Friday, December 31, 2010

தலைப்பில்லை



எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது எழுதாமல் இருப்பதே நல்லது.. அல்லது நாம் நீர்த்துவிடுவதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிடுவது சிறப்பு என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருப்பவன் நான். நிறைய பயணக் கட்டுரைகளைக் கூட எழுதாமல் தவிர்த்ததன் காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் என் பதிவில் முன்னமே எழுதியிருப்பது போல் எழுத்துகளோடு நான் கொஞ்சம் பகடியாட்டம் ஆடிப் பார்க்கிறேன். இதில் நான் தோற்றாலும், வென்றாலும் இந்தப் பகடியாட்டம் எனக்கு ஒருவித பிரமிப்பை, கிளர்ச்சியை தருவதால் தொடர்ந்து நான் அதில் என்னை ஈடுப்படுத்திக் கொள்கிறேன். எனவே இனியாவது தொடர்ந்து கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் ஸ்டுடியோவில் வெளிவரும் கதை சொல்லிப் பகுதிக்காக தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் கதைசொல்லிகளை தேடித் திரிந்தபோது நான் முதலில் சென்ற ஊர் தஞ்சை. தஞ்சை பிரகாசின் சீடர்கள் பத்துப் பெரும் இன்றளவும் அந்தப் பகுதிகளில் கதை சொல்லி நிகழ்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். அது சார்ந்து ஒரு பயண அனுபவம் எழுதாமலேயே எனக்குள் மறைந்துவிட்டது. அவர்களைப் பற்றி நிச்சயம் இன்னொரு பதிவில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இதுப் போன்ற எண்ணற்றப் பயணங்கள்.. இலக்கில்லாமல் நான் சுற்றித் திரிந்த தமிழகத்தின் நிறையப் பகுதிகள்..தகிக்கும் வெய்யிலில், சிலிர்க்கும் குளிரில் என நான் பயணப் பட்டது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. இங்கே அந்த அனுபவம் எல்லாம் சுயப் புலம்பல்களாக, சுய அறிவித்தலாக இல்லாமல் முடிந்த வரை இயல்பாக பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இயல்பாக இருத்தலே கட்டுடைக்கப்பட்ட பின்னர் எல்லாம் மாயையாக நம்மை சுற்றி படர்ந்திருக்கும் நிலையில் எப்படி இயல்பாக இருக்க முடியும் என்கிற ஒரு கேள்வி எழும் நிலையில், மாயையை நோக்கிய பயணத்தை இயல்பை நோக்கி நகர்த்தும் வல்லமை எல்லோருக்கும் வாய்க்கப்படுவதில்லை. அந்த வல்லமையை எனக்கு தாராயோ சிவசக்தி என்று நான் நம்பாத கடவுளை நோக்கி கையேந்தவும் இயலாத சூழலில் என் மொழியோடு, என் மொழியின் கூறுகளோடு விளையாடிப் பார்ப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

ஒரு பயணக் கட்டுரையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் எழுத முதல் தேவை, சில மறத்தல்களும், சில நினைவுகளும் தான். எதை மறக்க வேண்டும், எதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவு இருக்குமாயின் அந்தக் கட்டுரை தன்னுடைய அதிகபட்ச தரத்தை எட்டிவிட்டதாகவே கருதிக்கொள்ளலாம்.

மார்கழிக் குளிரில் பற்களெல்லாம் தந்தி அடித்து வெயிலைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அழகான மாலை நேரத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டுவிழா. இந்த விழாவை முடித்துக் கொண்டு அன்று இரவே ஈரோட்டில் நடக்கும் ஒரு நிகழ்வில் குறும்படங்கள் தொடர்பாக பேசுவதற்காக செல்ல வேண்டியிருந்தது.

மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டு விழா நான் பார்த்த வரையில் வந்திருந்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் அந்த விழாவின் மைய சரடாகிய கவிதை புத்தகம் குறித்தே பேசிய விழா. பொதுவாக டிசம்பரில் நடக்கும் எல்லா புத்தக விழாவிலும் அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்களில் சிலர் அந்த விழாவின் நோக்கம் என்ன, எந்த விழாவிற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டு செல்வதையே மரபாக வைத்திருப்பவர்கள். அதிலும் திரைப்படத் துறையில் இருந்து வரும் சிறப்பு அழைப்பாளர்கள் "நான் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்க வில்லை" என்று சொல்லியே தன் பேச்சை ஆரம்பிப்பதை ஒரு பெரிய கௌரவமாகவே கருதுகிறார்கள். சாப்பிடப் போனவர்கள் வேறெதையோ செய்து விட்டு வந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இதில் அவர்களை சொல்லி குற்றம் இல்லை. தமிழ் சமூகமே அப்படிப் பட்ட மேதாவித் தனத்தைத்தான் தொடர்ந்துக் கொண்டிருகிறது. பாப்கார்ன் சாப்பிடுவதற்காகவே திரைப்படம் பார்க்க செல்லும் கூட்டங்கள் நிறைந்த சூழலில் பேச வந்தப் பொருளை விடுத்து பேசாப்பொருளை பேசும் மடந்தைகளை நாம் என்ன செய்துவிட முடியும்.

அப்படி இல்லாமல் மனுஷ்யப்புத்திரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழா முழுவதும் அனைவரும் பேசுப் பொருளையே பேசியது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. அதிலும் கூட நெருடலாக இருந்தது, அனைவருமே மீண்டும் மீண்டும் சொன்னக் கருத்தையே சொல்லிக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் எந்த கவிதையைப் படிப்பது எதை விடுப்பது என்றே தெரியவில்லை என்கிற வரியை அநேகமாக அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் சொல்லி விட்டுத்தான் இருக்கையை நோக்கிய நகர்ந்தனர். நானும் அந்தக் கவிதைப் புத்தகத்தை வாங்கி வந்தேன். கொடுத்த காசிற்கு பங்கம் இல்லை என்றாலும், எல்லோரும் சொன்னது போல் இல்லை.

ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

எரிமலைக் குழம்பா?
இரும்பு காய்ச்சு!

பூகம்பமா?
பூச்செடிகளை மாற்றி நடு!

இதுப் போன்ற கவிதைகளுக்கு தமிழ் கவிதை சூழலில் மனுஷ் போன்றவர்களின் கவிதைகள்தான் இந்த சூழலை அதன் தன்மை மாறாமல் அதன் அடையாளக் குறிகளோடு வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. (மேற்சொன்ன கவிதை யாருடைய கவிதை என்பதை முடிந்தால் நீங்களே கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்).

பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. எனவே கட்டுரையையும் இங்கிருந்தே தொடங்குகிறேன். அடுத்து ஈரோடு புறப்படுவோம்.


Wednesday, December 15, 2010

தேநீர் சாலை....



தேநீர் கோப்பைக்கும் மனிதர்களுக்குமான உறவு அலாதியானது. அர்த்தமற்றது. அது சில நேரங்களில் தன்னை தன்னகத்தே சிலிர்ப்படைய செய்கிறது. அல்லது தனக்கான கட்டுக்கோப்பை, கட்டுகள் அற்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிய விழைகிறது. கட்டுண்ட ஒரு சமூகத்தில் அதன் கட்டுப்பாட்டை உடைத்தெறிய நமக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் தேநீர் கோப்பை தேவை என்றால் கேட்பதற்கு நாராசமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

