Wednesday, January 23, 2013

பள்ளி / கல்லூரிகளில் திரைப்படக் கழகங்கள் தேவையா?எனக்கு தெரிந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருவண்ணாமலை SKP பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடங்கப்படவுள்ளது. இது ஒரு அசாதாரணமான முயற்சி. இப்படி ஒரு திரைப்பட கழகம் பற்றி பொறியியல் கல்லூரி நிர்வாகம் யோசிப்பதே பெரிய விஷயம். அதையெல்லாம் தாண்டி அதை சாத்தியப்படுத்தி இருக்கும் SKP கருணா அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் பள்ளி / கல்லூரிகளில் திரைப்படம் சார்ந்த படிப்பும், திரைப்படக் கழகங்களும் தேவையா என்கிற விவாதமே தேவையற்றது. தமிழ்நாட்டில் எல்லாரும் படிக்க வேண்டுமா? பள்ளி / கல்லூரிகள் தேவையா? ஏன் அவரவர் குலத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்கிற வாதம் எப்படி புறந்தள்ளப் பட வேண்டியதோ அப்படிதான் திரைப்படக் கழகம் பற்றிய விவாதமும். நான் எப்போதும் சொல்வது போல் மற்ற நாடுகளையும், தமிழ்நாட்டையும், திரைப்பட விசயத்தில் நாம் ஒப்பிட முடியாது. மேலை நாடுகளுக்கு திரைப்படம் என்பது கலை, பொழுதுபோக்கு. தங்களை உயிர்த்திருக்க அவர்கள் மேற்கொள்ளும் கலைப் பயணம். ஆனால் தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லாமும். நடிகர்கள்தான் கடவுள். திரைப்பட நாயகர்களே தங்களை ஆள வேண்டும், என அவர்களை மன்னர்களாக, கடவுளாக, உலகின் பிணி நீக்கும் நாயகனாக பார்க்கும் நம் நாட்டில், திரைப்படங்களை அத்தனை எளிதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

இங்கே திரைப்படங்கள்தான் கலாச்சாரத்தை உருவாக்குகிறது. திரைப்படங்கள்தான் ஒரு மனிதனை மறுஉருவாக்கம் செய்கிறது. திரைப்படங்கள்தான் நமது மனநிலையை மாற்றுகிறது. திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும், நரம்பிலும் அனுஅனுவாக பதிந்துள்ளது. இங்கே வந்து திரைப்படம் சார்ந்தும், அதன் ரசனை சார்ந்தும் ஒரு பாடத்திட்டமோ, ரசனை வளர்ப்பு அமைப்புகளோ தேவையில்லை என்பவர்கள் என்னைப் பொறுத்தவரை மூடர்கள். திரைப்படங்கள்தான் இந்த சமூகத்தை சீரழிக்கிறது என்கிற வாதமும் காலம்காலமாக நடக்கிற ஒன்று. தெரிந்தோ தெரியாமலோ, அது உண்மையாக இருந்தாலும், இந்த சமூகத்தை சீர்படுத்தவும் திரைப்படங்களால் மட்டுமே முடியும். அதுதான் திரைப்படங்களின் அழகியல் முரண்பாடு.

நமது உண்மையான கலாச்சாரம் என்ன என்பது கூட இங்கே மறுபரிசீலனைக்குரியது. நாம் நமக்கான எல்லாவற்றையும் இழந்து வருகிறோம். நம்மை கேளிக்கைகளை வைத்தே, கேளிக்கைகள் மூலம் வந்த இந்த அரசுகள் முடக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் திரைப்படங்களை எடுக்க மட்டுமல்ல, சரியாக பார்க்கவும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருக்கிறது.

நமது தாய்மொழியல்லாத வேறொரு மொழியை கற்றுக் கொள்ள நாம் விரும்பினால் அதற்கான நமது காத்திருத்தல் அவசியம். ஆனால் சினிமா என்கிற மொழியை மட்டுமே கேமராவை தூக்கிய யாருவேண்டுமானாலும் தெரிந்துக் கொள்ளலாம் என்பது எப்படி சரியாகும். திரைப்படத்தை ஒழுங்காக படிக்க வேண்டும். அல்லது அதற்கான மெனக்கெடல் வேண்டும். திரைப்படத் தொழில்நுட்பத்தை படித்தவர்கள் மட்டுமே திரைப்படம் எடுக்க வரவேண்டும் நான் சொல்லவில்லை. ஆனால் திரைப்படம் எடுக்க வேண்டும், அதுதான் நமது தொழில் என்று நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால், நிச்சயம் அதற்கான மெனக்கெடல் மிக முக்கியம்.

கணிதம், வேதியியல், இயற்பியல், போன்ற பாடங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு இடமளிக்காத ஒரு சமூகம், விளையாட்டு, சினிமா போன்ற துறைகளுக்கு மட்டும் இந்த மாதிரியான கேள்விகளை முன்வைப்பது அபத்தமானது.

திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலியான பல கட்டமைப்புகளை உடைத்தெறியவும், திரைப்படத் துறையில் குறைந்தபட்ச நேர்மை உருவாகவும் இது மாதிரியான திரைப்படக் கழகங்கள் அவசியம் தேவை என்பதை ஒருபோதும், யாரும் மறுக்க முடியாது.

SKP பொறியியல் கல்லூரியின் இந்த முயற்சி மகத்தானது. அதற்காக SKP கருணா அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் வெள்ளி, மற்றும் சனிக்கிழமை SKP பொறியியல் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடக்க விழா சிறப்பாக நடக்கவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை அடுத்து இணைக்கிறேன். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் அவசியம் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவும்.

இந்த திரைப்படக் கழகத்தின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செவ்வனே செய்து முடிக்க விழைகிறேன்.

அழைப்பிதழ்:
No comments:

Post a Comment