Tuesday, March 15, 2011

அஞ்சல் பெட்டி - சிறுகதை


ஒற்றை மார்பை மறைக்கும் மேல்துண்டு, வத்திப்போன வயிற்றை கொடிமலர் போல சுற்றிக் கொண்டிருக்கும் அரைஞான் கயிறு, அதுப் பிடித்துக் கொண்டிருக்கும் அரை முழ வேட்டி என வாழ்வாங்கு வாழ்பவர் தாத்தா.

ஈரைந்துப் பருவத்தின் சுட்டித் தனம், வெள்ளைநிற மேலாடை, பட்டில்லாத ஆனால் பட்டுப் போகாத, பட்டு மாதிரியான ஒரு பாவாடை கட்டி, தன் பருவத்தின் சுமையை சுமை என்றே தெரியாமல் பருகும் யாழினி. தாத்தாக் கைப்பிடித்து நடக்கையில் அவரது வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தடுமாறினாலும், ஒரு நாளும் "மெதுவாப் போ" தாத்தா என்று கூக்குரல் எழுப்பாதவள். எப்படியாவது ஒரு நாளாவது தன் தாத்தாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து நடந்துவிட வேண்டும் என்று அவள் மனம் முழுக்க ஆசைகளை ஆர்த்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருப்பாள். அந்த நேரத்தில் எதுப் பற்றியும் கவலைப் படாமல் வேகமாக நடக்கும் தன் தாத்தாவின் முகம் பார்த்து தன் நேரிழையை சரி செய்துக் கொண்டு மீண்டும் வேகமாக நடக்க முயர்ச்சிப்பாள்.

அவள் எப்போதும் தன் தாத்தாவின் எல்லா குறைகளையும் நிறையாகவே பார்த்து பழக்கப்பட்டவள். கன்னங்கள் ஒட்டிப் போய், ஜீவனற்று கிடக்கும் அந்த முகம், துருத்திக் கொண்டிருக்கும் அந்த பற்கள், மதர்த்து எழும் அந்த வயிறு என தாத்தாவின் அந்திமக் கால அழகு அவளுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு இரவும், தன் தாத்தா சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே அந்த கதையின் உலகத்திற்குள் சென்று உறங்கி விட்டாலும், மறுநாள் அவளுக்கு வேறொரு கதை தேவைப்படும். பேய்க் கதைகளை சொல்லும்போது இருளின் குரூரத்தில் தாத்தாவின் ஒற்றைப் பல் கொடுக்கும் பயம் அவளை இருண்மையின் அகலாத பக்கங்களுக்கு கொண்டு சென்றாலும், ஆற்றவொண்ணா வலியை ஏற்படுத்தினாலும், அவளுக்கு மீண்டும் அதைவிட குரூரமான பேய்க் கதை தேவைப்படும்.

"அண்ட சராசரமே அடங்கி நிற்க... மரம், பறவை, எல்லாம் ஒடுங்கிப் போக... டக்...டக்..டக்.. நு ஒரு சத்தம்..அப்படியே ஒரு பெரிய அமைதி... உஸ்... உஸ்ஸ்.. காத்து மெதுவா அடிக்க ஆரம்பிக்குது.. திடீர்னு கதவு மூடுது. சன்னலெல்லாம் அடிச்சி அடிச்சி சாத்துது. மறுபடியும் அப்படியே ஒரு பெரிய அமைதி.. அஞ்சு நிமிஷம் எதுவும் ஆடாம அசையாம நிக்குது. அடுத்த நொடியில பேய் உள்ள வந்து.. வந்து.. என்று தாத்தா தன் நீண்ட விரல்களை யாழினியிடம் கொண்டு செல்வதற்குள் அவள் பயத்தில் அலற மறுநாள் காய்ச்சலே வந்துவிடும். அதற்கு தாத்தா வேறொரு கதை சொல்லி காய்ச்சலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வித்தையையும் கற்று வைத்திருந்தார். மலைமேல் அமைந்துள்ள குடிசையில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர தாத்தாவுக்கு ஒரு பெரிய வேலை உண்டு. ஒவ்வொரு முறையும் கடிதம் வரும்போது தாத்தா யாழிணியைக் கூட்டிக் கொண்டே மலை முகட்டில் இறங்கி தினையூர் கிராமத்து கணக்கு வாத்தியார் சிவதாணுப் பிள்ளையிடம் சென்று பணம் வாங்கி வருவார். அடுத்த ஒரு மாதத்திற்கு அதுதான் அவர்களுக்கு உணவளிக்கும் காருண்யம்.

