Saturday, March 30, 2013

மாநகரம் - சிறுகதை

மாநகரம்...
--------------

"ப்பா... இப்ப நீங்க அவசியம் அங்க போய்தான் ஆகணுமா?"

"ஏன் அவங்களுக்கு தெரியாதா? போகனுமா வேணாமா னு? நீங்கள் என்ன பெரியவகளுக்கு கருத்து சொல்லிக்கிட்டு, போய் வேலையைப் பாருங்க"... சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல் அவனது மனைவி உள்ளே சென்றுவிட்டாள்.

சாமிநாதன் மகனை ஒருமுறை பார்த்தார்.

மகன்களை பெற்ற எல்லா தந்தைகளும், மனைவியை இழந்த பின்னர் அனாதைகளாகவே மாறிப்போவார்கள் என்பதை எப்போதும் போல், எல்லா தந்தைகளையும் போல் சாமிநாதனும் புரிந்துக் கொண்டார் என்பதற்கான பதில்தான் அந்த பார்வை. நீங்க அங்க போய்தான் ஆக வேண்டுமா என்று மகன் கேட்கும் கேள்விக்கு பதில், ஆம் என்பதே, ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கேள்வியையும் கேட்டுவிட்டு அதில் இந்த பதிலையும் ஒளித்து வைத்து விளையாடுவது எல்லாப் பிள்ளைகளுக்கு கைவந்த கலை.

இந்த ஆம் என்கிற பதில் மாறினால், பிள்ளைக்கு இல்லற வாழ்வில் எத்தகைய இழப்பு ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருக்கும் அப்பாக்களை போல், இதே ஆம் என்கிற பதிலால் அப்பாக்கள் படப்போகும் துயரங்களை எந்த மகனும் அறிந்து வைத்திருக்கவில்லை.

இடுங்கியக் கண்களும், ஒடுங்கிய தேகமும், ஒன்றோடு ஒன்றாய் ஓட்டிப் போயிருக்கும் தோலுமாய், ஒரே வேட்டியோடு, துண்டை மடித்து உடலில் சொருகிக் கொண்டு கிடக்கும் சாமிநாதன் அப்போதும் அந்த வீட்டில் எல்லாரையும் விட அதிகமாகவே உழைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும், எந்த மகனின் மனைவிமார்களும், மாமனாரை நார் நாராக கிழித்தெறியவே விரும்புகிறார்கள். மாமனார்கள் கிழிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

துண்டை எடுத்து, இரண்டாய் மடித்து வலது கையில் பிடித்துக் கொண்டே சாமிநாதன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.

ஒவ்வொரு பேருந்தாக உள்ளே வருவதும், அதே வழியில் வெளியே செல்ல இன்னும் பல பேருந்துகள் காத்திருப்பதும், வாழ்க்கையின் மிக முக்கியமான குறியீடாகவே சாமிநாதனுக்கு தோன்றியது. அப்போதும் கூட இதே பேருந்து நிலையத்தில் நாளை தன்னுடைய மகனும் ஏதோ ஒரு பேருந்துக்காக, வெளியில் சொல்லாத ஆம் என்கிற ஒற்றை பதிலின் காரணமாக காத்திருக்க நேரிடுமோ என்கிற அச்சத்தோடு அவர் ஒவ்வொரு பேருந்தையும் உற்றுநோக்கினார்.

யாருமே அவருக்காக ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. பேருந்து நிலையம் முழுவதுமே ஏதோ போர்க்காலத்திற்கு பிந்தைய சூழலில் இருப்பது போல் பரபரப்பாக காணப்பட்டது. நொடிந்துப் போய் கிடக்கும் ஒருவனை தாண்டிதான் அத்தனை கால்களும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் அவனுக்காக எந்த கால்களும் ஒருகணம் கூட நின்று செல்லவில்லை. அவன் யார், எங்கிருந்து வந்திருப்பான், அவனது பிள்ளைகள்தான் அவனை இப்படி நிர்கதியாக விட்டிருப்பார்களோ என்று சாமிநாதன் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நொடிந்துப் போய், சவலைப் பிள்ளை போல், மரணத்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவரது கண்கள் அப்போதும் மனிதர்களின் ஆசுவாசத்தை வேண்டி நிற்கவில்லை. அந்த கண்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த உலகம் ஸ்திரமானவர்களுக்கு மட்டுமே, நொடிந்து போனவர்களுக்கும், வயதானவர்களுக்கும், ஒருபோதும் உகந்தது அல்ல என்று.

