Monday, April 25, 2011

கா - சிறுகதை
எறும்புகள் நகர்ந்து செல்லும் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பறவைகள் வீரிட்டுக் கத்தின. கழுகின் ஏரார்ந்த பார்வையில் சாலையிலிருந்து வனப்பகுதிக்கு ஊர்ந்து செல்லும் பாம்புகள் தென்பட்டன. சாலையின் ஓரங்களில் இருந்த மரத்தின்னைகள் ஒன்றையொன்று விளித்து கதைத்துக் கொண்டிருந்தன. பனித்துளிகள் புற்களை சேர்த்து அனைத்துக் கொண்டு அதிகாலை காமத்திலிருந்து இன்னும் விடுபடாததாய் கிடந்தன. நேரம் செல்ல செல்ல அவை தின்னமிழந்து ஒழுகி நீர்த்துப் போகும் தருணத்தில் புற்களின் நுனிகள் கதிரைத் தேடிக் கொண்டிருந்தன. மரங்களின் மீது மயில்கள் பூங்கழுத்தை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் மான்கள் மெல்லடி எடுத்து வைத்து கண்கள் சிமிட்டி, அக்கம் பக்கம் பார்த்து அளவளாவிக் கொண்டன. இயற்கை தனக்குள் தன்னையே தேடிக் கொண்டிருக்கும் பரிசுத்தமான அமைதி தவழ்ந்த நேரம், அடுத்த நொடியில் சர்ரென, செவிகளை கிழிக்கும் வேகத்தில் ஓர் கார் கடந்து சென்றது. பனித்துளிகளின் ரத்தம் அருகில் இருந்த மான் மீதும், பறந்து கொண்டிருந்த பறவைகளின் மீது தெளித்து சாலையில் சிதறிக் கிடந்தன. ஊர்ந்து சென்ற பாம்பு நின்று திரும்பி பார்த்தது. கணப் பொழுதில் நகர்ந்து சென்ற காரை யாரும் காணவில்லை. ஏதோ இயற்கையின் மாயை என்று நினைத்து அனைத்தும் மௌனமாகி விட்டன.

"சூப்பர் டாடி".. காருக்குள் இருந்த சிறுவன், தன் தந்தையை இறுக அனைத்து கன்னத்தில் தன் எச்சில் படும்படி அழுத்து முத்தமிட்டான். உதடு முத்தமிட்டு திரும்புகையில் அவன் எச்சில் கன்னத்தில் இருந்து பிரிந்து விழுந்தது. 'கா'வின் மனம் முழுவதும், ஏதோ ஒருவித சோகம் வியாபித்திருந்தது.

கா, எப்போதும் மிக அதிகமான வேகத்தில் காரோட்டி செல்பவன். வாழ்க்கையின் தத்துவங்களையும், அது தரும் அனுமானங்களையும் அதன் அருகில் சென்று பருகி வருபவன். உலகில் தான் பிறந்ததே படித்து இன்புறத்தான் என்ற எண்ணத்தில் மிதப்பவன். ஜெர்மானியத் தத்துவவாதியான ஆர்தர் ஷோப்பன் ஹேவரின் "எல்லோருக்கும் பழக்கப்ட்ட சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி யாருக்கும் பழக்கமற்ற அசாதாரண விசயங்களைத் தெரிவியுங்கள்" என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான "காப்காவின்" விசாரணை நாவலில் வரும் மையப்பாதிரத்தின் பெயரான "கா"வையே தன்னுடைய பெயராக வைத்துக் கொண்டவன். தனி மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமெனில் புறக் கோரிக்கைகளை மறுத்து சமுதாய அமைப்புகளிலிருந்து விலகி தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் தனித்தனி அணுக்களாக மாறிவிடுவதே சிறந்தது என்கிற "ழான்பால் சார்த்தரின்" வாக்கியங்களை எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டவன். அவனுக்காகவே பிறந்தவளாய் அவன் வாழ்வில் செப்படி எடுத்து வைத்தாள் வானதி. கா என்கிற அவனின் பெயரைக் கண்டே அவன் இலக்கிய தாகத்தை முகர்ந்து அவன் பின் எறும்பாய் தொடர்ந்தவள். இலக்கியம் இருவரையும் இல்லறத்தில் பிணைத்தது. பாப்லோ நெருதா, நீட்சே என அவர்களின் நீட்சியாய் தங்களை நெட்டுரு செய்துக் கொண்டனர் இருவரும். அவளுக்கு அவன் கார் ஓட்டும் அழகு மிகவும் பிடிக்கும். மிக அனாயசமாக ஒற்றை கையில் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரு கையில் ஜான் பெயசின் இசைத் தட்டுகளை தேடி எடுத்து ஓடவிடும் ரசனை அவளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

வேகம் என்றால் காரும், அது செல்லும் சாலையின் ஸ்த்திரத்தன்மையும் சேர்ந்தே கதிகலங்கிப் போகும் வேகம். அப்படி ஒரு வேகத்தை யாரும் கண்களால் பார்த்து விட முடியாது. காட்சிப் பிழையென கணத்தினும் மெல்லிய நானோ நொடியில் கார் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடும். அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு அவன் தோல் மீது சாய்ந்து நகுலனின் கவிதைகளை அவள் கொஞ்சம் சொல்லி நிறுத்த, அவன் முடித்து வைப்பான். அவன் குரலின் வலிமையில், கார் ஓட்டும் ஆண்மையில், இலக்கிய அறிவில் அவள் எப்போதும் தன்னை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பாள்.

அன்று பிரெட்ரிக் நீட்சேவின் Once more, ere I move on தலைப்பில் தொடங்கும்


And send my glance forward,
Lonely, I raise my hands
To you, to whom I flee,
To whom I, in the deepest depths of my heart,
Have solemnly consecrated altars,
So that, at all times,
His voice would summon me again.

கவிதையை அவள் கூற, அவன்

I want to know you, unknown one,
You who have reached deep within my soul,
Wandering through my life like a storm,
You incomprehensible one, akin to me!
I want to know you, even serve you.

என முடித்து வைத்தான்.

முடித்துவிட்டு கண் சிமிட்டி அவளைப் பார்த்தான். ஜான் பெயஸ் இசை மாறி, யானியின் வயலின் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த இசை சூழல், கவிதையின் செறிவு, 'கா'வின் கவிதைத் திறன் என அனைத்தும் சேர்ந்து அவளை தன்னிலை மறக்க செய்தது. வளைவில் கூட வேகம் குறையாமல் ஸ்டீரிங்கை ஒடித்து காரை அவன் திருப்பும் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவள் தன் முத்தங்களை அவனுக்கு பரிசாகக் கொடுத்தாள். அவன் கண்ணங்களில் ஒட்டிய அவள் இதழின் ஈரம் வறண்டு போக வெகு நேரம் ஆயிற்று. அவன் இடுப்பின் இருபுறமும் தன் கைகளை கோர்த்து, அவன் தோள்களில் மெல்ல சாய்ந்துக் கொண்டாள். அவன் அகன்ற தோளை தன் பால் பற்களால் கடித்தாள். கைகளின் இறுக்கம் அதிகாமானது. அவள் கன்னத்தில் முத்தமிட அவன் திரும்பினான்.

ஸ்ரர்ர்ர்ரர்ர்ர்....க்ரீச்ச்ச்ச்சச்...சாலையில் கார்களின் சக்கரங்கள் தேய்த்து தீப்பொறி பறந்தது. மலையின் விளிம்பில் அசுர வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் நிலைத் தடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
"டாடி.. என்ன ஆச்சு உங்களுக்கு".. தன் நிலை திரும்பி மகனைப் பார்த்து லேசாய் சிரித்து விட்டு மீண்டும் காரை வேகமாக செலுத்தினான். அவளின் மரணம் அவனின் மனக்குரளியில் இருந்துக் கொண்டு அவன் இருத்தலை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உலகின் இருண்மையை அகற்றும் இலக்கியம் அவ்வப்போது அவனுக்கு இருத்தலின் நியாயத்தை உணர்த்தியது. அவள் விட்டு சென்ற எச்சமாய் அவன் மகன். அவளைப் போன்றே தந்தையின் இலக்கியம், வேகம் என அனைத்தையும் சிலாகிக்கும் பக்குவத்துடன் இருப்பது அவனுக்கு ஆறுதலாய் அமைந்துவிட்டது.

எங்கே தன் மகனும் இந்த கார் ஒட்டு வேகத்தால் தன்னை விட்டுப் பிரிந்துப் போய் விடுவானோ என்கிற பயம் அவனுக்குள் இருந்தாலும், தன் மகன் அதைத்தான் விரும்புகிறான் என்பதால் அவனுக்கு மாற்று தெரியவில்லை. அவனுக்கு அழகுறை சொல்லவும் அவன் தயாரில்லை.