கிளிங்...கிளிங்..மணியோசை சப்தத்தோடு 'போஸ்ட்'... என்று கூறிக் கொண்டே தாத்தா வருமுன்னரே தூக்கி எறிந்துவிட்டு அனாயசமாக பறந்து சென்றுவிட்டார் போஸ்ட்மேன். வயதான காலத்தில் தட்டு தடுமாறி ஓடி வருவதற்குள் அவர் முகத்தில் பட்டு கீழே விழுந்த காகித பட்சிகள் அவரை ஏளனம் செய்வது போல் சிரித்து நின்றன.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன. ஒவ்வொரு முறையும் தபால்காரர் தூக்கி எறிவதும், தாத்தா பொருக்கி எடுப்பதுமாக இருப்பதை யாழினி தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு வேலை போஸ்ட்மேன் மாமாவுக்கும், தாத்தாவுக்கும் ஏதோ சண்டையாக இருக்குமோ என்று அவள் மனதுக்கு சமாதானம் சொன்னாலும், அந்த சின்ன அறிவு சனாதானமாய் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தாத்தா தினையூர் நோக்கி புறப்பட்டார். பேத்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவர் நடக்கும் அழகே தனி. இறங்கி செல்லும் சாலைகளில் பேத்தி சறுக்கி விழுந்துவிடுவாலோ என்று தன உள்ளங்கைக்குள் அவள் விரல்களைப் பதித்துக் கொண்டு முகட்டில் அவர் இறங்கி செல்வதை மற்றவர்கள் எப்போதும் கேலிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

"பாரு கிழவன் பேத்திய மாட்ட இழுத்துப் போரதுப் போல் இழுத்துட்டுப் போறான்"

அன்று தினையூர் நோக்கி செல்கையில் தான் யாழினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். எப்போதும் அவள் வீட்டில் கடிதத்தை தூக்கி எரிந்து விட்டு செல்லும் போஸ்ட்மேன், கோந்து மாமா (எப்போதும், யாரிடம் பேசினாலும் கோந்து போல் ஒட்டிக் கொண்டிவிடுவதால் கிராமத்தில் அவருக்கு அந்த பெயர், ஊரில்) வீட்டில் மட்டும் வண்டியை விட்டு இறங்கி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு போவத்தைப் பார்த்தாள். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லையென்றாலும், மீண்டும் ஒரு முறை தாத்தாவின் கை இடுக்கையில் இருந்து திரும்ப முடியாமல் மெதுவாக திரும்பி பார்த்தாள். மெதுவாய்.. மெதுவாய்.. இன்னும் மெதுவாய்..கால்கள் தட்டுதடுமாறி முன்னோக்கி சென்றன.

மறுநாள் குப்பைகளில் இருந்து நிறைய காகித அட்டைகளை அவள் பொருக்கி எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்த தாத்தா "ஏ ஆத்தா என்ன பண்ற அங்க.. அங்கன எல்லாம் போகக் கூடாது வா இங்கன" என்றார்.

