Friday, November 5, 2010

நூலகம்


எட்டாம் வகுப்பின் இறுதி தினங்களை எண்ணிக்கொண்டிருந்த காலக்கட்டமது.. அண்ணனின் மரணம், வீட்டின் வறுமை என சகல வித துன்பங்களும் சூழ்ந்துக் கொண்டிருக்க நண்பர்களின் அரட்டைப் பேச்சிலோ, விளையாட்டிலோ (அதுவரை எங்கள் தெரு கிரிக்கெட் விளையாட்டில் சிறுவர்கள் பிரிவில் நான்தான் கேப்டன், பம்பரம் விடுதலில் பெற்ற வெற்றிகளுக்கு சான்றாக எங்கள் வீடு முழுவதும் நிரம்பிக் கிடந்த பம்பரங்களே சாட்சி, இப்படியாக பல விளையாட்டுகளில் தனித்திருந்தேன்) கவனத்தை திருப்ப முடியாமல் ஒரு மாற்றத்தை மனம் விரும்பிக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் எனது பள்ளியின் விளையாட்டுக் கல்வி ஆசிரியர் எல்லோரும் நூலகம் செல்ல வேண்டும், தினசரிகள் படிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். நூலகம் என்கிற வார்த்தையில் ஏதோ ஒருவித மயக்கம் ஏற்பட்டு, அதில் எப்படி சேர்வது என்று ஆசிரியரிடம் வினவினேன். அவரோ, "அருகில் எங்காவது நூலகம் இருக்கும், போய் விசாரித்துப் பார்" என்றார்..

கொட்டிவாக்கத்திர்கடுத்து முன்னும் பின்னும் என்னென்ன கிராமங்கள் இருக்கிறதென்றே அறியாத நான், அருகில் இருக்கும் நூலகத்தை தேடி அலைந்தேன். அப்போதுதான், திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஒரு கிளை நூலகம் இருப்பதாக எனது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். உடனே திருவான்மியூர் எப்படி போகவேண்டும்,என்று விசாரித்து ஒரு நாள் பேருந்தில் அங்கே போய் சேர்ந்தேன். ஆனால் நூலகத்திற்குள்ளே எத்தனையோ பெரியவர்கள் உட்கார்ந்துக் கொண்டு மிக அமைதியாக படித்துக் கொண்டிருந்தனர். எனவே இங்கே சிறுவர்கள் செல்லக்கூடாது என்று நினைத்துக் கொண்டு மீண்டும், வீட்டிற்கு திரும்பினேன்.

நூலகம் என்கிற வார்த்தையைக் கூட பல சிறுவர்கள் கேள்விப் பட்டு இருக்கமாட்டார்கள். நமது பள்ளிக் கல்வி அந்த வகையில் தான் மாணவர்களை வழி நடத்துகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நூலகத்திற்கென்று கொடுக்கப்படும் பல புத்தகங்கள் அந்தப் பள்ளியில் ஏதோ ஒரு மூலையில் சப்தமற்று சராசரி தாள்களாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன. நூலக வாசல் வரை சென்ற எனக்கு நூலத்தின் உள்ளே நுழைய போதிய தைரியமில்லைஎன்றால் இங்கே மாணவர்களுக்கு நூலகம் பற்றிய பொது அறிவை போதிப்பது யார்?

இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மற்றொரு நாள் சனிக்கிழமை என்று நினைக்கிறேன், நூலகத்தின் உள்ளே சென்றேன். அங்கே சிதறிக் கிடக்கும் தினசரிகள், வாராந்தரிகள், மாத இதழ்கள் என்று ஒவ்வொன்றாக ஒரு பக்கம் விடாமல் படிக்கத் தொடங்கினேன். நான் கீழ் தளத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே பலரும் மேல்தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். போகும்போதும், வரும்போதும் அவர்கள் கையில் புத்தகங்கள் இருப்பதை பார்த்தேன். அப்படி எங்கே போகிறார்கள் என்று மேலே போய் பார்த்தபோது அங்கே ஒரு கண்ணாடிக் கதவு மூடப்பட்டு (அப்போதுதான் நான் முதன்முதலாக கண்ணாடிக் கதவினை பார்த்ததாக நினைவு) அருகில் ஒருவர் உட்கார்ந்துக் கொண்டு, ஏதோ பதிவு செய்துவிட்டு எல்லோருக்கும் புத்தகங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

எப்படியும் நாம் உள்ளே போக முடியாது, உள்ளே சென்றால் கதவருகில் இருப்பவர் நம்மை வெளியே துரத்தி விடுவார் என்று பயந்துக் கொண்டு மீண்டும் கீழ் தளத்திற்கு வந்து படிக்கத் தொடங்கினேன்.

மறு நாள் என் ஆசிரியரிடம் நேற்று நூலகம் சென்று வந்ததை பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மேல் தளத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை பெற முடியாது போலிருக்கிறது என்று கவலை தோய்ந்த முகத்தோடு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரோ, "அப்படி இல்லை, நீ அந்த புத்தகங்களை படிக்கலாம், அங்கே லைப்ரரியன் என்று ஒருவர் இருப்பார் அவரிடம் போய் கேள் என்றார்".

மறு நாள் நூலகத்தின் மேல் தளத்திற்கு சென்று லைப்ரரியன் பற்றி விசாரித்தேன். கதவருகே இருந்தவர் "அது நான்தான்., உனக்கென்ன வேண்டும்" என்றார். எனக்கு நேரடியாக பேச பயமாக இருந்ததால், "நான் பாலவாக்கம் ஸ்கூல்ல இருந்து வரேன், எங்க ஸ்போர்ட்ஸ் சார் இந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வர சொன்னார்" என்றேன்.

அவர் மெலிதாக ஒரு புன்னகையை வீசிவிட்டு, ஒரு அட்டையை எடுக்க கையில் கொடுத்தார். "இந்த அட்டையை ஃபில் பண்ணிட்டு ஒரு கஜட்டேட் ஆபீசர் கிட்ட கையெழுத்து" வாங்கிக்கிட்டு வா என்றார். கஜட்டேட் ஆபீசர் என்றால் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவரிடம் கேட்க பயமாக இருந்தது, என் தயக்கத்தை மிக சரியாக புரிந்துக் கொண்ட அவர் "அருகில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா" என்றார்.

ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்து விட்டதாக மனம் பெருமிதம் கொண்டது. முதல் முறையாக ஒரு போலீஸ்காரரை நேரடியாக சந்திப்பதற்கு என்னிடத்தில் தைரியம் இல்லை என்றாலும், சுதாரித்துக் கொண்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பின்பக்கம் உள்ள போலீஸ் ஸ்டேசன் சென்று இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்றேன். ஒரு போலீஸ்காரர், "என்ன விஷயம் னு, சொல்லு" என்று வார்த்தையால் மிரட்டி என்னை திகிலுற செய்தார். பிறகு நூலகம் விபரங்களை பற்றி சொன்னப் பிறகு "போய் ஒரு பேனா வாங்கிட்டு வா" என்றார், அவர் மேசையில் நான்கைந்து பேனாக்கள் இருந்த்துக் கண்டு,அவர் அதனை கவனிக்காமல் நம்மிடம் கேட்கிறாரோ என்று நினைத்துக் கொண்டு "இதோ இருக்கு சார்" என்று அப்பாவியாய் சிரித்துக் கொண்டு நின்றேன். அவரோ ஒரு முறைப்பை வெகுமதியாய் கொடுத்துவிட்டு "கையெழுத்து வேண்டுமா வேண்டாமா" என்றார். ஏதும் பேசாமல் பேனா வாங்க புறப்பட்டேன், அவரே மீண்டும் அழைத்து "டேய், நாலு பேனா, ஒரு லாங் சைஸ் நோட், ஒரு பெரிய ஸ்கேல், இதெல்லாம் சேர்த்து வாங்கிட்டு வா என்றார். நான் என்னிடம் அவ்வளவு பைசா இல்லை என்று சொன்னதற்கு, அப்பா நாளைக்கு வா என்று வழியனுப்பி வைத்தார்.