சாமிநாதன் தனக்கான பேருந்தில் ஏறிக்கொண்டார். ஜன்னலோர இருக்கையில், வழியெங்கும் காத்திருக்கும், அத்தனை நிகழ்வுகளையும் அள்ளிப் பருக, அவரது கண்கள் எப்போதும் காத்துக் கொண்டே இருந்தது. அவர் அருகில் அமர்ந்த இளைஞன் வெள்ளை ஒயர் ஒன்றை காதில் சொருகிக் கொண்டார். பையை தூக்கி மேலேப் போட்டுவிட்டு, கைப்பேசியை தொட்டு தொட்டு ஏதோப் பேசிக்கொண்டிருந்தான். சாமிநாதனுக்கும், அந்த இளைஞனுக்கும் பேசிக்கொள்ள ஏதும் இல்லை. பொதுவாகவே, பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பேசிக்கொள்ள ஏதுமில்லை என்கிற சூழலில்தான் பெரியவர்களும், இளைஞர்களும் ஒருவரையொருவர் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல் பாவித்து, மெல்லிய புன்னகையோடு அவர்களுக்கிடையேயான உரையாடலை முடித்துக் கொள்கிறார்கள். சாமிநாதனின் கண்கள் மீண்டும் ஜன்னலோர கம்பிகளின் வழியே சாலையின் ஏகாதிபத்திய கூண்டுக்குள் அடைந்துக் கொண்டது.

அகன்று விரிந்த சாலைகள், கிராமங்களை, பிரித்து, ஒவ்வொரு கிராமத்தையும் தனித் தனி தீவுகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்தா வாரேன், என்று சொல்வதற்குள் ஓடிவரும் சொந்தங்கள் இனி ஓடி வருவதற்குள், அவர்களை தாண்டி பல நூறு வாகனங்கள் சென்றிருக்கும். ஒவ்வொரு கிராமத்தையும் பிரித்து, அதன் சமாதியில்தான் இந்த அகன்று விரிந்த பளிங்குக் கற்கள் போன்ற சாலை போடப்பட்டிருக்கிறது. நாம் இப்போதும் சமாதிகளின் மீதுதான் பயணிக்கிறோம். ஆனால் அதுப் பற்றிக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ள நமக்கு நேரமில்லாதபோது, இழந்து போன நமது கிராமத்து நினைவுகளை மீட்டெடுப்பதில் ஏன் அத்தனை சிரத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே எல்லாரையும் ஆக்கிரமித்து கிடக்கிறது.

பேருந்து கிராமங்கள் தாண்டி, சென்னை மாநகரின் நுழைவாயிலான காட்டான்குளத்தூரை தாண்டி, பெருங்களத்தூரில் நின்றது.

‘பெரியவரே, இங்கிருந்து தாம்பரம் போய், அங்கிருந்து T51 பிடிச்சி, சோளிங்கநல்லூர்ல இறங்கி, மறுபடியும் 21H பிடிச்சி நீங்கள் செம்மஞ்சேரி போகலாம்.’

சாமிநாதனுக்கு இந்த தமிழ் கொஞ்சம் புதிதாக இருந்தாலும், அந்த ஆட்டோக்காரர் வழிகாட்டுவதில் எடுத்துக் கொண்ட அக்கறை கண்டு சிலாகித்தார்.

‘நல்லா இருய்யா,.. வரேன் யா..’

ஆட்டோக்காரர் சொன்னது போலவே சோளிங்கநல்லூர் வந்து சாமிநாதன் 21H பிடித்து செம்மஞ்சேரி போக ஆயத்தமானார்.

21H பிடித்து உள்ளே ஏரின் சென்றார் சாமிநாதன். வண்டி நகர்ந்தது. மிக நீண்ட விசில் சப்தம்..

