Monday, July 27, 2009

கண்ணீருக்காகக் காத்திருக்கும் கண்கள்.




கண்ணுக்கும், இமைக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் முள் போன்றது சில நினைவுகள், சில உறவுகள். இந்த முள் சில நேரம் மனதை மலடாக்கும் மகா சக்தி படைத்தது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி என்று நமக்கு எத்தனை சொந்தங்கள் தானாக வாய்க்கப்பட்டிருந்தாலும், நாம் விரும்பி தேர்ந்தெடுக்கும் சொந்தம் ஒன்று உண்டு.

அது நட்பு. இதை உறவு என்று சொல்வதா? உரிமை என்று சொல்வதா? உயிர் என்று சொல்வதா? தெரியவில்லை. எப்படி இப்படி ஒரு உறவு நமக்கு வாய்த்திருக்கிறது? இயற்கை (கடவுள்??) மீது இன்னமும் என் நேசம் மாறாமல் இருப்பதற்கு இந்த உறவும் ஒரு முக்கியக் காரணம்.

இதுதான் இன்னது என்று தெரிவதற்கு முன்னரே நாம் பல விசயங்களை இழந்து இருப்போம். ஒரு பொருளின் அருமை நமக்கு புரியும் முன்னரே அதனை நாம் தொலைத்துவிட்டு இருப்போம். அது நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம். எப்போதும் ஒரு குழுவாகவே நாங்கள் திரிந்துக் கொண்டிருப்போம். வீரா, சண்முகம், சந்திரன், சுரேஷ் என்று மிகப் பெரியப் பட்டாளம் அது. இதில் வீராவிற்கு எப்போது என் மேல் அதீத பாசம் உண்டு. எனக்காக சக நண்பர்களிடமே சண்டை போடுவதும், உடல் நிலை சரியில்லாதக் காலங்களில் எனக்காக இறைவனை வேண்டி அவன் கோவில் கோவிலாக திரிவதும் என்று அவன் என் மேல் வைத்திருந்த அளவுக் கடந்த பாசம், நான் உணர்வதிற்குள்ளாகவே என்னை விட்டுப் பிரிந்து போயிருந்தது.

ஒரு முறை கொட்டிவாக்கத்தில் இருந்த முந்திரி தோப்பில் நானும் எங்கள் பட்டாளமும் சென்று முந்திரிப் பழம் திருடி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் தோப்பின் உரிமையாளர் வந்து விட்டார். இதனை அறிந்த அனைத்து சக நண்பர்களும் அடிச்சுப் பிடிச்சு சுவரைத் தாண்டி ஓடி விட்டனர். எனக்கு அந்த சுவரை தாண்ட தெரியவில்லை. தோட்டக்காரர் மிக அருகில் வந்து விட்டார். நானும் வீராவும் மட்டுமே அப்போது அங்கே இருக்கிறோம். திடீரென்று வீரா முட்டிக்கால் போட்டு, "நீ ஏன் மேல ஏறிப் போடா அருண்" என்றான். நான் அவனைப் பற்றி சிந்திக்காமல், மாட்டிக் கொண்டால் வீட்டில் அடிப்பார்களே என்ற எண்ணத்தில் அவன் மீது ஏறி சுவரை தாண்டி சென்று விட்டேன். ஆனால் வீரா அந்தத் தோப்பின் உரிமையாளரிடம் மாட்டிக் கொண்டான். வீராவின் தந்தைக்கு இந்த செய்தித் தெரிந்ததும் அவனை சகட்டு மேனிக்கு அடித்துள்ளார். உடல் முழுவதும் காயங்களுடனும், முட்டிக்காலில் பெரிய புண்ணுடனும் மறு நாள் பள்ளிக்கு வந்தான். என்னைத் தப்ப வைப்பதற்கு அவன் முட்டிக்கால் போட்ட போது கீழே இருந்த கற்கள் குத்தி அவன் காலில் பெரிய புண்கள் தோன்றி இருந்தன. அவன் அதனை கூட பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை. நானும் "எப்படி டா தப்பிச்சே" என்று கேட்டதோடு முடித்துக் கொண்டேன்.

