Sunday, April 26, 2009

ஏன் படிக்க வேண்டும்?



அகன்ற சாலை. சாலையின் இருமங்கிலும் வரிசை வரிசையாய் வாகனங்கள். குண்டூசி நுழைவதற்கே இடம் தேடும் நெருக்கடியில் சாலையின் மறுபக்கத்தை அடைய நினைக்கும் பார்வையற்றோரின் கையைப் பிடித்து, சாலையின் மறுபக்கத்தை அடைய உதவினால்.. அது ஒரு நிமிட உதவி ஆயினும், அந்த நேரத்தில் அது பேருதவி. வாழ்க்கையின் ஒவ்வொரு அடர்ந்த கணத்திலும், சுற்றி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட புத்தகங்கள் நமக்கு அத்தகைய உதவியை செய்கிறது. ஆனால் இன்னும் பலர் அதை சரியாக உணரவில்லை.

புத்தகம் படிப்பது என்பது ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டிய ஒரு சராசரியான நிகழ்வு. ஆனால் இன்றைய சமூகத்தில் புத்தகம் படிப்பவர் என்றால் மற்றவர்கள் அவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும்... என்னவென்று சொல்ல..

புத்தகம் படிப்பவர்களின் மனம், அறிவு எல்லாம் ஒரு தூய நிலையை அடைகிறது என்றால் மிகையல்ல.. குழந்தைகளின் கண்களில் உள்ளது போன்று ஒரு தெளிவு, புத்தகம் படிப்பவர்களின் அறிவிலும், மனதிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும். படித்தவர்கள்தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் என்றொரு வாதம் இங்கு எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. படித்தவர்கள் என்ற சொல்லே கடந்த காலத்தைக் குறிக்கிறது. அவர்களின் அறிவும் அவர்களை விட்டுக் கடந்துப் போய்விட்டது என்றே பொருள். தொடர்ந்து படிக்கும் யாரும் பிறருக்கு தீங்கு இழைக்கும் தவறுகளை செய்வது இல்லை. அவர்கள் நிகழ்காலத்தின் விண்மீன்கள். தங்களை எப்போதும் பெரிதுப் படுத்திக் காட்டிக் கொள்வதில்லை.



ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவிட்டு, புத்தகங்களை மூட்டைக் கட்டிவைத்து கடமையை சரிபார்க்கும் சராசரி மனிதர்கள், படித்தவர்கள் எனும் உயரிய சொல்லுக்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்கள் படிக்காத பாமர மக்களை விட சற்றே ஆபத்தானவர்கள். தவறான சூழ்நிலையில் தங்கள் படிப்பை அதன் பயனை வெளிப்படுத்த நினைக்கும் இவர்களின் போக்கே இந்த சமூதாயத்தை பலமுறை தவறான பாதைக்கு இட்டு சென்று விடுகின்றன.

பறந்து விரிந்த இந்த உலகின் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப் படவேண்டியவை. என்றோ படித்து வாங்கிய பட்டம் ஒரு நாளும் உங்கள் உதவிக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளை பெற்றோர் அவர்களுக்கு தொடர்ந்து ஒரு சில வருடம் மட்டும் உணவு கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பற்றி அக்கறை இன்றி திரிந்தால் அவர்கள் மனுதர்ம சட்டப்படி தண்டனைக்குரியவர்கள். அது போலத்தான் உங்கள் அறிவும் ஒரு பட்டப் படிப்போ, பட்ட மேற் படிப்போ உங்கள் அறிவிற்கு நீங்கள் கொடுக்கும் சரியான உணவல்ல.. தொடர்ந்து அதற்கான உணவு பரிமாறப் படவேண்டும். அது சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம். அனைத்து தரப்பட்ட புத்தங்களையும் வாசிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.



புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தினை புரட்டும்போதும், வாழ்வின் ஒவ்வொரும் பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இதைத் தெரிந்துக் கொண்டு நான் என்ன பண்ண போகிறேன் என்கிற எண்ணமே உங்கள் முன்னேற்றத்தின் முதல் எதிரி. கற்றுக் கொள்ளத் துடிக்கும் ஆர்வமே உங்கள் முதலீடு. உலகின் உள்ள அனைத்தையும், அனைத்தின் இயக்கங்களையும் தெரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கு புத்தகங்கள் உங்களுக்கு சிறு அளவிலாவது உதவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ளுங்கள். அதனை ஒரு பணியாகவே நினைத்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு பழக்கமாகிப் போகும். ஒரு பொருளுக்கு அடிமையாவது இப்படித்தான். நீங்கள் புத்தகத்துக்கு அடிமையாகுங்கள். உலகம் உங்களுக்கு அடிமையாகும். உங்கள் அன்புக்கு அடிமையாகும்.

ஏன் படிக்க வேண்டும்?


உலகில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூலக் காரணமே புரிந்துணர்வு இல்லாமையே. பாரம்பரியம் மிக்க பாரத தேசத்தில் கூட லட்சக் கணக்கில் விவாகரத்து வழக்குகள், கொலை, கொள்ளை, தீய எண்ணங்கள் போன்ற பல எதிர்வினை செயல்களுக்கு மூலக் காரணமே ஒரு சிலரின் மனம் பன்படாமையே. 

காய்ந்துக் கிடக்கும் களிமண்ணைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நீருடன் அவற்றை கலந்து இலகுவாக்கி பின்னர்தான் நாம் நினைத்த வடிவில் அவற்றை கொண்டு வர முடியும். அது போலதான் களிமண்ணாய் இருக்கும் மனித மனமும் பண்பட படிப்பு எனும் நீர் கலக்க வேண்டும். 

