Tuesday, May 26, 2009

என் சகோதரன் (சக உதிரன்)



மரணம். மாறாத ரணத்தை எற்படுத்துவதாலேயே அதற்கு மரணம் என்று பெயர் வந்ததோ என்னவோ. ஒரு சில மரணங்கள் ஒரு சிலரது வாழ்க்கையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை கொண்டது. ஆதிகாலத்தில் மரணம் குறித்த பயம் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுள்ள குடும்பப் பிணைப்பு அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உறவுகள்தான், இந்த அன்புதான் நம்மை நிலைகுலைய செய்கின்றன. 

அது, நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் சொந்த வீட்டை விற்று பல வருடங்கள் கழித்து தற்போதுள்ள தரமணியில் 1400 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக குடிசைக் கட்டிக்கொண்டு குடியமர்ந்தோம். அன்றைய நாளில் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சுகம் ஏற்பட்டது. மீண்டும் சொந்த வீடு. மிக அழகான இடத்தில். நல்லக் காற்று, பக்கத்தில் கல்லுக்குட்டை எனப்படும் ஆறு, மிக ரம்மியமாக இடம். முதல் வேளையாக ஒரு செடியை வைத்து அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கினேன். அங்கு அப்போது தண்ணீர் வேண்டுமென்றால் அவரவர் இடத்தில் கிணறு தோன்டிக்கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் வீட்டில் பின்புறத்தில் கிணறு தோண்ட ஆயத்தப்பட்டோம். என் ஆசைக்காக முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு வைத்திருந்தார்கள். நான் செடி வளர்ப்பதற்காக அந்த இடத்தை விட்டு வைக்க சொன்னேன். நிறைய செடிகள் நட்டு வைத்து பக்கத்து கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினேன். எங்கள் கிணறு தோண்டும் பணி பாதி நிறைவடைந்தது. அப்போது எனக்கு தெரியாது கிணறுத் தோண்டும் பணி இதோடு நின்று விடும் என்று. 

தரமணியில் இடம் வாங்கிவிட்டு குடிசைக்கட்ட அப்போது என் தந்தை ஒருவரிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில நாட்கள் கழித்து கடன் கொடுத்தவர் வந்து என் அம்மாவிடம் கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டி விட்டு சென்றார். இதனை கண்ட என் மூத்த அண்ணன் எப்படியாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். முதலில் சொன்னது போல் என் மூத்த அண்ணனுக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதனால் அவரை யாரும் வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது இல்லை. ஆனால் நிலைமையை உணர்ந்து அவரே அந்த வேலைக்கு சென்றார். 

நானும் பள்ளிக்கூடம் செல்வதற்காக கிளம்பினேன். . அதுவரை மகிழ்ச்சியாக இருந்த மனம் அன்று கொஞ்சம் துவண்டது. காரணம் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். மிக நீண்ட தொலைவு. நடந்து வரும் வழி ஒரு காடு. அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவு. ஒருவித பயம் என்னை ஆட்க்கொண்டிருந்தது. நடந்து நடந்து கால்கள் வலிக்க பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் சாயங்காலம் இதே தொலைவு நடக்க வேண்டுமே என்கிற பயம் என் மனது முழுதும் நிறைந்திருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு மீண்டும் நான் செல்ல மாட்டேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அன்று மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு நானு என் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் அயர்ந்த நான் பள்ளிக்கூட திண்ணையில் போய் அமர்ந்தேன். அந்த சமயம் சாலையில் சைக்கிளில் வந்த ஒருவர் (முன்னரே சொன்னது போல் பள்ளிக்கூடம் சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.) 

"டேய் உன் பேரு அருண் தானே.. உங்க அண்ணன் பேரு வேலு தானே என்றார். ஆமாம்" என்றேன்.

உடனே என்கூட வாடா என்றார். ஸ்கூல் இருக்கு இப்ப வர முடியாது என்று சொன்னேன். அவரின் கண்கள் கலங்கியது. "டேய் உங்க அண்ணன் செத்துக் கிடக்கிறான் டா என்றார். வார்த்தைகளை சரியாக உள்வாங்காத நான் அப்படியா நான் ஸ்கூல் முடிஞ்சதும் வரேன்" என்று அப்பாவித் தனமாய் கூறி நின்ற கணம் எனக்குள் இன்றும் வலிக்கிறது. 

பிறகு அவரே என்னை சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு என் அம்மாவை பார்க்க சென்றார். காரணம் புது இடம் அவருக்கு தெரியாது. எனவே நான் படிக்கும் பள்ளிக்கு வந்து என்னை எங்கள் புது வீட்டை காட்ட அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் முன்னர் வசித்த களத்து மேட்டுத் தெருவில் இருந்த மக்கள் என் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சென்று விட்டார்கள். 