மலையின் சரிவில், காரை ஒடித்து அவன் திரும்பும்போது அவன் மகன் கொள்ளும் பரவசம் அலாதியானது. "மார்வெலஸ் டாடி" என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையின் முகத்தைப் பார்த்து பின்னீட்டீங்க என்று சொல்லும் அழகில் 'கா' சொக்கித்தான் போவான். எப்போதும் தந்தை கார் ஓட்டும் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நகுலனுக்கு தெரியும் தன் பிறத்தி அதனால்தான் இறந்தாள் என்று.

"எப்படி, டாடி நீங்க இவ்வளவு வேகமா கார் ஓட்டக் கத்துக்கிட்டீங்க.. நம்மக் கார் மட்டும்தான் இவ்ளோ வேகத்துல போகுமா? இல்லனா எல்லாக் காரும் இப்படிதான் போகுமா? ஹ்ம்ம்.. நீங்கள் ஓட்டுற கார் மட்டுந்தான் இப்படி போகும் கரெக்டா? அவன் பேச்சு முழுவதும், காரின் வேகம் பற்றியதாகவே இருக்கும். சரிவுகளில் காரை இறக்கும்போதும், மேடுகளில், காரை செறிவாய் செலுத்தும்போதும், 'கா'வின் கம்பீரம் நகுலனை வெகுவாய் ஈர்த்திருந்தது. எப்போது நான் வளர்வேன்.. எனக்கு எப்போது கார் ஓட்ட சொல்லித் தருவீர்கள் என்று தந்தையை ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான்.

கார் ஓட்டும்போது எப்படி அமர வேண்டும், வலது கால், இடது கால் எங்கே வைக்க வேண்டும். எப்படி காரின் திசையை அறிவது, கண்ணாடியை ஏன் பார்க்க வேண்டும், இதெல்லாம் அவன் கேட்கும் உப கேள்விகள்.

தந்தையின் கால்கள் ஆக்சிலேட்டரை லாவகமாக மிதிப்பதை கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான் நகுலன். "கா" கொஞ்சம் மெதுவாக காரை செலுத்துக் கொண்டிருந்தான். சர்ர்ர்ரர்ர்ர்ரர்.உஸ்ச்ச்ச்சச்ச்ச்ஸ்.... அவர்கள் காரை இன்னொரு கார் முந்திக் கொண்டு சென்றது..

"டாடி" என்ன டாடி.. போங்க.. சீக்கிரம் அந்த கார பிடிங்க டாடி.. இது எனக்கு பெரிய அவமானம் டாடி", மறுத்து பேசாமல் கார் வேகமெடுத்தது.

சர்ர்ரர்ர்ர்ர்... உச்ச்சச்ச்ச்ஸ்... கீச்ச்ச்ச்சக்...இரண்டு கார்களும், ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து நகுலன் வயதுடைய பெண்ணொருத்தி, மிகுந்த பயத்துடனான கண்களுடன் எட்டிப் பார்த்தாள். அவள் வேகத்தை பயத்தின் வழியாக வெளியேற்றி விட நினைத்திருந்தாள். ஆனால் அவளது தந்தை "கா"வுடன் போட்டி போட்டுக் கொண்டே இருந்தார். நகுலன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்துவிட்டு, "டாடி.. விடுங்க டாடி.. அவங்க போகட்டும்.. என்று தலையை சாய்த்து, கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். அந்தக் காரில் இருந்த பெண் எட்டிப் பார்த்தாள். அவளின் பயம் புன்னகையாய் உருமாறி இருந்தது. அவர்களின் கார் பறந்தது.

நகுலன் கொஞ்சம் களைத்துப் போய் இருந்தான். "டாடி அம்மா வாசிச்ச கவிதைய போடுங்க டாடி என்றான். அவள் நீட்சே, நகுலன், பிரமிள், ஆத்மாராம், நெருதா போன்றவர்களின் கவிதையை வாசித்து பதிவு செய்து தினமும் காரில் கேட்டுக் கொண்டே செல்வது வழக்கம். கார் முழுவதும், மங்கிய வெளிச்சத்தில், அவளின் மெல்லிய குரலில் கவிதைகள் இசைக்கத் தொடங்கின. நகுலன் உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். "கா" அவளை தேடிக் கொண்டிருந்தான். அந்தக் கவிதைகள் முழுவதும் ஒரு வித மௌனம் ஆட்கொண்டிருந்தது. அவனையறியாமல் கண்கள் பனிக்க ஆரம்பித்தது.

அவள் நினைவுகள் அவனுக்குள் நங்கூரமிட்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அவள் கண்ணக்குழிக்குள் அவன் தன் வாழ்தலின் அர்த்தத்தை அது தரும் மாய சுகத்தை உணர்ந்துக் கொண்டிருந்தான். இன்று அவள் இல்லை. அவனும் இல்லை. தன் நினைவுகளால் மட்டுமே இன்னும் அவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் கரங்கள் வழுவிழப்பதை அவன் எங்கோ ஒரு புள்ளியில் உணர தொடங்கினான். அவள் நினைவுகளின் வலிமை அவனை வழுவிழக்க செய்துக் கொண்டிருந்தது.

அடுத்த நொடியில் மலையே அதிரும் வண்ணம் ஒரு கார் "காவின்" காரை முந்திக் கொண்டு சென்றது. அந்த அதிர்வில் நகுலன் சட்டென்று முழித்துக் கொண்டான். நகுலனைப் பார்த்த கா அவனின் சோகம் புரிந்து காரை வேகப்படுத்தினான். ஆனால் அவன் இப்போது தன் வழுவை இழந்து ஒரு பொதிமாடாய் ஓய்ந்துப் போய் இருந்தான். இருந்தாலும் முடிந்த வரை காரை வேகமாக செலுத்தினான். நகுலன் ஜன்னல் வழியே அடிக்கடி எட்டிப் பார்த்தான். ஒரு கார் வேகமாய் துரத்துவதையும், சிறுவன் எட்டி எட்டிப் பார்ப்பதையும் முன்னே சென்றுக் கொண்டிருந்த காரின் ஓட்டுனர் பார்த்துக் கொண்டே இருந்தார். ஏதோ புரிந்தனவாய் தனது காரின் வேகத்தை கொஞ்சமாய் கட்டுப்படுத்தினான். காவின் கார் முந்தியது. ஆனால் "கா"விற்கு புரிந்துப் போனது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான். அந்த காரை செலுத்தியவன் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.

எதிரே வந்த கண ஊர்தி அடித்து நொறுக்கி எங்கு வீசி எரிந்தது என்று தெரியவில்லை. பின்னால் வந்த காரை செலுத்தியவன் மனமுடைந்துப் போனான். காவும் நகுலனும், மலைச் சரிவில் உருண்டு கொண்டிருப்பதை ஆங்காங்கே சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறென்ன செய்து விட முடியும் என்கிற தொனியில்.

கார் வெடித்துடைக்கும் சில மணித் துளிகளுக்கு முன்னர் காரில் வானதியின் குரலில் நகுலனின் கவிதை ஒலித்துக் கொண்டிருந்தது கர கர குரலில்..

"எனக்காக யாரும் இல்லை,

ஏன்

நான் கூட இல்லை"

Tuesday, March 15, 2011

அஞ்சல் பெட்டி - சிறுகதை


ஒற்றை மார்பை மறைக்கும் மேல்துண்டு, வத்திப்போன வயிற்றை கொடிமலர் போல சுற்றிக் கொண்டிருக்கும் அரைஞான் கயிறு, அதுப் பிடித்துக் கொண்டிருக்கும் அரை முழ வேட்டி என வாழ்வாங்கு வாழ்பவர் தாத்தா.

ஈரைந்துப் பருவத்தின் சுட்டித் தனம், வெள்ளைநிற மேலாடை, பட்டில்லாத ஆனால் பட்டுப் போகாத, பட்டு மாதிரியான ஒரு பாவாடை கட்டி, தன் பருவத்தின் சுமையை சுமை என்றே தெரியாமல் பருகும் யாழினி. தாத்தாக் கைப்பிடித்து நடக்கையில் அவரது வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தடுமாறினாலும், ஒரு நாளும் "மெதுவாப் போ" தாத்தா என்று கூக்குரல் எழுப்பாதவள். எப்படியாவது ஒரு நாளாவது தன் தாத்தாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து நடந்துவிட வேண்டும் என்று அவள் மனம் முழுக்க ஆசைகளை ஆர்த்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருப்பாள். அந்த நேரத்தில் எதுப் பற்றியும் கவலைப் படாமல் வேகமாக நடக்கும் தன் தாத்தாவின் முகம் பார்த்து தன் நேரிழையை சரி செய்துக் கொண்டு மீண்டும் வேகமாக நடக்க முயர்ச்சிப்பாள்.

அவள் எப்போதும் தன் தாத்தாவின் எல்லா குறைகளையும் நிறையாகவே பார்த்து பழக்கப்பட்டவள். கன்னங்கள் ஒட்டிப் போய், ஜீவனற்று கிடக்கும் அந்த முகம், துருத்திக் கொண்டிருக்கும் அந்த பற்கள், மதர்த்து எழும் அந்த வயிறு என தாத்தாவின் அந்திமக் கால அழகு அவளுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு இரவும், தன் தாத்தா சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே அந்த கதையின் உலகத்திற்குள் சென்று உறங்கி விட்டாலும், மறுநாள் அவளுக்கு வேறொரு கதை தேவைப்படும். பேய்க் கதைகளை சொல்லும்போது இருளின் குரூரத்தில் தாத்தாவின் ஒற்றைப் பல் கொடுக்கும் பயம் அவளை இருண்மையின் அகலாத பக்கங்களுக்கு கொண்டு சென்றாலும், ஆற்றவொண்ணா வலியை ஏற்படுத்தினாலும், அவளுக்கு மீண்டும் அதைவிட குரூரமான பேய்க் கதை தேவைப்படும்.

"அண்ட சராசரமே அடங்கி நிற்க... மரம், பறவை, எல்லாம் ஒடுங்கிப் போக... டக்...டக்..டக்.. நு ஒரு சத்தம்..அப்படியே ஒரு பெரிய அமைதி... உஸ்... உஸ்ஸ்.. காத்து மெதுவா அடிக்க ஆரம்பிக்குது.. திடீர்னு கதவு மூடுது. சன்னலெல்லாம் அடிச்சி அடிச்சி சாத்துது. மறுபடியும் அப்படியே ஒரு பெரிய அமைதி.. அஞ்சு நிமிஷம் எதுவும் ஆடாம அசையாம நிக்குது. அடுத்த நொடியில பேய் உள்ள வந்து.. வந்து.. என்று தாத்தா தன் நீண்ட விரல்களை யாழினியிடம் கொண்டு செல்வதற்குள் அவள் பயத்தில் அலற மறுநாள் காய்ச்சலே வந்துவிடும். அதற்கு தாத்தா வேறொரு கதை சொல்லி காய்ச்சலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வித்தையையும் கற்று வைத்திருந்தார். மலைமேல் அமைந்துள்ள குடிசையில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர தாத்தாவுக்கு ஒரு பெரிய வேலை உண்டு. ஒவ்வொரு முறையும் கடிதம் வரும்போது தாத்தா யாழிணியைக் கூட்டிக் கொண்டே மலை முகட்டில் இறங்கி தினையூர் கிராமத்து கணக்கு வாத்தியார் சிவதாணுப் பிள்ளையிடம் சென்று பணம் வாங்கி வருவார். அடுத்த ஒரு மாதத்திற்கு அதுதான் அவர்களுக்கு உணவளிக்கும் காருண்யம்.

கிளிங்...கிளிங்..மணியோசை சப்தத்தோடு 'போஸ்ட்'... என்று கூறிக் கொண்டே தாத்தா வருமுன்னரே தூக்கி எறிந்துவிட்டு அனாயசமாக பறந்து சென்றுவிட்டார் போஸ்ட்மேன். வயதான காலத்தில் தட்டு தடுமாறி ஓடி வருவதற்குள் அவர் முகத்தில் பட்டு கீழே விழுந்த காகித பட்சிகள் அவரை ஏளனம் செய்வது போல் சிரித்து நின்றன.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன. ஒவ்வொரு முறையும் தபால்காரர் தூக்கி எறிவதும், தாத்தா பொருக்கி எடுப்பதுமாக இருப்பதை யாழினி தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு வேலை போஸ்ட்மேன் மாமாவுக்கும், தாத்தாவுக்கும் ஏதோ சண்டையாக இருக்குமோ என்று அவள் மனதுக்கு சமாதானம் சொன்னாலும், அந்த சின்ன அறிவு சனாதானமாய் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தாத்தா தினையூர் நோக்கி புறப்பட்டார். பேத்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவர் நடக்கும் அழகே தனி. இறங்கி செல்லும் சாலைகளில் பேத்தி சறுக்கி விழுந்துவிடுவாலோ என்று தன உள்ளங்கைக்குள் அவள் விரல்களைப் பதித்துக் கொண்டு முகட்டில் அவர் இறங்கி செல்வதை மற்றவர்கள் எப்போதும் கேலிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

"பாரு கிழவன் பேத்திய மாட்ட இழுத்துப் போரதுப் போல் இழுத்துட்டுப் போறான்"

அன்று தினையூர் நோக்கி செல்கையில் தான் யாழினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். எப்போதும் அவள் வீட்டில் கடிதத்தை தூக்கி எரிந்து விட்டு செல்லும் போஸ்ட்மேன், கோந்து மாமா (எப்போதும், யாரிடம் பேசினாலும் கோந்து போல் ஒட்டிக் கொண்டிவிடுவதால் கிராமத்தில் அவருக்கு அந்த பெயர், ஊரில்) வீட்டில் மட்டும் வண்டியை விட்டு இறங்கி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு போவத்தைப் பார்த்தாள். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லையென்றாலும், மீண்டும் ஒரு முறை தாத்தாவின் கை இடுக்கையில் இருந்து திரும்ப முடியாமல் மெதுவாக திரும்பி பார்த்தாள். மெதுவாய்.. மெதுவாய்.. இன்னும் மெதுவாய்..கால்கள் தட்டுதடுமாறி முன்னோக்கி சென்றன.

மறுநாள் குப்பைகளில் இருந்து நிறைய காகித அட்டைகளை அவள் பொருக்கி எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்த தாத்தா "ஏ ஆத்தா என்ன பண்ற அங்க.. அங்கன எல்லாம் போகக் கூடாது வா இங்கன" என்றார்.

தாத்தாவின் அழைப்பை நிராகரித்தவளாய் மீண்டும் அட்டைகளை தேடிக் கொண்டிருந்தாள். முக்குக்கு சென்று கோந்து மாமா வீட்டில் இருந்த அஞ்சல் பெட்டியை ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தாள். மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து அட்டைகளை பல்வேறு அளவுகளில், வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டாள். பிஞ்சுக் கைகளில் கத்தரிக் கூட பிடிக்க இயலாமல் காய்கறி வெட்டும் கத்தியில் அட்டைகளை கத்தரித்தாள். ஒரே ஒரு அட்டையில் துளையிடும்போது கையில் கத்திப் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. ஆனால் அதனை பெரிய விடயமாக பாவிக்காத அவள் காரியமே கண்ணாய் இருந்தாள். வெட்டிய அட்டைகளை ஒவ்வொன்றாக இணைக்க பசை தேவைப்பட்டது. ஆனால் பசை வாங்க தாத்தாவை காசு கேட்டால் திட்டுவார் என்று அவளாகவே யூகித்துக் கொண்டு, சோற்றுப் பருக்கைகள் கொண்டு அட்டைகளை ஒட்டினாள். இருந்தாலும் அவை சரியாக ஒட்டிக் கொள்ளவில்லை. பூவில் வந்தமரும் பட்டாம்பூச்சி தேனெடுக்க பல்வேறு கோணங்களில் அமர்ந்துப் பார்த்தப் பின்னர் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து அமருவது போல் அட்டைகளை ஒட்ட பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியாக வெள்ளைத்தாள்களை இணைப்பானாக பயன்படுத்தினாள்.

அவை, அட்டைகளை ஒரு வழியாக இணைத்தது. இன்னும் அவள் நினைத்த வடிவத்தில் அந்த அட்டைகள் அமரவில்லை. அதற்கு இன்னும் அட்டைகள் தேவைப்படவே, தனது பள்ளிக்கூட நோட்டிலிருந்து சில அட்டைகளை கிழித்து பயன்படுத்தினாள். பேத்தி விளையாடக் கூட செல்லாமல் ஏதோ அட்டைகளை வைத்து செய்வதை பார்த்த தாத்தா முதலில் வையத்தான் செய்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அது ஒரு வடிவத்திற்கு வருவதைப் பார்த்ததும், அமைதியானார். அன்று அவள் நினைத்த உருவத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். உண்ண வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளையும் சேர்த்து இதற்காக பயன்படுத்தினாள். இப்போது பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே ஒரு சின்ன புன்னகை மட்டுமே பூத்திருந்தது. ஒற்றைப் பல்லை துருத்திக் கொண்டு தாத்தா சிரிக்க, வெட்கப் பட்டுக் கீழே குனிந்துக் கொண்டு பேத்தி சிரிக்க மீட்டப்படாத வீணை ஒன்று மீட்டப்பட்டது போல் ஒரு உணர்வில் தத்தா கொக்கரித்தார்.

இப்போது மீண்டும் முக்கில் இருக்கும் கோந்து மாமா வீட்டிற்கு சென்று அஞ்சல் பெட்டியைப் பார்த்து வந்தாள். அவளுக்கு இப்போது தேவை சிகப்பு வண்ண தாள்கள். அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தாத்தா தானாகவே கடைக்கு சென்று சிகப்பு வண்ணத் தாள்களை வாங்கிக் கொண்டு வந்து பேத்தியின் அருகே வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து சிரித்தார். அவளுக்கு சிரிக்க நேரம் இல்லை போலும், தாத்தாவை மேற்கொண்டு பார்க்காமல் வேலையைத் தொடங்கினாள். மிக நேர்த்தியாக கோந்து மாமா வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு அஞ்சல் பெட்டியை அவளும் செய்து விட்டாள்.

ஆனால் அதை இப்போது எங்கே வைப்பது என்று யோசித்தால். நாயக்கர் மாமா வீட்டில் இருப்பது போன்ற அகன்ற கதவு இல்லை. அவளுக்கு தெரியவில்லை, முதலில் அவர்களுக்கு இருப்பது போன்ற வீடே நமக்கு இல்லை என்று. ஆனால் அவளுக்கு கதவு இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. இப்போது அந்த அஞ்சல் பெட்டியை எங்கே தொங்கவிடுவது?.. வாசலருகே பதின்பருவ பெண் போல் வளர்ந்திருந்த வேப்பம் மரத்தில் ஒரு ஆணி அடித்து அதில் தொங்கவிட்டாள். அது போஸ்ட்மேன் மாமா வண்டி ஓட்டிட்டு வர ரோட்டுக்கு மிக அருகாமையிலேயே இருந்தது அவளுக்கு மகிழ்ச்சி.
கரு தரித்த பெண் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருப்பது போல் போஸ்ட்மேன் மாமா எப்போது வருவார் என்ற ஆவலுடன் யாழினி காத்திருந்தாள்.

அன்று காலை, வாசலின், வேப்பமரத்து நிழலில் தன் தோழிகளுடன் பாண்டியாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். ஒற்றைக் காலில் மீனுக்காக தவமிருக்கும் கொக்கு போல் மிக லாவகமாக பாண்டியாட்டத்தில் ஒற்றைக் காலில் அவள் ஆடும் அழகை வச்சக் கண் வாங்காமல் தாத்தா மட்டுமின்றி அந்த கிராமமே பார்த்து லயிக்கும். கைகளால் பாவாடையை முழங்கால் வரைத் தூக்கிக் கொண்டு, கழுத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு, சிறிய கல்லை இடது காலின் பெருவிரலில் பொருத்திக் கொண்டு, கல் கீழே விழாமல் அடுத்தப் பகுதிக்கு அவள் சென்று முடிக்கும் வரை பார்ப்பவர்களுக்கு நெஞ்சு பட படவென்று இருக்கும். பாருக்கும் எல்லோரையும் வயது வித்தியாசமின்றி தனது ஆட்ட நேர்த்தியால், உள்ளே இழுத்து சொக்க வைக்கும் பெருந்திராணி பெற்றவள் அவள்.

அவள் ஆட்டம் முடிந்ததும், போஸ்ட் மேன் மாமா தூர வருவதை பார்த்துவிட்டாள். பேத்தியாட்டம் முடிந்ததும், தாத்தா உள்ளே சென்றுவிட்டார். எல்லா சப்தங்களும், நின்றுப் போய், எல்லா அசை பொருட்களும் அசைவற்றுப் போய் ஒட்டுமொத்தமாக போஸ்ட் மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்தவாறே இருந்தது. அவள் போஸ்ட் மேனை பார்க்காமல் திரும்பிக் கொண்டிருந்தாள். போஸ்ட்மேன் அவளைத் தாண்டியதும், மெதுவாய் தலைத் திருப்பிப் பார்த்தால். போஸ்ட்மேன் வேப்ப மரத்தினருகே வந்துவிட்டார். டக்.டக்.. ட..ட..என்று இதயத் துடிப்பும் மிக மெதுவானது.... விழிகளோ இமை இருப்பதையே மறந்துப் போனது.

இந்த முறை அவள் வீட்டிற்கு கடிதம் வரவில்லை.. போஸ்ட்மேன் வேகமாக சென்றுவிட்டார். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, ச்ச... என்று வாயை சுழித்திக் கொண்டாள். உள்ளே ஓடிப் போய் "ஏன் தாத்தா இந்த மாசம் நமக்கு கடிதாசி வரல" என்றாள். எனக்கு எப்படிமா தெரியும். நாளைக்கு வருமோ என்னவோ? அதெல்லாம் வந்தா ஆச்சி.. இல்லனா ஒன்னும் பண்ண முடியாது மா",

"அப்போ நாம இந்த மாசம் தினையூர் போக மாட்டோமா", என்றாள்.

இந்த வாரம் முழுக்க கடிதாசி வரலானா, அடுத்த வாரம் நேர்ல போய் பார்க்கலாம் மா"

ஆசை ஆசையாய் செய்த அஞ்சல் பெட்டிக்கு என்றாவது ஒரு நாள் போஸ்ட்மேன் மாமா கடிதாசி கொண்டுவார் என்று அவள் காத்திருந்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு கடிதாசி வரவில்லை. போஸ்ட் மேன் அவ்வழியே செல்லும்போதெல்லாம் ஓடி வந்து அவர் கடிதாசியை அஞ்சல் பெட்டியில் போடுவாரா, என்று பார்த்து, ஏமாந்து முகத்தை கீழே புதைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுவாள்.

அந்த அஞ்சல் பெட்டி செய்ய அவள் செலுத்திய உழைப்பைக் காட்டிலும், அதனை தனது தாத்தாவுக்கான பெரிய அடையாளமாக அவள் கருதினாள். இனி தாத்தாவும் ஓடோடி சென்று கடிதாசி வாங்க வேண்டாம். போஸ்ட் மேன் மாமாவும் கடிதாசியை தூக்கிப் போடா வேண்டாம். கடிதாசியும் ஒரு போதும் ஈரத்தில் விழாது என்றும் அவள் மனதுக்குள் மத்தாப்பூ பூத்து, நொடிக்குள் அடங்கி போனது போல் ஆனது. என்றாவது கடிதாசி வருமென்று அவள் காத்திருந்தாள்.

ஒரு மழைக்காலத்தில் அட்டையாலான அஞ்சல் பெட்டி முழுக்க நைந்துப் போனது. பல மாதங்களாய் கடிதாசியும் வரவில்லை. இனி அஞ்சல் பெட்டி எதற்கு என்று அவளும் அதை அப்படியே தூக்கி எரிந்து விட்டு குடிசைக்குள் செல்கையில்.. "பெரியவரே போஸ்ட்" என்று கடிதாசியை வீட்டுக்குள் தூக்கி போட்டுவிட்டு போஸ்ட்மேன் சென்றுவிட்டார். மழையின் ஈரத்தை உள்வாங்கி இருந்த தரையில் பட்ட கடுதாசியில் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. தாத்தா ஓடி வந்தார்.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன.

யாழினியின் கண்கள் குப்பையில் தூக்கி எறியப்பட்ட அட்டையாலான அஞ்சல் பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தது. உதடுகளை சுழித்துக் கொண்டு மீண்டும்
தன் நோட்டுப் புத்தகங்களை எடுக்க விரைந்தாள். நாளை மற்றுமொரு நாளே..

Monday, March 7, 2011

தற்குறிஇருவருக்கும் இடையேயான மௌனம் எப்போது கலையும் என அலைகள் வந்து வந்து பார்த்து சென்றன. அவள் விரல்களால் மணல்பரப்பில் உருவங்களற்ற அரூபங்களை, சித்திரமாக வரைந்துக் கொண்டிருந்தாள். அவன் அவள் அழகில் லயித்துப் போனவனாய், ஒழுங்கற்ற வீதியில் பறந்து செல்லும் தட்டான் பூச்சி போல அவள் அழகை ஒழுங்கற்ற பார்வையால் பருகிக் கொண்டிருந்தான். எல்லா ஓவியர்களின் கையெழுத்தும் அழகாய் இருப்பது போல், காதலிக்கப்படும் எல்லா பெண்களும் அழகாகத்தான் இருக்கிறார்கள் என்று உள்மருவிக் கொண்டான். அவளின் அங்கங்களை அணு அணுவாய் ரசித்தப் பின்னர்தான் அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் அவனுக்குக் காணக் கிடைத்தது. புல்வெளியில் பட்டு, அதன் பரப்பில் தெறிக்கும் பனித்துளியைப் போல தனக்கும் அவள் கண்ணீருக்கும் எந்த நேர்க்கோட்டு தொடர்பும் இல்லை என்பதாக அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவளின் கண்ணீர்த் துளி மணலில் அவள் வரைந்த அரூபமான சித்திரத்தின் மீது பட்டு சித்திரத்தின் கண் போல் உருபெற்றது. அடுத்த கண்ணீர்த்துளி வழிந்தோடி சித்திரமே அழுவது போல் மாயையை உண்டு பண்ணிற்று.