தேநீர் என்பது, ஒரு நாகரீகத்தின் குறியீடாக, வறுமையின் குறியீடாக, அந்தஸ்தின் குறியீடாக, தனிமையின் குறியீடாக, போதையின் குறியீடாக, அவஸ்தையின் குறியீடாக எப்போதும் நமக்கு பயன்பட்டே வருகிறது. மிக சாதாரண மனிதன் தொடங்கி மாளிகை வாசி வரை ஏதோ ஒரு வகையில் தேநீரின் பரிசத்தை உணர்ந்தவனாகவே இருக்கிறான். தாயின் முலைப்பாலை குடித்த போது உணர்ந்த ஒரு கதகதப்பை, அன்பை, அரவணைப்பை தேநீர் பருகும்போதும் நாம் பெற்றுவிடுகிறோம். தாய்ப் பாலும், தேநீரும், ஒரேவித ஸ்பரிசத்தை கொடுத்தது என்று சொன்னால் தாய்ப் பாலின் புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி உடனே ஒரு வித மனநோயாளியாக நம் மீது பாயும் இந்த சமூகம் ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறது, நாம் புனிதம் என்று நம்பும் எல்லாமே ஒரு அசிங்கத்தின் மறுபக்கம் என்று. இங்கே தேநீர் ஒரு குறியீடாகவே பயன்படுகிறது என்பதை நினைவில் கொள்க. தஸ்தாவோஸ்கிக்கும் தேநீருக்குமான உறவைப் பற்றி தெரிந்துக் கொண்டிருந்தால் ஒரு தேநீரில் ஒளிந்து இருக்கும் கலை ஆளுமைகளை இந்த சமூகம் சந்தித்திருக்கும். மாறாக அது தான் ஓடி ஒளிவதையே பொருட்டாக நினைக்காமல், தேநீர் கோப்பையில் கலை ஆளுமைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதாக நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு உயிரும், பொருளும், கலையும் தன்னுடய இருத்தலுக்கான நியாயத்தை கற்பிதம் செய்ய வேண்டுமென்றால் அது நிச்சயம் ஏதோ ஒரு வகையில், சில நேரங்களில் தன்னை மறைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பது ஆகம விதி. அந்த மறைத்துக் கொள்ளும் கால அளவு மிக முக்கியமானது.

மார்க் ட்வெயின் எனும் அமெரிக்காவின் முதல் அங்கத எழுத்தாளர் (இத்தனைக்கும் அமெரிக்காவில் அப்போது எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்த காலக்கட்டம்) தான் தேநீர் அருந்திய கடைகளை, தன் எழுத்தின் வளமையின் குறியீடாகவே கூறுகிறார். அவரது வாழ்நாளில் அவரை பெரிதாக கொண்டாட மறுத்த அமெரிக்க சமூகம் அவர் இறந்த பின்னர், அவர் தேநீர் அருந்திய கடைகளையெல்லாம் கண்டுபிடித்து அங்கெல்லாம், ட்வெயின் நினைவாக பல்வேறு இலக்கிய கூட்டங்கள் நடத்தியது வரலாறு. ட்வெயின் தன்னை, தன்னுடய இருத்தலை, தன்னுடய எழுத்துகளை அந்த தேநீர்க் கோப்பைக்குள் தான் மறைத்து வைத்திருந்தார். அது வெடித்துக் கிளம்பியதும், சமூகம் தன்னுடைய கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்கிறது. அல்லது தளர்த்திக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.

வறுமையின் பிடியில் வதை படும்போது, அந்த வதையைக் கூட சுகமாக மாற்றுவது ஒரு கோப்பை தேநீர்தான். அதை உணர்ந்தவன் அறிவான். எத்தனையோ பஞ்ச பராதிகள், பரதேசிகள் தங்கள் வாழ்நாளை ஒரு கோப்பை தேநீருடனேயே கழிக்கிறார்கள் என்பது நமக்கு ஒரு செய்தி. ஒரு குறியீடு. ஆனால் அவர்களுக்கு அது ஒரு வாழ்க்கை. ஒரு வாழ்க்கையே ஒரு கோப்பையில் முடிந்து விடுமானால் அதுவும் சுகமாக அமையுமென்றால் அது தேநீர் கோப்பையில் மட்டுமே. மீண்டும் சொல்கிறேன் தேநீர் கோப்பை இங்கே ஒரு குறியீடு மட்டுமே.

சமூகம் கட்டமைக்கப்படுவதற்கு முன்னர் ஊரார்கள் ஒன்று கூடி ஒரு ஊர் என்பதை எப்படி வரையறை செய்யலாம் என்று விவாதித்தபோது, ஒரு தேநீர்க் கடை இருந்தால் அதையும் ஒரு ஊராக பாவிக்கலாம் என்று யாரோ விளையாட்டாக சொன்னது உண்மையாக மாறிவிட்டது. இரண்டு மூன்று வீடுகள் இருக்கும் தெருக்களில் கூட நான்கைந்து தேநீர் கடைகள் நல்ல லாபத்தோடு இயங்கிக் கொண்டிருப்பது, ஒரு சமுதாயத்தின் வறுமையை குறிக்கிறதா, அல்லது வளர்ச்சியைக் குறிக்கிறதா? இங்கே குறியீடு கொஞ்சம் குழம்பித் தான் போகும்.