‘பெரியவரே, உன்னையெல்லாம் யாரு வெளிய வர சொன்னது? எந்தப் பக்கம் நிக்கிறது னு கூட தெரியாதா? எங்கிருந்து வந்த? என்தாலிய அறுக்கிறதுக்குனே வந்தியா?’ என்கிற நடத்துனரின் வசவு சொற்கள் சாமிநாதனுக்கு புதிதாக மட்டுமின்றி, அருவருப்பாகவும் இருந்தது.

சாமிநாதன் மௌனத்தோடு கீழே இறங்கினார். நடத்துனரின் பேச்சைக் கேட்ட சக பயணி ஒருவர் கூட சாமிநாதனுக்காக பேசாமல் இருந்ததில் அவருக்கு பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால் மௌனம் என்பதன் வலியை அவர் அங்கேதான் உணர்ந்தார். மௌனம் எல்லா நேரங்களிலும், நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. விருப்பமின்மை, சோகம், காதல், தோல்வி, என மௌனம் உணர்த்தும் எல்லா உணர்வுகளும், உண்மையை என்பதை தாண்டியும், நமக்குள் ஏதோ ஒரு அதிர்வை உண்டுபண்ணுகிறது.

சாமிநாதன் சாலையைக் கடக்க வேகமாக நடந்தார். ஆனால் முழுக்க முழுக்க மென்பொருள் நிறுவனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த சாலையில், வேகமாக செல்ல தடையாக, இடையிடையே ஆடு மாடுகள் கடக்க கூடாது என்பதற்காக பெரிய பெரிய நடுசுவர்கள், சில கிலோ மீட்டர்களுக்கு கட்டப்பட்டிருந்தது. சாமிநாதன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலையைக் கடக்க ஒரு சின்ன இடைவெளிக் கூட இல்லை. ஆனால் ஒரே ஒரு மேம்பாலம் மட்டும் இருந்தது. அதில் ஏறி சாலையைக் கடக்கும் தெம்பு அவருக்கு இல்லை.

மாநகரங்கள் மட்டுமின்றி, எந்த சக ஜீவிகளுக் கூட பெரியவர்கள், வறியவர்களின் வலியை ஒருபோதும் உணர்ந்துக் கொள்ள எத்தனித்தது இல்லை. எந்த இடத்திலும், பெரியவர்களுக்காகவோ, மாற்று திறனாளிகளுக்காகவோ, தனியார் நிறுவனங்களும், அரசும் எந்தவித புரிதல்ம் இன்றியே நகரின் கட்டுமானத்தை நிர்ணயிக்கிறார்கள். இங்கே உடல் முழு வலிமையோடு யாருக்கு இருக்கிறதோ, அவரே முழு கட்டுமான சுகங்களையும் அனுபவிக்க முடியும். மாநகர சாலைகள் கூட பெரியவர்களுக்காக வழிவிட தயாராக இல்லை.

சாமிநாதன் சாலையை கடக்கும் அந்த சின்ன இடைவெளிக்காக, நடந்துக் கொண்டே இருந்தார். இளைஞர்களும், உடல் வலிமையுள்ளவர்களும், நடுசுவரை தாண்டி, சாலையின் மறுபக்கத்தை அடைவதை அவர் கவனித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தார்.

நகர்தலில் எங்கோ பிழை இருப்பது போல் மனம் உணர்த்திக் கொண்டே வந்தது. எப்படியாவது அந்த நடுசுவரை தாண்டி விட வேண்டும் என்று சாமிநாதன் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் நடுசுவரை அடைவதற்கு எத்தனித்தார். ஆனால் அவர் நகரும் வேகத்திற்குள், பத்து இருபது வண்டிகள் வேக வேகமாக அவரைக் கடந்து சென்றது. இரும்புக் கூட்டங்கள் சாரை சாரையாக, புயல் வேகத்தில் கடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி நகர்ந்தது அந்த சாலையில் வண்டிகள். சின்ன இடைவெளிக் கூட இல்லாமல், கல்லூரி பேருந்துகளும், அலுவலக பேருந்துகளும், நகர்ந்துக் கொண்டே இருந்தது.

