Thursday, August 6, 2009

வாசமில்லா மலர்கள்...நீ எனக்கு நிழல் கொடுக்காத மரம்,
என்றாலும் பல பேருக்கு நான்
நிழல் கொடுக்க காரணமாய்
அமைந்தாய்..சில மனிதர்களை பார்த்த அடுத்த கணமே நமக்கு பிடித்து விடும். ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பழகினாலும் மனம் ஒன்றாமலேயே அவர்களுடன் பழகிக் கொண்டிருப்போம்.
ஒருவர் மீது நமக்கு காதலோ, மதிப்போ ஏற்பட எது காரணமாய் இருக்கிறது என்பதை யாராலும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. நாம் ஒருவர் மீது அதீத பாசத்துடன் இருப்போம். ஆனால் அவரோ நம்மிடம் ஏனோ தானோ என்றுதான் பழகுவார்.


நாம் அவர் மீது பாசத்தை பொழியவும், அவர் நம் மீது வெறுப்பை உமிழவும் சில நேரங்களில் காரணமே இல்லாமல் போகலாம். எந்த ஒரு மனிதரும் நம்முடன் இறுதி வரை வந்துவிடுவது இல்லை என்கிற ஒரே ஒருக் கூற்றை நம் மனதில் பதிய வைத்துக் கொண்டால் பல நேரங்களில்
வாழ்வில் சிக்கலே இருக்காது.


நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தும்போது எங்கள் பள்ளிக்கு புதிதாக ஒரு தமிழாசிரியர் வந்தார். உத்திராபதி. இதேப் பெயர்தான் எனது சித்தப்பாவுக்கும். ஆனால் அது வரை இந்தப் பெயரை பற்றி சிந்தித்தது இல்லை. காரணம் என் சித்தப்பா எனக்குள் ஹீரோவாக இல்லை. சிறுவர்கள் மனதில் நாம் ஹீரோவாக நாமும் சிறுவர்களாக மாற வேண்டி இருக்கும். தந்தை, மகன் என்ற பாகுபாடின்றி பழகும் குடும்பத்தில் பையனுக்கு அவனது அப்பாதான் எப்போதுமே ஹீரோவாக இருப்பார். காரணம் அப்பா, தன்னை மகன் வயதுக்காரராகவே மாறி இருப்பார்.


ஆனால் ஒருவர் மனதில் நாம் ஹீரோ வாக வேண்டுமென்றால் அவர்கள் வயதுக்கு நாம் மாற வேண்டும் என்பது மட்டுமே நியதி இல்லை. சில நேரங்களில் நாம் அவர்கள் வயதுக் காரர்கள் அல்ல என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வயதுக் காரர்கள் உலகமும் வெவ்வோறு. குழந்தைகள் உலக இதில் தனித்துவமானது. அதில் ஒருபோதும் உங்களால் நுழைய இயலாது. அதில் நீங்கள் நுழையாத வரைதான் குழந்தைகள் மனதில் ஹீரோ.


என் தமிழாசிரியரும் அப்படியே. அவர் ஆசிரியர் என்பதை மறந்து மாணவர்களுடன் மாணவராகவே பழகி வந்தார். ஒன்பதாம் வகுப்பில் அவர் தமிழ் பாடம் எடுக்கும்போது சில மாணவர்கள் தங்களை மறந்து அவரது பாடத்தினை கவனிப்பார்கள். அதில் நானும் ஒருவன். அவரது கம்பீரமும், பலத்த துறை அறிவும் எங்களை வியக்க வைத்தது. போகிற போக்கில் பல விசயங்களை அள்ளித் தெளித்துவிட்டு செல்வார். பாடத்திற்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல விசயங்களை உள் நுழைப்பார்.