படி (படிப்பு) என்ற சொல்லை மேலோட்டமாக பார்த்தல் அது ஒரு சாதாரண வார்த்தைதான். ஆனால் அதன் ஆழத்தை உணர்ந்துக் கொண்டால் நாமும் ஆழ உழலாம். 

சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!


இவ்வுலகம் எப்படி படிப்படியாய் நாகரீக வளர்ச்சி அடைந்து இன்று தொழில்நுட்பத்தில் அரக்கனாக இருக்கிறது என்றால் என்ன காரணம்? யாரோ ஒரு மேதாவி படித்ததனால். யாரோ ஒருவன் தன் அறிவை விசாலப் படுத்த விரும்பியதால். படிப்பு உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றி உள்ள இந்த சமூகத்தையும் சேர்ந்தே களை எடுக்கிறது. 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் இல்லை.. ஆர்வமும் இல்லையே?


புகைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவன் மனதில் தோன்றக் காரணம் அவனை சுற்றி உள்ள சமூகம். அது ஒரு தனி மனித விருப்பமல்ல. ஆனால் புகைக்க ஆரம்பித்தால் அதனை எளிதில் யாரும் விடுவதில்லை. கெடுதல் தரக் கூடிய ஒரு நஞ்சே மனித மனதில் ஆழப் பதியும்போது ஏன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் பதியாது?

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்துப் பாருங்கள். அடுத்த நாள் அதற்கு நீங்கள் அடிமை. கடமையே என தினமும் ஒரு பதினைந்து நிமிடமாவது படியுங்கள். படிப்பதற்கும் ஒரு பயிற்சி தேவை. முதலில் உங்களுக்கு பிடித்த செய்திகள், திரைப்படம், அரசியல், பொது அறிவு என படியுங்கள். பின்னர் இலக்கியங்கள் மீது உங்களுக்கு தானாகவே ஆர்வம் ஏற்படும். 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் நேரம் ஒரு பொருட்டல்ல. கழிவறையில் அமர்ந்திருக்கும் அந்த நேரத்தை படிக்க செலவிடுங்கள். உங்கள் உடலின் கழிவுகள் மட்டுமல்ல. மனதின் கழிவுகளும் சேர்ந்தே அகற்றப்படும். 

படித்துப் பாருங்கள். உங்கள் சினம் தணியும். உங்கள் மனம் பண்படும். உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் சுகமாக மாறும். எதையும் உங்கள் மனம் இலகுவாக எடுத்துக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பறவைப் போல உங்கள் மனம் அந்தரத்தில் பறக்கும். உங்கள் அகம் அழகாகும். 

கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். உங்கள் பாரம் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.  இந்த உலகம் உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும்.


Thursday, April 23, 2009

பகுதி 6 - என் ஆசிரி(யை)யர்



சோகம் மட்டுமே புயலாய் வீசிய என் வாழ்வில் சில நேரங்களில் வசந்தமும் தென்றலாய் வந்து என்னை வருடியதுண்டு. இந்த வசந்த காலம், பனி மீது இருக்கும் மழைத்துளி போன்றது. நொடியில் கரைந்துப்போகும். 

அன்று ஆறாம் வகுப்பின் முதல் நாள். யூனிபார்ம் இல்லாமல் சுமாரான ஒரு ஆடை உடுத்திக்கொண்டு நானும் என் அக்காவும் பள்ளிக்கு சென்றோம். முதல் நாள் முதல் வகுப்பு எனக்கு பிடிக்காத ஆங்கிலப் பாடவேலை. வழக்கம் போல் அட்டெண்டன்ஸ் எடுத்துவிட்டு, ஒரு ஆங்கிலப் பாடலை (Poem) பாடம் எடுக்கத் தொடங்கினார் என் ஆசிரியர். எதேச்சையாக யாருக்காவது இந்தப் பாடல் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்தால் படியுங்கள் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் எழுந்துப் படிக்கத் தொடங்கினேன். காரணம் என் பெரிய அண்ணன் விடுமுறை நாட்களிலேயே எனக்கு அந்தப் பாடலை மனனம் செய்யும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார். எனவே அந்தப் பாடலை பார்க்காமலும் என்னால் சொல்ல இயலும். அப்புறம் பார்த்துப் படிக்க சொன்னால் விட்டு விடுவேனா.. துணிந்து  எழுந்து நின்று படித்தேன். 

அந்தப் பாடல்,

I know a face.. I love a face..  எந்தப் பிசிறும் இல்லாமல், தெளிந்த நீரோடைப் சொல்ல மிக அழகாக அந்தப் பாடலை பாடியாதாக பின்னாளில் என் ஆசிரியர் கூறக் கேட்டுள்ளேன்.  அந்தப் பாடல் தான் என்னை என் ஆசிரியருக்கும், என் ஆசிரியரை எனக்கும் அடையாளம் காட்டிய பாடல். இதோ இன்று வரை கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக தொட்டுத் தொடரும் ஒரு தெய்வீக உறவாகத் தொடர்கிறது. எனக்கு எழுத்தரிவைத் தந்த, அறியாமைப் பிணியைப் போக்கும் கல்வி எனும் அருமருந்தைத் தந்த அந்த மா ஆசிரியரை என் நெஞ்சக் கோவிலில் அனையா தீபமாக ஏற்றி வைத்துள்ளேன். எனக்கும் அவர்களுக்கும், கருத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், மாணவன் ஆசிரியர் என்கிற உறவில் ஒருபோதும் முரண் ஏற்படுத்தியதில்லை. காரணம் அவர்கள் கருத்தில் நான் மாறுபடக் காரணமே அவர்கள் கொடுத்த அந்தக் கல்வியறிவு தானே.

