கள் கொண்டவைதான். இருக்கும் இடங்களும் அதன் இயக்கமும் தான் வேறுபடுகின்றது. வார்த்தைகளும் அப்படிதான். இயங்கிக் கொண்டே இருக்கும் வார்த்தைகள். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள். இரண்டும் ஒரே பண்புக் கொண்டவைதான். ஆனால் அவை உபயோகிக்கப்படும் இடங்களை பொருத்து அதன் பண்புகள் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.



பெண்களிடம் திருமணத்திற்கு முன்னர் நாம் பேசும் வார்த்தைகளுக்கும், திருமணத்திற்கு பின்பு நாம் பேசும் வார்த்தைகளுக்கும் அதீத வேறுபாட்டை உணர முடியும். வார்த்தை ஒன்றுதான். ஆனால் காலம் மாறும்போது அவற்றின் குணமும் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஒரு சில வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகிக்க முடியாது. ஒரு சில வார்த்தைகளை அந்தரங்கமாக பயன்படுத்த முடியாது. ஒரு சில வார்த்தைகளை தாய் தந்தையுடன் உரையாட எடுத்தாள முடியாது. உறவு முறையைப் பொருத்து நாம் வார்த்தைகளையும் மாற்றிப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள்தான் சில நேரங்களில் மனிதர்களை மாக்களாக மாற்றுகின்றன.


பொது இடங்களில் தனிப்பட்ட மனிதனையோ, ஒரு குழுவையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தகாத வார்த்தைகளால் திட்டினால் அது ஏற்படுத்தும் விபரீதம் அளவிட முடியாதது. வெறும் வார்த்தைகள் தானே விட்டுவிடுவோம் என்று யாரும் நினைப்பதில்லை. காரணம் வார்த்தைகள் சலனமற்று இருந்தாலும், அவை பேசுபவர்களை சலனப் படுத்தி விடும் வல்லமை பெற்றவை.


கோபத்தில் பேசிவிட்டேன். வாய்தவறி பேசிவிட்டேன் என்று சொல்வது எல்லாம் ஒரு விதமான பம்மாத்து வேலை. ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் நமது எண்ணங்களே நமது வார்த்தைகளை ஒழுங்கமைக்கிறது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கணவன் மனைவி இடமோ, அல்லது மனைவி கணவனிடமோ ஒரு முறை கூறினால் பேச்சு வாக்கில் வந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திவிட்டு கோபத்தில் பேசிவிட்டேன் என்றோ, வாய்தவறி வந்து விட்டது என்றோ கூறினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.


சில நேரங்களில் இந்த வார்த்தையை பேசினால் கேட்பவர் மனம் புண்படுமே என்று நாம் பேசுவதை தவிர்த்து இருப்போம். ஆனால் மிக உக்கிரமான வேளையில் அந்த வார்த்தைகள் நம்மை தாண்டி வெளியே வந்து குதித்து விடுகின்றன. இது அந்த நொடியில் ஏதோ தானாக வந்துக் குதித்த வார்த்தைகள் அல்ல. நம் ஆழ் மனதின் தவிப்பை கட்டுக்கடங்க செய்யும் வார்த்தைகளின் வேலைதான் இது. சில நேரங்களில் வார்த்தைகள்தான் நம்மை ஒழுங்கமைக்கின்றன. நமது கோபத்திற்கு வார்த்தைகள்தான் வடிக்காலாக இருக்கின்றன. ஆனால் அந்த வார்த்தைகள் யாரை சென்று சேர்கிறதோ அவரின் மனம் படும் பாட்டை நாம் ஒருநாளு உணர்ந்ததில்லை. உணரப் போவதும் இல்லை.


மன்னிப்பு என்பதும் வார்த்தைதான். மன்னித்துவிட்டேன் என்பதும் வார்த்தைதான். ஆனால் நம்மில் எத்துனை பேர் இந்த வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துகிறோம். தெருவில் நடந்துப் போகும் போது, தெரியாமல் யார் காலையாவது மிதித்துவிட்டால் நம்மையறியாமல் நமது வாயில் இருந்து மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தை உதிர்ந்துவிடுகிறது. அவர்களும் இதழோர சிரிப்பின் மூலம் மன்னித்துவிட்டேன் என்கிற வார்த்தையை நம்மிடம் உதிர்க்கிறார்கள்.



யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் காலை மிதித்ததற்கே மன்னிப்பு கேட்கும் நாம், நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர், தாய், தந்தை, என நெருங்கியவர்களிடம் பேசும் தகாத வார்த்தைகளுக்கு என்றாவது ஒருநாள் மன்னித்துவிடுங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்போமா? ஒரு பைசாவிற்கு பயன்படாத மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தையை நாம் ஏன் பயன்படுத்த மறுக்கிறோம். காரணம் ஈகோ என்பார்கள். நம்மை நேசிக்கும் சிலரை நாம் காயப்படுத்தும்போது சில நேரங்களில் அவர்கள் நம்மிடம் முன்புபோல் சரியாக பேசாமல் வார்த்தைகளை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் தவறு செய்யும் நம்மில் எத்துனை பேர் அதனைப் புரிந்துக் கொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி இருப்போம்.


வெறும் வார்த்தைகளை பயன்படுத்தி மட்டுமே பயன்படுத்தி ஒருவனை வாழ்நாள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். ஆனால் நாம் யாரும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவதில்லை. உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் ஒருவர் உங்களிடம் சரியாகப் பேசாமல் போனால் ஒரு நாள் முழுவதும் அவரிடம் அன்பாகப் பேசுங்கள். வெறும் வார்த்தையை மட்டும் பயன்படுத்துங்கள். பணம், பொருள் எதுவும் வேண்டாம். அடுத்த நாள் உங்கள் உறவின் பலம் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும். சலனமற்ற வார்த்தைகள் சில நேரங்களில் சலனத்தை மட்டுமல்ல, மிகப் பெரிய மாறுதலையும் ஏற்படுத்தும். வார்த்தைகளை வாசமிக்கதாக மாற்றுவதும், துர்நாற்றம் வீசுவதாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளதேத் தவிர வார்த்தைகள் ஒருபோதும் தங்களை எப்படியும் மாற்றிக் கொள்வது இல்லை. நாமும் வார்த்தைகளாக இருப்போம். சலனத்துடன்.

Monday, July 27, 2009

கண்ணீருக்காகக் காத்திருக்கும் கண்கள்.




கண்ணுக்கும், இமைக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் முள் போன்றது சில நினைவுகள், சில உறவுகள். இந்த முள் சில நேரம் மனதை மலடாக்கும் மகா சக்தி படைத்தது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி என்று நமக்கு எத்தனை சொந்தங்கள் தானாக வாய்க்கப்பட்டிருந்தாலும், நாம் விரும்பி தேர்ந்தெடுக்கும் சொந்தம் ஒன்று உண்டு.

அது நட்பு. இதை உறவு என்று சொல்வதா? உரிமை என்று சொல்வதா? உயிர் என்று சொல்வதா? தெரியவில்லை. எப்படி இப்படி ஒரு உறவு நமக்கு வாய்த்திருக்கிறது? இயற்கை (கடவுள்??) மீது இன்னமும் என் நேசம் மாறாமல் இருப்பதற்கு இந்த உறவும் ஒரு முக்கியக் காரணம்.

இதுதான் இன்னது என்று தெரிவதற்கு முன்னரே நாம் பல விசயங்களை இழந்து இருப்போம். ஒரு பொருளின் அருமை நமக்கு புரியும் முன்னரே அதனை நாம் தொலைத்துவிட்டு இருப்போம். அது நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம். எப்போதும் ஒரு குழுவாகவே நாங்கள் திரிந்துக் கொண்டிருப்போம். வீரா, சண்முகம், சந்திரன், சுரேஷ் என்று மிகப் பெரியப் பட்டாளம் அது. இதில் வீராவிற்கு எப்போது என் மேல் அதீத பாசம் உண்டு. எனக்காக சக நண்பர்களிடமே சண்டை போடுவதும், உடல் நிலை சரியில்லாதக் காலங்களில் எனக்காக இறைவனை வேண்டி அவன் கோவில் கோவிலாக திரிவதும் என்று அவன் என் மேல் வைத்திருந்த அளவுக் கடந்த பாசம், நான் உணர்வதிற்குள்ளாகவே என்னை விட்டுப் பிரிந்து போயிருந்தது.