வடக்கே வீசும் வாடை, தெற்கே வீசும் தென்றல். என்று ஒரு நாள் மிக வேகமாக ஏதோ ஒரு பாடம் எடுக்கும்போது கூறி சென்றார். எனக்கு மிக வியப்பாக இருந்தது. காற்றில் இதமான தென்றல் என்றால் எந்தப் பக்கம் இருந்து வரும், வாட்டி வதைக்கும் வாடைக் காற்று எந்தப் பக்கம் வரும் என்பதெல்லாம் அந்த வயதில் எங்களுக்கு மிகப் புதிதான செய்திகள்.


மிக வெகுளியாக நான் இருந்த அந்தக் காலக் கட்டத்தில் ஒரு சிலருக்கு என் மேல் கோபம் மட்டுமே வரும். ஒன்னும் தெரியாத வெகுளி என்று எல்லோரும் என்னை ஏளனம் செய்வார்கள். ஆனால் எனது வெகுளித் தனத்திற்கு கூட மிக லாவகமாக கையாண்டவர் அவர். எல்லோரும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்றுக் கூறும்போது, "என்ன அவனுக்கு தெரியாது.. உனக்கு எல்லாமே தெரியுமா? அவன் ஒரு பெக்கூலியர் டைப் உன் வேலையப் பாரு டா என்பார். அந்த வயதில் எனக்கு பெக்கூலியர் என்றால் என்ன என்றேத் தெரியாது. இவரும் நம்மை ஏதோ திட்டுகிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இன்னொரு ஆசிரியரிடம் அதற்கான விளக்கத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்ட பின்னர் தான் எனக்கு அவர் மேல் இன்னும் மதிப்பு கூடியது. என் சக மாணவன் ஆனந்த் அந்த வயதில் படு சுட்டியாகவும், சுறு சுறுப்பாகவும் இருப்பான். நல்ல நிறம், நல்ல அழகு என என்னிடம் இல்லாத அனைத்தும் அவனிடம் இருந்தது. என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று நன்றாக படிப்பேன். ஆனால் அது அவனிடமும் இருந்தது. அவனும் நன்றாக படிப்பான்.


பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவனை மிக நன்றாகத் தெரியும். என்னை சக மாணவர்களுக்கே யார் எனத் தெரியாது. ஆனால் இந்த நிலை எதிர்பாராத விதமாக வகுப்பின் மாணவத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்படியே மாறிப் போனது. நானும் பள்ளி அனைவரது மனதிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கியக் காரணம் ஒன்பதாம் வகுப்பின் என்னுடைய் வகுப்பு ஆசிரியர் திரு. பிலிப், மற்றும் தமிழாசிரியர் திரு. உத்திராபதி இருவரும் என்றால் மிகையாகாது. (இவர்கள் எல்லோரையும் தாண்டி என நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் என் ஆசிரியர் திருமதி புஷ்பராணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.)


எல்லோரும் ஆனந்த் புகழ் பாட என் தமிழ் ஆசிரியரும், வகுப்பாசிரியரும் மட்டுமே என்னை முன்னிலைப் படுத்தினார்கள். எனது தேர்வுத் தாள் திருத்தும்போது என் தமிழாசிரியர் என்னை அழைத்து எங்கே என்ன பிழை செய்துள்ளேன். எதனால் மதிப்பெண்கள் குறைகின்றன என பல ஆலோசனைகள் வழங்குவார். என்னை அழைக்கும்போது ஆனந்த் கூட வருவான். "உன்ன யாரு வர சொன்னா. நீ போ" என்று கூறிவிட்டு, நீதான் அவன கூட்டிட்டு வந்தியா? என்று என்னிடம் செல்லமாகக் கோபப் படுவார். எல்லோரும் முன்னிலைப் படுத்தும் ஒருவனை ஒதுக்கிவிட்டு இவர் என்னை முன்னிலைப் படுத்தும்போது என் மனதில் இனம் புரியாத ஒருவித மகிழ்ச்சி ஏற்படும்.


நீ போ. என்று அவனை சொல்லும்போது என் உதடுகளில் பூக்கும் அந்த மெல்லியப் புன்னகை என் வில்லத்தனத்தின் சான்று. எனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க செய்வதற்காகத்தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார் அப்போது எனக்கு தெரியாது. இப்போது உணர்கிறேன்.