ஆறாம் வகுப்புத் தொடங்கி கல்லூரிப் பட்டப் படிப்பு வரை என் படிப்பு செலவை ஏற்றதோடு மட்டுமல்லாமல் ஆசிரியராய் எனக்கு  வழிகாட்டியாகவும், தாயாய் என்னிடம் பரிவுக் காட்டியும், பல நேரங்களில் நண்பனாய் என்னை தட்டிக் கொடுத்தும் என்னை ஒரு சிலையாய் வடித்த சிற்பி என் ஆசிரியை. திருமதி. புஷ்பராணி. திக்குத் தெரியாமல் திரிந்துக் கொண்டிருந்த என் வாழக்கையில் என் கைப்பிடித்து போக வேண்டியப் பாதைக்கு என்ன அழைத்த் சென்றவர் அவர். இன்னும் நான் போக வேண்டிய பாதை வெகு தூரம் என்றாலும் அதற்கான ஆற்றலை, உத்வேகத்தை எனக்களித்த பெருந்தகை அவர். 

என் ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறும் ஒரு கதை. 

ஒரு கட்ட பொம்மை (wood doll), பஞ்சு பொம்மை, களிமண் பொம்மை, சர்க்கரை பொம்மை அதாவது அந்தந்தப் பொருட்களால் செய்த பொம்மைகள். இந்த நான்கு பொம்மைகளையும் வைத்திருப்பவன் ஒரு நாள் அந்த நான்கு பொம்மைகளையும் தெரியாமல் தண்ணீரில் போட்டுவிட்டான். கட்ட பொம்மை நீரிலேயே மிதந்தது. பஞ்சு பொம்மை அணைத்து தண்ணீரையும் உறிஞ்சிக்கொண்டது. களிமண் பொம்மை மற்றும் சர்க்கரை பொம்மை இரண்டும் அந்த தண்ணீரிலேயே கரைந்துப் போனது. இதிலிருந்து உனக்கு எண்ணத் தெரிகிறது என்று என் ஆசிரியர் கேட்பார். பொம்மைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது என்று பதிலுரைத்திருக்கிறேன். பின்னர் என் ஆசிரியர் தொடர்வார். 

"அப்படி இல்லடா, கட்ட பொம்மை அந்த தண்ணீரிலேயே மிதக்குது இல்லையா, அதுக்கு தண்ணியப் பத்தியும் கவலை இல்லை. தன்னைப் பத்தியும் கவலை இல்ல. அந்த பொம்மைதான்  நீ னு நினைச்சுக்கோ, எப்பவுமோ இந்த சமூதாயம் வேற நாம வேற னு  நினைக்காம சமூதாயத்துக்கு தேவையான எல்லா நல்லதும் செய்யணும். அடுத்து பஞ்சு பொம்மை இருக்கிற தண்ணி எல்லாத்தையும் உரிஞ்சிக்கிட்டது இல்லையா.. அது மனிதர்களோட சுயநலத்தை காட்டுது. நீ அந்த மாதிரி சுயநலவாதியா இந்த சமூதாயத்திலிருந்து எல்லாத்தியும் உறிஞ்சிக்கிட்டு ஒதுங்கிவிடக்கூடாது. அடுத்ததா களிமண் பொம்மை, தீய வழியிலப் பொய் உன்னையும் கெடுத்துக்கிட்டு, இந்த சமூகத்தையும் கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடாது. களிமண் பொம்மை தண்ணியில கரைஞ்சி தன்னையும் அழிச்சிக்கிட்டு அந்தத் தன்னியவும் கெடுத்த மாதிரி, அடுத்து சர்க்கரை பொம்மை. இந்த மாதிரிதான் நாம வாழனும். நாம அழிஞ்சாலும் இந்த சமூதாத்துக்கு நல்ல விசயங்கள விட்டுட்டுப் போகணும். சர்க்கரை பொம்ம கரைந்தாலும், நல்ல இனிப்பானத் தண்ணிய கொடுத்துட்டுப் போன மாதிரி. என்பார் என் ஆசிரியர். 

இன்றும் இந்தக் கதை என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது என் ஆசிரியரின் மகள் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். காலம் சுழல்கிறது. இன்னும் பதிமூன்று நாட்களில் மகள் பதவியுடன், மனைவி என்கிறப் பதவியையும் சேர்த்து வகிக்கப்போகிறாள். மாப்பிள்ளை U.K. வில் கணினிப் பொறியாளராக இருக்கிறார். என் ஆசிரியரின் சொந்த அண்ணனின் மகன். காத்திருக்கிறேன் என் ஆசிரியரின் முகத்தில் பூக்கப் போகும் அந்தப் புன்னகைக்காக!

தொடரும்...


Tuesday, April 21, 2009

பகுதி 5 - உருண்டை சோறு



இளமையில் வறுமை கொடிது... என்றார் அவ்வையார். இளமையை எட்டிப்பார்க்காத வயதில் வறுமை கொடிதினும் கொடிது... 

அதுவரை செல்வசெழிப்பாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமையின் கோரதாண்டவத்தை பார்க்க நேர்ந்தது. வாழ்ந்து கெட்டவன் கதையானது எங்கள் குடும்பக் கதை. தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக எங்களுக்கு இருந்த நிலங்கள், வீடு என அனைத்தையும் விற்று கடனை அடைத்துவிட்டு, எங்கள் வீட்டின் வாசலில் என் தாயின் சேலையைப் பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் நான் நின்ற அந்தக் கணங்கள் இன்றும் நெஞ்சில் கணக்கிறது. 