ஒரு முறை கொட்டிவாக்கத்தில் இருந்த முந்திரி தோப்பில் நானும் எங்கள் பட்டாளமும் சென்று முந்திரிப் பழம் திருடி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் தோப்பின் உரிமையாளர் வந்து விட்டார். இதனை அறிந்த அனைத்து சக நண்பர்களும் அடிச்சுப் பிடிச்சு சுவரைத் தாண்டி ஓடி விட்டனர். எனக்கு அந்த சுவரை தாண்ட தெரியவில்லை. தோட்டக்காரர் மிக அருகில் வந்து விட்டார். நானும் வீராவும் மட்டுமே அப்போது அங்கே இருக்கிறோம். திடீரென்று வீரா முட்டிக்கால் போட்டு, "நீ ஏன் மேல ஏறிப் போடா அருண்" என்றான். நான் அவனைப் பற்றி சிந்திக்காமல், மாட்டிக் கொண்டால் வீட்டில் அடிப்பார்களே என்ற எண்ணத்தில் அவன் மீது ஏறி சுவரை தாண்டி சென்று விட்டேன். ஆனால் வீரா அந்தத் தோப்பின் உரிமையாளரிடம் மாட்டிக் கொண்டான். வீராவின் தந்தைக்கு இந்த செய்தித் தெரிந்ததும் அவனை சகட்டு மேனிக்கு அடித்துள்ளார். உடல் முழுவதும் காயங்களுடனும், முட்டிக்காலில் பெரிய புண்ணுடனும் மறு நாள் பள்ளிக்கு வந்தான். என்னைத் தப்ப வைப்பதற்கு அவன் முட்டிக்கால் போட்ட போது கீழே இருந்த கற்கள் குத்தி அவன் காலில் பெரிய புண்கள் தோன்றி இருந்தன. அவன் அதனை கூட பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை. நானும் "எப்படி டா தப்பிச்சே" என்று கேட்டதோடு முடித்துக் கொண்டேன்.

மிக சிறிய வயதில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் என் மீது அன்பைப் பொழிந்தவன். எனக்கோ மற்ற நண்பர்களுக்கோ யார் மீதும் இந்த அளவிற்கு பாசம் இருந்தது இல்லை. வீராவிற்கு என் மீது பாசம் ஏற்படக் சிறப்பு காரணங்கள் ஏதும் இல்லை. அவன்தான் எனக்கு இடைவேளை நேரத்தில் தின்பண்டங்கள் வாங்கித் தருவான். எனக்கு வீட்டில் கொடுக்கும் பத்துப் பைசாவில் என் வயிறே நிரம்பாது. பிறகு எங்கே நான் அவனுக்கு செலவழிப்பது. சில நேரங்களில் வீராவிற்கு தெரியாமல் கடைக்கு வந்து பத்துப் பைசாவிற்கு கல்லாக்கா வாங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்பிற்கு ஓடி விடுவேன். ஆனால் ஒருபோதும் அவன் இப்படி செய்யமாட்டான். எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டு அவன் உண்ணாமல் இருந்த பல பொழுதுகளை நான் கண்டிருக்கிறேன்.

சாலையோரம் அமைந்துள்ள என் பள்ளியின் மீது எப்போதும் எனக்கொரு பற்று இருக்கும். ஆசை இருக்கும். காரணம், பல்வேறு விசயங்களை, பொருட்களை, மனிதர்களை வேடிக்கைப் பார்க்கும் பழக்கம். ஆனால் அதே சாலையோரப் பள்ளிதான் எனக்குள் அழிக்க முடியாத பல இரணங்களை உண்டு பண்ணியது.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை இரண்டு வழிப் பாதைதான். மிகக் குறுகிய சாலை. இந்தக் குறுகிய சாலையை நாங்கள் கடக்க எப்போதும் எங்கள் விளையாட்டு ஆசிரியர் உதவி செய்வார்.

ஒரு நாள் இடைவேளை முடிந்து வகுப்பறைக்கு அனைவரு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் வீராவை விட்டு மற்ற நண்பர்களுடன் வந்துக் கொண்டிருதேன். எப்போது என் கைப்பிடித்து நடப்பதே வீராவுக்கு பிடித்த விஷயம். என்னைத் தேடி மிக அவசரமாய் அவன் சாலையைக் கடக்க முயன்றான். மிக வேகமாய் வந்த அரசுப் பேருந்து..????

அவன் மீது இடிக்காமல் திடீரென பிரேக் பிடித்து நின்றது. ஒட்டுமொத்த பள்ளிக்கூடமே ஒரு கணம் நிசப்தமானது. பேருந்து ஓட்டுனர் மிக அவசரமாய் கீழே இறங்கி வந்தார். வீராவை அடிக்கப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் பயந்து போய் நின்றுக் கொண்டிருந்தோம். வீரா அருகே வந்த ஓட்டுனர் மிக அமைதியாய் "பாத்துப் போடா செல்லம்".. என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இன்றளவிலும் என் மனதில் ஹீரோவாக திகழும் அந்த ஓட்டுனர் பற்றி மற்றொருப் பதிவில் பார்ப்போம்.

அதே நாள் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம். வீரா என்னிடம் வந்து "நாளைக்கு காலைல எங்க வீட்டுக்கு வாடா. இன்னைக்கு நானும் எங்க அப்பாக் கூட மீன் பிடிக்கப் போறேன். காலைல வந்தா நான் பிடிச்ச மீனா கொழம்பு வச்சி சாப்பிடலாம்" என்றான். நானும் சரிடா என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.

என் வீடு கடற்கரைக்கு கொஞ்ச தூரத்தில் தான் இருந்தது. எனவே தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து கடற்கரைக்கு சென்று என்ன என்றே தெரியாமல் எதையோ ரசித்துக் கொண்டிருப்பேன். என் தாய் பல முறை என்னை திட்டுவார். அபோதைய என் வயதில் ஐந்து மணிக்கு எழுந்து கடற்கரைக்கு போவது என்பது யாரிடமும் இல்லாத பழக்கம்.

அதே போல் அன்றும் கடற்கரைக்கு சென்றேன். கடற்கரை முழுதும் ஒரே கூட்டம். ஒரு நாளும் நான் இவ்வளவு கூட்டத்தை அதிகாலையில் கண்டது இல்லை. என்ன என்றுப் புரியாமல் நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென் ஒரு பெண் "ஐயோ... ஐயோ... என தன் மார்பில் அடித்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு முகம். ஆம் வீராவின் தாய். நானும் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். நான்கு பிணங்கள் கடற்கரையில் ஒதுங்கி நின்றது. வயிர் முழுவதும் காற்றடித்துப் போன பையாக ஊதிப்போய் அசைவுகள் அற்று பிணமாய் நான் பார்த்த அந்த நான்கு முகங்களில் ஒன்று நண்பன் வீராவின் முகமும் அடக்கம்.

கண்கள் கண்ணீர் வடிக்க வில்லை. பயந்துப் போய் வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு நாட்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்துக் கண்டு மசூதிக்கு சென்று எனக்கு மந்திரித்து விட்டார்கள்.

மீண்டும் முதல் வரியைப் படியுங்கள். இது வரை சக நண்பர்கள், தாய் தந்தை, என யாரிடமும் நான் பகிர்ந்துக் கொள்ளாத ஒரு சம்பவம் இது. இன்றும் கடற்கரைக்கு சென்றால் என் ஒருத் துளிக் கண்ணீராவது கடலலையுடன் கலக்கும். நான் தொடங்கும் எந்த நல்ல செயலையும் கடற்கரையில் தான் தொடங்குவேன். யார் இவன், என் மீது உயிராய் இருந்தவன். ஆனால் ஏன் என் மனம் அவனது நட்பை, அந்த வயதில் புரிந்துக் கொள்ளவில்லை. இன்று கற்பனையில் அவனோடுதான் என் மனம் வாழ்கிறது. அவன் மரித்த அந்த நாளில் கண்ணீர் வடிக்காத என் கண்கள் இன்று அவனுக்காக கண்ணீர் வடிக்க காத்திருக்கிறது. ஆனால் அந்த வயதில், இருந்த மிக பரிசுத்தமான மனம் வடிக்கும் கண்ணீரைத்தான் என் கண்கள் விரும்புகிறது. புழுதியாய் மாறிப் போன இன்றைய எந்திர வாழ்வில் நான் அவனுக்காக வடிக்கும் கண்ணீர் அவன் ஆத்மாவை அசிங்கப்படுத்துவது போல் தோன்றுவதால், இன்றும் என் கண்கள் பரிசுத்தமான கண்ணீருக்காகக் காத்திருக்கிறது.

இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில நாட்களாய் மனதில் ஒரு வெறுமை நிலவுகிறது. தன் வெற்றிடத்தை பூர்த்தி செய்துக் கொள்ள அது எதையோத் தேடுகிறது. வீரா என்னை நேசித்துப் போல என்று சொல்ல முடியாது என்றாலும், நான் என்னளவில் மிகச் சிறந்த நண்பர்களாய் நினைத்துக் கொண்டிருந்த எனது இரு நண்பர்களும் ஒரே விஷயத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என் மனதை காயப்படுத்தியதை என் நண்பன் வீராவிடம் தான் சொல்லி அழ வேண்டியிருக்கிறது. தன் தாயை பல நாட்கள் பார்க்காத குழந்தை ஒரு நாள் பார்க்கும்போது "அம்மா" என்று அழைத்துக் கொண்டே ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொள்ளும்போது, குழந்தை முகத்தில் அதன் தாய் எச்சிலை உமிழ்ந்து ச்..சிப் போ என சொன்னால் அந்தக் குழந்தை மனம் என்ன வேதனை அடையுமோ, அத்தகைய வேதனைதான் நான் அடைந்தேன், என் நண்பர்களால்.

(இதையே பின்னொரு நாள் படிக்கும்போது அந்த சின்ன விசயத்திற்காகவா இவ்வளவு வேதனைப் பட்டோம் என்று மனம் தன்னைத் தேற்றிக் கொள்ளும். இருந்தாலும் உடனடி தேற்றுதலாக இந்தப் பதிவு இருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை எவ்வளவு காயப் படுத்தினாலும் என் நண்பர்கள் எனக்கு நண்பர்களே. என் காயத்தை ஆற்றும் மருந்தும் அவர்களே...நான் அவர்களை மிகவும் நேசிப்பதால்தான் அவர்களை சிறு தவறுகளும் கூட என்னைக் காயப்படுத்துகிறது. இந்த நேசிப்பு ஒரு போதும் குறையாது.)


Saturday, July 25, 2009

தேடி வந்தத் தலைமை



அண்மையில் பார்த்த பசங்க திரைப்படத்தில் ஒரு காட்சி. வகுப்புத் தலைவனை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். அப்போது சில மாணவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுவார்கள். கள்ள ஓட்டுக்கள் சில சமயம் சிலர் வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றி விடும். நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அதுவரை எனது ஆசிரியர் புஷ்பராணி அவர்களை தவிர்த்து என்னை யாரும் அவ்வளாவாக கண்டு கொள்ள மாட்டார்கள்.


ஒரு சராசரி மாணவனாகவே பள்ளி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து அதில் வெற்றிப் பெற்று ஒன்பதாம் வகுப்புக்கு சென்றோம். மூன்று நாட்கள் கழித்து வகுப்பு மாணவத் தலைவனை தேர்வு செய்ய வகுப்பாசிரியர் தேர்தல் நடத்தினார். அப்போது பள்ளி முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்த மாணவர்களான, ஆனந்த் மற்றும் அசின் எனும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இருவருக்கும் மாணவர்கள் மத்தியில் சம ஆதரவு உண்டு. இந்த இருவரும் உலக நடப்புகள் அறிந்தவர்கள். பார்ப்பதற்கு புத்திசாலி மாணவர்கள் போல் இருப்பார்கள். (உண்மையிலேயே இருவரும் புத்திசாலி மாணவர்கள்தான்.) என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவர்கள். அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். போட்டி தேர்தலில் மட்டுமே!!. யார் வென்றாலும் இருவரும் வென்றது போல்தான். அவர்களை எதிர்த்து வேறு யாரும் தேர்தலில் நிற்கவும் இல்லை.


வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. வகுப்பு முழுவதும் ஒரே சப்தம். இறுதியில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஆசிரியர் வாக்குகளை எண்ணத் தொடங்கினார். கடைசி ஒட்டு சீட்டை எண்ணி முடித்தார். வகுப்பு மாணவர்களை எண்ணத் தொடங்கினார். வருகைப் பதிவேட்டை சரிபார்த்தார். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 54. வருகைப் புரிந்தவர்கள் 52. பதிவான வாக்குகள் 57. கள்ள வோட்டுப் பதிவாகியுள்ளதை ஆசிரியர் கண்டுபிடித்து அனைத்து மாணவர்களையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் கள்ள வோட்டு போட்டது யார் என்று யாரும் சொல்லவில்லை. நானும் என் பங்குக்கு அனைத்து மாணவர்களையும் பார்த்து அடப்பாவிகளா. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு சாலையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். மீண்டும் ஆசிரியர் தேர்தல் வைப்பார். வாக்கைப் பதிவு செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் பேசத் தொடங்கினார். ஜனநாய முறைப்படி உங்களுக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் தேர்தல் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் போய் பாருங்கள். வகுப்பாசிரியர்தான் மாணவத் தலைவனை தேர்ந்தெடுப்பார். இப்ப சொல்லுங்க எண்ணப் பண்ணலாம், என்றார்.


அனைவரும் சொன்னது மறுத் தேர்தல். ஆசிரியர் சொன்னார். உங்களுக்கு எல்லாம் ஜனநாயகம் சரிப்பட்டு வராது. இந்த வகுப்பு மாணவத் தலைவனை நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்றார். அனைவரையும் முறைத்துப் பார்த்தார். வகுப்பு முழுவதும் ஒரே நிசப்தம். ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றேத் தெரியாமல் நான் சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசிரியரின் கை என் பக்கம் நீண்டது. இவன் தாண்டா இனிமே உங்கள் வகுப்புத் தலைவன் என்றார். நான் யார் அது என்றுத் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் என்னையேப் பார்த்தனர். பின்னர் தான் தெரியும் வகுப்புத் தலைவன் நான்தான் என்று.


ஒன்றும் புரியாமல் ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இங்க வாடா என்றார். இனிமே இவன்தான் வகுப்புத் தலைவன். எல்லாரும் அவன் சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கணும் என்றார். அந்த வயதில் அதுதான் அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் பதவி போன்றது. என் கண்கள் என்னையே நம்பவில்லை. அதுவரை நான் ஒரு அப்பாவி. யாராவது என்னைத் திட்டினால் கூட சிரித்து விட்டு வருவேன். innocent என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் அதற்கு சரியான வார்த்தை இளிச்ச வாயன். அந்த வயதில் நான் ஒரு இளிச்ச வாயன். ஆனால் என்ன நினைத்து என் ஆசிரியர் என்னை வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியாது. போகிறப் போக்கில் அவர் விரல்கள் என்னை சுட்டிக் காட்டின. அதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை சற்றே புறம் தள்ளப்பட்டு என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு அது. இன்று நான் சிறுவயதிலேயே பக்குவப்பட்டு இருப்பதாக மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. Run lola Run என்கிற திரைப்படத்தில் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள். அப்படிதான் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நொடி அது. என் ஆசிரியரின் விரல்கள் வேறு யாரையாவது சுட்டிக் காட்டி இருந்தால் நான் இன்னமும் கிணற்றுத் தவளையாகவே இருந்து இருப்பேன். சிறகை விரித்து பறக்கும் பறவையாய் மாற்றி விண்ணை அளக்க வைத்த என் ஆசிரியர் திரு. பிலிப் அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.


Monday, June 29, 2009

இன்னும் என்ன செய்யப் போகிறாய். (கல்லறை சுவடுகள்)



"எந்த ஒருப் பொருளையும் இழக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது"
---ஆத்தங்கரையோரம் நாவலில் திரு. வெ. இறையன்பு அவர்கள்

அது டிசம்பர் மாதம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என அனைத்து பாட ஆசிரியர்களும் எங்களை வாட்டியெடுத்த காலமது. ஒன்பதாம் வகுப்பின் காலாண்டுப் பரிட்சையில் நான் முதல் ரேங்க் எடுத்தேன். அதன் பிறகு அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததே இல்லை. பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களின் முகமும் ஏதோ ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தியவாறே இருக்கும். எப்போதும் எந்த விஷயத்திலும் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று முழுதும் தெரிந்தது. ஒன்று கொஞ்சம் தெரிந்தது. ஒன்று ஒண்ணுமே தெரியாதது. இதில் எல்லாம் தெரிந்தவர்களும், ஒண்ணுமே தெரியாதவர்களும் எதற்கும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அப்படித்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இங்கே யாருக்கும் எந்த ஒன்றும் முழுமையாக தெரியாது. அதனால்தான் எப்போதும் எதிலும் பதட்டம். சில மாணவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எப்போதும் போல் பெண்களை கேலி செய்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் மூன்றாவது வகை. இதே போல் தான் எனதுப் பள்ளியிலும் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் மிகவும் பதட்டத்தோடு படித்துக் கொண்டிருந்தார்கள். அரையாண்டுப் பரீட்சை முடிந்து மூன்றாம் இடைப் பருவத் தேர்வு என்று ஒன்று வைப்பார்கள். இந்தத் தேர்வுதான் என்னால் எப்போதும் மறக்க முடியாத தேர்வு... இந்தக் காலக் கட்டத்தில்தான் எனது குடும்பம் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்டிருந்தது.


ஆனால் எனது அக்கா திருமண வயதில் இருந்ததால் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு பெரும் தொகை தேவை. எனவே அந்தத் தொகைக்காக என் தாய் நாள் தோறும் ஒவ்வொரு சொந்தக்காரரிடத்திலும், தெரிந்தவரிடத்திலும் பணம் கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு அது பற்றியெல்லாம் பெரியக் கவலை இல்லை. காரணம் என் கவனம் முழுதும் படிப்பின் மீதே இருந்தது. முதல் ரேங்க் என்கிற அந்த இடத்தை விட்டுக் கொடுக்க என் மனம் மறுத்தது. எனவே குடும்ப விசயங்களில் நான் அதிகமாக தலையிடுவது இல்லை. எனக்கு அந்த அளவுக்கு விவரமும் கிடையாது.


அன்று... அக்கா கல்யாணத்துக்காக அண்ணன் வேலை செய்யும் கம்பெனி முதலாளியிடம் கடன் கேட்க சென்று இருந்தார் என் அம்மா. எனக்கோ அன்றுதான் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைத் தாள் கொடுக்கும் நாள். தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளும் ஆவலுடன் பள்ளிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தது போலவே எல்லா பாடங்களிலும் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் சமூக அறிவியல் பாடத்தில் நான் பெற்ற மதிப்பெண்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. காரணம் என் ஆசிரியர் எனக்குக் கொடுத்து இருந்த மதிப்பெண்கள் நூத்துக்கு நூறு. எப்போதும் எனது சமூக அறிவியல் ஆசிரியர் நாங்கள் தேர்வில் எடுத்து இருக்கும் மதிப்பெண்களுடன் பத்து மதிப்பெண்கள் அதிகமாக கொடுப்பார். அதற்காக நாம் தேர்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் வீட்டில் பதில் எழுதிக் கொண்டு வர வேண்டும்.


இந்த முறை நான் நூத்துக்கு நூறு மதிப்பெண் பெற்றதனால் எனக்கு அந்த மதிப்பெண் கிடைக்காது என்று சக மாணவர்கள் என்னை வெறுப்பேற்றினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி வந்திருந்தேன். எனவே ஆசிரியரிடம் சென்று முறையிட்டேன். அவரோ "அதுக்கு ஏண்டா கவலைப் படறே.." அதுக்கு என்ன இப்போ.. அந்தப் பத்து மார்க்கையும் உனக்கு போட்டுடறேன் என்று கூறி நூத்துக்கு நூத்திப் பத்து மதிப்பெண் போட்டுக் கொடுத்தார். இந்த சாதனை மதிப்பெண்களுக்காக எல்லா மாணவர்களும் எழுந்து நின்று எனக்காக கைத் தட்டி என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என் ஆசிரியர் கேட்டுக் கொண்டார். எல்லோரும் எழுந்து நின்று கைத் தட்டி என்னை வாழ்த்தினார்கள்.


அந்த சமயம்... எனது சத்துணவு ஆசிரியர் உள்ளே வந்தார். எனது சமூக அறிவியல் ஆசிரியரிடம் ஏதோ பேசிவிட்டு "அருண் கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வா என்றார்". எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன்.. எதற்கு என்று கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தேன். என் சமூக அறிவியல் ஆசிரியர் வீட்டுக்கு போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார். (அப்போது எங்கள் வீட்டுத் தண்ணீர் மிகவும் ருசியாக இருக்கும். எனவே எல்லா ஆசிரியர்களும் எங்கள் வீட்டுத் தண்ணீர்தான் வாங்கிக் குடிப்பார்கள்.)


நானும் ஒன்றும் புரியாமல் வீட்டுக்கு சென்றேன். பள்ளியில் அனைத்து மாணவர்களும் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு அவர்களுக்காகவே ஏதோ பேசிக்கொண்டார்கள். என் வீட்டுக்கு போகும் வழியெங்கும் ஒரேக் கூட்டம். எல்லோரும் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் உடல் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கத் தொடங்கியது.

நான் வீட்டில் உள்ளே நுழையும்போது யாரோ ஒருவர் "ஐயோ அருணே" என்று கதறி அழுதுக் கொண்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்தக் கதறல் அவரின் அடித் தொண்டையில் இருந்து வந்தது. இதேப் போன்றுக் கதறலை நான் இதற்கு முன்னும் கேட்டு இருக்கிறேன். அது என் அண்ணனின் மரணத்தில். இப்போதும் கேட்கிறேன். என்ன ஆனது என்றே எனக்கு தெரியவில்லை. இதயம் பட படக்க கண்கள் எனக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. வீட்டின் உள்ளே சென்றேன். ஏதோ ஒரு சப்தம் ஐயோ.. எரியுதே.. ஐயோ எரியுதே..என்று எனக்கு முகம் சரியாகத் தெரியவில்லை. உற்று நோக்கினேன். தீயில் கருகிய என் அக்காதான் அந்த சப்தத்திற்கு சொந்தக்காரி.


திடுக்கென என் இதயமே நின்றுப் போய் விட்டது போன்று இருந்தது எனக்கு. காலையில் தான் என் அக்கா கையால் சாப்பாடு வாங்கித் தின்று விட்டு பள்ளிக்கு சென்றேன். இரண்டு மணி நேரத்திற்குள் என் அக்காவை இந்தக் கோலத்தில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்ன செய்வது எனக்கு தெரியவில்லை. அப்போது என் அம்மா, அப்பா, அண்ணன்கள் யாரும் வீட்டில் இல்லை. அண்ணன் கம்பனிக்கு சென்று இருந்த அம்மாவை அழைத்து வரும்படி அருகில் இருந்தவர்கள் என்னை அனுப்பினார்கள். என் அம்மா ஹார்ட் பேசன்ட் என்பதால் விஷயத்தை நேரடியாக அவரிடம் சொல்லக் கூடாது என்று நானே எனக்குள் நினைத்துக் கொண்டேன். அண்ணன் கம்பனிக்கு சென்றேன்.


எண்ணப் பார்த்ததும் என் அம்மா இந்த நேரத்தில் இங்கே ஏண்டா வந்த.. ஏன் ஸ்கூல் இல்லையா? என்றார். நான் இல்லமா வீட்டுக்கு வா.. என்றேன். ஏன் என்றார். வீட்டுக்கு வா சொல்றேன். என்னடா ஆச்சு சின்ன அண்ணன் யாருக் கூடவாவது சண்டப் போட்டுட்டு வந்திருக்கானா என்றார். இல்ல மா நீ வீட்டுக்கு வா என்று கையைப் பிடித்து அவரை அழைத்து சென்று ஆட்டோவில் உட்கார வைத்துவிட்டு என் அண்ணனிடம் நீயும் வீட்டுக்கு வா என்றேன். ஏண்டா என்றார். "அடித்தொண்டையில் இருந்து வார்த்தை வந்தது.. தேவி செத்துப் போச்சு அண்ணா" என்றுக் கதறி, தலையில் கை வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துக் கொண்டேன்.


அண்ணனும் ஒன்னும் புரியாமல் என்னைத் தேற்றி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். வீட்டில் ஆட்டோ நுழையும் முன்னரே கூட்டத்தைப் பார்த்த என் அம்மா வீட்டில் ஏதோ நடந்து விட்டது என்று அறிந்துக் கொண்டார். என் சட்டையைப் பிடித்துக் கேட்டார். என்னடா ஆச்சு.. சொல்லுடா என்றார். என் கண்கள் தாரை தாரையாய் நீர் வடித்து. வார்த்தைகள் நெஞ்சுக் குழிக்குள்ளேயே அடைத்துக் கொண்டது. ஆட்டோவை விட்டு விழுந்து அடித்துக் கொண்டு என் அம்மா உள்ளே சென்றார்.


ஐயோ தேவி அம்மா.. உன் பொண்ணு நம்மள எல்லாம் விட்டுப் போய்ட்டாளே.. என்று எல்லோரும் அம்மாவை பிடித்துக் கொண்டு அழுதனர். உள்ளே சென்று அக்காவை அந்தக் கோலத்தில் பார்த்த அம்மா................................................. மேலே சொல்லுவதற்கு எனக்கு தெம்பில்லை. நானும் மனிதன் தானே... ஒரு தீ விபத்தில் என் அக்கா சிக்கிக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால், பக்கத்து வீட்டுக் காரர்கள் வரும் முன்னரே அவள் முற்றிலும் எரிந்துப் போய் விட்டால். ஆனால் உயிர் மட்டும் இன்னமும் இருந்தது. அது தெரியாமல் எல்லோரும் அவள் செத்து விட்டதாக எண்ணி அழுதுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே ஆம்புலன்சிற்கு போன் பண்ணி வரச் செய்தார்.


எங்கள் நேரம் போன் செய்தவர் தீ விபத்து என்று கூறிவிட்டதால் ஆம்புலன்சிற்கு பதிலாக பையர் எஞ்சின் வந்து விட்டது. ஊரே எங்கள் வீட்டின் முன் கூடி விட்டது. பையர் என்ஜினில் என் அக்காவைத் தூக்கிக் கொண்டு நானும் என் அண்ணனும் மட்டுமே சென்றோம். செல்லும் வழியில்தான் என் பள்ளி. என் ஆசிரியர் முதற்கொண்டு மாணவர்கள் அனைவரும் என்னையே பார்த்து அழுதுக் கொண்டு இருந்தார்கள். சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனியில் கொண்டு சேர்த்தார்கள். அங்கே தீக்காயப் பிரிவுக்கு அழைத்து செல்ல வந்திருந்த ஒரு நபர் எவ்ளோ பணம் இருக்குப்பா என்று என் அண்ணனை கேட்டார். என் அண்ணன் ஒன்றும் புரியாமல் முதலில் ஹாஸ்பிட்டலில் சேர்த்துக்குங்க.. பணம் கொண்டு வந்துடறோம்.. என்றார். ஹாஸ்பிட்டலில் சேர்க்க பணம் தேவை இல்ல தம்பி.. என்ன முதல்ல கவனி.. நூறு ருபாய் இருக்கா என்றார். என் காதுகளில் என் அக்காவின் முனகல் சப்தம் கேட்டது. நொடிந்துப் போய் நானும் என் அண்ணனும் அங்கே உட்கார்ந்துக் கொண்டோம்.


அதற்குள் எங்கள் சொந்தங்கள், ஊர் மக்கள் என அனைவரும் அங்கே வந்து விட்டனர். நூறு ரூபாய்க் கொடுத்தப் பின்னர் மட்டுமே அந்த நபர் சேர்க்கைக்கு அனுப்பினார். எந்த நோய்க்காக அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் முதலில் க்ளுக்கோஸ் தான் ஏற்றுவார்கள். தீக்காயத்திற்கும் அப்படிதான். நாங்கள் தான் பரபரப்பாக கண்ணீரோடு அங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வந்து பார்த்து விட்டு சென்றார். வழக்கம்போல் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அக்கா இறந்து விட்டாள்.


நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இதேப் போன்று தான் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அண்ணனின் நண்பர் வந்து உங்கள் அண்ணன் செத்துப் போயட்டாண்டா என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இதேப் போன்றுதான் என் சின்ன அண்ணன் வந்து சித்தப்பா செத்துப் போய்ட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது யாரோ ஒருவர் வந்து என் அக்கா செத்துவிட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். வறுமை கூட என்னை சிதைக்கவில்லை. ஆனால் தொடர் மரணங்கள் என்னை நிலை குழைய செய்தது.


என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மூன்று வருடங்களும் தொடர்ந்து ஒவ்வொருவராக அதுவும் டிசம்பர் மாதத்தில் தான் இறந்துப் போனார்கள். இன்றும் கூட எனக்கு குடும்ப நண்பர்களோ, அல்லது தெரியாத எண்ணில் இருந்தோ யாரவது போன் செய்தால் என் இதயம் பட படக்கும். கைகள் நடுங்கும். காரணம் ஏதாவது இறப்பு செய்தியாக இருக்குமே என்று. அந்த மூன்று மரணங்களும் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது.


ஆனால் என் அக்காவின் மரணம் என்னை நிலை குழைய செய்தது. எனக்கு முன்னர் பிறந்தவள் என் அக்கா. அவள் இறந்த முன் தினம் அவளது பிறந்த நாள் கொண்டாடி என் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. தொடர்ந்து ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த எங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என் அக்கா. பாசத்தை கொட்டி வளர்த்தார்கள். நான் மட்டும்தான் அவளிடம் எந்நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் அவள் இறப்பதற்கு முந்தைய நாள் அவளுடன் சண்டையே போடாமல் இரவு முழுதும் நானும் அவளும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். மறு நாள் இரவோ நான் மட்டும் கதறி கதறி அழுதுக் கொண்டிருதேன். இப்போதும் தொடர்ந்து சிரிக்க நேர்ந்தால் என்னையும் அறியாமல் என் மனம் என் சிரிப்பைக் கட்டுப்படுத்தும். காரணம் இன்னொரு மரணத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி என் மனதிற்கு இல்லை.


வறுமை சுற்றி சுற்றி அடித்தாலும் என் அக்கா கேட்டப் பொருட்களை மட்டும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து அவள் மீது உயிரையே வைத்திருந்த என் தந்தை அன்று நொடிந்துப் போனார். அன்று முதல் அவர் யாரிடமும் பேசுவதே இல்லை. ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசுவார். அதுவரை நண்பர்களாக இருந்த அண்ணன் தம்பிகள் அனைவரும் சரியாகப் பேசிக் கொள்வதுக் கூட இல்லை. இப்போது தான் ஏதோக் கொஞ்சம் நிலைமை மாறி அனைவரும் சரியாகப் பேசிக் கொள்கிறோம்.

ஒரு மரணம் பல மனிதர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது.


Sunday, June 28, 2009

தாஜ்மஹால்


புத்தகங்கள் படிப்பதும், ஏதாவது கலை சார்ந்த வேலைகள் செய்வதுமே எனது பள்ளி நாட்களில் பிரதான பொழுதுபோக்கு எனக்கு. எனது தந்தை கட்டிட ஒப்பந்தகாரர் என்பதால் இயல்பாகவே எனக்கும் கட்டிடக் கலை மீது அதிக ஈடுபாடு உண்டு. பள்ளிக்கூட நோட்டில் உள்ள அட்டைகளை பிரித்தெடுத்து அவற்றில் இருந்து வித விதமாக பல புகழ் பெற்ற கோவில்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் என்று செய்துக் கொண்டிருப்பேன். அப்படி நான் இறுதியாக செய்தது தாஜ்மஹால்.

அப்போது நாங்கள் பாலவாக்கத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். வடக் கிழக்கு பருவ மழை காலமது. மழையை பொதுவாக ரசிக்கும் நான் அதனை வெறுத்த காலமும் இதுதான். காரணம் இறுதியில். மேலும் அது அரையாண்டு தேர்வுகள் முடிந்து வீட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தாஜ்மகாலின் வடிவம் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. தாஜ்மகாலைக் கட்டுவது மிகவும் சவால் நிறைந்தது. அதுவும் அப்போது எனக்கு இருந்த வசதி வாய்ப்புகள் மிகக் குறைவு. சோற்றுப் பருக்கைகள், நோட்டின் அட்டைகள் (பைண்டிங் சீட்), நோட்டில் உள்ள வெள்ளைத் தாள்கள், ஒரு கத்தரிக்கோல் இவைதான் எனது மூலதனம். எனவே தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டுவது அப்போது எனக்கு மிகவும் சவால் நிறைந்த பணியாகவே பட்டது.

