Thursday, April 4, 2013

எதிர்வினை! - சிறுகதை



சித்ரா.....

தலையை துவட்டிக் கொண்டிருந்தவள், அப்படியே ஈரத்துணியில் அள்ளி சூடிக் கொண்டு ஓடினாள்.

காலையில் சீக்கிரம் டிபன் ரெடி பண்ண சொல்லி இருக்கேன் ல..

அவன் சொல்லி முடிப்பதற்குள், ஒவ்வொரு இட்லியாக அவன் தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள் சித்ரா.

போதும்...போதும்.. நான்கு இட்லியோடு நிறுத்திக் கொண்டான்.

அவன் இட்லியை லாவகமாக, விண்டு விண்டு உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தான். மூன்று இட்லி காலியானது.

லேசாக வலதுபக்கம் சாய்ந்து, இடது புட்டத்தை கொஞ்சமாக மேல் நோக்கி தள்ளினான்.

அவள் உடனே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவது போல் பாவனை செய்து ஓடினாள்.

கீச்ச்ச்ச்...என்கிற சப்தம், அப்படியும் அவள் காதுகளை எட்டியது. காலியான வயிறு என்பதால், வாயு கொஞ்சமாக வெளியேறியது போல, என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் ஏதும் அறியாதது போல், கோப்பையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நகர்ந்தாள்.

சித்ரா, நாளைக்கு உங்கம்மா வீட்டுக்கு போகணும் ல..

ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

அந்த ஒரு பவுண் மோதிரத்த போடத்தான் கூப்பிட்டு இருப்பாங்க னு நினைக்கிறேன். காலையில ரெடியா இரு போயிட்டு வந்துரலாம்.

போ..நீ போய்,  சீக்கிரம் சாப்பிட்டு விடு.. என்று சொல்லிக் கொண்டே, அலுவலகத்துக்கு தயாராக உள்ளே  சென்றான்.

இரண்டு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டாள். நடுவிரலையும், கட்டைவிரலையும் எடுத்து, இட்லியை லேசாக விண்டு, அதன் நுனி மட்டும் சட்னியில் படுமாறு நனைத்து உள்ளே தள்ளினாள்.

சரி..போயிட்டு வரேன்... சொல்லிக்கொண்டே அவளை தாண்டி சென்றான்.

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்கிற சப்தம் கீழே தரையை இரண்டாக பிளக்கும்படி கேட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவன் சென்றுவிட்டான்.

குப்பை கிடங்கை கிளறிவிட்டது போல், நாற்றம் அவள் மூக்கை துளைத்தது. இரண்டு இட்லியை கூட முழுவதுமாக உண்ணாமல், அப்படியே கையைக் கழுவிக் கொண்டு எழுந்தாள். அவனுடன் கல்யாணமாகி இந்த இரண்டு வாரத்தில், ஒரு நாள் கூட முழுமையாக அவள் தன்னுடைய உணவை எடுத்துக் கொண்டதில்லை. அவனோடு உட்கார்ந்தாலும், அவன் சாப்பிட்டுவிட்டு சென்றாலும், அவள் சாப்பிடும்போது அந்த நாற்றத்தோடுதான் உறவாட வேண்டி இருக்கிறது.

அடுத்த நாள் காலை,

வாங்க மாப்ள, சாரதா........ என்று மனைவியை அழைத்தார், சித்ராவின் தந்தை, சித்ராவின் அம்மா வந்து இருவரையும் வரவேற்றாள்.

வாங்க மாப்ள, சவுக்கியமா? சிரிப்பையே அதற்கான பதிலாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சித்ரா, அம்மாவோடு உள்ளே சென்றுவிட்டாள்.

வழக்கமான அம்மாபோலவே, கணவனுடனான இல்லற வாழ்க்கை பற்றி அக்கறையாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளும் வழக்கமான மகள் போலவே, சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

காப்பி போட்டு அப்பாவுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு, அம்மாவோடு கொஞ்சம் தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

சித்ராவின் அப்பா பேசிக் கொண்டிருக்கும்போது, அவளது கணவன் இடதுபக்கமாக சாய்ந்தான்.

புஷ்ஷ்ஷ்ஷ்...பெருவெள்ளத்தை அடிக்கி வைத்து, சின்ன துளை வழியாக வெளியே விட்டால், எப்படி பீச்சிக்கொண்டு அடிக்குமோ, அப்படி வெளியேறியது அவனது பெருங்குடல் வாயு..

காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது, நாற்றம் குடலைப் பிடுங்கி எடுத்தது, சித்ராவின் தந்தைக்கு. ஆனால் எப்படி அதை வெளியேக் காட்டுவது என்று தெரியாமல், வெளிக்காட்டினால் மாப்பிள்ளை தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காததுபோல் பேசிக் கொண்டிருந்தார் சித்ராவின் அப்பா. சித்ராவும், அவளது அம்மாவும், அடுப்படியில் ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து அவசர அவசரமாக நகர்ந்து சென்றனர்.

என்னதான் சமாளித்தாலும், சித்ராவின் அப்பாவால், நாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, கையை மூக்கின் மேல் வைத்து, மூக்கை தடவிக்கொடுத்தும், இரு விரல்களால் மூக்கு துவாரங்களை மூடி மூடி திறந்தும், நாற்றத்தை விரட்டிக் கொண்டே இருந்தார். அசட்டு சிரிப்பும், நமுட்டுக் கோபமும், மாறி மாறி அவர் முகத்தில் எதிரொலித்தது. கண்களை உருட்டி, முகத்தை சுருக்கி, விரித்து நவரச பாவங்களையும் காட்டிக் கொண்டிருந்தார்.

நகைச்சுவையை தூண்டும் எந்தவித உரையாடல்களும் அங்கே நடக்காதபோதும், ஆஅ..ஹா.. ஆஆ.. ஹா. என விழுந்து சிரித்துப் பேசினார் சித்ராவின் அப்பா. அப்போதாவது நாற்றம் குறையாதா என்கிற நப்பாசையில்..

ஆனால் சித்ராவின் கணவன் ஒன்றுமே நடக்காதது போல, கொஞ்சமாக மூச்சை மட்டுமே துரத்திவிட்டு, தொடர்ந்து காப்பியை பருகிக் கொண்டிருந்தான். இந்த நாற்றமெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை. எப்போதும் ஒன்றை உருவாக்குபவனுக்கு அதன் மூலம் பெரிய ஆபத்து வந்துவிடாது என்கிற புராண சித்தாந்தங்களை அவன் நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தான்.

ஏன் மாமனார், கொஞ்சம் அசாதாரணமாக நடந்துக் கொள்கிறார், ஏன் மனைவியும், மாமியாரும் அவசர அவசரமாக உள்ளே சென்றார்கள் என்கிற எந்த கேள்விகளும் அவனுக்குள் எழாதது போல, அவன் தொடர்ந்து காப்பியின் இறுதி சொட்டு வரை பருகிக் கொண்டிருந்தான்.

உவ்வே....உவ்வே.. குடலே வெளியில் வந்து விழுந்தது போல, யாரோ வாந்தி எடுக்கும் குரல் கேட்டு, சித்ராவின் அப்பா சமையல் அரை நோக்கி ஓடினார். என்னம்மா என்ன ஆச்சு? பொண்ணு, மாசமா இருக்காளா? என்று உள்ளே எட்டிப் பார்த்தார். அவரது மனைவி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். என்ன ஆச்சு சாரதா?

கடு கடு என ஒற்றைப் பார்வையை வீசிவிட்டு, மூக்கைப் பொத்திக்கொண்டு, நீங்க போய் அந்த குசுவினி மாப்பிளை கூட பேசிக்கிட்டு இருங்க.. நாங்க மதிய சாப்பாடு தயார் பண்றோம் என்று சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள். நான் அப்பவே சொன்னேன், இந்த குசுவினி மாப்ள வேண்டாம்  னு, கேட்டீங்களா நீங்க, என்று அவள் தொடர்ந்து முனகிக் கொண்டே இருந்தாள்.

தலையை குனிந்துக் கொண்டே சித்ராவின் அப்பா, மெதுவாக வெளியே செல்ல எத்தனித்தார். மெது மெதுவாக வெளியே செல்வதற்குள், லேசாக நிமிர்ந்து ஓரப் பார்வையில் தன் மகளைப் பார்த்தார். அவள் அப்பாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சித்ராவுக்கு பதினான்கு வயது.

அன்றுதான் அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா... என்னக்கா குசுவினிப் பொண்ணு வயசுக்கு வேற வந்துட்டாளா என்று அக்கம் பக்கத்துக்கு வீட்டுப் பெண்கள் விசாரித்துக் கொண்டே அவள் முகத்தில் சந்தனத்தை அப்பினார்கள். கோபமும், இயலாமையும் சாரதாவை ஒன்றும் பேசவிடாமல் செய்தது. இருந்தாலும், உதட்டில் சிரிப்போடு எல்லாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தாள்.

எல்லா களேபரங்களும் முடிந்து, வீடு கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் மூன்று பேருக்குமானது.

ஏங்க, உங்கப் பொண்ணுக்கு இன்னும் நாலைஞ்சு வருசத்துல கல்யாணம் பண்ணனும்..

அதுக்கு என்னடி இப்ப,

என்ன இப்படி கேக்குறீங்க, காலையில் இருந்து எனக்கு ஒரே அவமானமா போச்சு, வரவங்க, போறவங்களாம், குசுவினிப் பொன்னு, குசுவினிப் பொண்ணு னு அவள கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்படியே இருந்தா அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? எவன் கட்டிக்குவான்..

இதெல்லாம் ரொம்ப சாதரணமான விஷயம் சாரதா?

என்னங்க இப்படி சொல்றீங்க, இத இப்படியே விட்டா, நிச்சயம் அவளுக்கு கல்யாணம் ஆகாது?