ஒரு வழியாக அப்பாவிடம், நூறு ருபாய் (லைப்ரரி உறுப்பினர் சேர்க்கைக்கு அறுபது ரூபாயும், பேனா நோட்டு எல்லாம் வாங்க ஐம்பது ரூபாயும் சேர்த்து) வாங்கிக் கொண்டேன். பேனா, நோட்டு, ஸ்கேலோடு அவரை சந்திக்க சென்றேன். அவர் முகத்தைப் பார்க்காமல் "அங்க வச்சிட்டு, அந்த ரெண்டாவது ரூம்ல போய் பாரு" என்றார். ரெண்டாவது ரூமில், ஒரு அதிகாரி யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார். அவரை எங்கோ பார்த்ததாக நினைவிருந்ததால் யோசித்தேன். திரைப்படங்களில் பயில்வானாக வரும் ரங்கசாமி அவர். அவர் ஏதோ நில விவகாரத்தில் மாட்டிக் கொண்டதால் இன்ஸ்பெக்டர் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விட்டு, "என்னைப் பார்த்து உள்ளே வா" என்றார். எந்த வித கேள்வியும் கேட்காமல் "இதுல எல்லாம் நான் கையெழுத்துப் போடா முடியாது பா, போயிட்டு வா" என்றார். அவரிடம் மேற்கொண்டு எந்த வார்த்தையும் பேசுமளவுக்கு எனக்கு தைரியமில்லை. அந்த வயதில் எனக்கு மிக பெரிய தோல்வியாக பட்டது. மிகப் பெரிய மன வருத்தத்தோடு நேராக நூலகரிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அவர் ஒரு அரசாங்க மருத்துவரை அடையாளம் காட்டி அவரிடம் கையெழுத்துப் பெற்று வா என்றார். மறு நாள் மருத்துவரை பார்க்க சென்றேன். வெளியில் உட்கார்ந்திருந்த ஒருவர் விசயத்தைக் கேட்டு விட்டு ஐம்பது ரூபாய் ஆகும் என்றார். ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கூறி மேலும் ஐம்பது ரூபாய் வாங்கி சென்றேன். மருத்துவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவர் என் முகத்தைக் கூட பார்த்திருக்கவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.

அடுத்த நாள் நூலகத்தில் உறுப்பினராகிவிட்டேன். ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி.. உறுப்பினராகி விட்டாலும் அங்கிருக்கும் அவ்வளவு புத்தகங்களையும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து அங்கேயே படித்து முடித்தேன். புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்பது எனக்கு அப்போது தெரியாது. நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நூலகம் சென்று அங்கேயே புத்தகங்களை படித்துவிட்டு வந்தேன். அப்படி நான் படித்த முதல் புத்தகம் "போரும் அமைதியும்" என்ன ஏதேன்றே தெரியாமல் ஏதோ கைக்கு வந்த புத்தகத்தை தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் படித்து முடித்தேன்.

ஒரு நாள் நூலகரே, "புக்க இங்கேயே படிக்கனம்னு அவசியம் இல்லை. வீட்டுக்கு கொண்டு போயும் படிக்கலாம். பதினைந்து நாள்ல திருக் கொடுத்துட்டு இன்னொரு புக் எடுத்துட்டுப் போலாம் னு சொன்னார்". வகுப்பில் ஒருநாள் என் ஆசிரியரிடம் இது பற்றியெல்லாம் விவாதிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் தெரிந்தது. அவருக்கே இப்போதுதான் லைப்ரரி புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்பது தெரியும் என்று. ஏதோ ஆசியருக்கு நாம் ஒன்றை சொல்லிக் கொடுத்துவிட்டோம் என்று மிதப்பு கொஞ்சம் தலைக் காட்டியது.

பின்னர் தொடர்ந்து நான் நூலகத்தில் அசுர வேகத்தில் படிப்பதைக் கண்ட நூலகர் தினமும் எனக்கு லைப்ரரி புத்தங்கள் பற்றியும், லைப்ரரிக்கு புத்தகங்கள் வரும் முறை பற்றியும், அதில் ஏற்றப்படும் பதிவேன் பற்றியும் நிறைய சொல்லிக் கொடுத்தார். தினமும் அவருடன் எனக்கும் சேர்த்தே டீயும், பிஸ்கட்டும் ஆர்டர் செய்தார். நான் படிப்பதை எனக்கே தெரியாமல் மறைமுகமாக ஊக்குவித்தார் அந்த நூலகர். ஒரு நாள் சிலப்பதிகாரம் நூலுக்கு உரைப் படிக்கும்போதுதான் அவர் தனது பெயரையே எனக்கு சொன்னார். வேறு என்ன இளங்கோ தான்!...

இன்று ஏதோ கொஞ்சமாவது உலக இலக்கியங்களும், உள்ளூர் இலக்கியங்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அந்த நூலகர் இளங்கோவும் ஒரு முக்கியக் காரணம். கல்லூரிக்கு சென்ற பின்னர் சொந்த நிலம் கை மாறிய பின்னர் பழைய மாமல்லபுர சாலையில் குடியேறியதும், அந்த நூலகருக்கும், எனக்குமான தொடர்பு முற்றிலும், அறுந்துப் போய் விட்டது. யாரையாவது நான் மீண்டும் சந்திக்க விரும்பினால் அதில் முதலிடம், இளங்கோவனுக்குதான்.