ஒரு முறை பள்ளியில் இருந்து இன்ப சுற்றுலா சென்று இருந்தோம். எந்த இடம் என்பது சரியாக நினைவில் இல்லை. திருச்சியாக இருக்கும் என்று ஒரு உள்ளனர்வு. அன்று ஒரு இரவில் எங்கள் அனைவரையும் ஒரு கோவிலில் தங்க வைத்தனர். எல்லா மாணவர்களும் தூங்கிவிட்டனர். நான், ஆனந்த் தமிழாசிரியர் மூவர் மற்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு பன்னிரண்டு மணி, நல்ல குளிர். "போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசிரியர் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். சக மாணவர்கள் நின்றுப் பேசவேப் பயப்படும் ஒருவர், யாராவது முழித்து இருந்தால் கூட டேய் தூங்கு என்று அதட்டுவார். அவரே எங்களை டீ குடிக்க அழைத்து சென்றது எனக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது. நல்லக் குளிர் காலம், லேசான சாரல். இரவு பன்னிரண்டு மணி. மூவரும் டீ குடிக்க கிளம்பினோம். ஆனால் கோவில் கதவு சாத்தப்பட்டிருந்தது. வேறு ஒரு ஆசிரியரிடம் சாவி இருந்தது. யாரையும் எழுப்ப விரும்பாததால் என் தமிழாசிரியர் இருவரையும் எகிறிக் குதிங்கடா என்றார். ஆனந்த் எகிறிக் குதித்துவிட்டான். ஆனால் என்னால் முடிய வில்லை. எங்கே கதவின் கம்பிகள் என்னைக் கிழித்து விடுமோ என்று பயந்து கொண்டு "நான் வரல சார்.. நீங்கப் போயிட்டு வாங்க என்றேன்" ஒரு பார்வை மட்டுமே பார்த்தார். அடுத்த கணம் நான் கேட்டிற்கு அடுத்தப் பக்கம் நின்று இருந்தேன்.


சாரல் மழையில், நடுங்கும் குளிரில், டீ குடித்துக் கொண்டே மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அப்போது இசைப் பற்றி ஓரளவிற்கு அறிவு இருந்தது. ஆனந்திற்கு இசைப் பற்றி ஒன்றும் தெரியாது. வேண்டும் என்றே நான் இசைப் பற்றி பேச்சு எடுத்தேன். இளையராஜா பற்றி நானும் தமிழாசிரியரும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தோம். இளையராஜா அன்னக்கிளி படத்தில் அறிமுகம் ஆனதில் இருந்து சிம்பனி இசையமைக்க சென்றது வரை பேசிக் கொண்டிருந்தோம். சிம்பனி என்றால் என்ன என்று ஆனந்த் கேட்க காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நான் அவனுக்க விளக்க ஆரம்பித்தேன்.


"இளையராஜாவின் புகழ் எல்லாம் தேவா வெள்ளையம்மா (படம் பெயர் சரியாக நினைவில் இல்லை) படத்தில் அறிமுகம் ஆகிற வரைக்கும் தாண்டா" என்று என் தமிழாரிசியர் பேச்சை தொடர்ந்தார். அவர் தேவா ரசிகர் என்பது எனக்கு பின்னர்தான் எனக்கு தெரியும். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வரும் "ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற பாடலை அவர் ரசித்துப் பாடும்போது நாங்களே மெய் மறந்துப் போவோம். தேவாப் பற்றி தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.


டீக் குடித்து முடித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழித்துக் கொண்டிருப்பவனுக்கு இரவு நீண்டதாகத் தெரியும் என்பார் புத்தர். ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன், மனம் விரும்பும் செயல்களை செய்துக் கொண்டிருந்தால் ஒரு இரவல்ல அனைத்து இரவுமே நமக்கு நொடிப் போல் நகர்ந்து விடும்.


இசை, அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகள் பற்றியும் அன்று நாங்க விவாதம் நடத்தினோம் (அது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்) முழு அளவில் இல்லை என்றாலும் கூட எங்களுக்கு தெரிந்தது வரை பேசிக் கொண்டிருந்தோம்.