இத்தனை பெரிய வண்டிகளை, ராட்சதன் போல் அசுர வேகத்தில் நகர்ந்து செல்லும் தொனியை சாமிநாதன் ஒருநாளும், அவரது கிராமத்தில் பார்த்தது இல்லை. கிராமத்தின் எத்தனை விதமான மனிதர்களை பார்த்தாலும், எத்தனை விதமான நயவஞ்சகத்தை கிராமத்து மனிதர்களிடம் சந்தித்தபோதும் ஏற்படாத வாழ்வைப் பற்றிய அச்சம், மாநகரின் சாலைகள் அவருக்கு கொடுத்தது. ஒவ்வொரு பேருந்தும், இடி இடிப்பது போல் அவனுக்குள் அதிர்வுகளை உண்டுபண்ணி மறைந்தது. இவர்கள் எல்லாரும் எங்கே செல்கிறார்கள், ஏன் இந்த மஞ்சள் நிற ராட்சத பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த எத்தனித்துக் கொண்டே இருக்கிறது. பேருந்துகளுக்கு இடையில் எத்தனை ஸ்கூட்டர்கள் சென்றுக் கொண்டிருக்கிறது? ஆனாலும் தனக்கு அதில் நுழைய சிறு வழிக் கூட இல்லையே என்கிற ஏக்கப் பார்வை சாமிநாதனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

வண்டிகள் நகர்கிறது. சூரியன் அதைவிட வேகமாக மேற்கு நோக்கி நகர்கிறது. உடலில் இருந்து வெளியில் செல்லும் நீர்க்குமிழிகள் உணர்த்துகிறது உடலின் நீர்த் தேவையை. சாமிநாதனுக்கு தாகம் என்பதை தாண்டியும், எப்படியாவது குறைந்தபட்சம் அந்த நடுசுவரையாவது அடைந்து விட வேண்டும் என்கிற ஆர்வமும், கோபமும் மட்டுமே அதிகமாக இருந்தது.

வலது கையின் நடுவில் துண்டை இறுகப் பற்றிக் கொண்டு எப்படியாவது, அடுத்து சாரை சாரையாய் வண்டிகள் வருவதற்குள் அந்த நடுசுவரை அடைந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வலதுபக்கம் திரும்பிப் பார்த்தார். கொஞ்சம் தூரத்தில் வண்டிகள் அசுர வேகத்தில் வருவதை உணர்ந்தார். மீண்டும் முன்னோக்கி நகர்ந்தார். நின்று வலதுபக்கம் பார்த்தார். வண்டிகளின் போக்கு குறைந்தது. வேக வேகமாக நடுசுவரை நோக்கி ஓடினார். சடாரென ப்ரேக் பிடித்து நின்றது ஒரு வண்டி..

எங்கிருந்து திடீரென அத்தனை வண்டிகள் வந்தது என்று நினைப்பதற்குள், வண்டிகள் அடித்து எழுப்பிய ஹாரன் ஒளியில் அதிர்ந்துப் போய் மீண்டும் இந்த பக்கமே ஓடி வந்தார் சாமிநாதன்.

அதிர்ச்சியில் கொஞ்சம் நேரம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார். யாரிடமாவது உதவி கேட்கலாமா என்கிற கேள்வியை மனது கேட்டு முடிப்பதற்குள், வாழ்க்கையின் எந்த கணத்திலும், வாழ்வின் அடுத்த நகர்த்துதலுக்காக கூட யாரிடமும் உதவி கேட்காதபோது, இந்த சாலையை கடக்கவா உதவி கேட்க வேண்டும் என்கிற உபகேள்வியையும் மனம் பிரசவித்தது. தவிர எப்போதும் கிராமத்துக்காரர்களுக்கே உரித்தான அதே வைராக்கியமும், கர்வமும் சாமிநாதனுக்கு இப்போதும் உடனிருக்கிறது. அது சாலையை கடக்கும்போது கூட அவருடன்தான் வருகிறது. சாலையில் கடக்கையில் வழியில் எங்காவது அந்த வைராக்கியமும், கர்வமும் தொலைந்துப் போகக் கூடாதா என்று உப கேள்வி எழுப்பாத மனம் சிந்தித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்த முறை கையில் இருந்த துண்டை எடுத்து உடலில் இறுகக் கட்டிக் கொண்டு, நடுசுவரை அடைய தயாராக நின்றார். வேக வேகமாக, மனித அசைவைக் கண்டதும் பறந்தோடும் சிட்டுக் குருவி போல, பறந்தோடி நடுசுவரை அடைந்தார். இனி எப்படியாவது அந்த சுவரை தாண்டி விட வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, நடுசுவரை இறுகப் பற்றிக் கொண்டு, இடது காலை கொஞ்சமாக தூக்கினார். முடியவில்லை. இந்தமுறை திரும்பி நின்றுக் கொண்டு வலது காலை கொஞ்சம் தூக்கி நடுசுவற்றில் ஏறிவிடப் பார்த்தார். முடியவில்லை.

