Monday, September 16, 2013

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html

நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி வெள்ளித் திரை நூலில் இருந்து ஒரு கட்டுரை, லெனின் விருது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சென்ற மாத தொடர்ச்சி, தமிழ் ஸ்டுடியோவின் 57வது குறும்பட வட்டம் பற்றிய பதிவு, செவ்வகம் இதழில் வெளிவந்த கோவா திரைப்பட திருவிழா பற்றிய கார்த்தியின் கட்டுரை, மலையாள மௌனப்படமான மார்த்தாண்ட வர்மா பற்றிய குறிப்புகள் என இந்த மாதம் அருமையான கட்டுரைகளுடன் பேசாமொழி வெளிவந்திருக்கிறது.

பேசாமொழி இணையத்தில் வெளியாகும் மாதம் இதழ். இந்த இதழை இணையத்தில் இலவசமாக படிக்கலாம்.

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html

Wednesday, July 17, 2013

முகனூலில் நான் எழுதும் கட்டுரைகளின் இணைப்பு.

முகனூலில் (Facebook) தொடர்ந்து நான் எழுதி வரும் சினிமா தொடர்பான எனது கட்டுரைகளை நண்பர் உகேந்திரன் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். கீழ்க்காணும் இந்த தளத்தில் நண்பர்கள் என்னுடைய சினிமா தொடர்பான கட்டுரையை படிக்கலாம்.

http://thamizhstudioarunfbpostsarchive.wordpress.com/

பேசாமொழி 8வது இதழ் வெளிவந்துவிட்டது.

பேசாமொழி 8வது இதழ் வெளிவந்துவிட்டது.



பேசாமொழி 8வது இதழ்: http://pesaamoli.com/index_content_8.html

நண்பர்களே பேசாமொழி 8வது இதழ் வெளியாகியுள்ளது. பேசாமொழி முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது. தமிழில் நல்ல சினிமாவுக்கான மாத இணைய இதழ் பேசாமொழி. இந்த இதழில், மணிவண்ணன் பற்றி மருதுவின் நினைவுகள், யமுனா ராஜேந்திரனின் விஸ்வரூப விமர்சன விமர்சனங்கள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் மொழியாக்கம், செழியனின் பேசும்படம் குறித்த தினேஷின் திறனாய்வு, ஜெயச்சந்திர ஹஸ்மியின் ராமையாவின் குடிசை ஆவணப்படம் பற்றிய கட்டுரை, ஆவணப்பட இயக்குனர் அமுதனின் நேர்காணல், நல்ல சினிமா எது என்பது குறித்த தியடோர் பாஸ்கரனின் உரை, பந்தய புரவிகள் படம் குறித்த வருணன் விமர்சனம், ரிஷானின் சிங்களப் படம் குறித்த கட்டுரை, பிச்சைக்காரனின் கன்னடப் பட விமர்சனம், தமிழ் ஸ்டுடியோவின் 55 வது குறும்பட வட்டத்தில் நிகழ்ந்தவை என முழுக்கு முழுக்க நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவே இருக்கிறது.

அவசியம் படியுங்கள்: http://pesaamoli.com/index_content_8.html

பேசாமொழி முழுக்க முழுக்க இணையத்தில் (internet) இலவசமாக படிக்க கிடைக்கிறது.

Monday, May 27, 2013

பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....


பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....
நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 

படிக்க: http://pesaamoli.com/index_content_6.html

படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம்.

மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.

Wednesday, May 22, 2013

பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....

நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

படிக்க: http://pesaamoli.com/index_content_6.html

படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம்.

மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.


Monday, April 22, 2013

பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது....

பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது....



நண்பர்களே மாற்று சினிமாவுக்கான மாத, இணைய இதழான பேசாமொழி ஏப்ரல் மாத இதழ் (இணையத்தில்) வெளிவந்துள்ளது. மிக முக்கியமான பல கட்டுரைகளை அடங்கியுள்ளது. நண்பர்கள் அனைவரும் அவசியம் படித்துவிட்டு தங்கள் கருத்தை பகிரவும். 





Friday, April 12, 2013

வலி - சிறுகதை



"இப்ப எனக்கு வேண்டாம்"...

"அதான் ஏன் னு கேக்குறேன் ப்ரியா"..

"எல்லாத்துக்கும் காரணம் கேட்காத கார்த்திக்", இப்ப எனக்கு வேண்டாம் நா வேண்டாம்..விட்டுடேன்"..

உதடுகள் இரண்டும் இடதுபக்கம் மேலேறி துடிக்க, வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டு நகர்ந்தான், கார்த்திக்.

வலதுபக்கம் ஒருக்களித்து, வலது கையை தலைக்கு அணையாக வைத்து, கால்கள் இரண்டையும் நெஞ்சான்கூட்டிற்கு அருகில் மடக்கிவைத்து படுக்கையின் ஒருமூலையில் ஒதுங்கிக் கிடந்தான்.

அவன் படுத்துக் கிடப்பது, குழந்தை கருவாக, கருப்பையில் ஒடுங்கி இருப்பது போல இருந்தது அவளுக்கு.

அவனருகில் வந்து, தலையை கோதி பின்னந்தலையில் முத்தமிட்டு, படுக்கையின் இன்னொரு மூலையில் அமர்ந்துக் கொண்டாள்.

நேற்றைய இரவு, இன்று போல் அவளுக்கு இல்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாக வாழ்வின் பின்னிரவு ரகசியங்களை கடந்து பொழுது விடிவது கூட தெரியாமல் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்த உதடுகள், உறங்காத விழிகள் இரவின் உஸ்ணத்தில் கூட சிவக்காமல் கதை பேசிய அந்த இரவு, இன்று அவளுக்கு மிச்சம் விட்டு சென்றிருப்பது அழுகையை மட்டுமே.

பெண்களின் அழுகைக்கு மட்டும் எப்போதும் சில விசேஷ குணங்கள் உண்டு. அழுவது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து அவர்கள் அழுவது போல் இருந்தாலும், அழுகையின் அந்த மெல்லிய சப்தம், எந்த ஆணையும் உறங்கவிடாது.

"ப்ரியா, எதுக்கு இப்ப அழுதுக்கிட்டு இருக்க", அரைத்தூக்கத்தில் தட்டுத் தடுமாறி அவர்களுக்கு இடையேயான தூரத்தை கடக்கிறது, அவனது வார்த்தைகள்.

மெல்லிய அந்த சப்தத்தத்தை நிறுத்திவிட்டு, பட்டும்படாமல் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இடதுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

கண்களை அகலவிரித்து, மூச்சை முழுவதுமாக உள்ளே இழுத்து, அடுத்து நொடியில் வெளியேற்றினான். மூச்சு வெளி ஏறுவதற்குள், அவர்களுக்கிடையேயான தூரத்தைக் கடந்திருந்தான் கார்த்திக்.

"ப்ரியா... ப்ரியா".... அடுத்த முறை நிறுத்தி அழுத்தம் கொடுத்தான், 'ப்ரியா',

வலது கையை மட்டுமே லேசாக அசைத்தாள். திரும்ப மாட்டேன், நீ பேசு, அதை கேட்கிறேன் என்பதாக இருந்தது அவளது அந்த அசைவு.

"இதென்ன ப்ரியா, சின்ன புள்ள மாதிரி, கல்யாணம் ஆனா எல்லாருக்கும் நடக்கிறதுதானே, நாம என்னவோ பெரிய தப்பு பண்ணிட்டா மாதிரி"...

அவன் முடிப்பதற்குள், எழுந்து தன் கால்களை மடக்கி, தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

"இங்க பார் ப்ரியா, வேனுங்க்ரதுக்கு நான் ஆயிரம் காரணம் சொல்லிட்டேன், உனக்கு ஏன் வேண்டாம்  னு ஒரு காரணம் சொல்லு, அப்புறம் நாம் அத பத்தி டிஸ்கஸ் பண்ணலாம், இல்ல நா ஒழுங்கா வாய மூடிட்டு படு"..

அவன் மடிக்குள் தலை புதைத்து, உடைந்து அழுதாள் ப்ரியா.

"ப்ளீஸ், என்ன புரிஞ்சிக்கோ கார்த்திக்..எனக்கு இப்ப வேண்டாம்",

அக்ஷயா அக்க டெலிவரி அப்ப நான் கூடவே இருந்தேன்.... அவங்களோட அந்த வலி, இன்னமும் என் கண்ணுல இருக்குது கார்த்திக், வலி தாங்காம பல்லக் கடிச்சி, பல்லும் உடைந்து, ரத்த ரத்தமா, வலியால உயிர் போற அளவுக்கு துடிச்சதும், கதறி அழுததும், என்னால இன்னமும் மறக்க முடியல கார்த்திக், கடைசியா அவங்க செத்துப் போய்ட்டாங்க தெரியுமா?

"அடச்சீ, லூசு, நான் கூட ஏதோ பெரிய பிரச்சனை னு நினைச்சு பயந்துப் போயிட்டேன், இவ்ளோதானா?, இந்த உலகத்துல அக்ஷய அக்கா மட்டும்தான் புள்ளப் பெத்துக்கிட்டாங்களா?, போன வாரம்தான, என்னோட ப்ரெண்ட் ரவிக்கு குழந்த பொறந்தாச்சி.. நீயும், நானும் போய் பாத்துட்டுதான வந்தோம்", இந்த உலகத்துல, நிமிசத்துக்கு லட்சக்கணக்கான பெண்களுக்கு குழந்த பொறந்துக்கிட்டே தான் இருக்கு, அவங்க எல்லாம் என்ன உன்ன மாதிரி பயந்துக்கிட்டா இருக்காங்க... அக்ஷய அக்கா லட்சத்துல ஒன்னு, லட்சம் பேர்ல ஒருத்தவங்களுக்குதான் அப்படியெல்லாம் நடக்கும்",

"நான் அந்த லட்சத்துல ஒருத்தியா இருந்தா", அவன் முடிப்பதற்குள் அவள் இடைமறித்தாள்..

"ப்ரியா..., உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல, எனக்கு குழந்த வேணும்..அவ்ளோதான். நாளைக்கி டாக்டர்கிட்ட செக்-அப் க்கு போறோம்",

படுக்கையின் அதே இடத்துக்கு மீண்டும் அவன் தாவினான். அவள் அவன் மீது வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் . பெரிய கல்லில் சிக்குண்ட சின்ன எறும்பின் தலைபோல், அவள் மனம் வதைப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த சமூகத்தில் பிள்ளை பெறாத ஆண் மகனுக்கு இருக்கும் இடம் அத்தகைய சுவாரசியமானது அல்ல, அது அறுவறுக்கத்தக்க ஒரு இடம். இந்த உலகில் ஆண்களை அவமானப்படுத்த, அவனை நிர்கதியாக்க எல்லாருக்கும் ஒற்றை சொல் போதும், அது, "நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா".

அந்த ஒற்றை சொல் எங்கே தன்னை நோக்கி திரும்பிவிடுமோ என்கிற பதற்றமும், இப்போது கலைத்துவிட்டால், மீண்டும் அவளுக்கு கருத்தரிக்குமோ, இல்லையோ என்கிற கேள்வியும் சேர்ந்து கார்த்திக்கின் மனதுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

கல்யாணமாகி ஏற்கனவே ஒரு வருடம் கடந்துவிட்டது....

"அப்புறம், ஏதாவது நல்ல சேதி உண்டா", என்கிற கேள்வியே சென்ற வாரம் வரை அவனை சுற்றி சுழன்றடித்துக் கொண்டிருந்தது. இன்னும் இல்லை என்று சொல்லும் அந்த கணத்தில், அடுத்த முனையில், எழும் கேள்விகளை விட, அவர்களின் மனதில் எழும் கேள்விகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற நினைப்புதான் அதுவரை அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

சென்ற வாரம்தான், அத்தகைய கேள்விகளில் இருந்து விடுபட்டு, ஒரு சுதந்திரப் பறவையாக, அவன் தன்னை உணரத் தொடங்கினான். ஆனால் இப்போது ப்ரியாவின் இந்த பிடிவாதம், அவனுக்குள் ஏற்படுத்தியிருக்கும் பதற்றத்தை, அவள் பயத்தில் இருக்கும் நியாயத்தை அவன் உணர்ந்துக் கொள்ளவோ, அதுப் பற்றி விவாதிக்கவோ தயாராக இல்லை.

கல்யாணம் ஆன புது மனத் தம்பதிகளை நோக்கி சமூக அங்கங்களில் இருந்து எழும் கேள்விகள் மிக மொன்னையானவை. அது நெஞ்சை குத்து குத்தி கிழிப்பதற்குள், உயிரை விட்டு விடலாம் போலிருக்கும். கூர்மையான கேள்விகளாக இருந்தால் கூட, அது செலுத்தப்பட்ட அடுத்த கணத்தில் நெஞ்சை கிழித்து, உயிரை பிரித்து நமக்கு சுதந்திரம் கொடுக்கும். ஆனால் இந்த மொன்னையான கேள்விகள், வாழ்நாள் முழுக்க, ஒவ்வொரு கணமும் நமது நெஞ்சைக் கிழித்துக் கொண்டே இருக்கும். அந்த ரணம் ஒருநாளும் ஆறாது.

ஆனால் பெண்கள் எப்போதும், தங்களுக்கு விருப்பமானவைகளை தெரிவு செய்ய கடைசி வரை போராட நினைக்கிறார்கள். தங்கள் அக உலகில் யாரையும் அனுமதிக்காமல், அதன் புனிதத்தை இறுதி வரை அவர்கள் அரண் போல் காத்து நிற்கிறார்கள். ஆனால் சமூகத்தில் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம், வசதி, சுந்ததிரம் எல்லாம் அந்த உறுதியான அரனை கூட சில நொடிகளில் அழித்து, பெண்களின் அக உலகில் நுழைந்து அவர்களை நிலைகுழைய செய்கிறார்கள்.

இப்போது கார்த்திக் செய்திருப்பதும் அதைதான். ப்ரியா தன்னுடைய அக உலகின் ரகசியங்களை, அழகை, புனிதத்தை சமூக விழுமியங்களுக்காக இழக்கப்போகிறாள். இழப்பதை காட்டிலும் கொடுமையானது, இழந்து விடுவோமோ என்கிற பயம். இப்போது அவள் முழுக்க முழுக்க பயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள்.

நான்குக்கு நான்கு என்கிற வரிசையில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் இரண்டாவது வரிசையின் முதல் ஆளாக கார்த்திக் உட்கார்ந்திருந்தான். மிஸ்டர் செந்தில், மிச்செஸ் ரேவதி என்று அவனுக்கு முந்தைய வரிசையில் காத்திருப்பவர்களை நர்ஸ் அழைத்துக் கொண்டிருக்கும்போது, அவன் உதடுகளை பிதுக்கி இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ப்ரியாவை பார்த்தான்.

அவள் வார்த்தைகள் அற்றவளாய், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் பேசுவதற்கு அவனுக்கும் ஒன்றுமில்லை, தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம், தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது பேசுவானா என்று ப்ரியா, அவனை அடிக்கடி திரும்பிப் பார்த்ததை அவன் மட்டுமல்ல, மருத்துவமனை கேமராவும் கூட கவனித்திருக்க முடியாது. அத்தனை மெல்லிய பார்வை அது.

"மிஸ்டர் கார்த்திக்"..,நர்சின் குரலுக்காகவே காத்திருந்தவன் போல் சட்டென நகர்ந்தான்.

"குட் மார்னிங் டாக்டர்",

"எஸ்.. கார்த்திக்",

"ஹவ் இஸ் லைப் கோயிங் ஆன்",

ஃபைன் டாக்டர், ஆனா ப்ரியா தான் எதை எதையோ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு, என்னையும் குழப்பிட்டிருக்கா,

என்ன ஆச்சு ப்ரியா,

இனி நான் பேச ஒன்றும் இல்லை, நீயே சொல், என்பது போல கார்த்திக்கை பார்த்தாள், ப்ரியா.

ஒன்னும் இல்ல டாக்டர், என்று அவளின் பயம் குறித்து பேசிக்கொண்டிருந்தான். டாக்டர் உமா, அவன் பேச்சின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற அவனுடைய குடும்ப / சமூக கேள்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ப்ரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் முடித்தான்.

நீங்க கொஞ்ச நேரம் வெளியில இருங்க, கார்த்திக்....நான் ப்ரியா கிட்ட பேசிக்கிறேன்..

நல்லா சொல்லுங்க டாக்டர், வெளியில் செல்லும் ஒரு நொடிக்குள் ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு சென்றான்.

"ப்ரியா, உன்னோட பயம் எனக்கு புரியுது", என்கிற ஒற்றை வார்த்தையில் அவள் தலை நிமிர்ந்து டாக்டரை பார்த்தாள்.

அவள் பயத்தின் மீது தெளிக்கப்பட்ட மாய வார்த்தை இது. என்னை புரிந்துக் கொள்ளவும் ஒரு ஜீவன் இருக்கிறது, என்கிற அகந்தையில் தோன்றிய வசீகரப் பார்வை அது.

"ஆனால் இந்த சமூகமும், ஆண்களும் ஒருநாளும் பெண்களின் வலியை புரிந்து கொள்ளவே மாட்டார்கள், உனக்கு வலித்தாலும், வலிக்க வில்லை என்று சொல்வதைத்தான் எல்லா ஆண்களும் விரும்புவார்கள். உன்னுடைய ஆற்றமையையோ, அழுகையையோ வெளிப்படுத்த இந்த உலகத்தில் உனக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை, ஆண்கள் எப்போது அதற்கான வெளியை உனக்கு உருவாக்கி கொடுக்கிறார்களோ, அப்போதுதான் நீ அழ வேண்டும்... உன் வலியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்"..... நிற்காமல் தொடர்ந்தது டாக்டரின் பேச்சு.

சார், என்று சிஸ்டர் முடிப்பதற்குள் கார்த்திக் உள்ளே நுழைந்துவிட்டான்.

"என்ன டாக்டர், எல்லாம் ஓகே வா?",

டாக்டர் ப்ரியாவை பார்த்தார், அவள் முகத்தில் பயத்தின் சுவடு கொஞ்சம் அகன்று இருந்தது. அது பயம் அழிக்கப்பட்டதின், அவளது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் வெளிப்பாடு அல்ல, இனி இதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற, இயலாமையின், திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு.

ரொம்ப தேங்க்ஸ், டாக்டர்....

கார்த்திக்கும், ப்ரியாவும் அந்த அறையில் இருந்து வெளியேறினார்கள்.

"கார்த்திக், ஒரு நிமிஷம்",

சொல்லுங்க டாக்டர் என்பது போல், திரும்பிப் பார்த்தான்.

"ப்ரியாவோட டெலிவரி அப்ப நீங்க, அவங்க கூட இருக்கணும்".

Sure, டாக்டர். அதுல என்ன இருக்கு?

கார்த்திக், கட்டைவிரலை தூக்கி நன்றி தெரிவித்தான். டாக்டர் அவனைப் பார்த்து சிரித்தார்.

அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, அந்த சிரிப்பின் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்று...

டாக்டர் உமாவைப் பார்த்து, இருகண்களையும், ஒரு நொடியின் பாதியில் மூடி திறந்து புன்னகைத்தார். அதுதான், நான் உயிர்த்திருப்பேன் என்கிற ப்ரியாவின் நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று.

ஆண்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகள், பெண்கள் என எல்லாருக்குமே, தங்கள் எண்ணம் நிறைவேறிய பின்னர், அதை அதுவரை மறுத்து, பின்னர் ஏற்றுக் கொண்டவர்கள் மீது அலாதியான காதல் உருவாகி விடும். காதலை எதிர்த்து, பின்னர் சரி என்று சொல்லும், எல்லா பெற்றோர்கள் மீதும், பிள்ளைகள் கடைசி வரை காதலோடுதான் இருப்பார்கள்.

பிரியா, மறுத்து பின் ஏற்றுக் கொண்டதால், அவள் மீதான கார்த்திக்கின் காதல் அமாவாசைக்கு பின்னர் தோன்றும் நிலா போல் வளர்ந்துக் கொண்டே போனது. தன்னுடைய ஆண்மைக்கான அடையாளம் தரப்போகிறவள், சமூக கேள்விக் கணைகளில் இருந்து தனக்கு விடுதலை தரப் போகிறவள், எல்லாத்தையும் தாண்டி, ஒரு உயிரை எனக்காக ஈன்று எடுக்கப்போகிறவள் என்கிற எண்ணங்கள் அவனை தினசரி வாழ்வைத் தாண்டி, ஒருவித மகோன்னத நிலைக்கு தள்ளிக் கொண்டே சென்றது.

குழந்தை அவள் வயிற்றுக்குள் வளர்ந்துக் கொண்டே இருந்தது. அவள் பயம் குழந்தையை விட வேகமாக வளர்ந்தது. ஆனால் இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை, தன் மரணம் இன்னொரு உயிரை கொடுக்கப்போகிறது என்கிற நம்பிக்கை மட்டுமே அவளுக்கு இப்போதைக்கு ஒரே ஆறுதல்.

இன்னும் பத்து நாளில் டெலிவரி ஆகிடும்...என்கிற டாக்டரின் வார்த்தை, அடுத்த நாளே, பொய்க்கப் போகிறது என்பதை டாக்டர் உட்பட யாருமே அறிந்திருக்கவில்லை.

அம்.................மாஆஆஆ என்று அலறித் துடித்தாள், ப்ரியா...

எத்தனையோ பேர், எத்தனையோ விதமான தங்களின் உடல் பிரச்சனைகளுக்கு அங்கே கூடி இருந்தாலும், அவர்கள் யாரும் கார்த்திக்கின் கண்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனை முழுவதிலும் அவன் மனைவிக்காக மட்டுமே எல்லாரும் உடனடியாக செயல்படவேண்டும் என்கிற அளவுக்கு அவன் பதறிக் கொண்டிருந்தான்.

அவள் அலறல் மருத்துவமனை எங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரசவ அறையில் இருந்த கார்த்திக், அவள் அலறல் சப்தம் தாங்காமல் வெளியேற முற்பட்டான்.

"கார்த்திக், எங்க போறீங்க.. உள்ளேயே இருங்க", லேசாக அதட்டினார் டாக்டர்,

"இல்ல டாக்டர், என்னால தாங்க முடியல, அதான்"....

நீங்க உள்ளதான் இருக்கணும், என்று உத்தரவிடுவது போல் இருந்தது டாக்டரின் பார்வை.

அவன் கால்கள் நகர்வதை நிறுத்தின. அவள் அலறல் அவன் இதயத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருந்தது.

பற்களை கடித்து, வயிற்றை கீழ் நோக்கி தள்ளி, முகத்தை திருப்பி, ஐயோ, அம்ம்ம்மாஆஆஆ.... என அவள் அலறிக் கொண்டிருந்தாள். டாக்டர் மட்டுமே அவளுக்கு ஏதோ தகவலை கொடுத்துக் கொண்டே இருந்தார். ப்ரியாவின் வலியில் அவளால் எதையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும், டாக்டரின் இருப்பு, அவளுக்கு எங்கேயோ நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தது.

"ப்ரியா, இன்னும் கொஞ்சம் அழுத்தி தள்ளுமா.... உன்னால முடியும்..."

"முடியல டாக்டர்.. தயவு செய்து ஏதாவது பண்ணுங்க.. எனக்கு உயிரே போயிடும் போலிருக்கு" தெளிவில்லாமல் இருந்து ப்ரியாவின் பேச்சு, இருந்தாலும் உயிரே போயிடும் போலிருக்கு என்கிற வார்த்தைகள் மட்டும் கார்த்திக்கின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவன் இதயம் வலுவிழக்க ஆரம்பித்தது,

"ஐயோ, டாக்டர் ப்ளீஸ், ஏதாவது பண்ணுங்க", ப்ளீஸ் டாக்டர்.. ப்ளீஸ் டாக்டர்.. அவள் அலறலைக் காட்டிலும் கார்த்திக்கின் அலறல் அதிகமானது.

அவனிடம் வார்த்தைகள் வற்றிப் போய், கண்கள் கண்ணீரால் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

ஆஅ....அம்ம்மா...ஐயோ.. டாக்டர்... என அலறிய அவள் உதடுகள், அடுத்தடுத்து தன் வலியைக் கூட வெளிப்படுத்த முடியாமல், சோர்ந்து போக தொடங்கியது.. பிரசவ அறை முழுவதும் வலி, வலி, வழியால் மட்டுமே நிறைந்திருந்தது.

அவன் ஏதோ பெரும்பாவம் செய்தது போல், திக்கற்று நின்றுக் கொண்டிருந்தான்.

"வேண்டாம் கார்த்திக்", எனக்கு பயமா இருக்கு", என்று அவள் எப்போதோ சொன்ன வார்த்தைகள், அவன் மனம் முழுக்க இடைவெளியில்லாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவள் கேட்டுக்கொண்டபடி, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டிருக்கலாமோ என்று மனம் இன்னொரு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. "இந்த சமூகம் என்ன பெரிய இதுவா?", என்னோட ப்ரியாவுக்கு ஏதாவது ஆச்சுனா, திரும்ப இந்த சமூகம் அவள எனக்கு திருப்பிக் கொடுக்குமா?", என்கிற கேள்விகளையும் தாண்டி, அவன் கண்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

அழுத்திப் பிடித்துக் கொடிருந்த நர்ஸ்களின் கைகளை மீறி, அவள் உடல் திமிறிக் கொண்டிருந்தது.

"கொலைகாரப் பாவி", உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்", அப்பவே வேண்டாம் னு சொன்னேன் ல, என்று கேட்பது போல், அந்த அலறலும், திமிறலும் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. அவளின் இந்த பார்வைக்கு, சமூகத்தின் அந்த மொண்ணை கேள்விகளையே ஏற்றுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது அவனுக்கு.

எத்தனை அன்பான மனைவி இவள், ஒருநாளும் அவள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்கு அவள் மட்டுமே போதும், கடவுளே, என் மனைவியை எப்படியாவது எனக்கு திருப்பிக் கொடு" என்று அவன் உள்ளம் முழுவதும், ஏதோ ஒரு நம்பிக்கையை நோக்கி கையேந்திக் கொண்டிருந்தது.

வலி...வலி...வலி.. அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்த, நர்ஸ்களின் முகமும், மாறிக் கொண்டே இருந்தது. அவர்களின் கண்கள் டாக்டரை நோக்கி திரும்பியது. இப்போதும், டாக்டர் அவளுக்கான தகவல்களை கொடுத்தக் கொண்டே குழந்தை வெளியே தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

எல்லா வலிமையான பிடிகளையும் மீறி, அவள் உடல் திமிறிக் கொண்டிருந்தது. தூக்கி தூக்கி அடித்தது, அவளின் சரீரம்.

முதல் முறையாக டாக்டரின் முகத்தில், ஒருவித பதற்றத்தை பார்த்தான், கார்த்திக்.

சின்ன பிள்ளை போல், உதடுகளை துருத்தி, முகத்தை இறுக்கி, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆ  என அழத் தொடங்கினான்...

ஆஆஆஆஅ..... ஐயோ, டாக்டர் என ஒப்பாரி வைப்பது போல், தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தான்.

ஐயோ, ஐயோ, நின்று Sustain செய்து, அழுவதற்கு கூட திராணியற்றவனாக குறுகிப் போய் ஒடிந்துப் போனான்.

கார்த்திக்... கார்த்திக்... டாக்டரின் எந்த வார்த்தைகளையும் கவனிக்காதவனாய் அழுதுக் கொண்டே இருந்தான்.

கார்.....திக்..... உறுதியான குரலில், அதட்டல் தொனியில் அழைத்தார் டாக்டர்..

Keep Quite...Control yourself... கண்களை சிமிட்டி, சில நொடிகள் அவனையே உற்றுப் பார்த்தார். அவன் சுயத்திற்கு திரும்பியது போல் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

ஆனாலும், அவனின் அழுகை சன்னமாக கேட்டுக் கொண்டே இருந்தது.

"நர்ஸ்.. நல்லா அழுத்திப் பிடிங்க", டாக்டரின் அடுத்த அதட்டல் நர்சை நோக்கி பாய்ந்தது. நர்ஸ்கள் அவளை இறுக அணைத்து, பிடி தளராமல் அவளை பற்றிக் கொண்டார்கள்.

"கம் ஆன்", ப்ரியா இன்னும் கொஞ்சம்தான்.. டாக்டர் மட்டுமே நம்பிக்கையோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ப்ரியாவின் அலறல் அவனை துரத்திக் கொண்டே இருந்தது... இரண்டு மார்புக்கு மத்தியில், நெருஞ்சி முள்ளை வைத்து அழுத்தி, கத்தியால் கீறுவது போல் இருந்தது, அவனுக்கு.

தூமை என்கிற வார்த்தையை அதுவரை கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை பார்க்கும் வாய்ப்பை என்று பெற்றிருந்தான், அதுதான் தூமை என்று அறியாமலேயே...

டாக்டர் கை முழுக்க ரத்தம்....

"ப்ரியா...ப்ரியா... மயக்க நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்று அவளை நிகழ்கால சூழலில் வைத்திருக்க டாக்டர் தொடர்ந்து அவளை அதட்டும் தொனியில் கத்திக் கொண்டே இருந்தார்.

இழுத்துப் பிடித்து, அடுத்த நொடியில், அலறிய அவளின் சப்தம், மருத்துவமனை தாண்டி, உலகம் முழுக்கவே எதிரொலித்திருக்கும் போல் இருந்தது....

அந்த அலறல் கொடுத்த அதிர்வில், பித்துப் பிடித்தவன் போல், ஒ' வென கதை கதறி அழ ஆரம்பித்தான். ஐயோ, ப்ரியா, ப்ரியா.... ஐயோ...ஐயோ... அவன் அழுகை, ஓயாது.. அது ஓயவே ஓயாது...

சுயமிழந்து பைத்தியக்காரன் போல், நின்ற இடத்திலேயே சுற்றி சுற்றி கதறிக் கொண்டிருந்தான்.

ஆஆஆஆஆஆஅ.......ப்ரியாவின் இறுதிக் கட்ட அலறில், ஒடிந்து விழுந்தான் கார்த்திக்...

கதறல், கதறல், கதறல்... இயலாமை, இயலாமை என அந்த அறை முழுவதையும் அவன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

ஒ' வென மருத்துவமனையே அதிரும் அளவிற்கு தொடர்ந்த அழுகையும், ஓலமும் ஓயாமல் தொடர்ந்தது.

துடித்தான்... துடித்தான்..துடி துடித்துப் போனான். அழுதான்..அழுதான்..அழுதுக் கொண்டே இருந்தான்.

ப்ரியாவின் அலறல் சப்தம் ஓய்ந்து சில நிமிடங்கள் இருக்கும். ஆனால் இன்னமும் அவன் அலறல் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

டாக்டர் கையில், தூமை கழித்து, அழகான குழந்தை ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தது. மயக்கமும் இல்லாமல், தெளிவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ப்ரியா, கார்த்திக்கை பார்த்தாள். தெளிவற்ற உருவம் ஒன்று கதறிக் கொண்டிருந்தது.

டாக்டர் லேசாக புன்னகைத்தார். குழந்தை முழுவதுமாக வெளியே வந்திருந்தது.

ப்ரியா... இங்க பார்... என்பது போல், குழந்தையைக் காட்டி, மெலிதாக புன்னகைத்தார் டாக்டர்.

ப்ரியா தன் குழந்தையை பார்த்து வலியின் கதகதப்பு ஓய்ந்துவிட்ட பெருமிதத்தில் லேசாக சிரித்தாள் ப்ரியா.

டாக்டர் இப்போது கார்த்திகைப் பார்த்து, எதுவும் பேசாமல், ஆனால் அவனைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்.

இப்போது குழந்தையின் கீச்...அழுகை அறை முழுவதிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

குழந்தையின் ஊடாக கார்த்திக்கைப் பார்த்தாள் ப்ரியா...

இன்னமும் அவன் கண்களில் தெரிந்தது அவளின் வலி...