சாரதாவின் கணவன், சித்ராவின் அப்பாவாக யோசிக்க ஆரம்பித்தான். யாரு இருக்கிறார்கள், என்ன இடம் என்கிற எந்தவித பிரக்ஞையும் இல்லாமல், சித்ரா உடலில் இருந்து கெட்ட வாயுவை வெளியேற்றுவதில் இருக்கும் சிக்கலை அவர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள விழைந்தார்.

சித்ரா அவர்களின் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே அப்படி செய்வதில்லை. எப்படி அடக்க நினைத்தாலும், அவளால் வாயு வெளியேற்றத்தை அடக்கவே முடியவில்லை. நான் என்ன வேண்டுமென்றா செய்கிறேன், என்கிற கழிவிரக்கமும், எதிர்கால பயமும்தான் அவளுக்கு தோன்றியதே தவிர, இந்த சமூகத்தில் குசு விடக் கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா என்கிற எண்ணம் எங்கேயும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

எல்லாருக்கும் தெரிந்த வைத்திய முறைகள் அவர்கள் வீட்டில் அமலுக்கு வந்தது. இனி உருளைக் கிழங்கு இல்லை, எல்லா உணவுகளிலும் கட்டாயம் பெருங்காயமும், இஞ்சியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற எல்லா முடிவுகளும், சித்ராவின் அனுமதி இல்லாமலே எடுக்கப்பட்டுவிட்டது.

அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத பெருங்காய வாசனையும், இஞ்சியின் காரமும் அவளது தினசரி உணவாக மாறியது. ஆனால் அவளுக்கு மிகப்பிடித்த உருளைக் கிழங்கும், பொறித்த உணவுப் பண்டங்களும் அவளுக்கு மறுக்கப்பட்டது.

இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தும், அவளிடம் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எப்போதும் போல் அவள் இயல்பு மாறாமலேயே இருந்தது. உருளைக் கிழங்கின் மீதான அவளின் பாசம் மட்டும் கூடிக் கொண்டே போனது. தொடர்ந்து மறுக்கப்படும் தன்னுடைய உரிமைகள் பற்றி பெரிதாக அவள் அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வாயுப் பிரச்சனை தனது வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்கிற அச்சம், அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

சாரதாவின் ஓயாத புலம்பலும், சித்ராவின் கட்டுக்கடங்காத வாயுப் பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. வேறு வழியில்லாமல் நல்ல டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்க சித்ராவின் அப்பா தயாரானார்.

இதெல்லாம் இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை, இங்க பாருமா ஒரு நாளைக்கு எத்தனை தடவை உனக்கு இந்த பிரச்சனை வருது?, சித்ராவிடம் கேட்டார் டாக்டர்.

ஒரு பத்து தடவை இருக்கும் சார்.. தந்தையிடம் இருந்து பதில் வந்தது.. நீங்க அமைதியா இருந்தா போதும் என்பது போல், டாக்டர் அவரை லேசாக மிரட்டும் தொனியில் பார்த்தார்.

ஒரு நாளைக்கு 10 முறை கூட உங்க உடலில் இருந்து வாயு பிரியலனா அதுதான் பிரச்சனையே தவிர, இது அல்ல. நீங்க நார்மலாதான் இருக்கீங்க.. என்று டாக்டர் சொல்லி முடிப்பதற்குள், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெரும் சப்தம் எழுந்தது.

டாக்டரின் முகத்தில் அஷ்ட கோணங்களும் தாண்டவமாடியது. முகத்தை சுளித்தார், மூக்கை சுருக்கி, எதையோ தேடினார்..மூச்சை மூக்கில் இருந்து உதறிக் கொண்டே இருந்தார்...

நர்ஸ்...என்று பிளிறினார்...

உள்ளே நர்ஸ் ஓடிவந்ததும், அய்யய்யோ,, என்று மீண்டும் வெளியே ஓடினாள்...

மீண்டும் பிளிறினார் டாக்டர்,

முகத்தில் பெரிய திரையுடன் உள்ளே வந்தார் நர்ஸ்.. எங்கம்மா அந்த ரூம் ஸ்ப்ரே..

என்ன ஆச்சு டாக்டர், இந்த நாத்தம் நாறுது, என்று நர்ஸ் கேட்டு முடிப்பதற்குள், மீண்டும் சித்ரா வலது பக்கம் லேசாக சாய்ந்தாள்...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக மாறியது...

நர்ஸ் மயக்கம் அடித்து கீழே விழுந்தார்.. நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் என்பது போல், சித்ரா நர்சை முறைத்துப் பார்த்தாள்...

சார் நீங்க இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வெறும் வயித்தோடு அவங்கள கூட்டிட்டு வாங்க, என்று சொல்லி இரவுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் முகத்தில் ஸ்ப்ரே அடித்து எழுப்பினார், டாக்டர்..

டாக்டர், அமுக்கி விட்ற குசுதானே நாறும் னு சொல்வாங்க, இந்த பொண்ணு இவ்ளோ சத்தமா விட்டும் எப்படி இந்த நாத்தம் நாறுது டாக்டர்...

கோப நரம்புகள் டாக்டரின் முகத்தில், பரவிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு பார்வைதான் அவளுக்கு பதிலாக கிடைத்தது.

ஒண்ணுமே நடக்காதது போல், நர்ஸ் சட்டென்று வெளியேறி சென்றாள்.

அன்றைய இரவு டாக்டரின் அறை முழுவதும், புத்தகங்களால் நிரம்பி இருந்தது. டாக்டர், ஹென்றி ஜே.ஜோசப்பின் "Solution for Our body gas" புத்தகத்தை புரட்டிக் கொண்டே  இருந்தார்.

மறுநாள் காலை, சித்ராவையும், அவளது தந்தையையும் கனிவோடு வரவேற்று, அமர சொன்னார்.

அவளது உணவுப் பழக்க வழக்கம், Antibiotics, ஏதாவது சாப்பிடுகிறாரா, இந்த பிரச்சனை எந்த வயதில் இருந்து இருக்கிறது, என்கிற எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

உன்னால இத அடக்க முடியலையா சித்ரா,

இல்ல டாக்டர், நானும் எவ்ளவோ ட்ரை பண்றேன், ஆனா, ரொம்ப அடக்க முயற்சி பண்ணா, மூளை நரம்புகள் வெடிக்கிறது மாதிரி, தலை வலிக்குது, என்னால அந்த வலியை தாங்கவே முடியல, நான் வேணும் னு செய்யறதே இல்ல டாக்டர்...

சித்ராவின் பதிலில், டாக்டர் இதை சரி செய்துவிடுவார் என்கிற நம்பிக்கையும், அவளது ஆற்றாமையும் சேர்ந்தே வெளிப்பட்டது.

நோயின் தன்மையை டாக்டர் புரிந்துக் கொண்ட நிம்மதி அவரது முகத்தில் வெளிப்பட்டது. என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், மாத்திரைகள் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்கிற முறைகளை விவரித்துக் கொண்டிருந்தார். சித்ராவின் தந்தை நம்பிக்கையோடு டாக்டருக்கு நன்றி சொன்னார்.

சித்ராவின் தோள்களை தட்டிக் கொடுத்து, கவலைப் படாதமா எல்லாம் சரியாயிடும் என்று சொல்வது போல் சிரித்தார். நன்றிப் புன்னகை செலுத்தி நகர்ந்தாள் சித்ரா.

தனது அத்தனை ஆசைகளையும் ஒதுக்கிவிட்டு, மிக கடுமையான உணவுப் பத்தியங்களோடு அவள் தன் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று அவளுக்கு திருமணம் நிச்சயிக்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள்.

எல்லா சடங்குகளும் முடிந்து, எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சாரதாவிற்கும், சித்ராவின் தந்தைக்கும், சித்ராவின் மீதே முழு கவனமும் நங்கூரம் போல நிலைக் கொண்டிருந்தது.

ஆனால் அவள் நம்பிக்கை பெருமிதத்தோடு, பெற்றோர்களை பார்த்து, கண்களை அசைத்து அவர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் கூட்டத்தில் திடீரென டர்ர்ர்ர்ர்ர். என்கிற சப்தம் எழுந்தது.

அத்தனை குளிர்ச்சியான அறையிலும் சித்ராவின் பெற்றோர்களுக்கு வியர்த்தது, அடிப்பாவி, என்பது போல், சாரதா அவளை பார்த்தாள், தந்தை தலை குனிந்து, நிலைகுலைந்து போய் நின்றார்.

ஆனால் எதுவும் நடக்காதது போல், மாப்பிள்ளை வீட்டார் சரி, சரி, கல்யாணத்தை இன்ன தேதியில் வச்சிக்கலாம் என்றனர்.

திக்கித்துப் போய், தலை நிமிர்ந்தார் சித்ராவின் தந்தை...

எல்லாம் முடிந்து, எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இறுதியாக மாப்பிள்ளை வீட்டார், சித்ராவிடம் போயிட்டு வரோம்மா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். சாரதாவும், அவள் கணவனும் மாப்பிள்ளை வீட்டார்களை வழியனுப்பி வைக்க சென்றார்கள். மாப்பிள்ளையின் அம்மா, அவனது காதில் ஓதிக் கொண்டிருந்தார்,

ஏண்டா, கொஞ்சம் நேரம் உன்னால அடக்கி வைக்க முடியாதா?

அன்று இரவு சித்ராவின் வீடு முழுக்க ஒரே சிரிப்பு சப்தம்.. ஐயோ,, ஐயோ,, நான் கூட கொஞ்சம் நேரத்துல பயந்து போயிட்டேன் மா.. சிரிப்பு சப்தமும், கும்மாளமும் தொடர்ந்தது.

அடப்பாவிகளா, ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், குடும்பமே ஏதோ இழவு விழுந்த வீடு போல் மாறுகிறது? அவள் கல்யாணம் குறித்து கவலை கொள்கிறது, ஆனால் ஆணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், அது குறித்து எவ்வித பிரச்சனையும் இன்றி, இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்களோ, என்று சித்ராவின் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு கேள்வி உதித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் சமையற்கட்டில்..