‘ஏ, கிழவா ஒனுக்கு கொஞ்சமாச்சி, எதாச்சும் கீதா? ஏ சச்சி. இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போய், அப்பாலிக்க ரோட கிராஸ் பண்ணு... ’ என்று சொலிவிட்டு ஒரு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். இயலாமையும், வைராக்கியமும், கர்வமும் ஒருசேர இணையும் இடத்தை இப்போதுதான் சாமிநாதனே சந்திக்கிறார். ‘இவ்வளவு பேசிவிட்டு போகிறானே, அந்த ஆட்டோ காலியாக தானே இருக்கிறது. அதில் ஏற்றிக் கொண்டு போய், சாலையை கடக்க உதவினால்தான் என்ன’ என்று, இயலாமை கேட்ட கேள்விக்கு, வைராக்கியம் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனாலும் ஆமோதிக்கவில்லை.

இப்போது சாலையைக் கடக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது வந்த இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும். நடுசுவற்றை ஒட்டியே நடக்க முடியாது என்பதை சாமிநாதன் உணர்ந்திருந்தார். ஆனால் சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்வதை காட்டிலும், வந்த இடத்திற்கு செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை அவருக்கும். நடுசுவரை ஒட்டியே நடந்தார்.

எழுபதாண்டுகளாக கிராமத்தில் சந்தித்த எந்த நிகழ்வுகளும், சம்பவங்களும் சாமிநாதனுக்கு இத்தனை பெரிய அயர்ச்சியை கொடுத்ததில்லை. ஆனால் மாநகரில் சாலையை கடப்பதற்குள் சாமிநாதன் நொடிந்துப் போய்விட்டார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், அவரது மனதிற்குள் நிறைய அதிர்வுகள் உருவாகிக் கொண்டே இருந்தது. இப்படியான சாலைகள் மனிதர்களிடம் இருக்கும் மனிதத்தை எப்படியெல்லாம் அழித்திருக்க கூடும், இங்கே மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது சாமிநாதன் மனதில். பதில்தான் அங்கே கிடைக்கவில்லை.

வியர்வை தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் தாகம் எப்போதும் இல்லாது, இப்போது அதிகமாகிக் கொண்டே சென்றது. இன்னும், இன்னும் என்றும், கொஞ்சம் கொஞ்சம் என்றும், மனதையும், கால்களையும் கொஞ்சிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.

வழியும் வியர்வையில், பார்வை கொஞ்சம் மங்கினாலும், கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டார். அந்த ஒற்றை சப்தமே சாலையைக் கடக்க ஒரு சிறு வழி இருப்பதை அவரது மனதுக்கு உணர்த்தியது.

இப்போது சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்ல தயாரானார். இந்த முனையில் வண்டிகளின் போக்கு குறைவாகவே இருப்பது போல் அவருக்கு தோன்றியது. காரணங்களை ஆராய மனத்திலும், உடலிலும் வலுவில்லை. உடனே சாலையை கடக்க, மொத்த வலுவையும் திரட்டி, ஓட முயன்றார்.