இருக்கும் பொருட்கள் அணைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு போகும் வழித் தெரியாமல், வாடகை வீட்டுக்கு போகக் கூட நாதியின்றி நிர்கதியாய் நின்ற எங்களுக்கு அந்நேரத்தில் தனது இடத்தைக் கொடுத்து உதவியது, வேறு யாருமல்ல.. தனது இரண்டு கிரவுன்ட் நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள பணித்த என் தந்தையின் நண்பர்தான். அந்த நிலத்தை வாங்காததன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

அடிமேல் அடியாக கொட்டிவாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியின் கட்டிட வேளையில் ஈடுப்பட்ட என் தந்தை மேல் தளத்திருந்து கீழே விழுந்து விட கால் முறிந்து போனது. மருத்துவ செலவு, குடும்பத்தின் குறைந்த பட்ச உணவு செலவு என அனைத்துக்கும் மாற்று நபர் இல்லாமல் திண்டாடியது என் குடும்பம். என் பெரிய அண்ணன் படிப்பை விடுத்து கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன அண்ணன் பத்து வயதிலேயே கார் மெக்கானிக் செட்டில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்னொரு அண்ணன் சினிமா ஆர்வத்தில் கதை எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவரது ஆர்வத்தை கெடுக்க என் பெற்றோர்கள் நினைக்கவில்லை. ஆனால் வருமானம் போதாதக் காரணத்தால் என் அம்மாவும், அருகிலுள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 

அந்நாளில் இரவு நேரத்தில் மட்டுமே எங்களுக்கு ஒரு கை சோறு கிடைக்கும். பகல் நேரத்தில் ஒரே ஒரு வாழைப்பழம் மட்டுமே. வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சமைத்து பெரிய தட்டில் சோற்றை போட்டு அதில் குழம்பை குழைத்து சிறிய உருண்டையாக உருட்டி எங்கள் அனைவருக்கும் ஒரு கை கொடுத்துவிட்டு, ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்துவிட்டு, இறுதியாக இருக்கும் கொஞ்சம் சோற்றை மட்டுமே என் அம்மா உண்பார். நிலவு வெளிச்சத்தில், தாயின் அன்பில் நல்ல வேப்ப மரக் காற்றில், எனக்கு கிடைத்த அந்த ஒரு கை சோற்றின் சுகம் எத்துனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் இந்த அருமை அப்போது தெரியவில்லை. வறுமையில் எங்கே அருமை தெரிவது. 

கடைக்குட்டி என்பதால் எனக்கு மட்டும் சில வசதிகள் எப்போதும் உண்டு. வீட்டில் யாருக்கும் உணவு இல்லையென்றாலும், எனக்கு மட்டுமே அருகில் உள்ளவர்களிடம் கேட்டு வாங்கிக்கொடுப்பார்கள். பசி எடுத்தால், தட்டை கையில் எடுத்துக்கொண்டு, ஓங்கி மணி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருப்பேன். திட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். சில நாள் எனக்கு என்று சொல்லி வாங்கி வரும் சாப்பாடே எங்கள் அணைவருக்கும் ஒரு கை உருண்டை சோறாக அமைந்துவிடும். 

மறு நாள் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள். அரசாங்கப் பள்ளிதான் என்றாலும் அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் இல்லாததால் என் படிப்பும், அக்காவின் படிப்பும் கேள்விக்குறியானது. ஆனால் அந்த ஆறாம் வகுப்பின் முதல் நாள், முதல் வகுப்பில் நான் சந்திக்கும் ஒரு நபர்தான் என் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நல்லார் ஒருவர் உளரே.. அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை.. எனக்கு 
மட்டுமே பெய்யாமால் போய்விடுமா என்ன?

தொடரும்...


Sunday, April 19, 2009

பகுதி 4 - எங்கள் வீடு


பள்ளி நினைவுகள்தான் களம் என்றாலும் அதன் ஊடாக நான் தொட்டு செல்ல நினைக்கும் நினைவுகளில் முக்கியமானவை ஒரு சில.. அவற்றில் ஒன்று எங்கள் கொட்டிவாக்கம் வீடு.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை அடையாறுக்கும், அடையாரில் இருந்து கொட்டிவாக்கதிற்கும் குடிபெயர்ந்ததை முன்னரே பகிர்ந்து இருந்தேன். கொட்டிவாக்கத்தில் சுமார் 2400 சதுர அடியில் (ஒரு கிரவுன்ட்) இடம் வாங்கிக்கொண்டு மிக அழகாக ஒரு வீடும் கட்டிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தோம். எங்களுக்கு ஒரு வீடும் வாடகைக்கு விட மூன்று வீடுகளும் கட்டி இருந்தார்கள். மிக அழகாக பூந்தோட்டம், சிறிய அளவிலான கோழிப் பண்ணை, அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா, நான் என மிக அழகானதொரு குடும்பமாக குடியேறினோம். 

சில நாட்கள் கழித்து தோட்டத்தில் ஒரு வெண்டைக்காய் செடி வைத்து விட்டு அது முளைத்து வெளியில் வரும் வரை, தோட்டம்தான் நன் கண் முழிக்கும் இடம். சில நாட்கள் கழித்து முளை விட்டு வெளியில் வந்தது நான் விதைத்த விதை. ஏதோ சாதித்த விட்டது போன்ற ஒரு பிரம்மிப்பு. ஓ என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் வந்தேன். பளார் என்றொரு அரை விட்டார் என் தந்தை. (அதிகாலை நேரம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் தந்தை நான் கத்தியது கண்டு பயந்து, அந்தக் கோபத்தில் தான் என்னை அறைந்தார் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்). உலகையே மறந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன நான், தந்தை விட்ட அறையில் நொடிந்துப் போய் நின்றேன். பின்னர் அம்மா வந்து சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். 