இன்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள என் தமிழாசிரியர் என் மனதில் தன்னம்பிக்கை உதிக்கவும், என்னை நானே உணரவும் காரணமாய் இருந்தவர்.


பின் தங்கி இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் இதுப் போன்று ஒரு ஆசிரியர் கிடைப்பார் என்றால் படிப்பு எல்லா மாணவர்களுக்கும் சுகமாய் இருக்கும். சுவையாய் இருக்கும்.


அவர் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவர் பற்றி பேசுவோம்.


Sunday, August 2, 2009

சலனமற்ற வார்த்தைகள்வார்த்தைகள் வசீகரமானவை. அவை வக்கிரமானவையும் கூட. வார்த்தைகள் வாசமிக்கவை. அவை வலுவானவையும் கூட. வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சலனமுள்ள வார்த்தைகள் சில நேரங்களில் சலனமற்றும் போய் விடுகின்றன.


தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் எந்த ஒரு பொருளும், உயிரும் மிக அழகானதாக தோற்றமளிக்கக் கூடியவை. சூரியன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது சூரியன். இல்லையேல் அது மடிந்துப் போன நட்சத்திரம். மனிதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அவன் மனிதன். இல்லையேல் அவன் பிணம். இயங்கிக் கொண்டே இருபது அழகு என்றாலும் ஒருவகையில் இயங்காமல் இருப்பதும் அழகுதான். குட்டைபோல் தேங்கி இருக்கும் நீரும், தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நதி நீரும் ஒரே குணங்கள் கொண்டவைதான். இருக்கும் இடங்களும் அதன் இயக்கமும் தான் வேறுபடுகின்றது. வார்த்தைகளும் அப்படிதான். இயங்கிக் கொண்டே இருக்கும் வார்த்தைகள். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள். இரண்டும் ஒரே பண்புக் கொண்டவைதான். ஆனால் அவை உபயோகிக்கப்படும் இடங்களை பொருத்து அதன் பண்புகள் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.பெண்களிடம் திருமணத்திற்கு முன்னர் நாம் பேசும் வார்த்தைகளுக்கும், திருமணத்திற்கு பின்பு நாம் பேசும் வார்த்தைகளுக்கும் அதீத வேறுபாட்டை உணர முடியும். வார்த்தை ஒன்றுதான். ஆனால் காலம் மாறும்போது அவற்றின் குணமும் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஒரு சில வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகிக்க முடியாது. ஒரு சில வார்த்தைகளை அந்தரங்கமாக பயன்படுத்த முடியாது. ஒரு சில வார்த்தைகளை தாய் தந்தையுடன் உரையாட எடுத்தாள முடியாது. உறவு முறையைப் பொருத்து நாம் வார்த்தைகளையும் மாற்றிப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள்தான் சில நேரங்களில் மனிதர்களை மாக்களாக மாற்றுகின்றன.


பொது இடங்களில் தனிப்பட்ட மனிதனையோ, ஒரு குழுவையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தகாத வார்த்தைகளால் திட்டினால் அது ஏற்படுத்தும் விபரீதம் அளவிட முடியாதது. வெறும் வார்த்தைகள் தானே விட்டுவிடுவோம் என்று யாரும் நினைப்பதில்லை. காரணம் வார்த்தைகள் சலனமற்று இருந்தாலும், அவை பேசுபவர்களை சலனப் படுத்தி விடும் வல்லமை பெற்றவை.


கோபத்தில் பேசிவிட்டேன். வாய்தவறி பேசிவிட்டேன் என்று சொல்வது எல்லாம் ஒரு விதமான பம்மாத்து வேலை. ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் நமது எண்ணங்களே நமது வார்த்தைகளை ஒழுங்கமைக்கிறது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கணவன் மனைவி இடமோ, அல்லது மனைவி கணவனிடமோ ஒரு முறை கூறினால் பேச்சு வாக்கில் வந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திவிட்டு கோபத்தில் பேசிவிட்டேன் என்றோ, வாய்தவறி வந்து விட்டது என்றோ கூறினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.