என்னங்க...

ஏன் இப்படியே நிக்கிறீங்க, மாப்பிள்ளை தப்பா நினைச்சுக்கப் போறார், போய் அவர்கிட்ட பேசிக்கிட்டு இருங்க... மகளைப் பார்த்துக் கொண்டிருந்த, தந்தை பெருமூச்சோடு நகர்ந்தார்.

சித்ரா முகத்தில் எவ்வித உணர்வுகளும் இன்றி, எந்த சலனமும் இன்றி அவள் தந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவருக்கு அந்த பார்வை ஈட்டியால் குத்துவது போல் இருந்தது, சட்டென்று பார்வையை விலக்கி வெளியே சென்றார்.

இரவு சித்ரா கணவனோடு வீட்டில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் மனதுக்குள் எப்போதும் இந்த கேள்வியை கேட்டுவிடலாம் என்கிற எண்ணம் எழுந்துக் கொண்டே இருந்தாலும்,

அந்த மாதிரி ஒருநாளும் பண்ணிடாதமா என்கிற அம்மாவின் குரல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால் அவள் மனதுக்குள் கேள்விகள், எதிர்கேள்விகள் இரண்டும் மாறி, மாறி எழுந்துக் கொண்டே இருந்தது.

இதை எப்படி ஒரு பிரச்சனையாக சொல்ல முடியும்?

அதெப்படி, இதே பிரச்சனை எனக்கிருந்தபோது, என் குடும்பம் என்ன பாடுபட்டது? இழவு வீடு போலல்லவா இருந்தது..

கல்யாணம் ஆகிவிட்டது, இனி என்னதான் செய்துவிட முடியும்?

அதற்காக காலம் முழுக்கவே இப்படி ஒரு நாற்றம் பிடித்த மனுசனோடு வாழ்ந்துக் கொண்டிருக்க முடியுமா?

தனக்கு வைத்தியம் பார்த்த டாக்டரிடமே, கணவனுக்கும் வைத்தியம் பார்த்தல் என்ன? என்கிற கேள்வி எழுந்து ஒருநாள் அதை அவனிடம் சித்ரா கேட்கவும் செய்தாள்...

ஆனால் தன்னிடம் அப்படி ஒரு குறையே இல்லாதது போல், அவன் அவள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்துவிட்டான்.

அதெப்படி, ஆம்பிள்ளைங்களுக்கு, இதுக்கு எல்லாம் வைத்தியம் பாக்கணும் சொன்னா கவுரவம் பொறுக்குமா? வறட்டு கௌரவம் புடிச்ச ஆம்பளைங்க....

வேறென்ன செய்வது, பேசாமல் விவாகரத்து வாங்கி விடலாமா? அய்யய்யோ, அம்மாவும், அப்பாவும் செத்தே போய்விடுவார்களே? தவிர, இதற்கெல்லாம் போய் யாராவது விவாகரத்து செய்வார்களா? கோர்ட்டில் போய் இதை எப்படி நிரூபிப்பது? அப்படியே நிரூபித்தாலும், கோர்ட் இதை ஏற்றுக் கொள்ளுமா? பதில் ஆம் என்று இருந்தாலும், அவள் தன்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதிலே இல்லாதது போல், அடுத்தடுத்த கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டிருந்தாள். ஒரு குடும்பத்துப் பெண் வேறென்ன செய்து விட முடியும், என்பது மட்டுமே அவளுக்கு பிடித்த பதிலாக இருந்தது.

சித்ராவுக்கு ஏனோ அன்றைக்கு மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. இத்தனை நாட்களாக சாப்பிடாமல், ஒதுக்கி வைத்திருந்த உருளைக் கிழங்கை, நீள நீளமாக அறுத்து, எண்ணெயில் பொரித்து, அணு அணுவாக சுவைத்து கொண்டிருந்தாள். மதிய உணவே உருளைக் கிழங்கு வறுவலாக இருந்தது.

இரவு உணவுக்கும், உருளைக் கிழங்கே பிரதானமாக இருந்தது. மொச்சக் கொட்டை காரக் குழம்பும், உருளைக் கிழங்கு பொரியலும் அன்றைக்கு இரவு உணவாக இருந்தது. கணவனுக்கு பரிமாறிவிட்டு, அவளும் முதல்முறையாக அவனோடு சாப்பிட உட்கார்ந்தாள். அவனுக்கு அதில் ஆச்சர்யம் இருந்தது போல் அவனது முகம் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு அவள் எழுந்துக் கொண்டாள். அவன் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்தான். டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சப்தம் எழுந்தது.. சித்ரா அவனைத் தாண்டி நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தாள். அவன் வாயில் சோற்றோடு, லேசாக வாயைத் திறந்துக் கொண்டு, அவளை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கம் லேசாக சாய்ந்தவாறே..

அவனுக்கு தெரிந்தது, இது அவனுடையது அல்ல, அவளுடையது.

Monday, April 1, 2013

ஒற்றை சாளரம் - 1

சில நேரங்களில் எழுதுவதற்கு நிறைய கருத்துகள் இருக்கும்போது, தனி தனி பதிவாக எழுதாமல், ஒரே பதிவில் எழுதிவிடலாம் என்று நினைக்கிறேன். அவைகள் எல்லாம் ஒற்றை சாளரம் என்கிற பெயரில் வெளிவரும்.
இன்றைய ஒற்றை சாளரத்தின் பதிவுகள்:
------------------------------------------------------
1. முத்துலிங்கத்தின் கடிதம்.
2. தமிழின் உலகப் படங்கள்..
3. நாடகம்.
------------------------------------------------------
முத்துலிங்கத்தின் கடிதம்.

என்னுடைய செயல்பாடுகள் முழுவதும், சென்னை, தமிழ்நாட்டில் மட்டுமே. ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்து எந்த பெரிய எழுத்தாளர்களிடமிருந்தும், எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் வெளிவந்தது கிடையாது (ஒரு சிலர் விதிவிலக்கு). என் செயல்பாடுகளை விமர்சித்து கூட. ஆனால் என்னுடைய எல்லா செயல்பாடுகளுக்கும், கனடாவில் இருந்து ஒரு மாமனிதர் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். என்னுடைய சமீப சிறுகதையான, "மாநகரம்" பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அன்புள்ள அருண்,
வணக்கம்.நலம்தானே

நீங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்.

1. நிறைய சொற்பிழைகள் உள்ளன. அவற்றை திருத்திவிடுங்கள்.

2. சாமிநாதனை சில இடங்களில் அவன் என்றும் சில இடங்களில் அவர் என்றும் அழைக்கிறீர்கள். முதியவர் என்பதால் அவர் என அழைத்து மரியாதை செய்யலாம்.

3. வர்ணித்துக்கொண்டு போகும்போதே சாமிநாதன் விபத்தில் சாகப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றியது உங்கள் வெற்றி.

4. 10 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தபோது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. சாலையை கடக்கவே முடியவில்லை. கடைசியில் ஆட்டோ பிடித்து மறுபக்கம் போய்ச்சேர்ந்தேன்.

5. கிழவர் சாலையை கடக்கும் இடம் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டிருந்தது. நான் என்ன அனுபவித்தேனோ அது அப்படியே எழுத்தில் வந்திருந்தது. வாசகருடைய முழுக்கவனத்தையும் அங்கே கவர்ந்துவிட்டீர்கள். அது வெற்றி.

6. கடைசி வசனம் மிக மிக முக்கியமானது. இதை மகத்தான கதை ஆக்கக்கூடியது. ஆனால் கடைசி வசனம் அப்படி அமையவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அப்படி ஆக்கியிருக்கமுடியும்.

அன்புடன்
அ.மு.

இதுவரை அந்த கதையை படிக்காத நண்பர்களுக்காக, என் கதையின் இணைப்பு: http://chuttiarun.blogspot.in/2013/03/blog-post.html
------------------------------------------------------------------------------------------
தமிழின் உலகப் படங்கள்..

இன்று அதிகாலை வரவு எட்டணா, செலவு பத்தணா திரைப்படத்தை பார்த்தேன். எனக்கு தெரிந்து, தமிழில் சட்டென்று பார்க்கும்போது அட என வியக்கவைக்கும் சில திரைப்படங்கள் இருக்கின்றன. உடனடியாக என் நினைவில் இருந்து எழுதுகிறேன். வரவு எட்டணா, செலவு பத்தணா, ஆஹா, எம் மகன் (ஆனால் எம்டன் மகன் என்பதே இதற்கு சரியாக தலைப்பு) ஆகிய மூன்று திரைப்படங்களையும் மீண்டும் ஒருமுறை பாருங்கள். தமிழ் சினிமாவின் Making எனப்படும் உருவாக்குதலை உலக தரத்திற்கு இந்த படங்கள் கொண்டு செல்லவில்லை என்றாலும், சமூக அவலங்களை சாடவில்லை என்றாலும், தமிழர்களின் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும், நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியையும் சித்தரித்த வகையில் இந்த மூன்று படங்களும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது. வன்முறையோ, பறந்து பறந்து அடிக்கும் பெரிய சண்டைக் காட்சிகளோ இல்லையென்றாலும், இந்த மூன்று படங்களும் வெற்றிப் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான வெகுஜனப் படங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------
நாடகம்.

உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கல்லூரி சாலையிலுள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் ஒரே நேரத்தில் 12 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. சென்னையில் இத்தனை அழகானப் பெண்களும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று ஒருகணம் மலைத்துப் போனேன். சின்ன அரங்கம்தான் என்றாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிலும், இளமைக் கொஞ்சும் பெண்களே அதிகம். என்னுடைய தோழி, வினோதினி இரண்டு நாடங்களை அரங்கேற்றினார். இரண்டிலும் சிறப்பாகவே நடிப்பை வெளிப்படுத்தினார். பார்த்த அத்தனை நாடகங்களும் சிறப்பாகவே இருந்தது. வெறும் சிறப்பு என்கிற வார்த்தை அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் என்றே நினைக்கிறேன். அத்தனை நேர்த்தி, உழைப்பு. ஒரு பத்து நிமிட நாடகத்திற்கு இந்த மெனக்கெடல் என்றால், மூன்று மணி நேரம் படத்திற்கு எத்தனை மெனக்கெட வேண்டும். சரி அதை விடுவோம்.