தாத்தாவின் அழைப்பை நிராகரித்தவளாய் மீண்டும் அட்டைகளை தேடிக் கொண்டிருந்தாள். முக்குக்கு சென்று கோந்து மாமா வீட்டில் இருந்த அஞ்சல் பெட்டியை ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தாள். மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து அட்டைகளை பல்வேறு அளவுகளில், வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டாள். பிஞ்சுக் கைகளில் கத்தரிக் கூட பிடிக்க இயலாமல் காய்கறி வெட்டும் கத்தியில் அட்டைகளை கத்தரித்தாள். ஒரே ஒரு அட்டையில் துளையிடும்போது கையில் கத்திப் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. ஆனால் அதனை பெரிய விடயமாக பாவிக்காத அவள் காரியமே கண்ணாய் இருந்தாள். வெட்டிய அட்டைகளை ஒவ்வொன்றாக இணைக்க பசை தேவைப்பட்டது. ஆனால் பசை வாங்க தாத்தாவை காசு கேட்டால் திட்டுவார் என்று அவளாகவே யூகித்துக் கொண்டு, சோற்றுப் பருக்கைகள் கொண்டு அட்டைகளை ஒட்டினாள். இருந்தாலும் அவை சரியாக ஒட்டிக் கொள்ளவில்லை. பூவில் வந்தமரும் பட்டாம்பூச்சி தேனெடுக்க பல்வேறு கோணங்களில் அமர்ந்துப் பார்த்தப் பின்னர் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து அமருவது போல் அட்டைகளை ஒட்ட பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியாக வெள்ளைத்தாள்களை இணைப்பானாக பயன்படுத்தினாள்.

அவை, அட்டைகளை ஒரு வழியாக இணைத்தது. இன்னும் அவள் நினைத்த வடிவத்தில் அந்த அட்டைகள் அமரவில்லை. அதற்கு இன்னும் அட்டைகள் தேவைப்படவே, தனது பள்ளிக்கூட நோட்டிலிருந்து சில அட்டைகளை கிழித்து பயன்படுத்தினாள். பேத்தி விளையாடக் கூட செல்லாமல் ஏதோ அட்டைகளை வைத்து செய்வதை பார்த்த தாத்தா முதலில் வையத்தான் செய்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அது ஒரு வடிவத்திற்கு வருவதைப் பார்த்ததும், அமைதியானார். அன்று அவள் நினைத்த உருவத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். உண்ண வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளையும் சேர்த்து இதற்காக பயன்படுத்தினாள். இப்போது பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே ஒரு சின்ன புன்னகை மட்டுமே பூத்திருந்தது. ஒற்றைப் பல்லை துருத்திக் கொண்டு தாத்தா சிரிக்க, வெட்கப் பட்டுக் கீழே குனிந்துக் கொண்டு பேத்தி சிரிக்க மீட்டப்படாத வீணை ஒன்று மீட்டப்பட்டது போல் ஒரு உணர்வில் தத்தா கொக்கரித்தார்.

இப்போது மீண்டும் முக்கில் இருக்கும் கோந்து மாமா வீட்டிற்கு சென்று அஞ்சல் பெட்டியைப் பார்த்து வந்தாள். அவளுக்கு இப்போது தேவை சிகப்பு வண்ண தாள்கள். அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தாத்தா தானாகவே கடைக்கு சென்று சிகப்பு வண்ணத் தாள்களை வாங்கிக் கொண்டு வந்து பேத்தியின் அருகே வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து சிரித்தார். அவளுக்கு சிரிக்க நேரம் இல்லை போலும், தாத்தாவை மேற்கொண்டு பார்க்காமல் வேலையைத் தொடங்கினாள். மிக நேர்த்தியாக கோந்து மாமா வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு அஞ்சல் பெட்டியை அவளும் செய்து விட்டாள்.