அதன் பின்னர் பல் துலக்குவது, சாப்பிடுவது என பல நேரங்களை என் வெண்டைக்காய் செடியுடன்தான் கழித்தேன். விதை முளைத்து, செடியாகி, வெண்டை காய்த்து அதை பலமுறை நான் வெறும் வாயிலே தின்று இருக்கிறேன். வெண்டைக்காய் தின்றால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அம்மா சொல்லுமுன்னரே, பச்சை வெண்டைக்காயை தின்னப் பழக்கப்பட்டிருந்தேன் நான். நினைவு தெரிந்து நான் முதல் முதலாக விதைத்து, நன்றாக வளர்ந்து வந்த வெண்டைக்காய் செடியின் வளர்ச்சியை அணு அணுவாக ரசித்தேன். 

தோட்டம், கோழிப் பண்ணை என மிக அழகாக நகர்ந்த நாட்களின் கவர்ச்சி இன்னும் குறையாமல் என் மனதை ஆட்டுவிக்கின்றன. அந்நாளில் கொட்டிவாக்கம் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே மெத்தை வீடு. பக்கத்திலேயே தென்னை தோப்பு, அதனருகில் அழகிய ஒரு குட்டை (சிறிய நீர்நிலை). அதில் தண்ணீர் குறைந்து நான் பார்த்தது இல்லை. அந்நாளில் அந்த தெருவில் அதிக வீடுகளும் இல்லை. நாங்கள் வருவதற்கு முன்னர் அந்தத் தெருவில் விவசாயம் கூட நடைபெற்றதாக கேள்விப்பட்டேன். அந்த தெருவின் பெயரே களத்து மேட்டுத் தெரு. இவ்வளவு பெருமைகளும் வாய்க்கப்பெற்ற அந்தத் தெருவின் இன்றைய நிலையைப் பார்த்தால் நெஞ்சம் ஏனோ கணக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் ஒருத் தெருவையோ இந்த அளவு பாதிக்கும்போது நாடு என்ன ஆவது? இயற்கை னா என்னமா? என்று வருங்காலக் குழந்தைகள் கேள்வி கேட்காமல் இருந்தால் சரி.

எங்கள் வீட்டின் முன்புறம் கொஞ்சம் வளர்ந்திருந்த ஒரு வேப்ப மரமும் இருந்தது. அந்த அருமையான நிழலில் ஊஞ்சல் கட்டி ஆடியப் பொழுதுகளை களவாடிய காலத்தின் மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது. அந்த தெரு வழியேப் போகும் பலருக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது அந்த மரம். 

மரமும் நீர்நிலைகளும் சூழ்ந்த அந்த இடத்தில் அன்று வாடகைக்கு வரவே ஆள் இல்லை. பின்னர் மதுரையிலிருந்து எங்களைப் போன்றே புலம் பெயர்ந்த ஒரு குடும்பம், எங்கள் வீட்டில் வாடகைக்கு வந்தனர். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் படிப்புக்காக ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார் என் தந்தை. தமிழில் க ங் ச ந கூட தெரியாமல் இருந்த என்னை என் மூத்த அண்ணன் செதுக்கிய இடம் அந்த அறை. இரவு முழுவதும் கண் விழித்து என்னைப் படிக்க வைத்து என்னை மெருகேற்றிய இடம் அது. அந்நாட்களில் என் மூத்த அண்ணன் மீது எனக்கு ஏகக் கோபம் இருந்தது. விழுந்த அடி அப்படி. இன்று உணர்கிறேன் அந்த இரவுப் பொழுதுகளின் அருமையை. என் அண்ணனின் தியாகத்தை. ஆனால் அவரின் தியாகத்தை உணரும் இந்நாளில் அவர் எங்களுடன் இல்லை. 

இருந்தாலும் தமிழில் கொஞ்சம் தேறிய எனக்கு ஆங்கிலம் அடிபணியவில்லை. ஐந்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வில் ஒருத் தாளைக் கொடுத்து கேள்விகளுக்கு பதிலை குறிக்க சொல்வார்கள். ஆங்கிலத் தேர்வு முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். மற்றத் தேர்வுகளுக்கு விடைத்தாள், வினாத்தாள் வேறு வேறாக இருக்கும். ஆங்கிலத் தேர்வில் இரண்டுமே ஒன்றுதான். விடையைக் குறிக்க வேண்டும் அவ்வளவுதான். சத்தியாமாக சொல்கிறேன். ஒரு வினாவிற்கு கூட எனக்கு விடைத் தெரியாது. முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விட்டாச்சு. 

இதற்கு இடையில் அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிரவுண்டு நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுமாறு என் தந்தையை அவர் நண்பர் கேட்டுக் கொண்டார். என்ன காரணமோ என் தந்தை அதை வாங்காமல் இருந்து விட்டார். இதன் விளைவை பின்னாளில் அனுபவித்தோம். 

இப்போது இருக்கும் வீட்டில் இருந்து நடுத்தெருவுக்கு வருவோம் என்றோ, கறியும் மீனும் சாப்பிட்டு சுகமாய் வாழ்ந்த நாங்கள் ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை ஒரே ஒரு கை சாம்பார் சாதம் தின்று ஒரு வாழைப் பழத்துடன் சில மாதங்களை கழிப்போம் என்றோ அப்போது கனவிலும் நினைக்கவில்லை. காலம் சுழலும் வேகத்தில் யார் எங்கே தூக்கி எறியப்படுவார்களோ யார் அறிவது. விதி வலியது. என் தாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை அது. 

தொடரும்....


Friday, April 17, 2009

பகுதி 3 - கொல்லாம்பழம் (முந்திரிப்பழம்)



கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அன்றைய நாளில் முந்திரித் தோப்புகள் அதிகம் இருந்தன. அடுப்பெரிக்க சுளி (விறகு) பொறுக்க போகும்போது ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் முந்திரிப் பழங்களை பொருக்கி எடுத்து சாப்பிட்டுவிட்டு அதனால் ஏற்படும் தொண்டை கரகரப்பை ரசித்து வரவேற்று இருக்கிறேன். முந்திரிப் பழங்களை சாப்பிடும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சுகத்தை மனம் உணரும். இரண்டுப் பழங்கள் சாப்பிட்டாலே தொண்டை வறண்டு உள்ளுக்குள் ஏதேதோ செய்யும். அத்தனையும் மறந்து விட்டு மனம் மீண்டும் முந்திரிப் பழத்தை தேடும்.

பள்ளி வளாகத்தில் அதிகப்படியாக விற்கப்படும் பழங்களில் இதுவும் ஒன்று. என்னதான் காசு கொடுக்காமல் சுளி பொறுக்கும் இடங்களில் பொருக்கி தின்றாலும் பள்ளியில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து காசு கொடுத்து வாங்கித் தின்னும்போது அதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடியது போல் தோன்றும்.

முந்திரிப்பழம் விற்கும் ஆயா ஒரு அகன்ற பாத்திரம் முழுதும் (அந்தப் பாத்திரத்தை இங்கு அண்டா என்பார்கள்) முந்திரிப் பழங்கள் கொண்டு வந்து பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடி கீழ் விற்றுக் கொண்டிருப்பார்கள். அது உடம்புக்கு நல்லதல்ல. அதிகமாக யாரும் அதை வாங்கி தின்னாதீர்கள் என்று ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார்கள். படிப்பதற்காக பள்ளி செல்கிறோமோ இல்லையோ நானும் என் நண்பர்களும் பள்ளியில் உள்ள தின்பண்டங்களை வாங்கித் தின்பதற்காகவே நாள் தவறாமல் பள்ளிக்கு செல்வோம். அதற்கே தடை விதித்தால் எப்படி? ஒரு போதும் அவர்கள் சொல்லை நாங்கள் கேட்டதே இல்லை.

பாலவாக்கம் பள்ளி அப்போது ஓரளவுக்கு பெரிய பரப்பளவு கொண்டு இருந்தது. ஆனால் கட்டிடங்கள் அவ்வளவாக இல்லை. எனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மரத்தடி நிழலில்தான் பாடம் நடக்கும். முதலில் பள்ளிக்கு செல்லவே பயந்த என் மனம் பிறகு பள்ளிக்கு செல்ல விருப்பப்பட்டதற்கு காரணம் இந்த மரத்தடியில் பாடம் எடுத்ததால்தான். ஆசிரியர் பக்கத்து வகுப்பு ஆசிரியருடன் பேசிக்கொண்டிருப்பார். நானும் நண்பர்களும் மணலில் விளையாடிக் கொண்டு இருப்போம். பக்கத்திலேயே முந்திரிப் பழம் விற்கும் ஆயாவும் கடை போட்டிருக்கும். ஆசிரியருக்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுவிட்டு பக்கத்தில் இருக்கும் இன்னொரு பையனின் சட்டையில் கையைத் துடைத்துவிட்டு மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடர்வோம். (முந்திரிப் பழத்தில் ஒரு வித பிசு பிசுப்பான சாறு அதிகமாக வெளிவரும்).

பள்ளிக்கூடம் சாலையோரம் அமைந்திருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிப் பார்த்து விளையாடும் விளையாட்டு எங்களுக்கு சலிப்பேர்ப்படுத்தாத ஒரு முக்கியமான விளையாட்டு. அப்போது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை சாலையில் சிகப்பு நிற காரை பார்த்துவிட்டால் அன்றைக்கு எப்படியும் வீட்டில் இனிப்பு செய்து வைப்பார்கள் என்பது.  பல முறை அப்படி நடந்ததும் உண்டு. 

அன்றும் அப்படிதான். ஆசிரியர்க்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுக்கொண்டே சாலையில் போகும் வாகனங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். சிகப்பு நிறக் காரை வேறு பார்த்துவிட்டோம். வீட்டில் எப்படியும் இனிப்பு செய்து வைத்திருப்பார்கள் என்கிற மகிழ்ச்சி. மேலும் விளையாட்டில் அதிக கவனம் இருந்ததால் பழக்க தோசத்தில் கையில் ஒழுகும் சாற்றை பக்கத்தில் இருந்த பையனின் சட்டையில் துடைப்பதற்கு பதிலாக ஒரு பெண்ணின் சட்டையில் (அப்போது நான் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இரண்டாம் வகுப்பு) துடைத்துவிட்டேன். இதை என் ஆசிரியர் தற்செயலாக பார்த்துவிட்டார்.  பிரம்பெடுத்து என்னை பிண்னி எடுத்துவிட்டார் (அன்றோடு சிகப்பு நிறக் கார் நம்பிக்கை உடைந்துப் போனது). இதுதான் ஒரு ஆசிரியரிடம் படிக்கும் காலத்தில் நான் வாங்கிய முதல் மற்றும் கடைசி அடி. இன்னும் நான்கு வருடங்கள் கழித்து இதே பள்ளியில் அனைவரும் மெச்சும் அளவிற்கு நான் மாறுவேன் என்பதை அப்போது நானறியேன்.  

தொடரும்...



Thursday, April 16, 2009

பகுதி 2 - பெரியப் பத்துக்காசும், கல்லாக்காயும்



ஒரு முறை பட்டுக்கோட்டையும் அவரது நண்பரும் சுடும் வெயிலில் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில் பட்டுக்கோட்டை அவர்களின் செருப்பு அறுந்துப் போய்விட்டதாம். உடனே அவரது நண்பர் என்ன இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்தாராம். உடனே பட்டுக்கோட்டை 

"உறுப்பருந்து போனாலும் உள்ளம் கலங்கேன்
இந்த செருப்பறுந்து போனதற்காகவா சிந்தை கலங்குவேன்..
கொதிக்கும் தார் எனக்கு குளிர் நீர்.. என்று கூறிவிட்டு வேகமாக நடந்து சென்றாராம்.