மிக சிறிய வயதில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் என் மீது அன்பைப் பொழிந்தவன். எனக்கோ மற்ற நண்பர்களுக்கோ யார் மீதும் இந்த அளவிற்கு பாசம் இருந்தது இல்லை. வீராவிற்கு என் மீது பாசம் ஏற்படக் சிறப்பு காரணங்கள் ஏதும் இல்லை. அவன்தான் எனக்கு இடைவேளை நேரத்தில் தின்பண்டங்கள் வாங்கித் தருவான். எனக்கு வீட்டில் கொடுக்கும் பத்துப் பைசாவில் என் வயிறே நிரம்பாது. பிறகு எங்கே நான் அவனுக்கு செலவழிப்பது. சில நேரங்களில் வீராவிற்கு தெரியாமல் கடைக்கு வந்து பத்துப் பைசாவிற்கு கல்லாக்கா வாங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்பிற்கு ஓடி விடுவேன். ஆனால் ஒருபோதும் அவன் இப்படி செய்யமாட்டான். எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டு அவன் உண்ணாமல் இருந்த பல பொழுதுகளை நான் கண்டிருக்கிறேன்.

சாலையோரம் அமைந்துள்ள என் பள்ளியின் மீது எப்போதும் எனக்கொரு பற்று இருக்கும். ஆசை இருக்கும். காரணம், பல்வேறு விசயங்களை, பொருட்களை, மனிதர்களை வேடிக்கைப் பார்க்கும் பழக்கம். ஆனால் அதே சாலையோரப் பள்ளிதான் எனக்குள் அழிக்க முடியாத பல இரணங்களை உண்டு பண்ணியது.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை இரண்டு வழிப் பாதைதான். மிகக் குறுகிய சாலை. இந்தக் குறுகிய சாலையை நாங்கள் கடக்க எப்போதும் எங்கள் விளையாட்டு ஆசிரியர் உதவி செய்வார்.

ஒரு நாள் இடைவேளை முடிந்து வகுப்பறைக்கு அனைவரு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் வீராவை விட்டு மற்ற நண்பர்களுடன் வந்துக் கொண்டிருதேன். எப்போது என் கைப்பிடித்து நடப்பதே வீராவுக்கு பிடித்த விஷயம். என்னைத் தேடி மிக அவசரமாய் அவன் சாலையைக் கடக்க முயன்றான். மிக வேகமாய் வந்த அரசுப் பேருந்து..????

அவன் மீது இடிக்காமல் திடீரென பிரேக் பிடித்து நின்றது. ஒட்டுமொத்த பள்ளிக்கூடமே ஒரு கணம் நிசப்தமானது. பேருந்து ஓட்டுனர் மிக அவசரமாய் கீழே இறங்கி வந்தார். வீராவை அடிக்கப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் பயந்து போய் நின்றுக் கொண்டிருந்தோம். வீரா அருகே வந்த ஓட்டுனர் மிக அமைதியாய் "பாத்துப் போடா செல்லம்".. என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இன்றளவிலும் என் மனதில் ஹீரோவாக திகழும் அந்த ஓட்டுனர் பற்றி மற்றொருப் பதிவில் பார்ப்போம்.

அதே நாள் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம். வீரா என்னிடம் வந்து "நாளைக்கு காலைல எங்க வீட்டுக்கு வாடா. இன்னைக்கு நானும் எங்க அப்பாக் கூட மீன் பிடிக்கப் போறேன். காலைல வந்தா நான் பிடிச்ச மீனா கொழம்பு வச்சி சாப்பிடலாம்" என்றான். நானும் சரிடா என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.

என் வீடு கடற்கரைக்கு கொஞ்ச தூரத்தில் தான் இருந்தது. எனவே தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து கடற்கரைக்கு சென்று என்ன என்றே தெரியாமல் எதையோ ரசித்துக் கொண்டிருப்பேன். என் தாய் பல முறை என்னை திட்டுவார். அபோதைய என் வயதில் ஐந்து மணிக்கு எழுந்து கடற்கரைக்கு போவது என்பது யாரிடமும் இல்லாத பழக்கம்.

அதே போல் அன்றும் கடற்கரைக்கு சென்றேன். கடற்கரை முழுதும் ஒரே கூட்டம். ஒரு நாளும் நான் இவ்வளவு கூட்டத்தை அதிகாலையில் கண்டது இல்லை. என்ன என்றுப் புரியாமல் நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென் ஒரு பெண் "ஐயோ... ஐயோ... என தன் மார்பில் அடித்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு முகம். ஆம் வீராவின் தாய். நானும் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். நான்கு பிணங்கள் கடற்கரையில் ஒதுங்கி நின்றது. வயிர் முழுவதும் காற்றடித்துப் போன பையாக ஊதிப்போய் அசைவுகள் அற்று பிணமாய் நான் பார்த்த அந்த நான்கு முகங்களில் ஒன்று நண்பன் வீராவின் முகமும் அடக்கம்.

கண்கள் கண்ணீர் வடிக்க வில்லை. பயந்துப் போய் வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு நாட்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்துக் கண்டு மசூதிக்கு சென்று எனக்கு மந்திரித்து விட்டார்கள்.

மீண்டும் முதல் வரியைப் படியுங்கள். இது வரை சக நண்பர்கள், தாய் தந்தை, என யாரிடமும் நான் பகிர்ந்துக் கொள்ளாத ஒரு சம்பவம் இது. இன்றும் கடற்கரைக்கு சென்றால் என் ஒருத் துளிக் கண்ணீராவது கடலலையுடன் கலக்கும். நான் தொடங்கும் எந்த நல்ல செயலையும் கடற்கரையில் தான் தொடங்குவேன். யார் இவன், என் மீது உயிராய் இருந்தவன். ஆனால் ஏன் என் மனம் அவனது நட்பை, அந்த வயதில் புரிந்துக் கொள்ளவில்லை. இன்று கற்பனையில் அவனோடுதான் என் மனம் வாழ்கிறது. அவன் மரித்த அந்த நாளில் கண்ணீர் வடிக்காத என் கண்கள் இன்று அவனுக்காக கண்ணீர் வடிக்க காத்திருக்கிறது. ஆனால் அந்த வயதில், இருந்த மிக பரிசுத்தமான மனம் வடிக்கும் கண்ணீரைத்தான் என் கண்கள் விரும்புகிறது. புழுதியாய் மாறிப் போன இன்றைய எந்திர வாழ்வில் நான் அவனுக்காக வடிக்கும் கண்ணீர் அவன் ஆத்மாவை அசிங்கப்படுத்துவது போல் தோன்றுவதால், இன்றும் என் கண்கள் பரிசுத்தமான கண்ணீருக்காகக் காத்திருக்கிறது.

இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில நாட்களாய் மனதில் ஒரு வெறுமை நிலவுகிறது. தன் வெற்றிடத்தை பூர்த்தி செய்துக் கொள்ள அது எதையோத் தேடுகிறது. வீரா என்னை நேசித்துப் போல என்று சொல்ல முடியாது என்றாலும், நான் என்னளவில் மிகச் சிறந்த நண்பர்களாய் நினைத்துக் கொண்டிருந்த எனது இரு நண்பர்களும் ஒரே விஷயத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என் மனதை காயப்படுத்தியதை என் நண்பன் வீராவிடம் தான் சொல்லி அழ வேண்டியிருக்கிறது. தன் தாயை பல நாட்கள் பார்க்காத குழந்தை ஒரு நாள் பார்க்கும்போது "அம்மா" என்று அழைத்துக் கொண்டே ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொள்ளும்போது, குழந்தை முகத்தில் அதன் தாய் எச்சிலை உமிழ்ந்து ச்..சிப் போ என சொன்னால் அந்தக் குழந்தை மனம் என்ன வேதனை அடையுமோ, அத்தகைய வேதனைதான் நான் அடைந்தேன், என் நண்பர்களால்.

(இதையே பின்னொரு நாள் படிக்கும்போது அந்த சின்ன விசயத்திற்காகவா இவ்வளவு வேதனைப் பட்டோம் என்று மனம் தன்னைத் தேற்றிக் கொள்ளும். இருந்தாலும் உடனடி தேற்றுதலாக இந்தப் பதிவு இருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை எவ்வளவு காயப் படுத்தினாலும் என் நண்பர்கள் எனக்கு நண்பர்களே. என் காயத்தை ஆற்றும் மருந்தும் அவர்களே...நான் அவர்களை மிகவும் நேசிப்பதால்தான் அவர்களை சிறு தவறுகளும் கூட என்னைக் காயப்படுத்துகிறது. இந்த நேசிப்பு ஒரு போதும் குறையாது.)


Saturday, July 25, 2009

தேடி வந்தத் தலைமை



அண்மையில் பார்த்த பசங்க திரைப்படத்தில் ஒரு காட்சி. வகுப்புத் தலைவனை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். அப்போது சில மாணவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுவார்கள். கள்ள ஓட்டுக்கள் சில சமயம் சிலர் வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றி விடும். நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அதுவரை எனது ஆசிரியர் புஷ்பராணி அவர்களை தவிர்த்து என்னை யாரும் அவ்வளாவாக கண்டு கொள்ள மாட்டார்கள்.


ஒரு சராசரி மாணவனாகவே பள்ளி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து அதில் வெற்றிப் பெற்று ஒன்பதாம் வகுப்புக்கு சென்றோம். மூன்று நாட்கள் கழித்து வகுப்பு மாணவத் தலைவனை தேர்வு செய்ய வகுப்பாசிரியர் தேர்தல் நடத்தினார். அப்போது பள்ளி முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்த மாணவர்களான, ஆனந்த் மற்றும் அசின் எனும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இருவருக்கும் மாணவர்கள் மத்தியில் சம ஆதரவு உண்டு. இந்த இருவரும் உலக நடப்புகள் அறிந்தவர்கள். பார்ப்பதற்கு புத்திசாலி மாணவர்கள் போல் இருப்பார்கள். (உண்மையிலேயே இருவரும் புத்திசாலி மாணவர்கள்தான்.) என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவர்கள். அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். போட்டி தேர்தலில் மட்டுமே!!. யார் வென்றாலும் இருவரும் வென்றது போல்தான். அவர்களை எதிர்த்து வேறு யாரும் தேர்தலில் நிற்கவும் இல்லை.


வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. வகுப்பு முழுவதும் ஒரே சப்தம். இறுதியில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஆசிரியர் வாக்குகளை எண்ணத் தொடங்கினார். கடைசி ஒட்டு சீட்டை எண்ணி முடித்தார். வகுப்பு மாணவர்களை எண்ணத் தொடங்கினார். வருகைப் பதிவேட்டை சரிபார்த்தார். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 54. வருகைப் புரிந்தவர்கள் 52. பதிவான வாக்குகள் 57. கள்ள வோட்டுப் பதிவாகியுள்ளதை ஆசிரியர் கண்டுபிடித்து அனைத்து மாணவர்களையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் கள்ள வோட்டு போட்டது யார் என்று யாரும் சொல்லவில்லை. நானும் என் பங்குக்கு அனைத்து மாணவர்களையும் பார்த்து அடப்பாவிகளா. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு சாலையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். மீண்டும் ஆசிரியர் தேர்தல் வைப்பார். வாக்கைப் பதிவு செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் பேசத் தொடங்கினார். ஜனநாய முறைப்படி உங்களுக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் தேர்தல் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் போய் பாருங்கள். வகுப்பாசிரியர்தான் மாணவத் தலைவனை தேர்ந்தெடுப்பார். இப்ப சொல்லுங்க எண்ணப் பண்ணலாம், என்றார்.


அனைவரும் சொன்னது மறுத் தேர்தல். ஆசிரியர் சொன்னார். உங்களுக்கு எல்லாம் ஜனநாயகம் சரிப்பட்டு வராது. இந்த வகுப்பு மாணவத் தலைவனை நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்றார். அனைவரையும் முறைத்துப் பார்த்தார். வகுப்பு முழுவதும் ஒரே நிசப்தம். ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றேத் தெரியாமல் நான் சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசிரியரின் கை என் பக்கம் நீண்டது. இவன் தாண்டா இனிமே உங்கள் வகுப்புத் தலைவன் என்றார். நான் யார் அது என்றுத் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் என்னையேப் பார்த்தனர். பின்னர் தான் தெரியும் வகுப்புத் தலைவன் நான்தான் என்று.


ஒன்றும் புரியாமல் ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இங்க வாடா என்றார். இனிமே இவன்தான் வகுப்புத் தலைவன். எல்லாரும் அவன் சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கணும் என்றார். அந்த வயதில் அதுதான் அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் பதவி போன்றது. என் கண்கள் என்னையே நம்பவில்லை. அதுவரை நான் ஒரு அப்பாவி. யாராவது என்னைத் திட்டினால் கூட சிரித்து விட்டு வருவேன். innocent என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் அதற்கு சரியான வார்த்தை இளிச்ச வாயன். அந்த வயதில் நான் ஒரு இளிச்ச வாயன். ஆனால் என்ன நினைத்து என் ஆசிரியர் என்னை வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியாது. போகிறப் போக்கில் அவர் விரல்கள் என்னை சுட்டிக் காட்டின. அதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை சற்றே புறம் தள்ளப்பட்டு என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு அது. இன்று நான் சிறுவயதிலேயே பக்குவப்பட்டு இருப்பதாக மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. Run lola Run என்கிற திரைப்படத்தில் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள். அப்படிதான் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நொடி அது. என் ஆசிரியரின் விரல்கள் வேறு யாரையாவது சுட்டிக் காட்டி இருந்தால் நான் இன்னமும் கிணற்றுத் தவளையாகவே இருந்து இருப்பேன். சிறகை விரித்து பறக்கும் பறவையாய் மாற்றி விண்ணை அளக்க வைத்த என் ஆசிரியர் திரு. பிலிப் அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.