ஆனால் அதை இப்போது எங்கே வைப்பது என்று யோசித்தால். நாயக்கர் மாமா வீட்டில் இருப்பது போன்ற அகன்ற கதவு இல்லை. அவளுக்கு தெரியவில்லை, முதலில் அவர்களுக்கு இருப்பது போன்ற வீடே நமக்கு இல்லை என்று. ஆனால் அவளுக்கு கதவு இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. இப்போது அந்த அஞ்சல் பெட்டியை எங்கே தொங்கவிடுவது?.. வாசலருகே பதின்பருவ பெண் போல் வளர்ந்திருந்த வேப்பம் மரத்தில் ஒரு ஆணி அடித்து அதில் தொங்கவிட்டாள். அது போஸ்ட்மேன் மாமா வண்டி ஓட்டிட்டு வர ரோட்டுக்கு மிக அருகாமையிலேயே இருந்தது அவளுக்கு மகிழ்ச்சி.
கரு தரித்த பெண் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருப்பது போல் போஸ்ட்மேன் மாமா எப்போது வருவார் என்ற ஆவலுடன் யாழினி காத்திருந்தாள்.

அன்று காலை, வாசலின், வேப்பமரத்து நிழலில் தன் தோழிகளுடன் பாண்டியாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். ஒற்றைக் காலில் மீனுக்காக தவமிருக்கும் கொக்கு போல் மிக லாவகமாக பாண்டியாட்டத்தில் ஒற்றைக் காலில் அவள் ஆடும் அழகை வச்சக் கண் வாங்காமல் தாத்தா மட்டுமின்றி அந்த கிராமமே பார்த்து லயிக்கும். கைகளால் பாவாடையை முழங்கால் வரைத் தூக்கிக் கொண்டு, கழுத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு, சிறிய கல்லை இடது காலின் பெருவிரலில் பொருத்திக் கொண்டு, கல் கீழே விழாமல் அடுத்தப் பகுதிக்கு அவள் சென்று முடிக்கும் வரை பார்ப்பவர்களுக்கு நெஞ்சு பட படவென்று இருக்கும். பாருக்கும் எல்லோரையும் வயது வித்தியாசமின்றி தனது ஆட்ட நேர்த்தியால், உள்ளே இழுத்து சொக்க வைக்கும் பெருந்திராணி பெற்றவள் அவள்.

அவள் ஆட்டம் முடிந்ததும், போஸ்ட் மேன் மாமா தூர வருவதை பார்த்துவிட்டாள். பேத்தியாட்டம் முடிந்ததும், தாத்தா உள்ளே சென்றுவிட்டார். எல்லா சப்தங்களும், நின்றுப் போய், எல்லா அசை பொருட்களும் அசைவற்றுப் போய் ஒட்டுமொத்தமாக போஸ்ட் மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்தவாறே இருந்தது. அவள் போஸ்ட் மேனை பார்க்காமல் திரும்பிக் கொண்டிருந்தாள். போஸ்ட்மேன் அவளைத் தாண்டியதும், மெதுவாய் தலைத் திருப்பிப் பார்த்தால். போஸ்ட்மேன் வேப்ப மரத்தினருகே வந்துவிட்டார். டக்.டக்.. ட..ட..என்று இதயத் துடிப்பும் மிக மெதுவானது.... விழிகளோ இமை இருப்பதையே மறந்துப் போனது.

இந்த முறை அவள் வீட்டிற்கு கடிதம் வரவில்லை.. போஸ்ட்மேன் வேகமாக சென்றுவிட்டார். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, ச்ச... என்று வாயை சுழித்திக் கொண்டாள். உள்ளே ஓடிப் போய் "ஏன் தாத்தா இந்த மாசம் நமக்கு கடிதாசி வரல" என்றாள். எனக்கு எப்படிமா தெரியும். நாளைக்கு வருமோ என்னவோ? அதெல்லாம் வந்தா ஆச்சி.. இல்லனா ஒன்னும் பண்ண முடியாது மா",

"அப்போ நாம இந்த மாசம் தினையூர் போக மாட்டோமா", என்றாள்.

இந்த வாரம் முழுக்க கடிதாசி வரலானா, அடுத்த வாரம் நேர்ல போய் பார்க்கலாம் மா"

ஆசை ஆசையாய் செய்த அஞ்சல் பெட்டிக்கு என்றாவது ஒரு நாள் போஸ்ட்மேன் மாமா கடிதாசி கொண்டுவார் என்று அவள் காத்திருந்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு கடிதாசி வரவில்லை. போஸ்ட் மேன் அவ்வழியே செல்லும்போதெல்லாம் ஓடி வந்து அவர் கடிதாசியை அஞ்சல் பெட்டியில் போடுவாரா, என்று பார்த்து, ஏமாந்து முகத்தை கீழே புதைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுவாள்.