இதுப் போன்ற மனப்பக்குவம் எப்போது ஒருவருக்கு வரும். உறுதியாக நிறைய கற்ற அறிஞர்களுக்கு மட்டுமே.. ஆனால் ஒன்றாம் வகுப்பு சேர்ந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கையில் சுடும் வெய்யிலில் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றபோது வலி தாங்காமல் அம்மாவின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு அழுதுக் கொண்டே பள்ளிக்கு சென்ற நாட்களில் இது போன்ற மனப்பக்குவம் எனக்கு வரவில்லை. அதுதான் சொன்னனே நிறையக் கற்ற அறிஞர்களுக்கு மட்டுமே அல்லது வாழ்வில் அடிபட்டு, உதைபட்டு முன்னேறிய ஒரு சிலருக்கு மட்டுமே வரும்.. (பள்ளிக்கூட நினைவுகளை எழுதும் முன்னர் என் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்ட ஒரு சில விசயங்களையும் சேர்த்தே இங்கு எழுதுகிறேன்.)

ஒற்றையடிப் பாதையாக வளைந்து நெளிந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மிக அருகிலேயே, சாலையோரமாகவே எங்கள் பள்ளி அமைந்திருந்தாலும் 90 களில் அந்தப் பகுதி நிறைய மரங்களாலும் நீர் நிலைகளாலும் நிரம்பி இருந்தது. குறிப்பாக எங்கள் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரம் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காரணம் அதில் இருந்து தினமும் பழம் பறித்து உண்டு எங்கள் பொழுதுகளை கழித்தோம். அந்தப் பழத்தின் பெயர் எனக்கு சரி வர நினைவில் இல்லை. ஆனால் "மூக்கு சளிப் பழம்" என்று அந்நாளில் அந்தப் பழத்திற்கு நாங்கள் பெயர் வைத்திருந்தோம். பெயர் மட்டுமே அப்படி. பழம் மிக இனிப்பான பழம். 

அந்நாளில் பள்ளி வளாகங்களில் தின்பண்டங்கள் விற்கும் ஆயாக்களிடம் தினமும் பத்து பைசாவிற்கும் இருபது பைசாவிற்கும் நாங்கள் வாங்கித் தின்னும் இன்னொரு பழம் "கல்லாக்கா" இது தான் என் நினைவில் நிற்கும் பெயர். உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பழம் இப்போது எங்காவது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. கருப்பு நிறத்தில் அல்லது அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பழங்கள் மிகவும் புளிப்பு சுவை நிறைந்த பழங்கள். பள்ளிக்கூட நாட்களில் இந்தப் பழத்தை தின்னாத நாட்களே இல்லை. 

அதற்காக அம்மாவிடம் பத்துக் காசு கேட்டு அடம் பிடித்து வாங்கி சென்று பள்ளியில் காலையிலேயே கல்லாக்கா சாப்பிட்ட பொழுதுகள் அருமையானவை. அந்தப் பொழுதுகளும் அந்தப் பழங்களும் இப்போது கிடைக்காதவை. வீட்டில் பத்துக் காசு கொடுக்கும்போது அதிலும் பெரியப் பத்துக் காசுதான் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதுப் புரண்ட நாட்களை நினைத்து இன்றும் சிலாகித்துக் கொள்கிறேன்.

ஒரு நாள் அண்ணனிடம் பெரியப் பத்துக் காசும், எனக்கு சின்னப் பத்துக் காசும் (சின்னப் பத்துக் காசு கொஞ்சம் வழ வழப்பாக இருக்கும். பெரிய பத்துக் காசு கொஞ்சம் சொர சொரப்பாக இருக்கும். இன்று பத்துக் காசுகள் புழக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன்). கொடுத்து விட்டார்கள். ஆனால் மனம் கேட்க வில்லை. சின்னப் பத்துக் காசில் மனம் லயிக்கவில்லை. அழுதுப் புரண்டும் பயனில்லை. காரணம் அன்றுக் காசுக் கொடுத்தது என் தந்தை. என் தாயிடம் எனக்கு இருக்கும் அன்னியோன்யம் என் தந்தையிடம் இல்லை. பார்வையாலேயே மிரட்டும் தந்தையிடம் போய் எப்படி கேட்பது பெரிய பத்துக் காசை. அழுதுக் கொண்டே பள்ளிக்கூடம் சென்று விட்டேன். ஆயாவிடம் கொடுத்தால் நிச்சயம் இந்தக் காசிற்கும் அதே அளவு தின்பண்டம்தான் தருவாள். 

ஆனால் எனக்கு ஏனோ சின்னப் பத்துக் காசில் திருப்தி இல்லை. என் அண்ணனிடம் சண்டை போட்டு அதை வாங்க முயன்றேன். அண்ணன் எவ்வளவோ எடுத்து சொன்னான். ஆனால் அடம் நிக்கவில்லை. எதையோ இழந்தது போன்ற ஒரு மாயை. இன்று நினைத்துப் பார்த்தாலும் அதற்கான காரணங்களை அறிய முடியவில்லை. குழந்தைப் பருவம் எதையோ நமக்கு உணர்த்த முற்படுகிறது. ஆனால் நாம்தான் இறுதி வரை அதை அறிமுடியாமல் தவிக்கிறோம். இறுதியாக என் மீது பாவப்பட்டு என் அண்ணன் வந்து பெரியப் பத்துக் காசை என்னிடம் கொடுத்து விட்டு சென்றான். கண்ணில் நீரும், இதழில் சிரிப்பும் வர அடுத்த கணமே ஏதோ ஒரு வித மகிழ்ச்சி உடல் முழுதும் கலந்து உயிரை உருக்கி எடுத்த அந்தக் கணங்கள்... இறைவா மீண்டும் ஒரு முறை எனக்கு அந்த நாட்களை அளிக்க மாட்டாயா? 