ஆனால் பார்த்து பார்த்து (Reference image) செய்வதற்கு என்னிடம் தாஜ்மகாலின் புகைப்படம் இல்லை. எனவே ஐம்பது பைசாவிற்கு ஒரு தீப்பெட்டி வாங்கி அதன் பின்புறம் இருந்த தாஜ்மகாலின் புகைப்படத்தை reference ஆக வைத்துக் கொண்டேன். மிக சிறிய அளவில் இருந்த அந்தப் புகைப்படம் எனக்கு பல விபரங்களை துல்லியமாக தரவில்லை. இருந்தாலும் கிடைத்த விபரங்களை வைத்து தாஜ்மஹால் கட்டும் பணியைத் தொடங்கினேன். கிட்டத் தட்ட மிகப் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போல் நானும் பல திட்டங்கள் தீட்டி கட்டுமானப் பணியை தொடங்கினேன். ஆனால் அதற்கு சிறு சிறு செலவுகள் ஆகும். எனவே எனக்கு என் பெற்றோர் கொடுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை முதலீடாக வைத்து திட்டம் தீட்டினேன்.

எனது நோட்டுகளில் இருந்த அட்டைகள் ஏற்கனவே தீர்ந்து போய் விட்டது. எனவே முதலில் நோட்டு அட்டைகளை சேகரிக்கத் தொடங்கினேன். குப்பைத் தொட்டிகள், சாலையோரங்கள் என கண்ணில்படும் இடங்களில் எல்லாம் நோட்டு அட்டைகளைத் தேடினேன். இந்த விஷயத்தில் எனக்கு குப்பைத் தொட்டிகள்தான் பெரிதும் உதவின. "உங்கப் பையன் குப்பை தொட்டியிலேல்லாம் குப்பை பொறுக்கிக்கிட்டு இருக்கான்" என்று யாரோ என் தந்தையிடம் சொல்லி வைக்க, நான் ஏதோ குப்பைகளைப் பொருக்கி அவற்றைக் கடையில் போட்டு தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதாக நினைத்துக் கொண்ட என் தந்தை என்னை பின்னி எடுத்துவிடார். இருந்தாலும் சளைக்காமல் நோட்டு அட்டைகளைத் தேடினேன்.

தேவையான நோட்டு அட்டைகள் கிடைத்த உடன், அவற்றை தேவையான வடிவங்களில் கத்தரித்து சோற்றுப் பருக்கைகள் கொண்டு ஓட்டினேன். ஆனால் தாஜ்மகாலின் ஒரு சில இடங்களில் கண்ணாடி கதவுகள் இருக்கும். இவற்றை எப்படி செய்வது என்று விழி பிதுங்கி நின்றேன். சிலக் கண்ணாடித் துண்டுகளை பொருக்கி வந்து அவற்றையும் கத்திரிக்கோலால் நறுக்கி என் கைகள் முழுவது இரத்தக் கரை படிந்த நினைவுகள் இன்று இனிக்கிறதே தவிர வலிக்கவில்லை. ஆனால் அன்று வலிப் பொறுக்க முடியாமல் கதறினேன். என் கைகளில் இரத்தத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் என் தந்தை அதுவரை நான் செய்து வைத்திருந்த அத்தனையும் தூக்கி எரிந்து விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு நான் செய்து வைத்த அந்த தாஜ்மகாலின் பாகங்கள் மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போனது. மனசு கேட்கவில்லை. மீண்டும் இருந்த அட்டைகளைக் கொண்டு தாஜ்மகால் செய்யத் தொடங்கினேன். இப்போது கண்ணாடி கதவுகளுக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். எங்கள் வீட்டில் அப்போது டேப் ரெக்கார்டர் இருந்தது. கேசட் மூலம் பாட்டுக் கேட்கும் வழக்கமும் இருந்தது. அந்தக் கேசட் இருக்கும் பெட்டி கண்ணாடி போன்ற பிளாஸ்டிக்கால் ஆனது. ப்ளாஸ்டிக்கை சுலபமாக கத்தரிக்கோலால் வெட்ட முடிந்தது. அதுவும் தேவையான வடிவத்தில். யாருக்கும் தெரியாமல் சிலப் பல கேசட்டுகளை எடுத்து அவற்றின் பெட்டிகளை எடுத்து கத்தரித்து வைத்துக் கொண்டேன்.

முன் பகுதி, பின் பகுதி, தேவையான சுவர்கள் என அனைத்தும் தயார். ஆனால் அதன் மேற்புறம் இருக்கும் அந்தக் குண்டு வடிவம் மட்டும் நான் எவ்வளவோ முயன்றும் என்னால் செய்ய முடியவில்லை. இதற்கு மட்டுமே நான் அப்போது ஐந்து நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சரியாக சாப்பிடாமல், யாரிடமும் சரியாக பேசாமல் ஐந்து நாட்களும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஆறாவது நாள் என மனதில் உதித்தது அந்த யோசனை. சிகரட் அட்டைகள் தான் அப்போது எனக்கு உதவியது. காரணம் அவைதான் எப்படியும் வளையும். பின்னர் மிக தத்ரூபமாக அந்தக் குண்டு வடிவத்தை செய்து முடித்தேன். தாஜ்மகாலின் நான்குப் புறமும் இருக்கும் அந்தத் தூண்களையும் சிகரட் அட்டைகளை வைத்துக் கொண்டே செய்து முடித்தேன்.

பின்னர் வெள்ளைத் தாள்களை வைத்துக் கொண்டு தாஜ்மஹால் முழுவதும் வெள்ளைப் பூசினேன். அதாவது வெள்ளை தாள்களை ஓட்டினேன். சோற்றுப் பருக்கைகள் மூலம் ஓட்டும்போது அவை சுருங்கி சுருங்கியே இருக்கும். அந்த சுருக்கம் போக சில மணித்துளிகள் ஆகும். அதன் பின்னர் தான் அடுத்தப் பக்கத்திற்கு வெள்ளைத் தாள்கள் ஓட்ட முடியும். இவ்வாறாக ஒரு மாதம் முழுவதும் சரியாக உணவு உண்ணாமல், நண்பர்களை மறந்து, விளையாட்டை மறந்து, வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல், மிக நேர்த்தியாக அந்த தாஜ்மகாலை கட்டி முடித்தேன். அவ்வப்போது என்னை மிரட்டினாலும், அடித்தாலும் எனது ஆர்வம் கண்டு என் தந்தை என்னை அப்படியே விட்டுவிட்டார். தாஜ்மஹால் கட்டி முடித்ததும் அதை பார்த்து என் தந்தை ஒரு சிரிப்பு செய்தார். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

புன்னகை மூலம் மட்டுமே நாங்கள் இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நேரமது. எங்கள் தெருவில் உள்ள அனைவருமே அந்த தாஜ்மகாலைப் பார்த்து என்னை பாராட்டி விட்டு சென்றனர். நான் மிக மகிழ்ச்சியாக இருந்த நேரமது.

அன்றைய இரவுப் பொழுது.

மழை பின்னி எடுத்துக் கொண்டிருந்து. எங்கள் குடிசை காற்றி பறந்து விடும் போல் இருந்தது. அவ்வளவு அசுரக் காற்று. மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்துக் கிடந்தது. ஆனால் இது எதுவும் தெரியாமல் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை.

நான் ஆசை ஆசையாய் செய்து வைத்து அழகுப் பார்த்துக் கொண்டிருந்த தாஜ்மஹால் காணாமல் போய்விட்டது. துடி துடித்துப் போனேன். கண்களில் நீர் வடிய தாஜ்மகாலைத் தேடிக்கொண்டிருந்தேன். இறுதியாக தாஜ்மஹால் தென்பட்டது, காகிதக் கூழாக. வெளுத்து வாங்கிய மழை, எடுத்துக் கொண்டுப் போனது என் சந்தோசத்தையும் சேர்த்துதான். சோற்றுப் பருக்கை, அட்டை, வெள்ளைத் தாள் என எதுவும் மழையை தாங்கவல்ல பொருட்கள் அல்ல. மழைக் காலத்தில் இந்த பணியை செய்யக் கூடாது என்று எனக்கு தெரியவில்லை. காகிதக் கூழைப் போன என் தாஜ்மகாலை தொட்டுப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது என் விரல்களிளின் வீக்கம். இரத்தக கரை படிந்த என் கைகள். தாஜ்மஹால் செய்ய கண்ணாடியை வெட்டும்போது, என் விரல்கள் வெட்டுப்பட்ட அந்தக் காயம் ஆறும் முன்னர் என் மனதில் ஆறா காயம் ஏற்படுத்தியது அந்த மழை.