எனவே இறந்துப் போன என் அண்ணனை நான்தான் முதலில் பார்க்க சென்றேன். இன்றைய கந்தன்சாவடியில் உள்ள சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும்போது லுங்கியை தூக்கிக் கட்ட கைகளை பின்னே எடுத்தபோது, அருகிலிருந்த மின்கம்பிகள் தாக்கி அவர் இறந்துபோனார் என்று தெரியவந்தது. ஆனால் அப்போதும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இது எங்க அண்ணன் இல்லை. அவர் காலையில் ஷேவிங் செய்துக் கொள்ளவில்லை. முகத்தில் தாடி இருந்தது. என்று கேனைத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் தான் எனக்கு தெரியும் மின்சாரம் தாக்கி அவர் முகம் அவ்வாறானது என்று. 

சோகத்தின் சுவடுகள் என் நெஞ்சில் பதிய ஆரம்பித்த முதல் கணம் அது. அதுவரை பொருளாதார ரீதியில் மட்டுமே சரிவைக் கண்ட என் குடும்பம் முதன்முதலாய் ஒரு உயிரையும் இழந்து நின்றது. அண்ணனை அந்தக் கோலத்தில் கண்டதும் என் அம்மா கதறி அழுத நினைவுகள் இன்றும் என் நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றன. 

விவரம் தெரியாத நான் இது அண்ணனாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டி நின்றேன். நெஞ்சம் தேம்பி தேம்பி அழ நினைத்தாலும் கண்கள் வறண்டுப் போனதால் பிரமை பிடித்து மரம் போல் நின்றுக் கொண்டிருந்தார் என் தந்தை. சரியாக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது. அவரது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணப் பேச்சு எடுக்கலாம் என்று அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். என் காளான் காத்திருக்கவில்லை. ஒரு அனாதை விடுதியில் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தான் அம்மா அப்பா பாசம் தெரியும். அப்போதுதான் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். அவர் ஆசைப்படியே அனாதை விடுதியிலேயே பெண் பார்க்கலாம் என்று அவர்களும் நினைத்திருந்தனர். நான் விவரம் தெரிந்து என் மூத்த அண்ணனுடன் வாழ்ந்தக் காலங்கள் கொஞ்சம் தான். என் அவர்தான் எனது ரோல் மாடெல். அவர் உயரியதை மட்டுமே சிந்தித்தார். எறும்புக் கடித்தால் அதைக்கூட சாகடிக்காமல் அதற்கும் வலிக்காமல் தன் உடம்பிலிருந்து அதை அழகாக தூக்கி எறிவார். 

அவரது விழிகள் மாசுபட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போது ஒரு ஒளி அவரின் விழியில் குடிக்கொண்டிருக்கும். கடவுள் நல்லவர்களை மிக சீக்கிரமே தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போது எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இப்போதும் உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது.)

"நீ இருந்து எனக்கு கொள்ளை வச்சி, காரியம் செய்யணும். ஆனால் நீ இறந்து உனக்கு என்ன கொல்லி வைக்க வச்சிட்டேயேடா".. என்று இறுதியில் என் தந்தை கதறி அழுத அந்த காட்சி என் மனதுக்குள் பந்தல் போட்டு குடியேறிவிட்டன. 

மிக சந்தோஷமாய் நண்பர்கள் போல் வாழ்ந்துக் கொண்டு இருந்த எங்களுக்குள் அப்போதிருந்து ஒரு இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்பா பேசுவதே அரிதானது. அதன் பின்னர் தரமணி வீடு என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியாது. ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அம்மாவும் அப்பாவும் அதை அப்படியே விட்டது விட்டார்கள் ராசியில்லாத வீடு என்று. 

இதை எழுதும் இந்த நொடியிலும் கண்களில் நீர் கசிகிறது. 

4 comments:

  1. அந்த நாள் காட்சிகளை, கண் முன் நிறுத்தும் உருக்கமான பதிவு.
    உங்கள் அண்ணனை மரியாதையோடு அடக்கம் செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன். RIP.

    அனால், உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்கள், அன்பும்,பாசமும்,மதிப்பும் வைத்திருந்த ஒரு தலைவருக்கு...., அவர் இருக்கிறாரா?, இல்லையா? இல்லைஎன்றால், அவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகள் கூட செய்யமுடியாமல் தடுமாறுவது காலத்தின் கொடுமை.
    இது தமிழ் எதிரிகளின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு கிட்டிய மகத்தான வெற்றி.

    ReplyDelete
  2. என் சகோதரன் (சக உதிரன்) ..

    அருமை அருமை

    ReplyDelete
  3. என்ன சொல்வதெனத் தெரியவில்லை. விழிகள் கசிய வாசித்துமுடித்தேன் நண்பரே .
    இழப்புக்கள் இப்படித்தான்..எப்பொழுதும் நாமறியாது வந்து வலிகளை விட்டுச் செல்லும்..சிலவற்றைக் காலமாற்றும்..மறக்கச் செய்யும். பலவற்றை அழிக்கக் காலத்தாலும் முடியாது :(

    ReplyDelete
  4. நன்றி, தமிழ்நாட்டுத்தமிழன்.. அந்த அண்ணன் இறந்து போனதாக நான் எண்ணவில்லை.. மீண்டும் மீண்டு வருவார்.. நன்றி அக்னி.. சக உதிரன் என்பது கண்ணதாசன் வார்த்தை.. வருகைக்கு நன்றி ரிஷான்.. தொடர்ந்து வருகை தாருங்கள்..

    ReplyDelete