தொடரும்...




Wednesday, April 15, 2009

பகுதி 1 - காஞ்சியிலிருந்து சென்னைக்கு



பள்ளியில் படித்த காலங்கள்.. அது கடற்கரையில் பதிந்த சுவடுகள் அல்ல..நீர் பட்டதும் அழிந்துப் போக.. அது இதயத்தை இடம் மாற்றி வைத்த அற்புத நிகழ்வு.. இதயத் துடிப்பு நிற்கும் வரை நம் நினைவுகளை விட்டு நீங்குவதில்லை. ஐந்து வயதுக்கு மேல் நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் மட்டுமே நம் நினைவில் நிற்கும் என்கிறது மருத்துவம். கொஞ்சம் முன் பின் இருக்கலாம். அதாவது நான்கு வயதில் பார்த்த நிகழ்வுகளும் நினைவிருக்கலாம். ஆனால் நினைத்து பாருங்கள் உங்கள் ஒரு வயது, இரண்டு வயது நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த மறதி இறைவன் நமக்கு கொடுத்த வரம். ஏன்? நீங்களே சிந்தித்து பாருங்கள்..

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது பள்ளியில் நான் அனுபவித்த அந்த நிமிடங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இது சுயசரிதம் அல்ல.. சுயத்தை அறிந்துக் கொள்ள நினைக்கும் முயற்சி. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த காஞ்சி மாவட்டத்தில் இருந்து சிறு வயதிலேயே தந்தையின் பிழைப்பு நிமித்தம் சென்னை மாநகருக்கு வந்து விட்டதாக தாய் சொல்லக் கேட்டு அறிகிறேன். அடையாறு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்த நிகழ்வு எனக்கு நினைவில்லை. ஆனால் அந்த அற்புதத் தருணங்களை என் தாய் சொல்லக் கேட்டு அறிந்துக் கொண்டேன். 2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரைக் கூட கிழக்கு கடற்கரை சாலை ஒரு கிராமமாகவே இருந்தது. நாங்கள் அங்குக் குடியேறிய நாட்களில் காஞ்சி மாவட்டக் கிராமங்களுக்கும் கிழக்கு கடற்கரை சாலை கிராமங்களுக்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. அதனால் தான் என்னவோ எங்கள் கிராமத்தை விட்டு இடம் பெயந்து வந்த சோகம் எங்களுக்கு அவ்வளவாக இல்லை.ஆனால் இன்று அடுக்கு மாடிக் குடியிருப்புகளாலும், தொழிற்சாலைகளாலும் நிறைந்திருக்கும் கொட்டிவாக்கம் பகுதி அன்று பெரும் நீர் நிலைகளாலும், தென்னைமர தோப்புகளாலும் நிறைந்து இருந்தது.  

இன்று அனைவராலும் போற்றிப் புகழப்படும் கிழக்கு கடற்கரை சாலையின் சாலைகள் அன்று மணலாலும், மாட்டுச் சானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தாக கேள்விப் பட்டிருக்கிறேன். அடையாறுப் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் உள்ள அரசாங்க பள்ளியில் படிப்பதற்காக கொட்டிவாக்கம் பகுதிக்கு நாங்கள் குடிபெர்யாந்த நிகழ்வு என் நினைவில் இன்றும் மாறாமல் உள்ளது. 1989 ஆம் வருடம் எனக்கு ஐந்து வயது நிரம்பிய காலக்கட்டம் அது. எனக்கு சரியாக நினைவில் இருக்கும் இந்தப் பகுதியில் இருந்துத் தொடருவோம். பள்ளிக்கூட நினைவுகள் மட்டுமின்றி அதன் ஊடாக நான் சந்தித்து வந்த நிகழ்வுகளையும் சேர்த்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

தந்தை கட்டிட ஒப்பந்தக்காரராக இருத்தால் கொட்டிவாக்கம் கிராமத்தில் ஒரு நல்ல இடத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு இடம் மாற்றலானோம். முதல் நாள் பாலவாக்கம் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க என்னையும், மற்ற வகுப்புகளில் சேர்க்க என் அண்ணன்கள், அக்காவையும் என் தாய் அழைத்து சென்றார். வலதுக் கையை தலை மீது வைத்து இடதுக் காதை தொடு என்று ஆசிரியர் ஒருவர் பணித்தார். எட்டவில்லை. எனவே பிறப்பு சான்றிதலைக் கேட்டனர். நான்கு வயதில் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள். எனவே 84 ஆம் வருடம் 83 ஆக மாற்றப்பட்டு நான் பள்ளியில் சேர்ந்துவிட்டேன். (இந்த சம்பவம் எனக்கு நினவில்லில்லை. என் தாய் பின்னர் சொல்லக்கேட்டு தெரிந்துக் கொண்டேன்.) முதல் நாளே பள்ளியில் எங்களை விட்டு விட்டு என் தாய் சென்று விட்டார். அது வரை தாயின் சேலையே கதி என்று கிடந்தவன் திடீர் என்று மாற்று முகங்கள் கண்டதும் அழுதுப் புரண்டேன். பயனில்லை. 

ஆனால் இந்தப் பள்ளிதான் என் வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியக் காரணி என்பதை அன்று நானறியேன். வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பல நிகழ்வுகள் ஒருங்கே நடந்தேறிய மாய வலை இந்தப் பள்ளி. 

தொடரும்...