வார்த்தைகள் வசீகரமானவை. அவை வக்கிரமானவையும் கூட. வார்த்தைகள் வாசமிக்கவை. அவை வலுவானவையும் கூட. வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சலனமுள்ள வார்த்தைகள் சில நேரங்களில் சலனமற்றும் போய் விடுகின்றன.
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் எந்த ஒரு பொருளும், உயிரும் மிக அழகானதாக தோற்றமளிக்கக் கூடியவை. சூரியன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது சூரியன். இல்லையேல் அது மடிந்துப் போன நட்சத்திரம். மனிதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அவன் மனிதன். இல்லையேல் அவன் பிணம். இயங்கிக் கொண்டே இருபது அழகு என்றாலும் ஒருவகையில் இயங்காமல் இருப்பதும் அழகுதான். குட்டைபோல் தேங்கி இருக்கும் நீரும், தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நதி நீரும் ஒரே குணங்கள் கொண்டவைதான். இருக்கும் இடங்களும் அதன் இயக்கமும் தான் வேறுபடுகின்றது. வார்த்தைகளும் அப்படிதான். இயங்கிக் கொண்டே இருக்கும் வார்த்தைகள். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள். இரண்டும் ஒரே பண்புக் கொண்டவைதான். ஆனால் அவை உபயோகிக்கப்படும் இடங்களை பொருத்து அதன் பண்புகள் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.
பெண்களிடம் திருமணத்திற்கு முன்னர் நாம் பேசும் வார்த்தைகளுக்கும், திருமணத்திற்கு பின்பு நாம் பேசும் வார்த்தைகளுக்கும் அதீத வேறுபாட்டை உணர முடியும். வார்த்தை ஒன்றுதான். ஆனால் காலம் மாறும்போது அவற்றின் குணமும் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஒரு சில வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகிக்க முடியாது. ஒரு சில வார்த்தைகளை அந்தரங்கமாக பயன்படுத்த முடியாது. ஒரு சில வார்த்தைகளை தாய் தந்தையுடன் உரையாட எடுத்தாள முடியாது. உறவு முறையைப் பொருத்து நாம் வார்த்தைகளையும் மாற்றிப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள்தான் சில நேரங்களில் மனிதர்களை மாக்களாக மாற்றுகின்றன.
பொது இடங்களில் தனிப்பட்ட மனிதனையோ, ஒரு குழுவையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தகாத வார்த்தைகளால் திட்டினால் அது ஏற்படுத்தும் விபரீதம் அளவிட முடியாதது. வெறும் வார்த்தைகள் தானே விட்டுவிடுவோம் என்று யாரும் நினைப்பதில்லை. காரணம் வார்த்தைகள் சலனமற்று இருந்தாலும், அவை பேசுபவர்களை சலனப் படுத்தி விடும் வல்லமை பெற்றவை.
கோபத்தில் பேசிவிட்டேன். வாய்தவறி பேசிவிட்டேன் என்று சொல்வது எல்லாம் ஒரு விதமான பம்மாத்து வேலை. ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் நமது எண்ணங்களே நமது வார்த்தைகளை ஒழுங்கமைக்கிறது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கணவன் மனைவி இடமோ, அல்லது மனைவி கணவனிடமோ ஒரு முறை கூறினால் பேச்சு வாக்கில் வந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திவிட்டு கோபத்தில் பேசிவிட்டேன் என்றோ, வாய்தவறி வந்து விட்டது என்றோ கூறினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.
சில நேரங்களில் இந்த வார்த்தையை பேசினால் கேட்பவர் மனம் புண்படுமே என்று நாம் பேசுவதை தவிர்த்து இருப்போம். ஆனால் மிக உக்கிரமான வேளையில் அந்த வார்த்தைகள் நம்மை தாண்டி வெளியே வந்து குதித்து விடுகின்றன. இது அந்த நொடியில் ஏதோ தானாக வந்துக் குதித்த வார்த்தைகள் அல்ல. நம் ஆழ் மனதின் தவிப்பை கட்டுக்கடங்க செய்யும் வார்த்தைகளின் வேலைதான் இது. சில நேரங்களில் வார்த்தைகள்தான் நம்மை ஒழுங்கமைக்கின்றன. நமது கோபத்திற்கு வார்த்தைகள்தான் வடிக்காலாக இருக்கின்றன. ஆனால் அந்த வார்த்தைகள் யாரை சென்று சேர்கிறதோ அவரின் மனம் படும் பாட்டை நாம் ஒருநாளு உணர்ந்ததில்லை. உணரப் போவதும் இல்லை.
மன்னிப்பு என்பதும் வார்த்தைதான். மன்னித்துவிட்டேன் என்பதும் வார்த்தைதான். ஆனால் நம்மில் எத்துனை பேர் இந்த வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துகிறோம். தெருவில் நடந்துப் போகும் போது, தெரியாமல் யார் காலையாவது மிதித்துவிட்டால் நம்மையறியாமல் நமது வாயில் இருந்து மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தை உதிர்ந்துவிடுகிறது. அவர்களும் இதழோர சிரிப்பின் மூலம் மன்னித்துவிட்டேன் என்கிற வார்த்தையை நம்மிடம் உதிர்க்கிறார்கள்.
யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் காலை மிதித்ததற்கே மன்னிப்பு கேட்கும் நாம், நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர், தாய், தந்தை, என நெருங்கியவர்களிடம் பேசும் தகாத வார்த்தைகளுக்கு என்றாவது ஒருநாள் மன்னித்துவிடுங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்போமா? ஒரு பைசாவிற்கு பயன்படாத மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தையை நாம் ஏன் பயன்படுத்த மறுக்கிறோம். காரணம் ஈகோ என்பார்கள். நம்மை நேசிக்கும் சிலரை நாம் காயப்படுத்தும்போது சில நேரங்களில் அவர்கள் நம்மிடம் முன்புபோல் சரியாக பேசாமல் வார்த்தைகளை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் தவறு செய்யும் நம்மில் எத்துனை பேர் அதனைப் புரிந்துக் கொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி இருப்போம்.
வெறும் வார்த்தைகளை பயன்படுத்தி மட்டுமே பயன்படுத்தி ஒருவனை வாழ்நாள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். ஆனால் நாம் யாரும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவதில்லை. உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் ஒருவர் உங்களிடம் சரியாகப் பேசாமல் போனால் ஒரு நாள் முழுவதும் அவரிடம் அன்பாகப் பேசுங்கள். வெறும் வார்த்தையை மட்டும் பயன்படுத்துங்கள். பணம், பொருள் எதுவும் வேண்டாம். அடுத்த நாள் உங்கள் உறவின் பலம் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும். சலனமற்ற வார்த்தைகள் சில நேரங்களில் சலனத்தை மட்டுமல்ல, மிகப் பெரிய மாறுதலையும் ஏற்படுத்தும். வார்த்தைகளை வாசமிக்கதாக மாற்றுவதும், துர்நாற்றம் வீசுவதாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளதேத் தவிர வார்த்தைகள் ஒருபோதும் தங்களை எப்படியும் மாற்றிக் கொள்வது இல்லை. நாமும் வார்த்தைகளாக இருப்போம். சலனத்துடன்.
No comments:
Post a Comment