ஆறு நாடகங்களை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனாலும், உடன் வந்திருந்த நண்பன் தினேஷ் விடவில்லை, எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னான். மேலும், ஒளிப்பதிவாளரிணி (பெண் ஒளிப்பதிவாளரை எப்படி சொல்வது) வைஷாலியும் உடன் வந்திருந்தார். அவரை சந்திப்பதே நேற்றுதான் முதல்முறை. ஆனாலும், பல வருட நண்பர்கள் போலவே பேசிக் கொண்டோம். அவரும் நாடகங்களை பார்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் நானும் 12 நாடகங்களையும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். இத்தனைக்கும், உட்கார கூட இடமில்லாமல், யார் கால், யார் கை என்றே தெரியாமல் அங்கங்கே மிதிபட்டு, உதைபட்டே பார்க்க வேண்டி இருந்தது. இதற்குதான், எப்போதும் கலை ஆர்வலர்களை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது, எத்தனை சங்கடங்கள் இருந்தாலும், கலைப் படைப்புகளை பார்ப்பதில் இருந்து பாதியில் விடைபெறக் கூடாது. வேறு யாராவதாக இருந்தால், சரி போகலாம் என்றே சொல்லி இருப்பார்கள். நானும் அடுத்த 6 நாடகங்களை தவறவிட்டிருப்பேன்.

12 நாடகங்களில் ஒன்று மட்டுமே புரியவில்லை. காரணம் அதன் மொழி, ஹிந்தியில் அரங்கேற்றினார்கள். மற்ற அனைத்து நாடகங்களும் எனக்கு மிக பிடித்தது. தெளிவாக புரிந்தது. இத்தனைக்கும் நவீன நாடகம்தான். அத்தனை பேர் உடல்மொழியும், தமிழ்நாட்டில் இத்தனை சிறந்த நாடக கலைஞர்கள் (யாரும் தொலைகாட்சி நாடகங்களை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்) இருக்கிறார்களா என்கிற வியப்பை ஏற்படுத்தியது. Awesome என்றுதான் சொல்ல வேண்டும். பத்து நிமிடத்திற்குள், கதை, உடல்மொழி, கதாபாத்திரங்களுடன் பிணைப்பு அரங்க வேலைபாடுகள் போன்று பல விசயங்களை நேர்த்தியாக செய்திருந்தார்கள்.

நாடகத்தில் பங்கேற்ற அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துசொல்வதை வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால். குறிப்பாக வினோதினிக்கு (Vinodhini Vaidynathan). வாழ்த்துக்கள் வினோதினி. You are Rockinggggggggg....

Saturday, March 30, 2013

மாநகரம் - சிறுகதை

மாநகரம்...
--------------

"ப்பா... இப்ப நீங்க அவசியம் அங்க போய்தான் ஆகணுமா?"

"ஏன் அவங்களுக்கு தெரியாதா? போகனுமா வேணாமா னு? நீங்கள் என்ன பெரியவகளுக்கு கருத்து சொல்லிக்கிட்டு, போய் வேலையைப் பாருங்க"... சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல் அவனது மனைவி உள்ளே சென்றுவிட்டாள்.

சாமிநாதன் மகனை ஒருமுறை பார்த்தார்.

மகன்களை பெற்ற எல்லா தந்தைகளும், மனைவியை இழந்த பின்னர் அனாதைகளாகவே மாறிப்போவார்கள் என்பதை எப்போதும் போல், எல்லா தந்தைகளையும் போல் சாமிநாதனும் புரிந்துக் கொண்டார் என்பதற்கான பதில்தான் அந்த பார்வை. நீங்க அங்க போய்தான் ஆக வேண்டுமா என்று மகன் கேட்கும் கேள்விக்கு பதில், ஆம் என்பதே, ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கேள்வியையும் கேட்டுவிட்டு அதில் இந்த பதிலையும் ஒளித்து வைத்து விளையாடுவது எல்லாப் பிள்ளைகளுக்கு கைவந்த கலை.

இந்த ஆம் என்கிற பதில் மாறினால், பிள்ளைக்கு இல்லற வாழ்வில் எத்தகைய இழப்பு ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருக்கும் அப்பாக்களை போல், இதே ஆம் என்கிற பதிலால் அப்பாக்கள் படப்போகும் துயரங்களை எந்த மகனும் அறிந்து வைத்திருக்கவில்லை.

இடுங்கியக் கண்களும், ஒடுங்கிய தேகமும், ஒன்றோடு ஒன்றாய் ஓட்டிப் போயிருக்கும் தோலுமாய், ஒரே வேட்டியோடு, துண்டை மடித்து உடலில் சொருகிக் கொண்டு கிடக்கும் சாமிநாதன் அப்போதும் அந்த வீட்டில் எல்லாரையும் விட அதிகமாகவே உழைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும், எந்த மகனின் மனைவிமார்களும், மாமனாரை நார் நாராக கிழித்தெறியவே விரும்புகிறார்கள். மாமனார்கள் கிழிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

துண்டை எடுத்து, இரண்டாய் மடித்து வலது கையில் பிடித்துக் கொண்டே சாமிநாதன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.

ஒவ்வொரு பேருந்தாக உள்ளே வருவதும், அதே வழியில் வெளியே செல்ல இன்னும் பல பேருந்துகள் காத்திருப்பதும், வாழ்க்கையின் மிக முக்கியமான குறியீடாகவே சாமிநாதனுக்கு தோன்றியது. அப்போதும் கூட இதே பேருந்து நிலையத்தில் நாளை தன்னுடைய மகனும் ஏதோ ஒரு பேருந்துக்காக, வெளியில் சொல்லாத ஆம் என்கிற ஒற்றை பதிலின் காரணமாக காத்திருக்க நேரிடுமோ என்கிற அச்சத்தோடு அவர் ஒவ்வொரு பேருந்தையும் உற்றுநோக்கினார்.

யாருமே அவருக்காக ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. பேருந்து நிலையம் முழுவதுமே ஏதோ போர்க்காலத்திற்கு பிந்தைய சூழலில் இருப்பது போல் பரபரப்பாக காணப்பட்டது. நொடிந்துப் போய் கிடக்கும் ஒருவனை தாண்டிதான் அத்தனை கால்களும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் அவனுக்காக எந்த கால்களும் ஒருகணம் கூட நின்று செல்லவில்லை. அவன் யார், எங்கிருந்து வந்திருப்பான், அவனது பிள்ளைகள்தான் அவனை இப்படி நிர்கதியாக விட்டிருப்பார்களோ என்று சாமிநாதன் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நொடிந்துப் போய், சவலைப் பிள்ளை போல், மரணத்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவரது கண்கள் அப்போதும் மனிதர்களின் ஆசுவாசத்தை வேண்டி நிற்கவில்லை. அந்த கண்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த உலகம் ஸ்திரமானவர்களுக்கு மட்டுமே, நொடிந்து போனவர்களுக்கும், வயதானவர்களுக்கும், ஒருபோதும் உகந்தது அல்ல என்று.

சாமிநாதன் தனக்கான பேருந்தில் ஏறிக்கொண்டார். ஜன்னலோர இருக்கையில், வழியெங்கும் காத்திருக்கும், அத்தனை நிகழ்வுகளையும் அள்ளிப் பருக, அவரது கண்கள் எப்போதும் காத்துக் கொண்டே இருந்தது. அவர் அருகில் அமர்ந்த இளைஞன் வெள்ளை ஒயர் ஒன்றை காதில் சொருகிக் கொண்டார். பையை தூக்கி மேலேப் போட்டுவிட்டு, கைப்பேசியை தொட்டு தொட்டு ஏதோப் பேசிக்கொண்டிருந்தான். சாமிநாதனுக்கும், அந்த இளைஞனுக்கும் பேசிக்கொள்ள ஏதும் இல்லை. பொதுவாகவே, பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பேசிக்கொள்ள ஏதுமில்லை என்கிற சூழலில்தான் பெரியவர்களும், இளைஞர்களும் ஒருவரையொருவர் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல் பாவித்து, மெல்லிய புன்னகையோடு அவர்களுக்கிடையேயான உரையாடலை முடித்துக் கொள்கிறார்கள். சாமிநாதனின் கண்கள் மீண்டும் ஜன்னலோர கம்பிகளின் வழியே சாலையின் ஏகாதிபத்திய கூண்டுக்குள் அடைந்துக் கொண்டது.

அகன்று விரிந்த சாலைகள், கிராமங்களை, பிரித்து, ஒவ்வொரு கிராமத்தையும் தனித் தனி தீவுகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்தா வாரேன், என்று சொல்வதற்குள் ஓடிவரும் சொந்தங்கள் இனி ஓடி வருவதற்குள், அவர்களை தாண்டி பல நூறு வாகனங்கள் சென்றிருக்கும். ஒவ்வொரு கிராமத்தையும் பிரித்து, அதன் சமாதியில்தான் இந்த அகன்று விரிந்த பளிங்குக் கற்கள் போன்ற சாலை போடப்பட்டிருக்கிறது. நாம் இப்போதும் சமாதிகளின் மீதுதான் பயணிக்கிறோம். ஆனால் அதுப் பற்றிக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ள நமக்கு நேரமில்லாதபோது, இழந்து போன நமது கிராமத்து நினைவுகளை மீட்டெடுப்பதில் ஏன் அத்தனை சிரத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே எல்லாரையும் ஆக்கிரமித்து கிடக்கிறது.

பேருந்து கிராமங்கள் தாண்டி, சென்னை மாநகரின் நுழைவாயிலான காட்டான்குளத்தூரை தாண்டி, பெருங்களத்தூரில் நின்றது.

‘பெரியவரே, இங்கிருந்து தாம்பரம் போய், அங்கிருந்து T51 பிடிச்சி, சோளிங்கநல்லூர்ல இறங்கி, மறுபடியும் 21H பிடிச்சி நீங்கள் செம்மஞ்சேரி போகலாம்.’

சாமிநாதனுக்கு இந்த தமிழ் கொஞ்சம் புதிதாக இருந்தாலும், அந்த ஆட்டோக்காரர் வழிகாட்டுவதில் எடுத்துக் கொண்ட அக்கறை கண்டு சிலாகித்தார்.

‘நல்லா இருய்யா,.. வரேன் யா..’

ஆட்டோக்காரர் சொன்னது போலவே சோளிங்கநல்லூர் வந்து சாமிநாதன் 21H பிடித்து செம்மஞ்சேரி போக ஆயத்தமானார்.

21H பிடித்து உள்ளே ஏரின் சென்றார் சாமிநாதன். வண்டி நகர்ந்தது. மிக நீண்ட விசில் சப்தம்..

‘பெரியவரே, உன்னையெல்லாம் யாரு வெளிய வர சொன்னது? எந்தப் பக்கம் நிக்கிறது னு கூட தெரியாதா? எங்கிருந்து வந்த? என்தாலிய அறுக்கிறதுக்குனே வந்தியா?’ என்கிற நடத்துனரின் வசவு சொற்கள் சாமிநாதனுக்கு புதிதாக மட்டுமின்றி, அருவருப்பாகவும் இருந்தது.

சாமிநாதன் மௌனத்தோடு கீழே இறங்கினார். நடத்துனரின் பேச்சைக் கேட்ட சக பயணி ஒருவர் கூட சாமிநாதனுக்காக பேசாமல் இருந்ததில் அவருக்கு பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால் மௌனம் என்பதன் வலியை அவர் அங்கேதான் உணர்ந்தார். மௌனம் எல்லா நேரங்களிலும், நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. விருப்பமின்மை, சோகம், காதல், தோல்வி, என மௌனம் உணர்த்தும் எல்லா உணர்வுகளும், உண்மையை என்பதை தாண்டியும், நமக்குள் ஏதோ ஒரு அதிர்வை உண்டுபண்ணுகிறது.

சாமிநாதன் சாலையைக் கடக்க வேகமாக நடந்தார். ஆனால் முழுக்க முழுக்க மென்பொருள் நிறுவனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த சாலையில், வேகமாக செல்ல தடையாக, இடையிடையே ஆடு மாடுகள் கடக்க கூடாது என்பதற்காக பெரிய பெரிய நடுசுவர்கள், சில கிலோ மீட்டர்களுக்கு கட்டப்பட்டிருந்தது. சாமிநாதன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலையைக் கடக்க ஒரு சின்ன இடைவெளிக் கூட இல்லை. ஆனால் ஒரே ஒரு மேம்பாலம் மட்டும் இருந்தது. அதில் ஏறி சாலையைக் கடக்கும் தெம்பு அவருக்கு இல்லை.

மாநகரங்கள் மட்டுமின்றி, எந்த சக ஜீவிகளுக் கூட பெரியவர்கள், வறியவர்களின் வலியை ஒருபோதும் உணர்ந்துக் கொள்ள எத்தனித்தது இல்லை. எந்த இடத்திலும், பெரியவர்களுக்காகவோ, மாற்று திறனாளிகளுக்காகவோ, தனியார் நிறுவனங்களும், அரசும் எந்தவித புரிதல்ம் இன்றியே நகரின் கட்டுமானத்தை நிர்ணயிக்கிறார்கள். இங்கே உடல் முழு வலிமையோடு யாருக்கு இருக்கிறதோ, அவரே முழு கட்டுமான சுகங்களையும் அனுபவிக்க முடியும். மாநகர சாலைகள் கூட பெரியவர்களுக்காக வழிவிட தயாராக இல்லை.

சாமிநாதன் சாலையை கடக்கும் அந்த சின்ன இடைவெளிக்காக, நடந்துக் கொண்டே இருந்தார். இளைஞர்களும், உடல் வலிமையுள்ளவர்களும், நடுசுவரை தாண்டி, சாலையின் மறுபக்கத்தை அடைவதை அவர் கவனித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தார்.

நகர்தலில் எங்கோ பிழை இருப்பது போல் மனம் உணர்த்திக் கொண்டே வந்தது. எப்படியாவது அந்த நடுசுவரை தாண்டி விட வேண்டும் என்று சாமிநாதன் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் நடுசுவரை அடைவதற்கு எத்தனித்தார். ஆனால் அவர் நகரும் வேகத்திற்குள், பத்து இருபது வண்டிகள் வேக வேகமாக அவரைக் கடந்து சென்றது. இரும்புக் கூட்டங்கள் சாரை சாரையாக, புயல் வேகத்தில் கடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி நகர்ந்தது அந்த சாலையில் வண்டிகள். சின்ன இடைவெளிக் கூட இல்லாமல், கல்லூரி பேருந்துகளும், அலுவலக பேருந்துகளும், நகர்ந்துக் கொண்டே இருந்தது.

இத்தனை பெரிய வண்டிகளை, ராட்சதன் போல் அசுர வேகத்தில் நகர்ந்து செல்லும் தொனியை சாமிநாதன் ஒருநாளும், அவரது கிராமத்தில் பார்த்தது இல்லை. கிராமத்தின் எத்தனை விதமான மனிதர்களை பார்த்தாலும், எத்தனை விதமான நயவஞ்சகத்தை கிராமத்து மனிதர்களிடம் சந்தித்தபோதும் ஏற்படாத வாழ்வைப் பற்றிய அச்சம், மாநகரின் சாலைகள் அவருக்கு கொடுத்தது. ஒவ்வொரு பேருந்தும், இடி இடிப்பது போல் அவனுக்குள் அதிர்வுகளை உண்டுபண்ணி மறைந்தது. இவர்கள் எல்லாரும் எங்கே செல்கிறார்கள், ஏன் இந்த மஞ்சள் நிற ராட்சத பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த எத்தனித்துக் கொண்டே இருக்கிறது. பேருந்துகளுக்கு இடையில் எத்தனை ஸ்கூட்டர்கள் சென்றுக் கொண்டிருக்கிறது? ஆனாலும் தனக்கு அதில் நுழைய சிறு வழிக் கூட இல்லையே என்கிற ஏக்கப் பார்வை சாமிநாதனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

வண்டிகள் நகர்கிறது. சூரியன் அதைவிட வேகமாக மேற்கு நோக்கி நகர்கிறது. உடலில் இருந்து வெளியில் செல்லும் நீர்க்குமிழிகள் உணர்த்துகிறது உடலின் நீர்த் தேவையை. சாமிநாதனுக்கு தாகம் என்பதை தாண்டியும், எப்படியாவது குறைந்தபட்சம் அந்த நடுசுவரையாவது அடைந்து விட வேண்டும் என்கிற ஆர்வமும், கோபமும் மட்டுமே அதிகமாக இருந்தது.

வலது கையின் நடுவில் துண்டை இறுகப் பற்றிக் கொண்டு எப்படியாவது, அடுத்து சாரை சாரையாய் வண்டிகள் வருவதற்குள் அந்த நடுசுவரை அடைந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வலதுபக்கம் திரும்பிப் பார்த்தார். கொஞ்சம் தூரத்தில் வண்டிகள் அசுர வேகத்தில் வருவதை உணர்ந்தார். மீண்டும் முன்னோக்கி நகர்ந்தார். நின்று வலதுபக்கம் பார்த்தார். வண்டிகளின் போக்கு குறைந்தது. வேக வேகமாக நடுசுவரை நோக்கி ஓடினார். சடாரென ப்ரேக் பிடித்து நின்றது ஒரு வண்டி..

எங்கிருந்து திடீரென அத்தனை வண்டிகள் வந்தது என்று நினைப்பதற்குள், வண்டிகள் அடித்து எழுப்பிய ஹாரன் ஒளியில் அதிர்ந்துப் போய் மீண்டும் இந்த பக்கமே ஓடி வந்தார் சாமிநாதன்.

அதிர்ச்சியில் கொஞ்சம் நேரம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார். யாரிடமாவது உதவி கேட்கலாமா என்கிற கேள்வியை மனது கேட்டு முடிப்பதற்குள், வாழ்க்கையின் எந்த கணத்திலும், வாழ்வின் அடுத்த நகர்த்துதலுக்காக கூட யாரிடமும் உதவி கேட்காதபோது, இந்த சாலையை கடக்கவா உதவி கேட்க வேண்டும் என்கிற உபகேள்வியையும் மனம் பிரசவித்தது. தவிர எப்போதும் கிராமத்துக்காரர்களுக்கே உரித்தான அதே வைராக்கியமும், கர்வமும் சாமிநாதனுக்கு இப்போதும் உடனிருக்கிறது. அது சாலையை கடக்கும்போது கூட அவருடன்தான் வருகிறது. சாலையில் கடக்கையில் வழியில் எங்காவது அந்த வைராக்கியமும், கர்வமும் தொலைந்துப் போகக் கூடாதா என்று உப கேள்வி எழுப்பாத மனம் சிந்தித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்த முறை கையில் இருந்த துண்டை எடுத்து உடலில் இறுகக் கட்டிக் கொண்டு, நடுசுவரை அடைய தயாராக நின்றார். வேக வேகமாக, மனித அசைவைக் கண்டதும் பறந்தோடும் சிட்டுக் குருவி போல, பறந்தோடி நடுசுவரை அடைந்தார். இனி எப்படியாவது அந்த சுவரை தாண்டி விட வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, நடுசுவரை இறுகப் பற்றிக் கொண்டு, இடது காலை கொஞ்சமாக தூக்கினார். முடியவில்லை. இந்தமுறை திரும்பி நின்றுக் கொண்டு வலது காலை கொஞ்சம் தூக்கி நடுசுவற்றில் ஏறிவிடப் பார்த்தார். முடியவில்லை.

‘ஏ, கிழவா ஒனுக்கு கொஞ்சமாச்சி, எதாச்சும் கீதா? ஏ சச்சி. இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போய், அப்பாலிக்க ரோட கிராஸ் பண்ணு... ’ என்று சொலிவிட்டு ஒரு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். இயலாமையும், வைராக்கியமும், கர்வமும் ஒருசேர இணையும் இடத்தை இப்போதுதான் சாமிநாதனே சந்திக்கிறார். ‘இவ்வளவு பேசிவிட்டு போகிறானே, அந்த ஆட்டோ காலியாக தானே இருக்கிறது. அதில் ஏற்றிக் கொண்டு போய், சாலையை கடக்க உதவினால்தான் என்ன’ என்று, இயலாமை கேட்ட கேள்விக்கு, வைராக்கியம் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனாலும் ஆமோதிக்கவில்லை.

இப்போது சாலையைக் கடக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது வந்த இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும். நடுசுவற்றை ஒட்டியே நடக்க முடியாது என்பதை சாமிநாதன் உணர்ந்திருந்தார். ஆனால் சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்வதை காட்டிலும், வந்த இடத்திற்கு செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை அவருக்கும். நடுசுவரை ஒட்டியே நடந்தார்.

எழுபதாண்டுகளாக கிராமத்தில் சந்தித்த எந்த நிகழ்வுகளும், சம்பவங்களும் சாமிநாதனுக்கு இத்தனை பெரிய அயர்ச்சியை கொடுத்ததில்லை. ஆனால் மாநகரில் சாலையை கடப்பதற்குள் சாமிநாதன் நொடிந்துப் போய்விட்டார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், அவரது மனதிற்குள் நிறைய அதிர்வுகள் உருவாகிக் கொண்டே இருந்தது. இப்படியான சாலைகள் மனிதர்களிடம் இருக்கும் மனிதத்தை எப்படியெல்லாம் அழித்திருக்க கூடும், இங்கே மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது சாமிநாதன் மனதில். பதில்தான் அங்கே கிடைக்கவில்லை.

வியர்வை தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் தாகம் எப்போதும் இல்லாது, இப்போது அதிகமாகிக் கொண்டே சென்றது. இன்னும், இன்னும் என்றும், கொஞ்சம் கொஞ்சம் என்றும், மனதையும், கால்களையும் கொஞ்சிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.

வழியும் வியர்வையில், பார்வை கொஞ்சம் மங்கினாலும், கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டார். அந்த ஒற்றை சப்தமே சாலையைக் கடக்க ஒரு சிறு வழி இருப்பதை அவரது மனதுக்கு உணர்த்தியது.

இப்போது சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்ல தயாரானார். இந்த முனையில் வண்டிகளின் போக்கு குறைவாகவே இருப்பது போல் அவருக்கு தோன்றியது. காரணங்களை ஆராய மனத்திலும், உடலிலும் வலுவில்லை. உடனே சாலையை கடக்க, மொத்த வலுவையும் திரட்டி, ஓட முயன்றார்.

க்க்க்க்க்க்க்க்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ.... காதையும் தாண்டி நெஞ்சைப் பிளக்கும் ஹாரன் சப்தம். பார்வையில் விழாத ஏதோ ஒரு பெரிய வண்டி சாலையில் வேகமாக வந்ததை சாமிநாதன் கவனிக்கவில்லை. ஆனாலும், சுதாரித்துக் கொண்டு சாலையின் அடுத்தப் பக்கத்தில் விழுந்தார். இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மூச்சை வெளியிட்டார். உயிர் என்னிடமே இருக்கிறது என்று கர்வப்பட்டுக் கொண்டார். அதுவரை அவரது வாழ்க்கையில் கேட்டிராத வசவு சொற்களை ஓட்டுனர் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். எழுந்து நடந்த சாமிநாதன் அவரை பார்த்து ஒற்றை சிரிப்பை வீசிவிட்டு நகர்ந்தார்.

இப்போதும் சாமிநாதனுக்கு வாழ்வின் மீதும், சக மனிதர்கள் மீதும் எவ்வித புகார்களும் இல்லை.

Wednesday, January 23, 2013

பள்ளி / கல்லூரிகளில் திரைப்படக் கழகங்கள் தேவையா?



எனக்கு தெரிந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருவண்ணாமலை SKP பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடங்கப்படவுள்ளது. இது ஒரு அசாதாரணமான முயற்சி. இப்படி ஒரு திரைப்பட கழகம் பற்றி பொறியியல் கல்லூரி நிர்வாகம் யோசிப்பதே பெரிய விஷயம். அதையெல்லாம் தாண்டி அதை சாத்தியப்படுத்தி இருக்கும் SKP கருணா அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் பள்ளி / கல்லூரிகளில் திரைப்படம் சார்ந்த படிப்பும், திரைப்படக் கழகங்களும் தேவையா என்கிற விவாதமே தேவையற்றது. தமிழ்நாட்டில் எல்லாரும் படிக்க வேண்டுமா? பள்ளி / கல்லூரிகள் தேவையா? ஏன் அவரவர் குலத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்கிற வாதம் எப்படி புறந்தள்ளப் பட வேண்டியதோ அப்படிதான் திரைப்படக் கழகம் பற்றிய விவாதமும். நான் எப்போதும் சொல்வது போல் மற்ற நாடுகளையும், தமிழ்நாட்டையும், திரைப்பட விசயத்தில் நாம் ஒப்பிட முடியாது. மேலை நாடுகளுக்கு திரைப்படம் என்பது கலை, பொழுதுபோக்கு. தங்களை உயிர்த்திருக்க அவர்கள் மேற்கொள்ளும் கலைப் பயணம். ஆனால் தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லாமும். நடிகர்கள்தான் கடவுள். திரைப்பட நாயகர்களே தங்களை ஆள வேண்டும், என அவர்களை மன்னர்களாக, கடவுளாக, உலகின் பிணி நீக்கும் நாயகனாக பார்க்கும் நம் நாட்டில், திரைப்படங்களை அத்தனை எளிதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

இங்கே திரைப்படங்கள்தான் கலாச்சாரத்தை உருவாக்குகிறது. திரைப்படங்கள்தான் ஒரு மனிதனை மறுஉருவாக்கம் செய்கிறது. திரைப்படங்கள்தான் நமது மனநிலையை மாற்றுகிறது. திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும், நரம்பிலும் அனுஅனுவாக பதிந்துள்ளது. இங்கே வந்து திரைப்படம் சார்ந்தும், அதன் ரசனை சார்ந்தும் ஒரு பாடத்திட்டமோ, ரசனை வளர்ப்பு அமைப்புகளோ தேவையில்லை என்பவர்கள் என்னைப் பொறுத்தவரை மூடர்கள். திரைப்படங்கள்தான் இந்த சமூகத்தை சீரழிக்கிறது என்கிற வாதமும் காலம்காலமாக நடக்கிற ஒன்று. தெரிந்தோ தெரியாமலோ, அது உண்மையாக இருந்தாலும், இந்த சமூகத்தை சீர்படுத்தவும் திரைப்படங்களால் மட்டுமே முடியும். அதுதான் திரைப்படங்களின் அழகியல் முரண்பாடு.

நமது உண்மையான கலாச்சாரம் என்ன என்பது கூட இங்கே மறுபரிசீலனைக்குரியது. நாம் நமக்கான எல்லாவற்றையும் இழந்து வருகிறோம். நம்மை கேளிக்கைகளை வைத்தே, கேளிக்கைகள் மூலம் வந்த இந்த அரசுகள் முடக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் திரைப்படங்களை எடுக்க மட்டுமல்ல, சரியாக பார்க்கவும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருக்கிறது.

நமது தாய்மொழியல்லாத வேறொரு மொழியை கற்றுக் கொள்ள நாம் விரும்பினால் அதற்கான நமது காத்திருத்தல் அவசியம். ஆனால் சினிமா என்கிற மொழியை மட்டுமே கேமராவை தூக்கிய யாருவேண்டுமானாலும் தெரிந்துக் கொள்ளலாம் என்பது எப்படி சரியாகும். திரைப்படத்தை ஒழுங்காக படிக்க வேண்டும். அல்லது அதற்கான மெனக்கெடல் வேண்டும். திரைப்படத் தொழில்நுட்பத்தை படித்தவர்கள் மட்டுமே திரைப்படம் எடுக்க வரவேண்டும் நான் சொல்லவில்லை. ஆனால் திரைப்படம் எடுக்க வேண்டும், அதுதான் நமது தொழில் என்று நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால், நிச்சயம் அதற்கான மெனக்கெடல் மிக முக்கியம்.

கணிதம், வேதியியல், இயற்பியல், போன்ற பாடங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு இடமளிக்காத ஒரு சமூகம், விளையாட்டு, சினிமா போன்ற துறைகளுக்கு மட்டும் இந்த மாதிரியான கேள்விகளை முன்வைப்பது அபத்தமானது.

திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலியான பல கட்டமைப்புகளை உடைத்தெறியவும், திரைப்படத் துறையில் குறைந்தபட்ச நேர்மை உருவாகவும் இது மாதிரியான திரைப்படக் கழகங்கள் அவசியம் தேவை என்பதை ஒருபோதும், யாரும் மறுக்க முடியாது.

SKP பொறியியல் கல்லூரியின் இந்த முயற்சி மகத்தானது. அதற்காக SKP கருணா அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் வெள்ளி, மற்றும் சனிக்கிழமை SKP பொறியியல் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடக்க விழா சிறப்பாக நடக்கவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை அடுத்து இணைக்கிறேன். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் அவசியம் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவும்.

இந்த திரைப்படக் கழகத்தின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செவ்வனே செய்து முடிக்க விழைகிறேன்.