அந்த அஞ்சல் பெட்டி செய்ய அவள் செலுத்திய உழைப்பைக் காட்டிலும், அதனை தனது தாத்தாவுக்கான பெரிய அடையாளமாக அவள் கருதினாள். இனி தாத்தாவும் ஓடோடி சென்று கடிதாசி வாங்க வேண்டாம். போஸ்ட் மேன் மாமாவும் கடிதாசியை தூக்கிப் போடா வேண்டாம். கடிதாசியும் ஒரு போதும் ஈரத்தில் விழாது என்றும் அவள் மனதுக்குள் மத்தாப்பூ பூத்து, நொடிக்குள் அடங்கி போனது போல் ஆனது. என்றாவது கடிதாசி வருமென்று அவள் காத்திருந்தாள்.

ஒரு மழைக்காலத்தில் அட்டையாலான அஞ்சல் பெட்டி முழுக்க நைந்துப் போனது. பல மாதங்களாய் கடிதாசியும் வரவில்லை. இனி அஞ்சல் பெட்டி எதற்கு என்று அவளும் அதை அப்படியே தூக்கி எரிந்து விட்டு குடிசைக்குள் செல்கையில்.. "பெரியவரே போஸ்ட்" என்று கடிதாசியை வீட்டுக்குள் தூக்கி போட்டுவிட்டு போஸ்ட்மேன் சென்றுவிட்டார். மழையின் ஈரத்தை உள்வாங்கி இருந்த தரையில் பட்ட கடுதாசியில் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. தாத்தா ஓடி வந்தார்.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன.

யாழினியின் கண்கள் குப்பையில் தூக்கி எறியப்பட்ட அட்டையாலான அஞ்சல் பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தது. உதடுகளை சுழித்துக் கொண்டு மீண்டும்
தன் நோட்டுப் புத்தகங்களை எடுக்க விரைந்தாள். நாளை மற்றுமொரு நாளே..

3 comments:

 1. //மழையின் ஈரத்தை உள்வாங்கி இருந்த தரையில் பட்ட கடுதாசியில் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. தாத்தா ஓடி வந்தார்.//


  kathai arumai.vaalththukkal

  ReplyDelete
 2. நன்றாக இருந்தது.
  சென்ற கதையில் "கற்களை எண்ணி காலடி வைத்து வருவது" போல இதிலும் ஒரு நுட்பமான ஒரு அகவெளிப்பாடு ...
  //தாத்தா தானாகவே கடைக்கு சென்று சிகப்பு வண்ணத் தாள்களை வாங்கிக் கொண்டு வந்து பேத்தியின் அருகே வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து சிரித்தார்//.
  மற்றபடி
  //மனம் முழுக்க ஆசைகளை ஆர்த்துக் கொண்டாலும்//
  //காகித பட்சிகள்//
  //பூவில் வந்தமரும் பட்டாம்பூச்சி தேனெடுக்க பல்வேறு கோணங்களில் அமர்ந்துப் பார்த்தப் பின்னர் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து அமருவது போல் //
  //அவளுக்கு தெரியவில்லை, முதலில் அவர்களுக்கு இருப்பது போன்ற வீடே நமக்கு இல்லை என்று.//
  //வாசலருகே பதின்பருவ பெண் போல் வளர்ந்திருந்த வேப்பம் மரத்தில்//
  என்று சொற்களை லாவகமாக கையாளுகிறீர்கள்
  யதேச்சையாக நேற்று நல்ல சிறுகதைக்கான அடையாளங்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன்.கிட்டத்தட்ட அனேக அடையாளங்கள் உங்கள் கதையில் தென்படுவது குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete