இடதுபக்க வாய் ஒரு ஓரமாய் இழுத்துக்கொண்டும், எப்போதும் தாடைகளை அசைத்துக் கொண்டும், கீழுதட்டில் ஒழுகும் எச்சில் நீரை கவனிக்காமல் எல்லோரிடமும் எப்போதும் சிரித்துப் பேசும் ஏகலைவன் சந்துரு. நமது பாஷையில் சொன்னால் பைத்தியக்காரன். கொஞ்சம் படித்தவர்கள் எனும் போர்வையில் இருப்பவர்கள் பாஷையில் மனநிலை பாதிக்கப்பட்டவன். "யார் விட்டா சாபமோ, அந்தக் குடும்பத்தில இப்படி ஒரு புள்ள வந்துப் பொறந்து தொலைச்சிருக்கான்" என்று சம்மந்தமே இல்லாமல் அண்டை வீட்டார் பலர் இப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஏதோ சத்தில்லாத ஒரு விந்தணு அல்லது நோய் வாய்ப்பட்ட நிலையில் ஏற்பட்ட உடலுறவில் பிறந்திருக்கலாம், அல்லது சொந்தத்தில் திருமணம் செய்ததால், மரபு வழியாக இப்படி நேர்ந்திருக்கலாம் என்று ஏதோ ஒரு காரணம் சொல்ல வேண்டுமே என்று மருத்துவர்களும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இதெல்லாம் பாழாய்ப் போன அந்தத் தாய் உள்ளத்திற்கு எங்கேத் தெரியப்போகிறது. மற்றப் பிள்ளைப் போல் இவன் இல்லையே என்கிற ஏக்கமும், நரம்பில்லா நாக்கில் நாயனம் வாசிக்கும் சுற்ற சமூகத்தாரின் பேச்சும் மட்டுமே அவளை தினமும் வாட்டி வதைத்தன. இருபத்திரண்டு வயதில் இன்னமும் குண்டியை மறைக்கும் சுரணை உணர்வு கூட இல்லாமல், எல்லோர் மீதும் எச்சிலை பன்னீராய்த் தெளித்துக் கொண்டும் வீதி சிறுவர்கள் சிண்டு முடிந்து விளையாடும் விளையாட்டுப் பொருளாய் தன் மகன் ஆகிவிட்டானே என்று அவள் தினமும் வருந்துவதை தவிர வேறென்ன செய்து விட முடியும்.
சந்திரன் சந்துருவுக்கு இளையவன். பார்ப்பதற்கு அந்த சந்திரன் போன்றே பால் முகமாய் இருப்பவன். எதிரிகள் கூட அவன் அழகில் கொஞ்சம் அடிபட்டுத்தான் போவார்கள். ஆனால் தன் அண்ணன் நிலை பற்றி அவனுக்கு இருக்கும் வருத்தத்தை விட இவன் தனக்கு அண்ணனாக பிறந்து விட்டானே என்கிற கோபம்தான் அதிகம். சுற்றி இருக்கும் அண்டை வீடும், புண்டை மவன்களும் சேர்ந்து உன் அண்ணன் ஒரு பைத்தியம், குண்டிக்காட்டி என்று ஏகத்துக்கும் வசனம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகர்களாக இருப்பதால் சந்திரன் முகத்தில் எப்போதும் ஏதோ ஒருவித நெருடலும், சோகமும் கலந்தே இருக்கும்.
இப்படிதான் ஒரு சமயம் எதிர் வீட்டு பாலுவின் சித்தப்பா மகன், சந்த்ருவுடன் விளையாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அவன் புட்டத்தில் கண், காது, மூக்கெல்லாம் வரைந்து எதிரியை சுடுவது போல் தீபாவளி துப்பாக்கியால் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தான். பாலுவின் சித்தப்பா குடும்பம் சென்னை நகரில் செட்டிலாகி சிறு தொழில் தொடங்கி, இன்று சென்னையின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.. இயல்பாகவே பாலுவின் சித்தப்பா மகனுக்கு இதுப் போன்ற வர்க்க திமிர் அதிகம். அதுவும் சந்துரு போன்ற அப்பாவிகளிடம் அவன் சேட்டைகள் அளவுக் கடந்து போகும்.
அவனது இந்த விளையாட்டை தூரத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்த சந்திரன் கவனித்துவிட்டான். விடுக்கென்று ஓடோடி வந்து பாலு அண்ணனின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான். வேண்டாம்.. வேண்டாம் என்பது போல் சந்துரு கையைக் காட்டிக் கொண்டே சிரித்தான்..விழவும் செய்யாமல், அப்படியே நிற்கவும் செய்யாமல் இடையில் ஏதோ பாவ்லா செய்த பாலுவின் அண்ணன், பின்னர் சுதாரித்து சந்திரன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டு "ங்கோத்தா... சூத்தக் காட்டிக்கிட்டு திரிஞ்சா என்ன பம்பரம் விட்டா விளையாடுவாங்க.. இப்படிதான் சுட்டு விளையாடுவாங்க.. என்று முடிக்குமுன்னர் அவனது கைத்தடிகள் எதற்கு வம்பென்று கொஞ்சம் சிரித்து வைத்தனர். முன்னொரு முறை இவன் யாரோ ஒருவரை கலாய்த்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்த யாரும் சிரிக்காததால் வாங்கிய அறையை இன்னும் அவர்கள் மறக்கவில்லை. அடிபொடிகள் சிரிப்பதை பார்த்த சந்துரு சந்திராவின் கன்னத்தை தடவி விட்டுக் கொண்டே விசுக்கு விசுக்கு என்று அவனும் சிரித்தான். தன்னை ஏதோ ஒரு நாதாரி நாய் அடித்துவிட்டதே என்கிற கவலையை விட இந்த லூசுப் பயன், தம்பி அடி வாங்கினதுக்கு சிரிக்கிறானே என்று அவனுக்கு கோபம் பீறிட்டது.
ஆட்கொண்ட கோபத்தை அடக்க முனையாமல் ஓங்கி ஒரு அறை விட்டான் சந்திரன். பாலுவின் அண்ணனை அல்ல.. அவனுடைய அண்ணனை..
அடிபட்ட கன்னத்தை அவனே தடவிக்கொண்டு மீண்டும் விசுக்கு விசுக்கு என்று சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பின் ஆழமறியாத சந்துரு வீடு நோக்கி விரைந்தான். மீண்டும் பாலுவின் அண்ணனுடன் விளையாட ஆயத்தமானான் சந்துரு. மீண்டும் அதே புட்டம், அதே கண், காது, மூக்கு..விளையாட்டு ஆரம்பம்.
பாலுவின் அண்ணன், அடிபொடிகள் எல்லாம் புட்டத்தில் சுட்டு மகிழ்ந்து காரணமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா ஹீரோயின் போல...
ஏசுநாதர் போல இப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தான் சந்துரு.
பாலுவின் அண்ணன் தான் இப்படி...அப்ப பாலு எப்படி?
அதப்பத்தி உங்களுக்கு என்ன அக்கறை? அவன் ஜட்டிப் போட்டாப் போடுறான்.. இல்லனாப் போறான்.. அதுக்காக ஏன் அவன அந்த இடத்தில் சுட்டு விளையாடினீங்க.. ஏன் நா அவனப் போய் இப்படி பண்ணீங்க.. பாருங்க.. சந்திரன் என்கிட்டே பேசாம போய்ட்டான்.. என்று தன் சித்தப்பா மகன்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு அவனிடமிருந்து மறு வார்த்தையை எதிர்பார்க்காமல் நேராக சந்திரனின் வீட்டுக்கு போய் அவனை சமாதானப்படுத்தினான்.
ங்கப் பாரு.. போய்க்கிட்டே இரு.. உங்க அண்ணன் மேல கொல வெறியில இருக்கேன்.. பெரிய புடுங்கியாடா அவன்.. மெட்ராஸ் ல பெரிய இவன் நா.. அத அங்கப் போய் வெச்சிக்க சொல்லு..இங்க வந்து ஆட்டினா அறுத்து கிழக்கால போட்டுடுவேன்..போய் சொல்லு..பேசிக்கொண்டிருக்கும்போதே விடுக்கென நடக்கலானான். ஆமாம்.. ஆமாம்.. சொன்னாங்க.. கன்னத்தில வாங்கின அறையப் பார்த்தாதான் தெரியுதே.. என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே..
டேய் சந்திரா.. அதுக்கு நான் என்னடாப் பண்ணுவேன்.. நீ வேணும்னா போய் அவன ரெண்டு அடிச்சிக்கோ.. நான் எதுவும் கேட்க மாட்டேன்..என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..
எப்போதும் அவர்கள் ஊரில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு தாள்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்துக் கொண்டே வந்தனர். இதனைக் கண்ட இருவரும் சண்டையை மறந்து என்னென்ன விளையாட்டுக்கள் இருக்கின்றன என்று பட்டியலை நோட்டமிட்டனர். பல விளையாட்டுக்கள் இருந்தன. ஏதோ எல்லா விளையாட்டிலும் கலந்துக் கொள்வது போல் பல மணி நேரம் பேசி பின்னர் எப்போதும் போல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். இப்படி பலமுறை இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டாலும், நட்பில் இவர்கள் நரகாசுரன் அண்ட் தீபாவளிப் போல.. பிரிவது போல் இருக்கும்.. ஆனால் பிரிய மாட்டார்கள்..
கடந்துப் போன மூன்று வருசமும் ரெண்டு பேருமே பஸ்ட் தான் வந்தாங்க..அதனால இந்த முறை ரெண்டு பெரும் ரொம்பவே மெனக்கெட்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. இந்த ஆண்டு புது முயற்சியா மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் அறிவிப்பு தாளில் இருந்தது.. அதைப் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சனிக்கிழமை ஆங்காங்கே சிறு சிறு தூரல்களாய் மழை தூறிக் கொண்டே இருந்தது.. எல்லா விளையாட்டுகளும் நடந்துக் கொண்டே இருந்தன. இறுதியாக ஓட்டப் பந்தயம்.
எல்லைக்கோட்டுக்கு அந்தப் புறம் ஏதோ போர் வீரர்கள் போல அனைவரும் அணிவகுத்து இருந்தனர். ஒரு ஒழுங்கு முறை ஏதுமின்றி சிலர் வலதுகாலை தரையில் படுக்கப்போட்டுக் கொண்டும், சிலர் இடது காலை தரையில் படுக்கப்போட்டுக் கொண்டும், ஒரு சிலர் இரண்டு கைகளுக்குப் பதிலாக ஒரு கையை தரையில் வைத்துக்கொண்டு ஓரப்பார்வையில் குமாரிகளை திருமதிகளாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டி நடுவர் ஒவ்வொருவராக சரிசெய்துக் கொண்டே வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் விசிலடித்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். அவர்களை மறித்து மீண்டும் வரிசையில் உட்கார வைப்பதற்குள் நடுவருக்கு படு திண்டாட்டமாய் போய்விட்டது.. டேய் எவன்டா அவன், நாங்க என்ன மசிருக்கு இங்க நின்னுக் கிடக்கோம்.. வக்காளி தைரியம் இருந்த விசிலடிச்சவன் நேர்ல வாடா பாப்போம்.. என எகிறிக் கொண்டிருந்தார். விசிலடிச்சவன் வந்தக் காரியம் முடிந்ததால் எப்போதே இங்கிருந்துக் கிளம்பி விட்டான். நடுவர் அங்கிருந்த பிக்காளிப் பயல்களைஎல்லாம் டேய் நீதானா அது.. என்று வருத்திக் கொண்டிருந்தார்.
ஏய்.., பொறம்போக்கு.. இப்ப விசிலடிக்கிரியா இல்லையாடா.. ங்கோத்தா கல்லுத் தரையில உக்காந்து உக்காந்து டவ்சர் கிழியுது.. இவன் இப்பதான் விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கான். போட்டிக்கு வந்த எவனோ ஒருத்தன் தரையைப் பாத்துக்கிட்டு பிட்டக் கொளுத்திப்போட நடுவர் ஏகத்துக்கும் கடுப்பானார். சந்திரன் திரும்பிப் பார்த்தான்.. அவனுக்கு நான்கு பேர் தள்ளி, பாலுவோட அண்ணன் கால்களைத் தடவிக்கொண்டிருந்தான்.
நடுவர் இப்போது விசிலடிக்க தயாரானார். விசிலெடுத்து வாயில் வைத்ததும், நாலைந்து பேர் ஓடத் தொடங்கினர்..
டேய்.. தே பயல்வளா.. ஏண்டா படுத்துறீங்க.... என்று சொல்லி முடிக்குமுன்னர் கூட்டத்திலிருந்து வந்த ஒரு கல் அவர் மீது படுவோமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே சற்றுத் தள்ளி விழுந்தது.. என்னடி மாப்ள.. யார தேப் பசங்க னு சொல்றீரு.. அடி வயித்துல அசராம அடிப்போமிடி.. என்று எவனோ ஒருத்தன் சொல்லிக்கொண்டே நகர்ந்து சென்றான்.
செய்வதறியாமல் திகைத்த நடுவர்.. வக்காளி. தாயோழி பசங்க. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே விசிலடிக்க ஆயத்தமானார்..
கண்ணை மூடிக் கொண்டு எல்லாக் கோபத்தையும் கொட்டித் தீர்ப்பது போல் ஒரு நிமிடம் விசிலடித்து முடித்தார்..கண்ணை திறந்துப் பார்த்தால் யாரும் ஓடவே இல்லை..யோவ் விசிலடிச்சு தொலையா.. என்று மீண்டும் குரல் எழுந்தது.. அவர் மீது படாமல் நகர்ந்து சென்ற கல் விசில் மேல் கொண்ட காதலால் அதை மட்டும் தன்னுடன் இட்டு சென்றது.. இதறியாமல் நடுவர் விசிலடித்துக் கொண்டிருந்தார்.. பின்னர் ஒரு வழியாக விசிலை எடுத்து மண்ணை ஊதி புறந்தள்ளி விசிலடித்தார்.
ஓட்டப்பந்தயம் சூடுப்பிடித்தது.. சிலர் மூச்சு வாங்கி ஆங்காங்கே நின்றுக் கொண்டனர். பாலு, சித்தப்பா பயன், சந்திரன் என எட்டு பேர் மட்டும் தொடர்ந்து ஓடினர். பாலு தெரியாமல் சந்திரனின் காலை மிதித்து விட கடுப்பான சந்திரன் அவனை ஒருத் தள்ளு தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினான். டேய்.. நாயே. என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடிய பாலு ஒரு கிக்கடித்து அவனை கீழேத் தள்ளிவிட்டான்.. ஓட்டப்பந்தயம் நடப்பதை மறந்து இருவரும் அடித்துக் கொண்டனர். இங்கே இருவருக்கும் சண்டை நடந்துக் கொண்டிருக்கும்போதே அங்கே பலத்த கைத்தட்டல்கள் கேட்டன. இருவரும் திரும்பிப் பார்த்தால் பாலுவின் சித்தப்பாவின் பையன் முதலாவதாக வந்திருந்தான்.. பாலுவின் முகத்தைப் பார்க்காமல் சந்திரன் அலுத்துக் கொண்டே திரும்பி வந்தான். முதல் முறையாக தான் தோற்றதை எண்ணி அவன் மனம் பிறழ்ந்து அழுகையை அடக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதான்.
டேய் இங்கப் பார்ரா..குண்டிக்காட்டி ஒடப்போரானாம்.. என ஆளாளுக்கு ஏதோப் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு அழுகையை நிறுத்தி திரும்பிப் பார்த்தான் சந்துரு. மனநிலை சரியில்லாதவர்களின் ஓட்டப்பந்தயம் தொடங்கவிருந்தது. சந்துருவை எல்லோரும் கேலிப் பேசிக்கொண்டே இருந்தாலும் அவன் சிரிப்பு மாறவில்லை. மற்ற மனநிலை சரியில்லாதவர்கள் அனைவரும் காப்பகத்தில் இருந்து வந்ததால் அவர்களை யாரும் கிண்டல் செய்யவில்லை.
கோட்டுக்கு அந்தப் புறம் அனைவரும் ஓர் ஒழுங்கில் இடதுக் காலை தரையில் படுக்க வைத்துக் கொண்டு, இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக் கொண்டு போட்டிக்கு தயாராயினர். சந்துரு வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்க அவன் தனது சிரிப்பை தொடர்ந்தான். அருகில் இருந்தவன் ஏதோதோ பேசிக்கொண்டே இருந்தான்..இன்னொருவன்.. உற்ர்ரர்ர்ர்.. உறர்ர்ர்ரர்ர்ர்ர்..... என உறுமிக் கொண்டிருந்தான். சிறிய தலையில் பெரிய கண்கள், பெரிய மூக்கு, என பார்ப்பதற்கே வித்தியாசமாய் இருந்தான். கடைசியில் உட்கார்ந்து இருந்தவன் வயிறு பெருத்து, இடது கை பெருவிரலை மூக்கில் வைத்துக் கொண்டு அடிக்கடி கூட்டத்தையும், நடுவரையும் திரும்பிப் பார்த்தான்.
விசில் சத்தம் பறந்தது..
ஒவ்வொருவரும் ஒரு விதமாய் ஓடத்தொடங்கினர்.. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடினான்.. ஒருவன் முன் பக்கமாய் ஓடுவதற்கு பதில் பின் பக்கமாய் ஓடினான்.. இன்னொருவன் உட்கார்ந்த இடத்தில் அப்படியே உட்கார்ந்து இருந்தான். இன்னொருவன் இரண்டு கைகளை ஊனிக்கொண்டு நான்கு கால்களால் ஓடினான். உறர்ர்ர்ர் உற்ர்ர்ரர்ர்ர்ர் என்றிருந்தவன், கூட்டத்தின் இடையில் புகுந்து ஒவ்வொருவன் கையையும் இழுத்து உறர்ர்ர்ரர்ர்ர்ர் உற்ர்ர்ரர்ர்ர்ர் என்றான்.. இன்னொருவன் மல்லாக்கப் படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். பின்னல் ஓடியவன் ஏதோ எல்லாம் புரிந்தவன் மீண்டும் முன்னோக்கி வந்து மல்லாக்கப் படுத்திருந்தவன் முகத்தில் ஒரு குத்து குத்திவிட்டு மீண்டும் மிக சரியாக பின்னோக்கி ஓடினான்.
நடுவர் போட்டி ஏற்பாட்டாளர்களின் முகத்தை திரும்பிப் பார்த்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் கண்களை மேலுயர்த்தி, முன் பக்கம் முகத்தை அசைத்து புருவத்தை உயர்த்தினர்.. நடுவர் முகத்தில் புன்னகை ஒளி வீசியது.. ஐந்து பேர் மட்டும் சரியாக ஓடிக் கொண்டிருந்தனர்.
சிறிது தூரத்தில், கால் பிசகி ஒருவன் கீழே விழுந்து ஆஅ...ஆஅ..... என்று முனங்கிக் கொண்டிருந்தான். மற்ற நான்கு பேரும் மேற்கொண்டு ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தனர். சந்துரு மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து அவன் கால்களை உற்று நோக்கினான் அவன் சிரிப்பு மாறாமல்.. உடனே கீழே விழுந்தவனும் சிரித்து வைத்தான். கீழே விழுந்தவனை ஒரு கையைப் பிடித்து தரையிலேயே சர்ர்.... என்று இழுத்துக் கொண்டு ஓடினான் சந்துரு.. அவன் வழிப் பொறுக்காமல் அலறவே..நின்று தனது இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு ஓடிவந்தான். கூட்டம் ஒரு நிமிடம் மயான அமைதியில் உறைந்துப் போனது. நடுவர் அருகே வந்து அவனை இறக்கி விட்டு திரும்பி நடந்தான். தோள்களை குலுக்கிக் கொண்டு, ஹ..ஹ..ஹ..என சிரித்துக் கொண்டே, தாங்கி தாங்கி நடந்து தலையை கீழேத் தொங்கப் போட்டுக்கொண்டு தாயை நோக்கி விரைந்தான்.
தூரத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் ஓட்டப் பந்தயத்தில் ஓடியதை விட மிக விரைவாக ஓடி வந்து சந்துருவை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்தான். இப்போதும் சந்துரு சிரிப்பு மாறாமல் சந்திரனின் காதுகளை வருடிக் கொண்டே வந்தான்..ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாய் மாறும் கூட்டுப் புழு மாற்றம் எங்கோ ஒரு இடத்தில் நடந்துக் கொண்டிருந்தது.