அழைப்பிதழ்:




Tuesday, January 22, 2013

அன்பாலே அழகான வீடு!!!

தேவக்கோட்டை பொங்கல் பயணம் பற்றி எழுத நினைத்து தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய நிறுவனத்தில் வேளையில் இருக்கும்போது கூட இவ்வளவு பிசியாக இருந்ததில்லை. இப்போது எழுதவதற்கே நேரம் கிடைக்காமல் இருக்கிறேன்.

நீராதரமின்றியும் பசுமையாக இருக்கும் வயல்வெளிகள்

 ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்கு ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று விடுவது என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து கடைபிடிக்கிறேன். அதன்படி இந்த ஆண்டு நண்பன் தினேஷின் கிராமமான தேவகோட்டை திருவொற்றியூர் அருகே உள்ள நடியக்குடி என்கிற கிராமத்திற்கு சென்றோம். சுந்தர், தினேஷ், நவராஜும் கலந்துக் கொண்டார்கள். காரைக்குடியில் காலையில் தினேஷின் உறவினர் ஒருவர் வீட்டில் பொங்கல் வைத்து, காலை உணவை முடித்துக் கொண்டு தேவக்கொட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தோம். இடையில் நண்பர் பிரின்ஸ் அழைத்திருந்தார். காரைக்குடியில் தான் இருக்கிறேன் (காரைக்குடிதான் பிரின்சின் சொந்த ஊர்), வாங்க சாப்பிட்டுவிட்டுப் போவோம் என்றார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் கடைசி வரை பிரின்ஸ் வீட்டிற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை.

ஐந்து கிலோமீட்டர் நடை...

மூன்று பேருந்துகள் மாறி, இறுதியாக திருவொற்றியூர் சென்று சேர்ந்தோம். இங்கிருந்து கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னான் தினேஷ். கிராமத்தில் நடக்க வலிக்கிறதா என்ன என்று சொல்லிக்கொண்டு நடக்க தொண்டங்கினோம். உண்மையாகவே வலிக்கத்தான் செய்தது. கொஞ்சம் தூரம் என்பது கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள். வேறு வழியே இல்லை, பேருந்து வசதியோ, சேர் ஆட்டோ வசதியோ கிடையாது. வழியெங்கும் வயல்வெளிகள் பசுமை போர்வைகலாக காட்சியளித்துக் கொண்டிருந்தன.

மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. கேரளா மக்கள் தங்கள் மாநிலத்தின் பசுமைப் பற்றியோ, அதன் விவசாய செழுமை பற்றியோ பேசுவதில் பெரிய சிலிர்ப்பு கொள்ளத் தேவை இல்லை. ஆனால், எந்தவித நீராதரமும் இல்லாத பல இடங்களில், எங்கிருந்தோ எல்லாம் நீரை எடுத்து வந்து சாகுபடி செய்யும், கடின உழைப்பாளிகள் நிறைந்த தமிழ்நாடு அதற்காக நிச்சயம் கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லி இருந்தார். அதனை தேவக்கொட்டையில் நேரில் பார்த்தேன். சிவகங்கை மாவட்டமே வரட்சியானதுதான். அவர்களுக்கு என்று சொல்லிக் கொள்ள பெரிய அளவில் நீராதாரங்கள் இல்லை. ஆனால் திருவெற்றியூரில் இருந்து நடியக்குடி கிராமத்திற்கு செல்லும் ஐந்து கிலோமீட்டருக்குமான தூரத்தில் நான் பார்த்த இடமெல்லாம் பசுமையாகவே இருந்தது. ஆனால் ஆங்காங்கே தென்படும் எந்த நீர்நிலைகளிலும் நீர் இருப்பு இல்லை. அவர்கள் மழையையும், தங்கள் உழைப்பையும் நம்பி மட்டுமே சாகுபடி செய்கிறார்கள். அத்தனை ஆயிரம் ஏக்கர்களில் நிச்சயம் சில ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இன்னும் கொஞ்சம் நாட்களில் கருகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை. இன்னும் ஒரு மழை வந்திருந்தால், அந்த பயிர்களும் தழைத்திருக்கும். கண் அதன் எல்லை தொடும் தூரம் வரை நான் கண்ட பச்சை போர்வைகள், நிச்சயம் அடுத்த சில மாதங்களில் வெறும் பொட்டல் காடாகத்தான் காட்சியளிக்கும்.

களைப்பின் வலியறிந்து, ஆங்காங்கே ஆசுவாசப்படுத்திக் கொண்டே கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம்.



நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்த கூட்டுக் குடும்பம். தோராயமாக பத்து சிறுவர்கள். என தினேஷின் சித்தி சித்தப்பாக்கள் நிறைந்த அந்த வீடு முழுவதும் அன்பே பிரதானமாக நிறைந்து வழிந்தது. போய் சேர்ந்ததும், நிறைவான உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். 

நடந்து வந்த வழியிலேதான் மீண்டும் சென்றோம். இந்த முறை சிறுவர்களுடன் சைக்கிளில் பயணித்தோம். அந்த ஊரில் இருக்கும் மிக பழமையான, கொஞ்சம் பீதியைக் கிளப்பும் சிவன் கோவில். சுற்றி இருந்த மரங்களில் இருந்து மயில்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. பயத்தின் பருமனை கூட்டுமளவிற்கு அதன் ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத கோவில் என்பது அதன் பராமரிப்பில் இருந்தே தெரிந்தது. அரசின் கட்டுப்பாட்டில்தான் கோவில் இருப்பதாக சொன்னார்கள். ஒரே ஒரு பூசாரி, பூசைகளை முடித்துக் கொண்டு சென்றுவிட்டது அங்கே எரிந்துக் கொண்ட அகர்பத்தியின் வாசத்திலேயே தெரிந்தது. தொலைகாட்சி சீரியல் நண்பர்கள் இந்த இடத்தை பார்த்தால் நிச்சயம் ஒரு மர்ம மெகா சீரியல் எடுத்து விடுவார்கள். 

எப்போதும் உடனிருந்த எங்களை வழிநடத்திய சிறுவர்கள்

கோவிலுக்கு உள்ளே நிறைய தடைகளை தாண்டி சென்று சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்துப் பார்த்தோம். புகைப்படம் நன்றாகவே தெரிந்தது. எனவே கொஞ்சம் பயம் விலகியது. ஆனால் அடுத்த நிமிடமே நவராஜ், இன்னொரு புகைப்படம் எடுத்து எல்லாரையும் பீதியடை செய்தார். நேரில் பார்க்கும்போது உடைந்திருந்த கோவில் கதவு, புகைப்படத்தில் உடைச்சல் இல்லாமல் இருந்தது. அடுத்த கணத்தில், நெஞ்சாங்கூட்டில் பெருச்சாளி ஓடுவது போல் இருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் உண்மை தெரிந்தது. உடைச்ச்சளுக்கு பின்புறம் இருந்த அதே நிறத்திலான சுவர் புகைப்படத்தில் உடைச்சலை மறைத்திருந்தது. பயம் தெளிந்தாலும், உள்மனதில் கொஞ்சம் பயம் மறைந்துக் கொண்டுதான் இருந்தது. இருட்டுவதற்குள் அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்து கொஞ்சம் நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பினோம். மின்சாரம் பாதி நேரம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் மின்சாரம் இல்லாத குறையே எங்களுக்கு தெரியவில்லை. சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒருபோதும் நமக்கு இந்த மாதிரியான செயற்கை பொழுதுபோக்கே தேவை இருக்காது. காலநிலையும் அருமையாகவே இருந்து. மிக குறிப்பாக நாங்கள் அங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களும் ஒரு கொசுவைக் கூட நான் பார்க்கவில்லை. கொசுக்கள் இல்லாத நிம்மதியான நிறைவான தூக்கம் அன்று இரவு சாத்தியப்பட்டது.


மர்மக்கோவில்

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. நாங்களும் எங்கள் வரகரிசியில் பொங்கல் செய்ய தயாராக இருந்தோம்.

தொடரும்...

Monday, April 25, 2011

கா - சிறுகதை




எறும்புகள் நகர்ந்து செல்லும் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பறவைகள் வீரிட்டுக் கத்தின. கழுகின் ஏரார்ந்த பார்வையில் சாலையிலிருந்து வனப்பகுதிக்கு ஊர்ந்து செல்லும் பாம்புகள் தென்பட்டன. சாலையின் ஓரங்களில் இருந்த மரத்தின்னைகள் ஒன்றையொன்று விளித்து கதைத்துக் கொண்டிருந்தன. பனித்துளிகள் புற்களை சேர்த்து அனைத்துக் கொண்டு அதிகாலை காமத்திலிருந்து இன்னும் விடுபடாததாய் கிடந்தன. நேரம் செல்ல செல்ல அவை தின்னமிழந்து ஒழுகி நீர்த்துப் போகும் தருணத்தில் புற்களின் நுனிகள் கதிரைத் தேடிக் கொண்டிருந்தன. மரங்களின் மீது மயில்கள் பூங்கழுத்தை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் மான்கள் மெல்லடி எடுத்து வைத்து கண்கள் சிமிட்டி, அக்கம் பக்கம் பார்த்து அளவளாவிக் கொண்டன. இயற்கை தனக்குள் தன்னையே தேடிக் கொண்டிருக்கும் பரிசுத்தமான அமைதி தவழ்ந்த நேரம், அடுத்த நொடியில் சர்ரென, செவிகளை கிழிக்கும் வேகத்தில் ஓர் கார் கடந்து சென்றது. பனித்துளிகளின் ரத்தம் அருகில் இருந்த மான் மீதும், பறந்து கொண்டிருந்த பறவைகளின் மீது தெளித்து சாலையில் சிதறிக் கிடந்தன. ஊர்ந்து சென்ற பாம்பு நின்று திரும்பி பார்த்தது. கணப் பொழுதில் நகர்ந்து சென்ற காரை யாரும் காணவில்லை. ஏதோ இயற்கையின் மாயை என்று நினைத்து அனைத்தும் மௌனமாகி விட்டன.