க்க்க்க்க்க்க்க்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ.... காதையும் தாண்டி நெஞ்சைப் பிளக்கும் ஹாரன் சப்தம். பார்வையில் விழாத ஏதோ ஒரு பெரிய வண்டி சாலையில் வேகமாக வந்ததை சாமிநாதன் கவனிக்கவில்லை. ஆனாலும், சுதாரித்துக் கொண்டு சாலையின் அடுத்தப் பக்கத்தில் விழுந்தார். இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மூச்சை வெளியிட்டார். உயிர் என்னிடமே இருக்கிறது என்று கர்வப்பட்டுக் கொண்டார். அதுவரை அவரது வாழ்க்கையில் கேட்டிராத வசவு சொற்களை ஓட்டுனர் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். எழுந்து நடந்த சாமிநாதன் அவரை பார்த்து ஒற்றை சிரிப்பை வீசிவிட்டு நகர்ந்தார்.

இப்போதும் சாமிநாதனுக்கு வாழ்வின் மீதும், சக மனிதர்கள் மீதும் எவ்வித புகார்களும் இல்லை.

3 comments:

  1. மிக‌ மிக‌ ய‌தார்த்த‌மான ஒரு நிக‌‌ழ்வு.
    ம‌ணைவியுட‌ன் கால‌ம் த‌ள்ள‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில்
    த‌ந்தையை த‌டுக்க‌ முடியாத‌ ம‌க‌ன்.
    விதைத்த‌து நான் தானே என்ற‌ வீம்பில் கிராம‌த்து த‌ந்தை
    த‌ன்மான‌ம், சார்பின்மையின் சுத‌ந்திர‌ம் கொண்டாடும் எளிய‌ ப‌ண்பு.
    சாலைத் த‌டுப்புச் சுவ‌ர், ஒரு க‌ல்ல‌றைச் சுவ‌ராய் காலைச் சுற்றும் சூழ‌ல்.
    ம‌ன‌தாபிமான‌மே இல்லா ந‌க‌ர‌வாசிக‌ள், வாக‌ன‌ங்க‌ளுக்கான சாலைக‌ள்
    தின்ற‌ சிறு கிராம‌ங்க‌ளும், ந‌ஞ்செய்க‌ளும் புஞ்செய்க‌ளும், ஆடு மாடு மேயும்
    புறம்போக்குக‌ளும், நீர்நிலைக‌ளும், கா‌ல்வாய்க‌ளுமாய்.

    ந‌க‌ர‌ம் ம‌னித‌ நக‌ரிக‌த்துக்கு அளித்த‌தைவிட‌ ம‌னித‌த்தை,அத‌ன் சார‌த்தை அதிக‌ம்
    அழித்திருக்கிற‌து என்ற‌ சுய‌த்தை சொல்லாம‌ல் ம‌ன‌தை கீறி ர‌த்த‌ம் க‌சிய‌ வைக்கிற‌து
    உங‌க்ளின் "ம‌னித‌ம் சிறுக‌தை'

    ReplyDelete
  2. கிராமத்து மனிதனின்....நகர வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது....ஒவ்வொரு கிராமத்திலும் சாமிநாதன்கள் இருக்கிறார்கள்....தன்மானத்திற்காக சில அவமானங்களையும் தாங்கிக்கொள்கிறார்கள்...

    ReplyDelete
  3. நடந்த சம்பவத்தை இயல்பாக படம்பிடித்து காட்டுவது போல் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.திறமைமிக்க எழுத்தாளர் என நிரூபிக்கிறீர்கள்.எனக்குள் பல சிந்தனைகளை, உங்கள் கதை தூண்டி விட்டாலும் ஒரு கருத்தை மட்டும் தெரிவிக்க மனம் விரும்புகிறது.
    சமூக அரங்கில் நிலவும் இத்தகைய, மனித இனத்தை பின்னுக்கு தள்ளி இயந்திரங்கள் கருவிகளின் வணிகம் உலகை ஆண்டுக்கொண்டும் ஆதிக்கம் செய்துகொண்டுபடிருக்கிறது.மனித இனமாக வாழும் நாம் எங்கே கோட்டை விட்டோம். எதை செய்ய தவறிவிட்டோம்.என்ன செய்தால் இந்த நிலை மாறும் என்ற கேள்விகளை சிந்திக்க வற்புறுத்தும் வகையில் உங்கள் கதை அமைந்துள்ளது ---நல்வாழ்த்துக்கள் http://shortfilmsurendrababu.blogspot.com

    ReplyDelete