சில நேரங்களில் இந்த வார்த்தையை பேசினால் கேட்பவர் மனம் புண்படுமே என்று நாம் பேசுவதை தவிர்த்து இருப்போம். ஆனால் மிக உக்கிரமான வேளையில் அந்த வார்த்தைகள் நம்மை தாண்டி வெளியே வந்து குதித்து விடுகின்றன. இது அந்த நொடியில் ஏதோ தானாக வந்துக் குதித்த வார்த்தைகள் அல்ல. நம் ஆழ் மனதின் தவிப்பை கட்டுக்கடங்க செய்யும் வார்த்தைகளின் வேலைதான் இது. சில நேரங்களில் வார்த்தைகள்தான் நம்மை ஒழுங்கமைக்கின்றன. நமது கோபத்திற்கு வார்த்தைகள்தான் வடிக்காலாக இருக்கின்றன. ஆனால் அந்த வார்த்தைகள் யாரை சென்று சேர்கிறதோ அவரின் மனம் படும் பாட்டை நாம் ஒருநாளு உணர்ந்ததில்லை. உணரப் போவதும் இல்லை.


மன்னிப்பு என்பதும் வார்த்தைதான். மன்னித்துவிட்டேன் என்பதும் வார்த்தைதான். ஆனால் நம்மில் எத்துனை பேர் இந்த வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துகிறோம். தெருவில் நடந்துப் போகும் போது, தெரியாமல் யார் காலையாவது மிதித்துவிட்டால் நம்மையறியாமல் நமது வாயில் இருந்து மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தை உதிர்ந்துவிடுகிறது. அவர்களும் இதழோர சிரிப்பின் மூலம் மன்னித்துவிட்டேன் என்கிற வார்த்தையை நம்மிடம் உதிர்க்கிறார்கள்.யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் காலை மிதித்ததற்கே மன்னிப்பு கேட்கும் நாம், நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர், தாய், தந்தை, என நெருங்கியவர்களிடம் பேசும் தகாத வார்த்தைகளுக்கு என்றாவது ஒருநாள் மன்னித்துவிடுங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்போமா? ஒரு பைசாவிற்கு பயன்படாத மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தையை நாம் ஏன் பயன்படுத்த மறுக்கிறோம். காரணம் ஈகோ என்பார்கள். நம்மை நேசிக்கும் சிலரை நாம் காயப்படுத்தும்போது சில நேரங்களில் அவர்கள் நம்மிடம் முன்புபோல் சரியாக பேசாமல் வார்த்தைகளை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் தவறு செய்யும் நம்மில் எத்துனை பேர் அதனைப் புரிந்துக் கொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி இருப்போம்.


வெறும் வார்த்தைகளை பயன்படுத்தி மட்டுமே பயன்படுத்தி ஒருவனை வாழ்நாள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். ஆனால் நாம் யாரும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவதில்லை. உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் ஒருவர் உங்களிடம் சரியாகப் பேசாமல் போனால் ஒரு நாள் முழுவதும் அவரிடம் அன்பாகப் பேசுங்கள். வெறும் வார்த்தையை மட்டும் பயன்படுத்துங்கள். பணம், பொருள் எதுவும் வேண்டாம். அடுத்த நாள் உங்கள் உறவின் பலம் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும். சலனமற்ற வார்த்தைகள் சில நேரங்களில் சலனத்தை மட்டுமல்ல, மிகப் பெரிய மாறுதலையும் ஏற்படுத்தும். வார்த்தைகளை வாசமிக்கதாக மாற்றுவதும், துர்நாற்றம் வீசுவதாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளதேத் தவிர வார்த்தைகள் ஒருபோதும் தங்களை எப்படியும் மாற்றிக் கொள்வது இல்லை. நாமும் வார்த்தைகளாக இருப்போம். சலனத்துடன்.