கட்டுண்டு கிடக்கும் இந்த சமூகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள அவளுக்கு மனமில்லை. மானம் என்கிற ஒற்றை சொலவடை ஒரு சமூகத்தை, அதன் கூறுகளை, தர்க்க ரீதியான நியாயங்களை, இடையீடுகளை, எப்படியெல்லாம் காயப் படுத்துகின்றன என்று அவள் மனம் தனக்குள் கதைத்துக் கொண்டிருந்தது. பருவம் அடைந்த ஒரு பெண் தனக்கான ஒரு துணையை தேடிக் கொள்ள, அவள் குடும்பமே சம்மதித்தாலும், மானம் என்கிற ஒற்றை சொல்லும், சமூகம் என்கிற கட்டுக்கோப்பு கேந்திரமும் அந்த சம்மதத்தை அசம்மதமாக மாற்றிவிடுகிறது. இன்னமும் அவன் அவளை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்ளும் வார்த்தைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தாள். அவன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்.

"இப்ப என்னதான் சொல்ற, வர முடியுமா, முடியாதா?"

அவன் வார்த்தைகள் முற்றுப் பெறுமுன்னர் அவள் கண்ணீர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சப்தமில்லாமல் அழுத அவள் இப்போது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தால். தன்னை தேற்றுவதற்கு இவன் ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டானா என்கிற பெண்ணின் தவிப்பு ஒருபோதும் எந்த ஆணுக்கும் புரியப்போவதில்லை என்கிற உள்மன உளறலையும் பொருட்படுத்தாமல்.

அவன் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அவர்களின் அமர்ந்திருந்த தூரம் சற்றே அதிகமாயிற்று. அவள் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டால். இனி அழுவதனால் ஆய பயன் என்ன என்கொல் என்பதாக..

தள்ளி சென்று அவன் தோல் மீது தலை சாய்ந்து 'சரி' என்றாள். கூட்டுக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சு போல் அவன் இதழில் இருந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவள் கூந்தலை தடவி கொடுத்தான். அதுவரை வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு போல் இருந்த அவன் உடல்மொழி இப்போது பறந்து சீறிப் பாயும் சிங்கம் போல் ஆனது.


"சரி அடுத்த மாதம் ரெண்டு பெரும் சேர்ந்து தேனியில இருக்கிற என்னோட பிரெண்ட் ரவி வீட்டுக்கு போய்டுவோம். அங்க போய் ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிடுவோம். அப்புறம் நாம நமக்காக வாழ்வோம்" என்றான்.

அவள் அவன் விழிகளுக்குள் ஊர்ந்து செல்லும் தன்னை நோக்கினாள். அவன் முகம் எங்கும் புன்னகைப் பூ பூத்துக் குலுங்கியது. பார்வை பரிபாஷை நடந்துக் கொண்டிருந்தது. அவன் அவள் விரல்களை கொஞ்சம் மெதுவாய் தடவினான். அவள் சிணுங்கினாள். குலுங்கினால். கடற்கரை மணலுக்குள் புதைந்துக் கொண்ட அவள் கால் விரல்களை எடுத்து நீவி பரிகாசம் செய்தான். அவள் அவன் கேசக் கூட்டுக்குள் விரல் நுழைத்து வீணை மீட்டினால். காற்று வந்து அனைத்து செல்லும் நெற்கதிர்கள் பணிந்து எழுவது போல் அவள் விரல் பட்ட அவன் கேசம் முழுவதும் படர்ந்து விரிந்தது. கடல் காற்றையும் தாண்டி அனலடிக்கும் அவன் மூச்சுக்காற்று அவளின் மேனியில் மெழுகாய் பரவியது. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கிப் போனாள். அவன் நண்டைத் தேடி செல்லும் சிறுவன் போல அவளை இதழை தேடி சென்றான். அவள் பட்டும் படாமல் ஓரிடத்தில் நின்றுவிட்டால். நரம்புகள் கூட இல்லாத அவள் இதழில் அவன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான்.


அந்த இசை அவர்களின் காதல் உலகம் எங்கும் பரவி, நீக்கமற வியாபித்து காற்றில் பறக்கும் மெத்தை போல் விரிந்தது. அதில் அவனும் அவளும். இரண்டு விரல்களால் அவள் இதழை குவித்து, குவிந்த அவள் இதழை தன் பால் பற்களால் கடித்துக் கரைந்தான். அவள் கண்கள் திறந்துக் கொண்டே இருந்தன. காற்றில் பரந்த அவளின் கேசக் காடுகளை தன் கைகளால் ஒருங்கிணைத்து, அள்ளி வாரி, அவள் கழுத்துப் பரப்பில் சுகமாய் பிடித்துக் கொண்டான். கடல் பரப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டமெல்லாம், காற்றுப் பட்டுக் கரைந்துப் போனதுப் போலாகவும், எப்போதும் கரைந்துக் கொண்டிருந்த காற்று அவர்களை பாதுகாப்பதுப் போலவும் நினைத்துக் கொண்ட அவர்கள் பதித்த தங்கள் இதழ்களை மீண்டும் பிரிக்கவே இல்லை.அவள் இதழ் கொடுத்த மது அவனுக்கு போதையாக அடுத்து அவன் கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மார்பகங்கள் நோக்கி நகர்ந்தன. உருண்டு திரண்ட அவள் மார்பகங்களை மறைத்திருந்த மேதகு துணியை விளக்க விரல்கள் பெருமார்வம் கொண்டன. விரல் ஒவ்வொன்றாய் மார்பகம் நோக்கி நகர, அவள் திடுக்குற்று விலகினாள்.

"வேண்டாம் டா..ப்ளீஸ்"..கொஞ்சும் குமரி கெஞ்சுவதை பார்ப்பது, கொஞ்சுவதை விட அழகு. ஆனால் போதை தலைக்கேறிய அவன் அவள் வார்த்தைகளை கேட்டவனாக தெரியவில்லை. "ஏய்.. ஒரே ஒரு முறை.. ப்ளீஸ்.. இன்னும் ஒரு மாசம்தானே.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".."இல்லை..இல்லை.. வேண்டாம்.. நீ தள்ளிப் போ.. நெருங்க விடாமல் நெருப்பாய் தகித்தாள்.

பெருமூச்சு வாங்கிக் கொண்டான். "இப்ப என்னடி ஆச்சு.. பேய்க்காற்றை கிழித்துக் கொண்டு கம்பீரமாய் கேட்டது அவன் குரல்.. சுற்றிலும் நான்கைந்து பேர் திரும்பிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதால் இந்த குரலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நகர வாழ்க்கையில் கடற்கரைதானே ஆண்மைக்கு நிவாரணம். மூச்சுக் காற்றுப் பட்டால் ஒடிந்து விடுவதைப் போல் இருந்த ஒருவன் மட்டும் வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டிருந்தான். இவன். "என்னடா, என்ன வேணும்" என்றதும் அந்த வார்த்தைகளால் விழுந்து காற்றில் காணாமல் போனான்.

அவனுக்கு இன்னும் கோபம் தணியவில்லை. "ப்ளீஸ் டீ..ஒரே ஒரு முறை"..

"முடியாது டா. ப்ளீஸ் லீவ் இட்.. அவள் குரலில் கோபம் தெறித்தது".

"அப்பறம் என்ன மயித்துக்குடி அவ்ளோ நேரம் வாயில வாய வச்சி உறிஞ்சிக்கிட்டு இருந்த.. "

"தயா ப்ளீஸ் டா.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்"..

"சும்மா உங்களுக்கு அரிப்பெடுத்தா சொறிஞ்சி விட ஒருத்தன் வேணும்".. அவன் முடிப்பதற்குள்..

ஐயோ...... தயா, ப்ளீஸ்.. வில் யு ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்..

"முத்தம் கொடுக்கறது அன்ப பரிமாறிக்க.. ஆனால் அதுக்கப்புறம் நீ செஞ்ச வேல எத பரிமாறிக்க".. "அதுக்கு இன்னும் காலம் இருக்கு".

என்னடி பெரிய காலம், இதுக்கு முன்னாடி அப்ப எத்தன பேர்கிட்ட இந்த மாதிரி அன்ப பரிமாறிக்கிட்ட.

"ஷிட்.. உன்ன போய் நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு உன் கூட வரேன் னு சொனேன் பாரு.. உனக்கு என்னடா வேணும். என் அன்ப விட இந்த சத தான் முக்கியமா?"

"ஆமாம் டீ.. எனக்கு அதுதான் முக்கியம்..

அப்ப அதுக்கு இங்க நிறைய பேர் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க.. நீ அங்க போ"

"அப்படி நினைச்சு தாண்டி உன்கிட்ட வந்தேன்"..

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் கதறி கதறி அழத் தொடங்கினாள்.

"இனிமே என் மூஞ்சிலே முழிக்காத டா.. இங்க இருந்து போய்டு", அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். கடற்கரை முழுக்க ஒரே நிசப்தம். அவள் லேசாய் திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் அவளை திரும்பிப் பார்க்க விருப்பம் இல்லாதவனாய் விடுக்கென்று மறைந்தான்.

அவள் மனம் ஆறுதல் வார்த்தைகளை தேடி அலைந்தது. "நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டுப் போய் இருக்கலாம்டி".. என்னடி சொல்ற.. அவன் என்ன வார்த்த கேட்டான் பார்த்தியா.." அவள் மூளை எங்கும் வார்த்தைகளும், எதிர்வார்த்தைகளும், அலைந்துக் திரிந்துக் கொண்டிருந்தன. கண்ணீர் தீரும் வரை அழுதாள். மணல் பரப்பில் கட்டுண்டுக் கிடந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிதறிக் கிடந்த ஒன்றிரண்டு மனிதர்களும் களைந்து சென்றனர். நேரம் இரவின் பின் பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்னமும் அவள் மனம் அமைதியை தேடிக் கண்டு அடையவில்லை. அதற்காக காத்திருந்தால். அவள் உள் மனம் சொல்லிற்று "அவன் வருவான்.. மண்டியிடுவான். எனக்காக தன் கோபத்தை களவுக் கொடுப்பான் என்று. அங்கே அலைகளின் சப்தமும், காற்றின் கரைச்சலும், அவளையும் தவிர வேறு யாருமில்லை.

அவள் கால்களை குத்தவச்சு, முகம் மறைத்து அழுத்துக் கொண்டிருந்தாள். முதுகின் பின்பக்கம், வலது தோலின் மேற்பக்கம், அந்த அன்புக் கரங்கள் தீண்டின. அடைத்து வைத்திருந்த ஆற்று நீர் திறந்து விட்டதும் பெருக்கெடுத்து ஓடுவது போல் அவன் திரும்பி வந்து விட்டான்.. என்று பேரானந்தத்தில், சிரிப்பும், அழுகையுமாய் சேர்ந்து அவள் திரும்பி... தயா.........................

"யாரு நீங்க..." விழிகளில் பயம்..தேக்கி வைத்திருந்த வார்த்தைகளை திருப்பி தர மறுத்த மூளை. அவள் வார்த்தைகள் அற்றவளாய்" சனதானமாய் கிடந்தாள்.

ஹி..ஹி.. ஹி...முகம் முழுக்க பற்களாய் தெரிந்தன.

விடிந்தது. தயா விழித்ததும், இரவு கீழ் தனமாய் நடந்துக் கொண்டதற்காக அழுதான். இனி அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று ஏங்கித் தவித்தான். கோபத்தில் உதிர்ர்த்த வார்த்தைகளை திருப்பி எப்படி பெறுவது, என்று மனதுக்குள் யுத்தம் செய்துக் கொண்டிருந்தான். மனதை தேற்றிக் கொண்டு அவளை அழைத்தான் அலைபேசியில்..

"நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் சிறிது நேரம் கழித்து கால் செய்யவும்".. ஓயாமல் ஒலித்தது கணினி குரல்.

"தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டு அவள் காலடியில் விழுந்திடலாம்.. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது"..

தயா அவளின் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீடு பூட்டி இருந்தது.

அக்கம் பக்கம் யாருமில்லை விசாரிக்க.. மனம் வெறுமையை உணர்ந்தது. உடனடியாக அவளைப் பார்க்க விழிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டன.

"நேத்து அவள தனியா பீச் ல விட்டுட்டு வந்தோமே.. அங்கேயே இருப்பாளே.. மனம் நிலைக் கொள்ளவில்லை. கடற்கரை நோக்கி விரைந்தான். கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்களின் ஒவ்வொன்றின் மீதும் ஒரு கால் வைத்து நடந்தான். கற்கள் முடியும்போது இரண்டு கால்களுக்கும் சேர்ந்து சம அளவில் கற்கள் கிடைத்திருந்தால் அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு காலாய் மெதுவாக அடியெடுத்து வைத்தான். இறுதியில் இடது காலுக்கு, வலது காலுக்கு கிடைத்ததை விட ஒரு கல் குறைவாகக் கிடைத்தது. என்ன செய்வது என்று யோசித்தான். கடைசி கல்லில் இரண்டு கால்களையும் சேர்ந்தே வைத்தான். இருந்தாலும், அதில் அவள் மனை நிறைவு பெறவில்லை. கடற்கரையில் எந்த 'பூ' மரமும் இல்லை. எனவே இங்கே ஏதாவது பூ கிடைத்தால் போதும்.. அவளுக்கு ஒன்றும் நடந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான். கடற்கரை முழுதும் பூவைத் தேடி அலைந்தான். ஓரிடத்தில் ஒரே ஒரு மல்லிப் பூ உதிர்ந்துக் கிடந்தது. மனம் முழுக்க சந்தோசமாய் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தான். சிறிது தூரத்தில் அதே போல் இன்னொரு மல்லிப் பூ கிடந்தது. இன்னும் மகிழ்ச்சி கூடிற்று. 'பூ'வை கையில் வைத்துக் கொண்டே அவளை தேடினான். எங்கும் அவளில்லை. அனலடிக்கும் மணற்பரப்பில் ஆங்காங்கே கண்களுக்கு குளிர்ச்சியாய் காதல் ஜோடிகள். அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ஒருவன் மட்டுமே வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்து கண்களை விரித்தான். "இவன எங்கேயோ பார்த்திருக்கோமே?".. அவன் மனம் நினைப்பதற்கு முன்னாள்.. ஆமாம் இப்ப இது ரொம்ப முக்கியம்" என்று நினைத்துக் கொண்டு.. வேகமாக நடந்தான்.

"ஐயோ.. பாக்கவே பயங்கரமா இருந்தது டா.. காலங்கார்த்தால, யப்பா.. இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி உள்ள இறங்காது. எவ்ளோ கொடூரமா இருந்தது தெரியுமா? அப்படியே என் கை கால் எல்லாம் நடுங்கிக்கிட்டே இருந்தது. அப்புறம் போலீஸ் வந்தப்புறம் தான் ஆம்புலன்சே வந்து எல்லாத்தையும் சேர்த்து அள்ளிக்கிட்டுப் போச்சு.. இப்ப பாரு இந்த பீச்ச ஒன்னும் நடக்காத மாதிரி கிடக்குது".

இரண்டு வாலிபர்கள் பேசிக்கொண்டே நகர்ந்து சென்றார்கள். காகங்களும், கழுகுகளும் ரத்தம் படிந்த அந்த கடற்கரையின் மணல் வெளியை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தன. அவன் இவை எதையும் காணாதவனாய், வேகமாக அவள் வீடு நோக்கி நடந்தான், அவளின் நினைவுகளுடன்.


Sunday, January 2, 2011

அன்பின் இருத்தல்ஈரோட்டில் நடைபெற இருந்த பதிவர்கள் சங்கமம் நிகழ்வில் குறும்படம் சார்ந்து என்னை பேச அழைத்திருந்தார், நண்பரும் பதிவருமான ஆருரான் விஸ்வநாதன்.

எப்போதும் எனக்கு பயணங்கள் மீது அப்படி ஒரு அலாதிப் பிரியம் உண்டு. விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்ணெல்லாம் அழகாய்த் தோன்றுவது போல் எனக்கு எப்போதும் எல்லாப் பயணமும் அழகாகவே தோன்றும். பயணங்கள் நம் மனக் கழிவுகளை அகற்றி, புத்துணர்ச்சியைக் கொடுக்கும் ரசவாதத்தை செய்கிறதென்றால், அதில் நாம் பெரும் அனுபவங்கள் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்து சென்றுவிடும். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் மனம் சில ரசவாதங்களுக்கு உட்பட்டு ஒரு மேன்மைத்தன்மையை அடைய வேண்டுமென்றால் நாம் பயணத்தின் ஊடாக ஒரு ஆழ்மனப் பயணமும் செய்யவேண்டியது அவசியமாகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று எனக்கான ரயிலை அடையாளம் கண்டு, என் இருக்கையில் அமர்ந்தபோது மணி பத்து முப்பது. பத்து நாற்பதுக்கு ரயில் புறப்பட வேண்டும். அடுத்த சில நொடிகளில் எனக்கான ஆச்சர்யம் அங்கே காத்திருந்தது. எனக்கான இருக்கை அமைந்திருந்த பெட்டியில் நிலவி வந்த ஒரு நிசப்தம் அடுத்த சில நொடிகளில் குயில்களும், மரகதப் பறவையும் கொஞ்சி விளையாடும் தோப்பில் ஏற்படும் ஆனந்த ரீங்கார சப்தமாக மாறிவிடும் என்று அதுவரை நான் நினைக்கவில்லை. திபு திபு வென அடித்துப் பிடித்துக் கொண்டு அழகிய அரக்கிகளும், அழகிய அரக்கன்களும் அந்த ரயில் பெட்டியை அடைத்துக் கொண்டு அது தங்களுக்கான அந்தரங்க இடம் என்பது போல் சுற்றியிருந்த யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தங்கள் இருக்கைகளை தேட ஆரம்பித்தனர்.

பள்ளி மாணவ மாணவிகள் ஏற்காடு சுற்றுலா செல்வதாக பின்னர் அறிந்தேன். மேல் இருக்கையில் ஏறிக்கொண்ட ஒரு சிறுவன், தனது பையை கீழே விட்டிருந்தான். மேலே ஏறியதும் என்னைப் பார்த்து அந்த பேக (Bag) கொஞ்சம் எடுங்க என்றான். அவன் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லை. எடுக்க முடியுமா என்று கூட கேட்கவில்லை. என்னை முன் பின் கூட பார்த்தது இல்லை. இருந்தாலும் என்னிடம் எல்லா அதிகாரமும் பெற்றவன் போல அவன் பேசியது எனக்குள் ஆனந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு குடும்பத்தை சார்ந்த பெரியவர்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத இந்தக் கால சூழலில் முன்பின் அறியாத ஒருவரிடம் இவ்வளவு உரிமையை பேச சிறுவர்களால் மட்டுமே முடியும். அவர்களின் உலகம் தனித்துவம் வாய்ந்தது. அங்கே எதிரிகள் யாருமில்லை. எதிரே இருப்பவர்கள் கூட அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள்தான் எதிர் இருப்பவர்கள் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து கையசைத்து விட்டு செல்ல ரயில் மெதுவாக நகரத் தொடங்கியது. ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிறுவன் தட தடவென ரயிலில் இருந்து கீழே இறங்கி தன் தந்தை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மீண்டும் ஓடிவந்து ரயில் ஏறினான். அந்த நொடிப்பொழுதை முழுதாய் பார்த்தவன் நான் மட்டுமாகவே இருப்பேன். வேறு யாரும் அந்த சிறுவனை பார்க்கவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த தந்தைக்கு முகத்தில் அவ்வளவு வெட்கம்.. என் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் திரும்பிப் பார்த்த அந்த முகத்தில் தவழ்ந்த அந்தப் புன்னகை ஒரு கோடி அர்த்தங்களை எனக்கு கற்பித்தது. பின்னர் அவரை நேராகப் பார்க்காமல் கொஞ்சம் திரும்பி நான் அவர் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் அந்த வெட்கத்தை உடைக்க நான் விரும்பவில்லை. ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் மிக சிலவே. நான் அந்தக் குறிஞ்சிப் பூவை அதன் பூத்திருப்பை பார்த்துவிட்டவனாக பெருமைக் கொள்ள அந்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது. அந்த பள்ளி சிறுவர்களுடன் நிறையப் பேச வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அருகில் இருந்தவர் தன்னுடய இளைய மகன் மூன்றாவது பெட்டியில் இருப்பதாகவும், நான் இடம் மாறிக் கொண்டால் அவன் இங்கே வர எதுவாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். நான் சரி என்று சொல்வதற்கு முன்னமே அவர்கள் அந்த அமைதியை சரியெனப் புரிந்துக் கொண்டார்கள். அவர்களின் நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை நான். டி.டி. ஆர் வரும் வரை அந்தப் பெட்டியில் காத்துக் கொண்டிருந்தேன். அந்த தந்தை தன்னுடைய மூத்த மகனை எப்படியெல்லாம் வளர்க்க விரும்புகிறார் என்று சொற்ப நிமிடங்களில் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்து. பத்து வயது சிறுவன் அவன். அதற்குள் அவர்கள் பயணப்பட்ட இடங்கள் கொஞ்சமல்ல. தொடர்ந்து தங்கள் பயண அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் சாலையில் போகும் ஒரு வண்டியைக் காட்டி அது எந்தக் கம்பனி வண்டி என்று கேட்க அவன் தவறாக சொல்ல, அவர் அதை சரி செய்கிறார். இன்னும் பலவிதங்களில் தன் மகனை அவன் போக்கிலேயே விட்டு அவனை ஒரு ஆளுமையாக வளர்த்தெடுக்க அவர் விரும்புவதை என்னால் உணர முடிந்தது. அங்கே நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

டி.டி. ஆர் வந்ததும் டிக்கெட் சோதனை முடித்து மூன்றாம் பெட்டிக்கு செல்ல தயாரானேன். அவர் என்னிடம் எப்படி நன்றிக் கூறலாம் என்று வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்த வேளையில் நான் அங்கிருந்து விருட்டென மறைந்து விட்டேன். அப்படிப் பட்ட ஒரு தந்தை யாரிடமும் தலை வணங்குவதையோ, நன்றி சொல்வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மூன்றாவது பெட்டியில் எனக்கான இருக்கையை நான் தேடியபோது அங்கே முன்னமே யாரோ ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் துயிலை கலைக்க விரும்பாத நான் அங்கே நின்றுக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த ஒருவர்.. "சார் நாங்க எல்லாம் குடுமபமா வந்திருக்கோம்.. சின்னப் பையன் அதான்...? என்று என்னிடம் ஏதோ சொல்ல வந்தவராக சொல்லக் கூச்சப்பட்டார். நான் புரிந்துக் கொண்டவனாக எந்த சீட் என்றேன். அங்கிருந்து ஒரு ஆறேழு சீட்டுத் தள்ளி நான் என் இருக்கையை ஒரு வழியாக அடைந்து விட்டேன்.

விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம், ஒரு பரவசம் வேறெதிலும் நமக்கு கிடைக்காது. அத்தகைய பரவச நிலையை நம்மில் பலரும் அனுபவித்து இருக்க வாய்ப்பே இல்லை. விட்டுக் கொடுத்தல் என்பது சொல்லளவில் மட்டுமே இருக்கும் ஒரு கூறுதானே தவிர அது வாழ்வியலுக்கான ஒரு குறியீடாக இங்கேக் கருதப் படுவது இல்லை. நான் அந்தப் பரவச நிலையை அடையும் நிலை வந்தால் எப்போதும் அதனை உடனே பெற்றுவிடத் துடிப்பவன். அது கலவியின் உச்சத்தில் ஏற்படும் சுகத்தை விட பன்மடங்கு பெரியது. உயர்வானது.

பின்னர் அந்த சிறுவனின் தந்தை என் இருக்கை அருகில் வந்து என்னிடம் "சார் வசதியா இருக்கா?" என்று விசாரித்தபோது அவர் முகத்தில் இருந்த கள்ளங்கபடமில்லாத புன்னகை என்னை நெகிழ செய்ததா அல்லது நெருட செய்ததா என்று தெரியவில்லை. பின்னர் டி. டி. ஆர் வந்ததும் நான் இருக்கை மாறிய விடயத்தை விளக்க முற்ப்பட்டபோது அவர் சொல்லிட்டாரு சார்.. என்று கூறிக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்துவிட்டு என் டிக்கெட்டை கூட அடையாள அட்டையோடு சரிப்பார்க்காமல் நகர்ந்தார். எட்டி பார்த்தேன். அங்கே அவர் சிரித்துக் கொண்டே ஓகே வா என்று சைகையால் கேட்டு புன்னகைத்தார். என் எதிர் இருந்த ஒரு வட நாட்டு இளைஞன் தன் தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டே அங்கங்கே நீவி விட்டுக் கொண்டிருந்தார். தந்தை "போதுமப்பா.. விடு" என்று ஹிந்தியில் (அப்படிதான் சொல்லி இருப்பார் என்பது என் யூகம்) சொல்லிக் கொண்டே மகனின் பிடியில் இருந்து விடுபட முயற்ச்சித்தார். மகனோ பிடியைத் தளர்த்த தயாராக இல்லை. அன்று இரவு அந்த மூன்றாம் என் ரயில் பேட்டியே அன்பால் நிரம்பி இருந்தது. அந்த அன்பு பரிசுத்தத்தின் பரிசுத்தமாக ஒரு புன்னகை மூலம் மட்டுமே தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.

இரவு தன் பயணத்தை தொடங்கியது. மூன்றுமணியளவில் நான் அதுவரை சந்தித்திராத, உணர்ந்திடாத ஒரு குளிர் என்னை வாட்டியது. நான் எப்போதும் பயணத்தை தீர்மானித்துக் கொள்பவன் அல்ல. பயணத் தேவைகளை தேடிக் கொள்பவனுமல்ல. அந்த குளிரை போக்கிக் கொள்ள எனக்கு தெரியவில்லை. என் நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சில்லிடத் தொடங்கியது. என் அடிமனதில் ஏதோ இனம் தெரியாத பயமும், ஆற்றாமையும் என்ன வாட்டியது. கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடலில் தக தகப்பை ஏற்படுத்திக் கொள்ள அது ஒன்றும் சாரல் அல்ல. கடலை நிரப்ப பெய்யும் அடைமழை. இந்த குளிர் என் இருத்தலை கேள்விக் குறியாக்கி விடுமோ என்றுக் கூட மனம் பதறியது. விழித்துப் பார்க்க மனமில்லை. அல்லது நான் இன்னும் உயிர்த்திருக்கேனா என்று கூட தெரியவில்லை. கைகளையும் கால்களையும் இறுகக் கட்டிக் கொண்டு தாயின் கருப்பையில் சுருண்டுக் கிடக்கும் குழந்தைப் போல கிடத்தலானேன். அங்கே எனக்கு தூக்கத்தை மருந்தாகக் கொள்வதை தவிர வேறொன்றும் தெரியவில்லை.

இரவின் பயணம் பகலை நோக்கி முற்றுப் பெறத் தொடங்கியது. காலை ஆறு மணிக்கு எல்லோரும் குளிரை விரட்ட ஏதேதோ வித்தை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு குளிர் தெரியவில்லை. ஒரு வேலை என் உடல் மரத்துப் போய் விட்டதோ என்று மனம் மருவியது. மெதுவாக கண் விழித்தப் பார்த்தேன். என் உடல் மேல் மிக கனமான போர்வை ஒன்று போர்த்தப் பட்டிருந்தது. இது எப்படி நடந்திருக்கக் கூடும். பக்கத்தில் இருந்த வடநாட்டுக் குடும்பம் அங்கே இல்லை. எதிரே இருந்த சிலர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று உள்மனம் சொல்லியது. எங்கிருந்து வந்தது இந்தப் போர்வை. ஏதும் இறைதூதன் எனக்காக இந்தப் போர்வையை அனுப்பி இருப்பானா? நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆயிற்றே.. பிறகு ஏன் கடவுள் இந்த தவறை செய்யப் போகிறார்.. போர்வையை மடித்து மேலே போர்த்திக் கொண்டு கீழே இறங்கிப் பார்த்தேன்.

எதிரில் இருந்தவர் புன்னகையோடு என்னிடம் வந்தார். "நல்லத் தூக்கமா தம்பி..ராத்திரி பாத்ரூம் போக இந்தப் பக்கம் வந்தேன். ரொம்பக் கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்தீங்க..அதான் போர்வையைக் கொண்டு வந்து போர்த்திட்டுப் போனேன்?" என்று வெள்ளந்தியாய் சிரித்தார்.

"யோவ் நான் அப்படி என்ன யா உனக்கு செஞ்சிட்டேன்.. ஏன்யா அன்பால என்ன கொல்ற..நான் இந்த அன்புக்கு சொந்தமானவன் அல்ல.. அந்தக் குளிர் என்னை வாட்டியதை விட இந்த அன்பு என்னை பன்மடங்கு அதிகமாக வாட்டுகிறது. அன்பு என் தனிமையை கேள்விகுறியாக்குகிறது. அன்பு என் இருத்தலை பகடியாக்குகிறது. அன்பு எனக்கான வாழ்வியலை, வாழ்வுக்கான அர்த்தங்களை கற்ப்பிக்க முயற்சிக்கிறது. அன்பு என்னை கட்டுண்டு வாழ செய்கிறது. நான் காட்டாற்று வெள்ளமாய் மாறவே விரும்புகிறேன். காற்றைப் போல பட்டும் படாமலேயே பரவி செல்ல விழைகிறேன். என்னை அன்பென்ற ஆழ்கடலுக்குள் அமிழ்த்தி வைக்காதீர்கள்.. ஒரு முறை அன்பு என்னை தொட்டுவிடுமாயின் நான் திக்கற்றவனாக, நோயாளியாய், சமூகக் கோட்பாடுகளுக்குள் புதைந்து வாழும் மண் புழுவாய் மாறிவிடுவேன். நான் அதனை விரும்பாதவன். அன்பு என்கிற வார்த்தையில் இருக்கும் மைய சரடுகள் என் வாழ்வின் பிரக்ஞையை மாற்றி அதன் அடிச்சுவடுகளை அழித்து என்னை ஒரு சராசரியாய் மாற்றிவிடும் அபாய எல்லைக்குள் நான் போக விரும்பாதவன். இலக்கற்ற என் பயணத்தின் அன்பு ஏதோ ஒரு இலக்கை தீர்மானித்துவிடும் என அஞ்சுபவன். உங்களின் பரிசுத்தமான அன்பிற்கு நான் என்ன பரிகாசம் செய்துவிட முடியும். என்னை ஈட்டியால் துளைத்தெடுங்கள்.. என்னைக் கொப்பரையில் போட்டு வறுத்தெடுங்கள்.. மாட்டுத் தொழுவத்தில் மரித்துப் போக வையுங்கள்.. ஆனால் அன்பால் அரவனைக்காதீர்கள். அன்பு உட்புக நான் மேன்மையானவன் அல்ல. என் சுக துக்கங்கள் அன்பென்கிற எல்லையை தாண்டி, உணர்வுகளற்று ஒரு மாய நிலைக்கு என்னை ஆட்கொணர செய்துவிட்டது. உங்கள் வெள்ளந்திப் புன்னகை என் நெஞ்சை கிழிக்கும் கோடரியை மாறி விடுமுன்னர் அதன் பாதையை கொஞ்சம் மாற்றி விடுங்கள். இல்லையேல் நான் என் பயணத்தை மாற்றிக் கொள்ள நேரிடும்"

என்று அவரிடம் கூறி விடைபெற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவரது அன்பால் ஆன அந்த முகத்தை பார்க்க எனக்கு நெஞ்சுரம் இல்லாததால் போர்வையை அவரிடம் கொடுத்து விடைபெற்றேன்.

கீழே இறங்கிதும், எட்டாம் எண் பெட்டியில் என் இருக்கையை வாங்கிக் கொண்ட அல்லது நான் தருவித்து விடைப் பெற்ற குடும்பம் என்னை பார்த்துவிட்டது. மிக அழகான குழந்தைகள், கணவன் போல் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் வளர்த்து அவர்களுடன் சீட்டாட்டம் ஆடி சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு அன்பான குடும்பம் ஆதலால் மீண்டும் பீதியுற்றேன். அவர்கள் அன்று காலை என்னிடம் பேசிக்கொண்டே தேநீர் அருந்த அழைத்தனர். குளிரின் வாட்டத்தைப் போக்க சுகமாக இளஞ்சூட்டில் தேநீர் அருந்திக் கொண்டே மேலும் அந்த பிள்ளைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கு வழிகாட்ட தான் நாங்கள் பெற்றோர்களாக இருக்கிறோமே தவிர எங்கள் ஆசைகளை திணிக்க நாங்க என்ன எந்திரமா வாங்கி வைத்திருக்கிறோம் என்று அவர்கள் எதிர்கேள்வி கேட்டபோது என்னிடம் பதிலில்லை. ஐந்து வேலை தொழுகையை முறையாக பின்பற்றும் அந்த இஸ்லாமியக் குடும்பம் அது. போகும்போது என்னிடமிருந்து ஏதோ ஒன்றை பறித்துக் கொண்டு செல்வது போல் உணர்ந்தேன். ஆனால் அவர்கள் இந்த சமூகத்துக்கு ஏதோ ஒன்றை விட்டு செல்லப் போகிறார்கள் என்பதை திண்ணமாக நம்புகிறேன். மூன்றாம் எண் பெட்டியும், எட்டாம் எண் பெட்டியும் எனக்கு விட்டுக் கொடுத்தலின் பரவச நிலையை மீண்டும் உணர செய்தது. எப்போதும் பரவச நிலை சில கணங்கள் மட்டுமே நிலைக்கக் கூடியது. எனவே தன்னிலைக்கு திரும்பி எனக்கு வண்டி அனுப்புவதாக சொல்லி இருந்த ஆருரானை அலைபேசியில் அழைத்தேன்.

அங்கே ஜாபர் என்கிற நண்பர் காத்திருப்பதாக செய்தி சொன்னார். ஜாபரை நான் தேடும் முன் அவர் என்னை தேடி வந்து வண்டியில் இருத்தி விட்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதிகாலைப் பணியில் எதிர் நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்தது போல் ஒரு நினைவு. நிமிடங்கள் கழிந்ததும், உள்ளே வந்த அந்த எதிர் நபர் என்னிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். வணக்கம் நண்பா.. நான் பாமரன்.. எழுத்தாளர்.