எத்துனை நாள் உழைப்பு, எத்துனை தியாகங்கள், எவ்வளவு அடி அதனையும் வீணாய்ப் போனதே என்று அப்போது நான் சிந்திக்கவில்லை. அந்த பருவத்தில் எனக்கு அந்த இழப்பு சில மணி நேரங்கள் மட்டுமே துக்கத்தை தந்தது. பின்னர் மீண்டும் சொந்தமாக திட்டம் தீட்டி (லே அவுட்) ஒரு வீடு (நோட்டு அட்டையில்) கட்டத் தொடங்கிவிட்டேன்.


Tuesday, May 26, 2009

என் சகோதரன் (சக உதிரன்)



மரணம். மாறாத ரணத்தை எற்படுத்துவதாலேயே அதற்கு மரணம் என்று பெயர் வந்ததோ என்னவோ. ஒரு சில மரணங்கள் ஒரு சிலரது வாழ்க்கையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை கொண்டது. ஆதிகாலத்தில் மரணம் குறித்த பயம் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுள்ள குடும்பப் பிணைப்பு அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உறவுகள்தான், இந்த அன்புதான் நம்மை நிலைகுலைய செய்கின்றன. 

அது, நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் சொந்த வீட்டை விற்று பல வருடங்கள் கழித்து தற்போதுள்ள தரமணியில் 1400 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக குடிசைக் கட்டிக்கொண்டு குடியமர்ந்தோம். அன்றைய நாளில் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சுகம் ஏற்பட்டது. மீண்டும் சொந்த வீடு. மிக அழகான இடத்தில். நல்லக் காற்று, பக்கத்தில் கல்லுக்குட்டை எனப்படும் ஆறு, மிக ரம்மியமாக இடம். முதல் வேளையாக ஒரு செடியை வைத்து அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கினேன். அங்கு அப்போது தண்ணீர் வேண்டுமென்றால் அவரவர் இடத்தில் கிணறு தோன்டிக்கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் வீட்டில் பின்புறத்தில் கிணறு தோண்ட ஆயத்தப்பட்டோம். என் ஆசைக்காக முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு வைத்திருந்தார்கள். நான் செடி வளர்ப்பதற்காக அந்த இடத்தை விட்டு வைக்க சொன்னேன். நிறைய செடிகள் நட்டு வைத்து பக்கத்து கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினேன். எங்கள் கிணறு தோண்டும் பணி பாதி நிறைவடைந்தது. அப்போது எனக்கு தெரியாது கிணறுத் தோண்டும் பணி இதோடு நின்று விடும் என்று. 

தரமணியில் இடம் வாங்கிவிட்டு குடிசைக்கட்ட அப்போது என் தந்தை ஒருவரிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில நாட்கள் கழித்து கடன் கொடுத்தவர் வந்து என் அம்மாவிடம் கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டி விட்டு சென்றார். இதனை கண்ட என் மூத்த அண்ணன் எப்படியாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். முதலில் சொன்னது போல் என் மூத்த அண்ணனுக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதனால் அவரை யாரும் வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது இல்லை. ஆனால் நிலைமையை உணர்ந்து அவரே அந்த வேலைக்கு சென்றார். 

நானும் பள்ளிக்கூடம் செல்வதற்காக கிளம்பினேன். . அதுவரை மகிழ்ச்சியாக இருந்த மனம் அன்று கொஞ்சம் துவண்டது. காரணம் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். மிக நீண்ட தொலைவு. நடந்து வரும் வழி ஒரு காடு. அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவு. ஒருவித பயம் என்னை ஆட்க்கொண்டிருந்தது. நடந்து நடந்து கால்கள் வலிக்க பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் சாயங்காலம் இதே தொலைவு நடக்க வேண்டுமே என்கிற பயம் என் மனது முழுதும் நிறைந்திருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு மீண்டும் நான் செல்ல மாட்டேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அன்று மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு நானு என் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் அயர்ந்த நான் பள்ளிக்கூட திண்ணையில் போய் அமர்ந்தேன். அந்த சமயம் சாலையில் சைக்கிளில் வந்த ஒருவர் (முன்னரே சொன்னது போல் பள்ளிக்கூடம் சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.) 

"டேய் உன் பேரு அருண் தானே.. உங்க அண்ணன் பேரு வேலு தானே என்றார். ஆமாம்" என்றேன்.

உடனே என்கூட வாடா என்றார். ஸ்கூல் இருக்கு இப்ப வர முடியாது என்று சொன்னேன். அவரின் கண்கள் கலங்கியது. "டேய் உங்க அண்ணன் செத்துக் கிடக்கிறான் டா என்றார். வார்த்தைகளை சரியாக உள்வாங்காத நான் அப்படியா நான் ஸ்கூல் முடிஞ்சதும் வரேன்" என்று அப்பாவித் தனமாய் கூறி நின்ற கணம் எனக்குள் இன்றும் வலிக்கிறது. 

பிறகு அவரே என்னை சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு என் அம்மாவை பார்க்க சென்றார். காரணம் புது இடம் அவருக்கு தெரியாது. எனவே நான் படிக்கும் பள்ளிக்கு வந்து என்னை எங்கள் புது வீட்டை காட்ட அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் முன்னர் வசித்த களத்து மேட்டுத் தெருவில் இருந்த மக்கள் என் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சென்று விட்டார்கள். 

எனவே இறந்துப் போன என் அண்ணனை நான்தான் முதலில் பார்க்க சென்றேன். இன்றைய கந்தன்சாவடியில் உள்ள சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும்போது லுங்கியை தூக்கிக் கட்ட கைகளை பின்னே எடுத்தபோது, அருகிலிருந்த மின்கம்பிகள் தாக்கி அவர் இறந்துபோனார் என்று தெரியவந்தது. ஆனால் அப்போதும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இது எங்க அண்ணன் இல்லை. அவர் காலையில் ஷேவிங் செய்துக் கொள்ளவில்லை. முகத்தில் தாடி இருந்தது. என்று கேனைத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் தான் எனக்கு தெரியும் மின்சாரம் தாக்கி அவர் முகம் அவ்வாறானது என்று. 

சோகத்தின் சுவடுகள் என் நெஞ்சில் பதிய ஆரம்பித்த முதல் கணம் அது. அதுவரை பொருளாதார ரீதியில் மட்டுமே சரிவைக் கண்ட என் குடும்பம் முதன்முதலாய் ஒரு உயிரையும் இழந்து நின்றது. அண்ணனை அந்தக் கோலத்தில் கண்டதும் என் அம்மா கதறி அழுத நினைவுகள் இன்றும் என் நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றன. 

விவரம் தெரியாத நான் இது அண்ணனாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டி நின்றேன். நெஞ்சம் தேம்பி தேம்பி அழ நினைத்தாலும் கண்கள் வறண்டுப் போனதால் பிரமை பிடித்து மரம் போல் நின்றுக் கொண்டிருந்தார் என் தந்தை. சரியாக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது. அவரது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணப் பேச்சு எடுக்கலாம் என்று அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். என் காளான் காத்திருக்கவில்லை. ஒரு அனாதை விடுதியில் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தான் அம்மா அப்பா பாசம் தெரியும். அப்போதுதான் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். அவர் ஆசைப்படியே அனாதை விடுதியிலேயே பெண் பார்க்கலாம் என்று அவர்களும் நினைத்திருந்தனர். நான் விவரம் தெரிந்து என் மூத்த அண்ணனுடன் வாழ்ந்தக் காலங்கள் கொஞ்சம் தான். என் அவர்தான் எனது ரோல் மாடெல். அவர் உயரியதை மட்டுமே சிந்தித்தார். எறும்புக் கடித்தால் அதைக்கூட சாகடிக்காமல் அதற்கும் வலிக்காமல் தன் உடம்பிலிருந்து அதை அழகாக தூக்கி எறிவார். 

அவரது விழிகள் மாசுபட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போது ஒரு ஒளி அவரின் விழியில் குடிக்கொண்டிருக்கும். கடவுள் நல்லவர்களை மிக சீக்கிரமே தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போது எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இப்போதும் உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது.)