தேநீரின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியாதான். இந்தியாவின் வடமேற்கு பகுதி, பர்மா தென்மேற்கு சீனா என்று தேயிலை வளர்ந்திருந்தாலும், அது பயன்பாட்டிற்கு வந்தது சீனாவில்தான். சீனாவின் பழங்குடி இன மக்கள் பருகும் தேநீர் கொப்பைகளுக்கான குறியீடுகள் மிக முக்கியமானவை. அங்கே வயது வந்த ஆண்கள் பெண் குறி போல் இருக்கும் கோப்பையையும், வயது வந்த பெண்கள் ஆண் குறிப் போல் இருக்கும் கோப்பையையும் பயன்படுத்துவது எதன் குறியீடு என்று ஆராய்ந்தோமானால் அவர்களுக்கு இளமையிலேயே சரியான பாலியல் கல்வி புகட்டுவதற்கான குறியீடாகவே படுகிறது.

இந்தியாவில் தேநீர் அறிமுகமானது வெள்ளையர்கள் ஆட்சியில்தான். அதனை ஒரு வியாபாரப் பொருளாக, செல்வத்தின் குறியீடாக நினைத்த வெள்ளையர்கள் முதலில் மக்களுக்கு இலவசமாகவே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். பின்னர் மக்கள் அதன் சுவைக்கு தங்கள் நாவை அடிமைப்படுத்திவிட்டனர். அதன் பின்னர் வெள்ளையர்கள் நினைத்தது போலவே தேயிலை பல அடிமைகளை வடிவமைக்க, அவர்களுக்கு ஒரு குறியீடாகவே பயன்பட்டுள்ளது.

எது எப்படியென்றாலும், இந்தியாவை பொறுத்தவரை அது அடிமைகளின் குறியீடு என்றாலும், அதற்காக கட்டுக்கோப்பான இந்த சமூகம் ஒரு போது கவலைக் கொண்டது இல்லை. காரணம் அடிமைத் தனமே தனக்கான கட்டுக்கோப்புதான் என்று திண்ணமாக நம்பும் ஒரு கட்டுண்ட சமூகம், எப்படி கட்டுடைத்தலான தேநீர் கோப்பை வெளியேற்ற இயக்கத்தை நடத்த விழையும். இன்று தெரிந்தோ தெரியாமலோ, எல்லோரின் இரத்தத்திலும் தேநீரின் சுவை கரை படிந்திருக்கும். அது யாரோ ஒருவர் தேநீருக்காக சிந்திய ரத்தக் கறையாக இருக்கலாம். அல்லது ஒரு சமூகமே தனது இருத்தலின் ரகசியத்தை விட்டெறிந்து பொய்யான வேறு உலகை அடைந்ததால் ஏற்பட்ட பயணக் கறையாக இருக்கலாம். கறை எதுவாக இருந்தால் நமக்கென்ன? நமக்கு தேநீர் ருசியாக இருந்தால் போதாதா என்ன? இங்கே தேநீர் அடிமை உணர்ச்சியின் குறியீடாக பார்க்கப்பட்டாலும், அந்த அடிமை சங்கிலியை உடைத்தெறிய பயன்படும் விவேக வித்தாகவும் தேநீர் கோப்பை இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்பதில் அடிக்கோடிடுக..

உலகிலேயே மிக அதிகமாக தேநீர் பருகும் சமூகம் இந்திய சமூகம், இங்கே தேநீர் என்பது அதிகார வர்க்கமும், அடிமை வர்க்கமும், இணைந்தே ஏற்படுத்திய மாய பிம்பத்தின் மிச்ச எச்சங்கள் என்றால் அதை குறியீடாக பயன்படுத்த அனுமதித்தது எது?

பார்ப்போம்.