Sunday, January 2, 2011

அன்பின் இருத்தல்



ஈரோட்டில் நடைபெற இருந்த பதிவர்கள் சங்கமம் நிகழ்வில் குறும்படம் சார்ந்து என்னை பேச அழைத்திருந்தார், நண்பரும் பதிவருமான ஆருரான் விஸ்வநாதன்.

எப்போதும் எனக்கு பயணங்கள் மீது அப்படி ஒரு அலாதிப் பிரியம் உண்டு. விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்ணெல்லாம் அழகாய்த் தோன்றுவது போல் எனக்கு எப்போதும் எல்லாப் பயணமும் அழகாகவே தோன்றும். பயணங்கள் நம் மனக் கழிவுகளை அகற்றி, புத்துணர்ச்சியைக் கொடுக்கும் ரசவாதத்தை செய்கிறதென்றால், அதில் நாம் பெரும் அனுபவங்கள் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்து சென்றுவிடும். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் மனம் சில ரசவாதங்களுக்கு உட்பட்டு ஒரு மேன்மைத்தன்மையை அடைய வேண்டுமென்றால் நாம் பயணத்தின் ஊடாக ஒரு ஆழ்மனப் பயணமும் செய்யவேண்டியது அவசியமாகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று எனக்கான ரயிலை அடையாளம் கண்டு, என் இருக்கையில் அமர்ந்தபோது மணி பத்து முப்பது. பத்து நாற்பதுக்கு ரயில் புறப்பட வேண்டும். அடுத்த சில நொடிகளில் எனக்கான ஆச்சர்யம் அங்கே காத்திருந்தது. எனக்கான இருக்கை அமைந்திருந்த பெட்டியில் நிலவி வந்த ஒரு நிசப்தம் அடுத்த சில நொடிகளில் குயில்களும், மரகதப் பறவையும் கொஞ்சி விளையாடும் தோப்பில் ஏற்படும் ஆனந்த ரீங்கார சப்தமாக மாறிவிடும் என்று அதுவரை நான் நினைக்கவில்லை. திபு திபு வென அடித்துப் பிடித்துக் கொண்டு அழகிய அரக்கிகளும், அழகிய அரக்கன்களும் அந்த ரயில் பெட்டியை அடைத்துக் கொண்டு அது தங்களுக்கான அந்தரங்க இடம் என்பது போல் சுற்றியிருந்த யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தங்கள் இருக்கைகளை தேட ஆரம்பித்தனர்.

பள்ளி மாணவ மாணவிகள் ஏற்காடு சுற்றுலா செல்வதாக பின்னர் அறிந்தேன். மேல் இருக்கையில் ஏறிக்கொண்ட ஒரு சிறுவன், தனது பையை கீழே விட்டிருந்தான். மேலே ஏறியதும் என்னைப் பார்த்து அந்த பேக (Bag) கொஞ்சம் எடுங்க என்றான். அவன் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லை. எடுக்க முடியுமா என்று கூட கேட்கவில்லை. என்னை முன் பின் கூட பார்த்தது இல்லை. இருந்தாலும் என்னிடம் எல்லா அதிகாரமும் பெற்றவன் போல அவன் பேசியது எனக்குள் ஆனந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு குடும்பத்தை சார்ந்த பெரியவர்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத இந்தக் கால சூழலில் முன்பின் அறியாத ஒருவரிடம் இவ்வளவு உரிமையை பேச சிறுவர்களால் மட்டுமே முடியும். அவர்களின் உலகம் தனித்துவம் வாய்ந்தது. அங்கே எதிரிகள் யாருமில்லை. எதிரே இருப்பவர்கள் கூட அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள்தான் எதிர் இருப்பவர்கள் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து கையசைத்து விட்டு செல்ல ரயில் மெதுவாக நகரத் தொடங்கியது. ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிறுவன் தட தடவென ரயிலில் இருந்து கீழே இறங்கி தன் தந்தை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மீண்டும் ஓடிவந்து ரயில் ஏறினான். அந்த நொடிப்பொழுதை முழுதாய் பார்த்தவன் நான் மட்டுமாகவே இருப்பேன். வேறு யாரும் அந்த சிறுவனை பார்க்கவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த தந்தைக்கு முகத்தில் அவ்வளவு வெட்கம்.. என் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் திரும்பிப் பார்த்த அந்த முகத்தில் தவழ்ந்த அந்தப் புன்னகை ஒரு கோடி அர்த்தங்களை எனக்கு கற்பித்தது. பின்னர் அவரை நேராகப் பார்க்காமல் கொஞ்சம் திரும்பி நான் அவர் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் அந்த வெட்கத்தை உடைக்க நான் விரும்பவில்லை. ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் மிக சிலவே. நான் அந்தக் குறிஞ்சிப் பூவை அதன் பூத்திருப்பை பார்த்துவிட்டவனாக பெருமைக் கொள்ள அந்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது. அந்த பள்ளி சிறுவர்களுடன் நிறையப் பேச வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அருகில் இருந்தவர் தன்னுடய இளைய மகன் மூன்றாவது பெட்டியில் இருப்பதாகவும், நான் இடம் மாறிக் கொண்டால் அவன் இங்கே வர எதுவாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். நான் சரி என்று சொல்வதற்கு முன்னமே அவர்கள் அந்த அமைதியை சரியெனப் புரிந்துக் கொண்டார்கள். அவர்களின் நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை நான். டி.டி. ஆர் வரும் வரை அந்தப் பெட்டியில் காத்துக் கொண்டிருந்தேன். அந்த தந்தை தன்னுடைய மூத்த மகனை எப்படியெல்லாம் வளர்க்க விரும்புகிறார் என்று சொற்ப நிமிடங்களில் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்து. பத்து வயது சிறுவன் அவன். அதற்குள் அவர்கள் பயணப்பட்ட இடங்கள் கொஞ்சமல்ல. தொடர்ந்து தங்கள் பயண அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் சாலையில் போகும் ஒரு வண்டியைக் காட்டி அது எந்தக் கம்பனி வண்டி என்று கேட்க அவன் தவறாக சொல்ல, அவர் அதை சரி செய்கிறார். இன்னும் பலவிதங்களில் தன் மகனை அவன் போக்கிலேயே விட்டு அவனை ஒரு ஆளுமையாக வளர்த்தெடுக்க அவர் விரும்புவதை என்னால் உணர முடிந்தது. அங்கே நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

டி.டி. ஆர் வந்ததும் டிக்கெட் சோதனை முடித்து மூன்றாம் பெட்டிக்கு செல்ல தயாரானேன். அவர் என்னிடம் எப்படி நன்றிக் கூறலாம் என்று வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்த வேளையில் நான் அங்கிருந்து விருட்டென மறைந்து விட்டேன். அப்படிப் பட்ட ஒரு தந்தை யாரிடமும் தலை வணங்குவதையோ, நன்றி சொல்வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மூன்றாவது பெட்டியில் எனக்கான இருக்கையை நான் தேடியபோது அங்கே முன்னமே யாரோ ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் துயிலை கலைக்க விரும்பாத நான் அங்கே நின்றுக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த ஒருவர்.. "சார் நாங்க எல்லாம் குடுமபமா வந்திருக்கோம்.. சின்னப் பையன் அதான்...? என்று என்னிடம் ஏதோ சொல்ல வந்தவராக சொல்லக் கூச்சப்பட்டார். நான் புரிந்துக் கொண்டவனாக எந்த சீட் என்றேன். அங்கிருந்து ஒரு ஆறேழு சீட்டுத் தள்ளி நான் என் இருக்கையை ஒரு வழியாக அடைந்து விட்டேன்.

விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம், ஒரு பரவசம் வேறெதிலும் நமக்கு கிடைக்காது. அத்தகைய பரவச நிலையை நம்மில் பலரும் அனுபவித்து இருக்க வாய்ப்பே இல்லை. விட்டுக் கொடுத்தல் என்பது சொல்லளவில் மட்டுமே இருக்கும் ஒரு கூறுதானே தவிர அது வாழ்வியலுக்கான ஒரு குறியீடாக இங்கேக் கருதப் படுவது இல்லை. நான் அந்தப் பரவச நிலையை அடையும் நிலை வந்தால் எப்போதும் அதனை உடனே பெற்றுவிடத் துடிப்பவன். அது கலவியின் உச்சத்தில் ஏற்படும் சுகத்தை விட பன்மடங்கு பெரியது. உயர்வானது.

பின்னர் அந்த சிறுவனின் தந்தை என் இருக்கை அருகில் வந்து என்னிடம் "சார் வசதியா இருக்கா?" என்று விசாரித்தபோது அவர் முகத்தில் இருந்த கள்ளங்கபடமில்லாத புன்னகை என்னை நெகிழ செய்ததா அல்லது நெருட செய்ததா என்று தெரியவில்லை. பின்னர் டி. டி. ஆர் வந்ததும் நான் இருக்கை மாறிய விடயத்தை விளக்க முற்ப்பட்டபோது அவர் சொல்லிட்டாரு சார்.. என்று கூறிக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்துவிட்டு என் டிக்கெட்டை கூட அடையாள அட்டையோடு சரிப்பார்க்காமல் நகர்ந்தார். எட்டி பார்த்தேன். அங்கே அவர் சிரித்துக் கொண்டே ஓகே வா என்று சைகையால் கேட்டு புன்னகைத்தார். என் எதிர் இருந்த ஒரு வட நாட்டு இளைஞன் தன் தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டே அங்கங்கே நீவி விட்டுக் கொண்டிருந்தார். தந்தை "போதுமப்பா.. விடு" என்று ஹிந்தியில் (அப்படிதான் சொல்லி இருப்பார் என்பது என் யூகம்) சொல்லிக் கொண்டே மகனின் பிடியில் இருந்து விடுபட முயற்ச்சித்தார். மகனோ பிடியைத் தளர்த்த தயாராக இல்லை. அன்று இரவு அந்த மூன்றாம் என் ரயில் பேட்டியே அன்பால் நிரம்பி இருந்தது. அந்த அன்பு பரிசுத்தத்தின் பரிசுத்தமாக ஒரு புன்னகை மூலம் மட்டுமே தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.

இரவு தன் பயணத்தை தொடங்கியது. மூன்றுமணியளவில் நான் அதுவரை சந்தித்திராத, உணர்ந்திடாத ஒரு குளிர் என்னை வாட்டியது. நான் எப்போதும் பயணத்தை தீர்மானித்துக் கொள்பவன் அல்ல. பயணத் தேவைகளை தேடிக் கொள்பவனுமல்ல. அந்த குளிரை போக்கிக் கொள்ள எனக்கு தெரியவில்லை. என் நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சில்லிடத் தொடங்கியது. என் அடிமனதில் ஏதோ இனம் தெரியாத பயமும், ஆற்றாமையும் என்ன வாட்டியது. கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடலில் தக தகப்பை ஏற்படுத்திக் கொள்ள அது ஒன்றும் சாரல் அல்ல. கடலை நிரப்ப பெய்யும் அடைமழை. இந்த குளிர் என் இருத்தலை கேள்விக் குறியாக்கி விடுமோ என்றுக் கூட மனம் பதறியது. விழித்துப் பார்க்க மனமில்லை. அல்லது நான் இன்னும் உயிர்த்திருக்கேனா என்று கூட தெரியவில்லை. கைகளையும் கால்களையும் இறுகக் கட்டிக் கொண்டு தாயின் கருப்பையில் சுருண்டுக் கிடக்கும் குழந்தைப் போல கிடத்தலானேன். அங்கே எனக்கு தூக்கத்தை மருந்தாகக் கொள்வதை தவிர வேறொன்றும் தெரியவில்லை.

இரவின் பயணம் பகலை நோக்கி முற்றுப் பெறத் தொடங்கியது. காலை ஆறு மணிக்கு எல்லோரும் குளிரை விரட்ட ஏதேதோ வித்தை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு குளிர் தெரியவில்லை. ஒரு வேலை என் உடல் மரத்துப் போய் விட்டதோ என்று மனம் மருவியது. மெதுவாக கண் விழித்தப் பார்த்தேன். என் உடல் மேல் மிக கனமான போர்வை ஒன்று போர்த்தப் பட்டிருந்தது. இது எப்படி நடந்திருக்கக் கூடும். பக்கத்தில் இருந்த வடநாட்டுக் குடும்பம் அங்கே இல்லை. எதிரே இருந்த சிலர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று உள்மனம் சொல்லியது. எங்கிருந்து வந்தது இந்தப் போர்வை. ஏதும் இறைதூதன் எனக்காக இந்தப் போர்வையை அனுப்பி இருப்பானா? நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆயிற்றே.. பிறகு ஏன் கடவுள் இந்த தவறை செய்யப் போகிறார்.. போர்வையை மடித்து மேலே போர்த்திக் கொண்டு கீழே இறங்கிப் பார்த்தேன்.

எதிரில் இருந்தவர் புன்னகையோடு என்னிடம் வந்தார். "நல்லத் தூக்கமா தம்பி..ராத்திரி பாத்ரூம் போக இந்தப் பக்கம் வந்தேன். ரொம்பக் கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்தீங்க..அதான் போர்வையைக் கொண்டு வந்து போர்த்திட்டுப் போனேன்?" என்று வெள்ளந்தியாய் சிரித்தார்.

"யோவ் நான் அப்படி என்ன யா உனக்கு செஞ்சிட்டேன்.. ஏன்யா அன்பால என்ன கொல்ற..நான் இந்த அன்புக்கு சொந்தமானவன் அல்ல.. அந்தக் குளிர் என்னை வாட்டியதை விட இந்த அன்பு என்னை பன்மடங்கு அதிகமாக வாட்டுகிறது. அன்பு என் தனிமையை கேள்விகுறியாக்குகிறது. அன்பு என் இருத்தலை பகடியாக்குகிறது. அன்பு எனக்கான வாழ்வியலை, வாழ்வுக்கான அர்த்தங்களை கற்ப்பிக்க முயற்சிக்கிறது. அன்பு என்னை கட்டுண்டு வாழ செய்கிறது. நான் காட்டாற்று வெள்ளமாய் மாறவே விரும்புகிறேன். காற்றைப் போல பட்டும் படாமலேயே பரவி செல்ல விழைகிறேன். என்னை அன்பென்ற ஆழ்கடலுக்குள் அமிழ்த்தி வைக்காதீர்கள்.. ஒரு முறை அன்பு என்னை தொட்டுவிடுமாயின் நான் திக்கற்றவனாக, நோயாளியாய், சமூகக் கோட்பாடுகளுக்குள் புதைந்து வாழும் மண் புழுவாய் மாறிவிடுவேன். நான் அதனை விரும்பாதவன். அன்பு என்கிற வார்த்தையில் இருக்கும் மைய சரடுகள் என் வாழ்வின் பிரக்ஞையை மாற்றி அதன் அடிச்சுவடுகளை அழித்து என்னை ஒரு சராசரியாய் மாற்றிவிடும் அபாய எல்லைக்குள் நான் போக விரும்பாதவன். இலக்கற்ற என் பயணத்தின் அன்பு ஏதோ ஒரு இலக்கை தீர்மானித்துவிடும் என அஞ்சுபவன். உங்களின் பரிசுத்தமான அன்பிற்கு நான் என்ன பரிகாசம் செய்துவிட முடியும். என்னை ஈட்டியால் துளைத்தெடுங்கள்.. என்னைக் கொப்பரையில் போட்டு வறுத்தெடுங்கள்.. மாட்டுத் தொழுவத்தில் மரித்துப் போக வையுங்கள்.. ஆனால் அன்பால் அரவனைக்காதீர்கள். அன்பு உட்புக நான் மேன்மையானவன் அல்ல. என் சுக துக்கங்கள் அன்பென்கிற எல்லையை தாண்டி, உணர்வுகளற்று ஒரு மாய நிலைக்கு என்னை ஆட்கொணர செய்துவிட்டது. உங்கள் வெள்ளந்திப் புன்னகை என் நெஞ்சை கிழிக்கும் கோடரியை மாறி விடுமுன்னர் அதன் பாதையை கொஞ்சம் மாற்றி விடுங்கள். இல்லையேல் நான் என் பயணத்தை மாற்றிக் கொள்ள நேரிடும்"

என்று அவரிடம் கூறி விடைபெற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவரது அன்பால் ஆன அந்த முகத்தை பார்க்க எனக்கு நெஞ்சுரம் இல்லாததால் போர்வையை அவரிடம் கொடுத்து விடைபெற்றேன்.

கீழே இறங்கிதும், எட்டாம் எண் பெட்டியில் என் இருக்கையை வாங்கிக் கொண்ட அல்லது நான் தருவித்து விடைப் பெற்ற குடும்பம் என்னை பார்த்துவிட்டது. மிக அழகான குழந்தைகள், கணவன் போல் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் வளர்த்து அவர்களுடன் சீட்டாட்டம் ஆடி சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு அன்பான குடும்பம் ஆதலால் மீண்டும் பீதியுற்றேன். அவர்கள் அன்று காலை என்னிடம் பேசிக்கொண்டே தேநீர் அருந்த அழைத்தனர். குளிரின் வாட்டத்தைப் போக்க சுகமாக இளஞ்சூட்டில் தேநீர் அருந்திக் கொண்டே மேலும் அந்த பிள்ளைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கு வழிகாட்ட தான் நாங்கள் பெற்றோர்களாக இருக்கிறோமே தவிர எங்கள் ஆசைகளை திணிக்க நாங்க என்ன எந்திரமா வாங்கி வைத்திருக்கிறோம் என்று அவர்கள் எதிர்கேள்வி கேட்டபோது என்னிடம் பதிலில்லை. ஐந்து வேலை தொழுகையை முறையாக பின்பற்றும் அந்த இஸ்லாமியக் குடும்பம் அது. போகும்போது என்னிடமிருந்து ஏதோ ஒன்றை பறித்துக் கொண்டு செல்வது போல் உணர்ந்தேன். ஆனால் அவர்கள் இந்த சமூகத்துக்கு ஏதோ ஒன்றை விட்டு செல்லப் போகிறார்கள் என்பதை திண்ணமாக நம்புகிறேன். மூன்றாம் எண் பெட்டியும், எட்டாம் எண் பெட்டியும் எனக்கு விட்டுக் கொடுத்தலின் பரவச நிலையை மீண்டும் உணர செய்தது. எப்போதும் பரவச நிலை சில கணங்கள் மட்டுமே நிலைக்கக் கூடியது. எனவே தன்னிலைக்கு திரும்பி எனக்கு வண்டி அனுப்புவதாக சொல்லி இருந்த ஆருரானை அலைபேசியில் அழைத்தேன்.

அங்கே ஜாபர் என்கிற நண்பர் காத்திருப்பதாக செய்தி சொன்னார். ஜாபரை நான் தேடும் முன் அவர் என்னை தேடி வந்து வண்டியில் இருத்தி விட்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதிகாலைப் பணியில் எதிர் நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்தது போல் ஒரு நினைவு. நிமிடங்கள் கழிந்ததும், உள்ளே வந்த அந்த எதிர் நபர் என்னிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். வணக்கம் நண்பா.. நான் பாமரன்.. எழுத்தாளர்.