"நீ இருந்து எனக்கு கொள்ளை வச்சி, காரியம் செய்யணும். ஆனால் நீ இறந்து உனக்கு என்ன கொல்லி வைக்க வச்சிட்டேயேடா".. என்று இறுதியில் என் தந்தை கதறி அழுத அந்த காட்சி என் மனதுக்குள் பந்தல் போட்டு குடியேறிவிட்டன. 

மிக சந்தோஷமாய் நண்பர்கள் போல் வாழ்ந்துக் கொண்டு இருந்த எங்களுக்குள் அப்போதிருந்து ஒரு இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்பா பேசுவதே அரிதானது. அதன் பின்னர் தரமணி வீடு என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியாது. ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அம்மாவும் அப்பாவும் அதை அப்படியே விட்டது விட்டார்கள் ராசியில்லாத வீடு என்று. 

இதை எழுதும் இந்த நொடியிலும் கண்களில் நீர் கசிகிறது. 

Sunday, May 10, 2009

சுதா என்கிற மந்திரச் சொல்..


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண்ணின் பங்கு மிக இன்றியமையாதது. எனது வாழ்விலும் மூன்று பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒன்று எனது தாய். அடுத்து என் ஆசிரியர். மற்றோவர் என் அக்கா. இந்த மூவரையும் பற்றி பார்க்குமுன்.. நான்காவதாக ஒரு பெண் என் வாழ்வின் திசையை சற்றே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அவர் திருமதி சுதா. என் அம்மா, ஆசிரியர், அக்கா போன்றோர்கள் என் வாழ்வில் வெகு தூரம் என்னோடு பயணித்து வந்தவர்கள். ஆனால் திருமதி சுதாவோ நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போன்று என் வாழ்வில் தோன்றி மறைந்தவர். ஆனால் மின்னலின் வீரியம் போன்றே அவரும் வீரியம் மிக்கவர். எந்தவித குறிக்கோளும் இன்றி மிக சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை ஒரு திசை நோக்கி செலுத்தியவர். என்னை ஒருங்குப்படுத்தியவர். மிகப் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதித்தவன் இல்லையென்றாலும், மிக மோசமாய் வாழும் நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு. 

ஆரம்பத்தில் சொன்னது போன்று, நான் மிகப்பெரிய விஞ்ஞானியோ, தலைவனோ, ஒரு நிறுவனத்தை கட்டியாளும் மேதையோ அல்ல. மிகப் பெரிய அளவில் சாதித்தவனும் அல்ல. ஆனால் மிகப் பெரிய அளவில் சோதனைகளை சந்தித்தவன். தொடர் தோல்விகள், தொடர் துயரங்கள் என்று நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.  என்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இந்தப் பதிவுகள் அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்று துயரங்களோ, தோல்விகளோ நேர்ந்திருந்தால் அதை மறக்க செய்யும் ஆர்வமே இந்தப் பதிவு. துயரங்களோ, தோல்விகளோ ஒரு மனித வாழ்க்கையின் முடிவல்ல.. யாரோ ஒருவர் சொன்னது போல் "இதுவும் கடந்துப் போகும்" என்கிற வாசகம் எதற்கும் பொருந்தும். அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற துன்பமும் நிச்சயம் கடந்துப் போய் அடுத்த நிலைக்கு நம்மை இட்டு செல்லும். அதை நிரூபிக்கும் விதமாக நான் எழுதும் இந்தப் பதிவுகளை கருதுகிறேன். எனவே இவன் என்ன சாதித்துவிட்டான் இவன் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், பதிவுகளில் உள்ள பாசிடிவ் அம்சங்களை மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் சுதாவைத் தொடர்வோம். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு குடும்ப சூழ்நிலைக் கருதி கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். கொரியெர் கம்பெனி, பி. பி. ஒ. கம்பெனி, எப். எம். சி. ஜி. மார்கெடிங், என்று கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சில காலம் கழித்துவிட்டு, மனம் ஒன்றாமல் அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளிவிட்டு இறுதியாக பி.பி.ஒ தொழில் சில காலம் பணிபுரிந்தேன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஏக்கக் கனவுகள் மட்டுமே என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அதை விட குடும்ப சந்தோஷம் முக்கியம் எனக் கருதி, பணத்தேவைக்காக இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தக் காலமிது. மிக சாதாரணமான சம்பளம்தான். ஆனால் அதுதான் முதல் முறையாக நான் வாங்கிய மிகப் பெரிய சம்பளம். 2500/- ரூபாய். இரண்டாயிரம் ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை மாதம் முழுவதும் கை செலவிற்கு வைத்துக் கொள்வேன்.

அந்தக் கம்பென்யில் நேர்காணலுக்கு சென்றபோது ஒரு பெண்மணி கையில் ஒரு பையுடன், பார்ப்பதற்கு ஒரு மத்திய வயதுப் பெண்மணியாய் காட்சியளித்தார். அப்போது நான் அவரை சரியாக கவனிக்கவில்லை. வயது அப்படி. இளம் பெண்ணாக இருந்தால் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவரை எப்படிப் பார்ப்பது. ஆனால் சில நாட்கள் கழித்து அவரும் என் டீமில்தான் சேர்ந்தார். என்னோடுதான் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். திருமணமானப் பெண் என்பதனால் அவரிடம் அவ்வளவாக நான் பேசியதுக் கிடையாது. 

நாளடைவில் அவர்தான் நல்ல நட்பு ஏற்பட்டது. எப்போதும் ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கு ஒரு நல்ல ஆலோசகராய் மாறினார். ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கை கதைகள் கூறியும், திசைகள் இன்றி சுற்றித் திரிந்த என் மனதை ஒரு குறிக்கோளை சுற்றித் திரிய விட்டதும் அவரது வார்த்தைகள்தான். சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால் என்னை அடுத்தக் கட்டத்துக்கு என்னை அழைத்து சென்ற நொடிப் பொழுதுகள் அவை. அவர் எனக்கு ஆதரவாய் பேசுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பின்னாளில் நிஜமாயின. 

நான் விரும்பியப் படிப்பை பல ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் படிப்பு எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் திருமதி. சுதா தொடர்ந்து எனக்கு நம்பிக்கையளித்தார். ஏதேதோ ஆலோசனைகள் கூறினார். இறுதியில் எனக்கு அந்தப் பணம் கிடைத்தது. சில வருடங்களுக்கு மின்சாரம் தாக்கி எனது மூத்த சகோதரர் இறந்துப் போனார். அதற்காக மின்சார வாரியம் கொடுத்த நஷ்ட ஈடுதான் என்னையும் என் குடும்பத்தையும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. நானும் விரும்பிய அந்தப் படிப்பை படித்தேன். முதல் முறையாக நான் கண்ட கனவு நிறைவேறியது. அதன் பின்னர் எனக்கு திருமதி சுதாவின் வார்த்தைகள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது தம்பி, தங்கைகள் யாவரும் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு அடுத்து அந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது அவரது வார்த்தை. தொடர் தோல்விகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்ட காலம் திருமதி. சுதா என்னோடு பழகியக் காலம். 

கடவும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எஅன்க்குள் ஒரு மாய உணர்வு ஏற்பட்டது. தொடர் வெற்றிகள். தொடர் சந்தோசங்கள். யார் இவர் உண்மையில் எனது நாத்திகத்தை உடைக்க வந்த கடவுளா? அல்லது கடவுளின் தூதரா? குழப்பங்கள் எனக்குள் குடைப்பிடிக்கத் தொடங்கியது. வெற்றி மேல் வெற்றியாக நான் திக்குமுக்காடிப் போனேன். இறுதியாக ஆசைப்பாட்ட வண்டி, அழகிய வீடு சின்னதுதான் என்றாலும் சொந்த வீடு என்று தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இறுதியில் நான் ஆசைப்பட்ட அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் எனக்கும் வேலைக் கிடைத்தது. 

ஆனால் ஏனோ அவரின் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை. அவரின் முகவரியோ, தொலைபேசி என்னோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி தகல்வல்கள் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் இன்றும் சிந்திக்கிறேன்..ஏன் அவர் பற்றிய தகவல்கள் எதுவமே என்னிடம் இல்லை. உள்ளங்கைக்குள் உலகம் என்றாகிவிட்ட இந்த சூழலிலும் ஏன் என்னால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த மாயத் தேவதையை..