Friday, April 17, 2009

பகுதி 3 - கொல்லாம்பழம் (முந்திரிப்பழம்)



கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அன்றைய நாளில் முந்திரித் தோப்புகள் அதிகம் இருந்தன. அடுப்பெரிக்க சுளி (விறகு) பொறுக்க போகும்போது ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் முந்திரிப் பழங்களை பொருக்கி எடுத்து சாப்பிட்டுவிட்டு அதனால் ஏற்படும் தொண்டை கரகரப்பை ரசித்து வரவேற்று இருக்கிறேன். முந்திரிப் பழங்களை சாப்பிடும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சுகத்தை மனம் உணரும். இரண்டுப் பழங்கள் சாப்பிட்டாலே தொண்டை வறண்டு உள்ளுக்குள் ஏதேதோ செய்யும். அத்தனையும் மறந்து விட்டு மனம் மீண்டும் முந்திரிப் பழத்தை தேடும்.

பள்ளி வளாகத்தில் அதிகப்படியாக விற்கப்படும் பழங்களில் இதுவும் ஒன்று. என்னதான் காசு கொடுக்காமல் சுளி பொறுக்கும் இடங்களில் பொருக்கி தின்றாலும் பள்ளியில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து காசு கொடுத்து வாங்கித் தின்னும்போது அதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடியது போல் தோன்றும்.

முந்திரிப்பழம் விற்கும் ஆயா ஒரு அகன்ற பாத்திரம் முழுதும் (அந்தப் பாத்திரத்தை இங்கு அண்டா என்பார்கள்) முந்திரிப் பழங்கள் கொண்டு வந்து பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடி கீழ் விற்றுக் கொண்டிருப்பார்கள். அது உடம்புக்கு நல்லதல்ல. அதிகமாக யாரும் அதை வாங்கி தின்னாதீர்கள் என்று ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார்கள். படிப்பதற்காக பள்ளி செல்கிறோமோ இல்லையோ நானும் என் நண்பர்களும் பள்ளியில் உள்ள தின்பண்டங்களை வாங்கித் தின்பதற்காகவே நாள் தவறாமல் பள்ளிக்கு செல்வோம். அதற்கே தடை விதித்தால் எப்படி? ஒரு போதும் அவர்கள் சொல்லை நாங்கள் கேட்டதே இல்லை.

பாலவாக்கம் பள்ளி அப்போது ஓரளவுக்கு பெரிய பரப்பளவு கொண்டு இருந்தது. ஆனால் கட்டிடங்கள் அவ்வளவாக இல்லை. எனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மரத்தடி நிழலில்தான் பாடம் நடக்கும். முதலில் பள்ளிக்கு செல்லவே பயந்த என் மனம் பிறகு பள்ளிக்கு செல்ல விருப்பப்பட்டதற்கு காரணம் இந்த மரத்தடியில் பாடம் எடுத்ததால்தான். ஆசிரியர் பக்கத்து வகுப்பு ஆசிரியருடன் பேசிக்கொண்டிருப்பார். நானும் நண்பர்களும் மணலில் விளையாடிக் கொண்டு இருப்போம். பக்கத்திலேயே முந்திரிப் பழம் விற்கும் ஆயாவும் கடை போட்டிருக்கும். ஆசிரியருக்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுவிட்டு பக்கத்தில் இருக்கும் இன்னொரு பையனின் சட்டையில் கையைத் துடைத்துவிட்டு மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடர்வோம். (முந்திரிப் பழத்தில் ஒரு வித பிசு பிசுப்பான சாறு அதிகமாக வெளிவரும்).

பள்ளிக்கூடம் சாலையோரம் அமைந்திருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிப் பார்த்து விளையாடும் விளையாட்டு எங்களுக்கு சலிப்பேர்ப்படுத்தாத ஒரு முக்கியமான விளையாட்டு. அப்போது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை சாலையில் சிகப்பு நிற காரை பார்த்துவிட்டால் அன்றைக்கு எப்படியும் வீட்டில் இனிப்பு செய்து வைப்பார்கள் என்பது.  பல முறை அப்படி நடந்ததும் உண்டு. 

அன்றும் அப்படிதான். ஆசிரியர்க்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுக்கொண்டே சாலையில் போகும் வாகனங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். சிகப்பு நிறக் காரை வேறு பார்த்துவிட்டோம். வீட்டில் எப்படியும் இனிப்பு செய்து வைத்திருப்பார்கள் என்கிற மகிழ்ச்சி. மேலும் விளையாட்டில் அதிக கவனம் இருந்ததால் பழக்க தோசத்தில் கையில் ஒழுகும் சாற்றை பக்கத்தில் இருந்த பையனின் சட்டையில் துடைப்பதற்கு பதிலாக ஒரு பெண்ணின் சட்டையில் (அப்போது நான் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இரண்டாம் வகுப்பு) துடைத்துவிட்டேன். இதை என் ஆசிரியர் தற்செயலாக பார்த்துவிட்டார்.  பிரம்பெடுத்து என்னை பிண்னி எடுத்துவிட்டார் (அன்றோடு சிகப்பு நிறக் கார் நம்பிக்கை உடைந்துப் போனது). இதுதான் ஒரு ஆசிரியரிடம் படிக்கும் காலத்தில் நான் வாங்கிய முதல் மற்றும் கடைசி அடி. இன்னும் நான்கு வருடங்கள் கழித்து இதே பள்ளியில் அனைவரும் மெச்சும் அளவிற்கு நான் மாறுவேன் என்பதை அப்போது நானறியேன்.  

தொடரும்...



4 comments:

  1. என் பழைய பள்ளி நாட்களின் சுகமான நினைவுகளை கிள்ளிவிட்டுவிட்டது உங்கள் பதிவு....அது சரி சின்ன வயசில காசு கொடுத்துத்தா முந்திரி பழம் வாங்கி சாப்பிடுவீங்கா..நாங்கயெல்லாம் , திரூட்டு முந்திரி சாப்பிடுவோம், ருசி அதிகமாக்கும்

    ReplyDelete
  2. nanri agni.. varugaikkum, karutthukkum.. porukki thinradhue thirudi thinra maathiri thaane. :)

    ReplyDelete
  3. "முந்திரிப் பழம் வாங்கித் தின்னுவிட்டு பக்கத்தில் இருக்கும் இன்னொரு பையனின் சட்டையில் கையைத் துடைத்துவிட்டு .."

    துடைத்து அழிக்க முடியாத பள்ளி நினைவுகள் இனிக்கிறது.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கு நன்றி ஐயா.. தொடர்ந்து ஆதரவு தேவை..

    ReplyDelete