சோகம் மட்டுமே புயலாய் வீசிய என் வாழ்வில் சில நேரங்களில் வசந்தமும் தென்றலாய் வந்து என்னை வருடியதுண்டு. இந்த வசந்த காலம், பனி மீது இருக்கும் மழைத்துளி போன்றது. நொடியில் கரைந்துப்போகும்.
அன்று ஆறாம் வகுப்பின் முதல் நாள். யூனிபார்ம் இல்லாமல் சுமாரான ஒரு ஆடை உடுத்திக்கொண்டு நானும் என் அக்காவும் பள்ளிக்கு சென்றோம். முதல் நாள் முதல் வகுப்பு எனக்கு பிடிக்காத ஆங்கிலப் பாடவேலை. வழக்கம் போல் அட்டெண்டன்ஸ் எடுத்துவிட்டு, ஒரு ஆங்கிலப் பாடலை (Poem) பாடம் எடுக்கத் தொடங்கினார் என் ஆசிரியர். எதேச்சையாக யாருக்காவது இந்தப் பாடல் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்தால் படியுங்கள் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் எழுந்துப் படிக்கத் தொடங்கினேன். காரணம் என் பெரிய அண்ணன் விடுமுறை நாட்களிலேயே எனக்கு அந்தப் பாடலை மனனம் செய்யும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார். எனவே அந்தப் பாடலை பார்க்காமலும் என்னால் சொல்ல இயலும். அப்புறம் பார்த்துப் படிக்க சொன்னால் விட்டு விடுவேனா.. துணிந்து எழுந்து நின்று படித்தேன்.
அந்தப் பாடல்,
I know a face.. I love a face.. எந்தப் பிசிறும் இல்லாமல், தெளிந்த நீரோடைப் சொல்ல மிக அழகாக அந்தப் பாடலை பாடியாதாக பின்னாளில் என் ஆசிரியர் கூறக் கேட்டுள்ளேன். அந்தப் பாடல் தான் என்னை என் ஆசிரியருக்கும், என் ஆசிரியரை எனக்கும் அடையாளம் காட்டிய பாடல். இதோ இன்று வரை கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக தொட்டுத் தொடரும் ஒரு தெய்வீக உறவாகத் தொடர்கிறது. எனக்கு எழுத்தரிவைத் தந்த, அறியாமைப் பிணியைப் போக்கும் கல்வி எனும் அருமருந்தைத் தந்த அந்த மா ஆசிரியரை என் நெஞ்சக் கோவிலில் அனையா தீபமாக ஏற்றி வைத்துள்ளேன். எனக்கும் அவர்களுக்கும், கருத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், மாணவன் ஆசிரியர் என்கிற உறவில் ஒருபோதும் முரண் ஏற்படுத்தியதில்லை. காரணம் அவர்கள் கருத்தில் நான் மாறுபடக் காரணமே அவர்கள் கொடுத்த அந்தக் கல்வியறிவு தானே.
ஆறாம் வகுப்புத் தொடங்கி கல்லூரிப் பட்டப் படிப்பு வரை என் படிப்பு செலவை ஏற்றதோடு மட்டுமல்லாமல் ஆசிரியராய் எனக்கு வழிகாட்டியாகவும், தாயாய் என்னிடம் பரிவுக் காட்டியும், பல நேரங்களில் நண்பனாய் என்னை தட்டிக் கொடுத்தும் என்னை ஒரு சிலையாய் வடித்த சிற்பி என் ஆசிரியை. திருமதி. புஷ்பராணி. திக்குத் தெரியாமல் திரிந்துக் கொண்டிருந்த என் வாழக்கையில் என் கைப்பிடித்து போக வேண்டியப் பாதைக்கு என்ன அழைத்த் சென்றவர் அவர். இன்னும் நான் போக வேண்டிய பாதை வெகு தூரம் என்றாலும் அதற்கான ஆற்றலை, உத்வேகத்தை எனக்களித்த பெருந்தகை அவர்.
என் ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறும் ஒரு கதை.
ஒரு கட்ட பொம்மை (wood doll), பஞ்சு பொம்மை, களிமண் பொம்மை, சர்க்கரை பொம்மை அதாவது அந்தந்தப் பொருட்களால் செய்த பொம்மைகள். இந்த நான்கு பொம்மைகளையும் வைத்திருப்பவன் ஒரு நாள் அந்த நான்கு பொம்மைகளையும் தெரியாமல் தண்ணீரில் போட்டுவிட்டான். கட்ட பொம்மை நீரிலேயே மிதந்தது. பஞ்சு பொம்மை அணைத்து தண்ணீரையும் உறிஞ்சிக்கொண்டது. களிமண் பொம்மை மற்றும் சர்க்கரை பொம்மை இரண்டும் அந்த தண்ணீரிலேயே கரைந்துப் போனது. இதிலிருந்து உனக்கு எண்ணத் தெரிகிறது என்று என் ஆசிரியர் கேட்பார். பொம்மைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது என்று பதிலுரைத்திருக்கிறேன். பின்னர் என் ஆசிரியர் தொடர்வார்.
"அப்படி இல்லடா, கட்ட பொம்மை அந்த தண்ணீரிலேயே மிதக்குது இல்லையா, அதுக்கு தண்ணியப் பத்தியும் கவலை இல்லை. தன்னைப் பத்தியும் கவலை இல்ல. அந்த பொம்மைதான் நீ னு நினைச்சுக்கோ, எப்பவுமோ இந்த சமூதாயம் வேற நாம வேற னு நினைக்காம சமூதாயத்துக்கு தேவையான எல்லா நல்லதும் செய்யணும். அடுத்து பஞ்சு பொம்மை இருக்கிற தண்ணி எல்லாத்தையும் உரிஞ்சிக்கிட்டது இல்லையா.. அது மனிதர்களோட சுயநலத்தை காட்டுது. நீ அந்த மாதிரி சுயநலவாதியா இந்த சமூதாயத்திலிருந்து எல்லாத்தியும் உறிஞ்சிக்கிட்டு ஒதுங்கிவிடக்கூடாது. அடுத்ததா களிமண் பொம்மை, தீய வழியிலப் பொய் உன்னையும் கெடுத்துக்கிட்டு, இந்த சமூகத்தையும் கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடாது. களிமண் பொம்மை தண்ணியில கரைஞ்சி தன்னையும் அழிச்சிக்கிட்டு அந்தத் தன்னியவும் கெடுத்த மாதிரி, அடுத்து சர்க்கரை பொம்மை. இந்த மாதிரிதான் நாம வாழனும். நாம அழிஞ்சாலும் இந்த சமூதாத்துக்கு நல்ல விசயங்கள விட்டுட்டுப் போகணும். சர்க்கரை பொம்ம கரைந்தாலும், நல்ல இனிப்பானத் தண்ணிய கொடுத்துட்டுப் போன மாதிரி. என்பார் என் ஆசிரியர்.
இன்றும் இந்தக் கதை என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது என் ஆசிரியரின் மகள் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். காலம் சுழல்கிறது. இன்னும் பதிமூன்று நாட்களில் மகள் பதவியுடன், மனைவி என்கிறப் பதவியையும் சேர்த்து வகிக்கப்போகிறாள். மாப்பிள்ளை U.K. வில் கணினிப் பொறியாளராக இருக்கிறார். என் ஆசிரியரின் சொந்த அண்ணனின் மகன். காத்திருக்கிறேன் என் ஆசிரியரின் முகத்தில் பூக்கப் போகும் அந்தப் புன்னகைக்காக!
தொடரும்...
Thanx teacher
ReplyDelete