"சூப்பர் டாடி".. காருக்குள் இருந்த சிறுவன், தன் தந்தையை இறுக அனைத்து கன்னத்தில் தன் எச்சில் படும்படி அழுத்து முத்தமிட்டான். உதடு முத்தமிட்டு திரும்புகையில் அவன் எச்சில் கன்னத்தில் இருந்து பிரிந்து விழுந்தது. 'கா'வின் மனம் முழுவதும், ஏதோ ஒருவித சோகம் வியாபித்திருந்தது.

கா, எப்போதும் மிக அதிகமான வேகத்தில் காரோட்டி செல்பவன். வாழ்க்கையின் தத்துவங்களையும், அது தரும் அனுமானங்களையும் அதன் அருகில் சென்று பருகி வருபவன். உலகில் தான் பிறந்ததே படித்து இன்புறத்தான் என்ற எண்ணத்தில் மிதப்பவன். ஜெர்மானியத் தத்துவவாதியான ஆர்தர் ஷோப்பன் ஹேவரின் "எல்லோருக்கும் பழக்கப்ட்ட சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி யாருக்கும் பழக்கமற்ற அசாதாரண விசயங்களைத் தெரிவியுங்கள்" என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான "காப்காவின்" விசாரணை நாவலில் வரும் மையப்பாதிரத்தின் பெயரான "கா"வையே தன்னுடைய பெயராக வைத்துக் கொண்டவன். தனி மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமெனில் புறக் கோரிக்கைகளை மறுத்து சமுதாய அமைப்புகளிலிருந்து விலகி தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் தனித்தனி அணுக்களாக மாறிவிடுவதே சிறந்தது என்கிற "ழான்பால் சார்த்தரின்" வாக்கியங்களை எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டவன். அவனுக்காகவே பிறந்தவளாய் அவன் வாழ்வில் செப்படி எடுத்து வைத்தாள் வானதி. கா என்கிற அவனின் பெயரைக் கண்டே அவன் இலக்கிய தாகத்தை முகர்ந்து அவன் பின் எறும்பாய் தொடர்ந்தவள். இலக்கியம் இருவரையும் இல்லறத்தில் பிணைத்தது. பாப்லோ நெருதா, நீட்சே என அவர்களின் நீட்சியாய் தங்களை நெட்டுரு செய்துக் கொண்டனர் இருவரும். அவளுக்கு அவன் கார் ஓட்டும் அழகு மிகவும் பிடிக்கும். மிக அனாயசமாக ஒற்றை கையில் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரு கையில் ஜான் பெயசின் இசைத் தட்டுகளை தேடி எடுத்து ஓடவிடும் ரசனை அவளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

வேகம் என்றால் காரும், அது செல்லும் சாலையின் ஸ்த்திரத்தன்மையும் சேர்ந்தே கதிகலங்கிப் போகும் வேகம். அப்படி ஒரு வேகத்தை யாரும் கண்களால் பார்த்து விட முடியாது. காட்சிப் பிழையென கணத்தினும் மெல்லிய நானோ நொடியில் கார் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடும். அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு அவன் தோல் மீது சாய்ந்து நகுலனின் கவிதைகளை அவள் கொஞ்சம் சொல்லி நிறுத்த, அவன் முடித்து வைப்பான். அவன் குரலின் வலிமையில், கார் ஓட்டும் ஆண்மையில், இலக்கிய அறிவில் அவள் எப்போதும் தன்னை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பாள்.

அன்று பிரெட்ரிக் நீட்சேவின் Once more, ere I move on தலைப்பில் தொடங்கும்


And send my glance forward,
Lonely, I raise my hands
To you, to whom I flee,
To whom I, in the deepest depths of my heart,
Have solemnly consecrated altars,
So that, at all times,
His voice would summon me again.

கவிதையை அவள் கூற, அவன்

I want to know you, unknown one,
You who have reached deep within my soul,
Wandering through my life like a storm,
You incomprehensible one, akin to me!
I want to know you, even serve you.

என முடித்து வைத்தான்.

முடித்துவிட்டு கண் சிமிட்டி அவளைப் பார்த்தான். ஜான் பெயஸ் இசை மாறி, யானியின் வயலின் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த இசை சூழல், கவிதையின் செறிவு, 'கா'வின் கவிதைத் திறன் என அனைத்தும் சேர்ந்து அவளை தன்னிலை மறக்க செய்தது. வளைவில் கூட வேகம் குறையாமல் ஸ்டீரிங்கை ஒடித்து காரை அவன் திருப்பும் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவள் தன் முத்தங்களை அவனுக்கு பரிசாகக் கொடுத்தாள். அவன் கண்ணங்களில் ஒட்டிய அவள் இதழின் ஈரம் வறண்டு போக வெகு நேரம் ஆயிற்று. அவன் இடுப்பின் இருபுறமும் தன் கைகளை கோர்த்து, அவன் தோள்களில் மெல்ல சாய்ந்துக் கொண்டாள். அவன் அகன்ற தோளை தன் பால் பற்களால் கடித்தாள். கைகளின் இறுக்கம் அதிகாமானது. அவள் கன்னத்தில் முத்தமிட அவன் திரும்பினான்.

ஸ்ரர்ர்ர்ரர்ர்ர்....க்ரீச்ச்ச்ச்சச்...சாலையில் கார்களின் சக்கரங்கள் தேய்த்து தீப்பொறி பறந்தது. மலையின் விளிம்பில் அசுர வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் நிலைத் தடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
"டாடி.. என்ன ஆச்சு உங்களுக்கு".. தன் நிலை திரும்பி மகனைப் பார்த்து லேசாய் சிரித்து விட்டு மீண்டும் காரை வேகமாக செலுத்தினான். அவளின் மரணம் அவனின் மனக்குரளியில் இருந்துக் கொண்டு அவன் இருத்தலை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உலகின் இருண்மையை அகற்றும் இலக்கியம் அவ்வப்போது அவனுக்கு இருத்தலின் நியாயத்தை உணர்த்தியது. அவள் விட்டு சென்ற எச்சமாய் அவன் மகன். அவளைப் போன்றே தந்தையின் இலக்கியம், வேகம் என அனைத்தையும் சிலாகிக்கும் பக்குவத்துடன் இருப்பது அவனுக்கு ஆறுதலாய் அமைந்துவிட்டது.

எங்கே தன் மகனும் இந்த கார் ஒட்டு வேகத்தால் தன்னை விட்டுப் பிரிந்துப் போய் விடுவானோ என்கிற பயம் அவனுக்குள் இருந்தாலும், தன் மகன் அதைத்தான் விரும்புகிறான் என்பதால் அவனுக்கு மாற்று தெரியவில்லை. அவனுக்கு அழகுறை சொல்லவும் அவன் தயாரில்லை.

மலையின் சரிவில், காரை ஒடித்து அவன் திரும்பும்போது அவன் மகன் கொள்ளும் பரவசம் அலாதியானது. "மார்வெலஸ் டாடி" என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையின் முகத்தைப் பார்த்து பின்னீட்டீங்க என்று சொல்லும் அழகில் 'கா' சொக்கித்தான் போவான். எப்போதும் தந்தை கார் ஓட்டும் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நகுலனுக்கு தெரியும் தன் பிறத்தி அதனால்தான் இறந்தாள் என்று.

"எப்படி, டாடி நீங்க இவ்வளவு வேகமா கார் ஓட்டக் கத்துக்கிட்டீங்க.. நம்மக் கார் மட்டும்தான் இவ்ளோ வேகத்துல போகுமா? இல்லனா எல்லாக் காரும் இப்படிதான் போகுமா? ஹ்ம்ம்.. நீங்கள் ஓட்டுற கார் மட்டுந்தான் இப்படி போகும் கரெக்டா? அவன் பேச்சு முழுவதும், காரின் வேகம் பற்றியதாகவே இருக்கும். சரிவுகளில் காரை இறக்கும்போதும், மேடுகளில், காரை செறிவாய் செலுத்தும்போதும், 'கா'வின் கம்பீரம் நகுலனை வெகுவாய் ஈர்த்திருந்தது. எப்போது நான் வளர்வேன்.. எனக்கு எப்போது கார் ஓட்ட சொல்லித் தருவீர்கள் என்று தந்தையை ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான்.

கார் ஓட்டும்போது எப்படி அமர வேண்டும், வலது கால், இடது கால் எங்கே வைக்க வேண்டும். எப்படி காரின் திசையை அறிவது, கண்ணாடியை ஏன் பார்க்க வேண்டும், இதெல்லாம் அவன் கேட்கும் உப கேள்விகள்.

தந்தையின் கால்கள் ஆக்சிலேட்டரை லாவகமாக மிதிப்பதை கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான் நகுலன். "கா" கொஞ்சம் மெதுவாக காரை செலுத்துக் கொண்டிருந்தான். சர்ர்ர்ரர்ர்ர்ரர்.உஸ்ச்ச்ச்சச்ச்ச்ஸ்.... அவர்கள் காரை இன்னொரு கார் முந்திக் கொண்டு சென்றது..

"டாடி" என்ன டாடி.. போங்க.. சீக்கிரம் அந்த கார பிடிங்க டாடி.. இது எனக்கு பெரிய அவமானம் டாடி", மறுத்து பேசாமல் கார் வேகமெடுத்தது.

சர்ர்ரர்ர்ர்ர்... உச்ச்சச்ச்ச்ஸ்... கீச்ச்ச்ச்சக்...இரண்டு கார்களும், ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து நகுலன் வயதுடைய பெண்ணொருத்தி, மிகுந்த பயத்துடனான கண்களுடன் எட்டிப் பார்த்தாள். அவள் வேகத்தை பயத்தின் வழியாக வெளியேற்றி விட நினைத்திருந்தாள். ஆனால் அவளது தந்தை "கா"வுடன் போட்டி போட்டுக் கொண்டே இருந்தார். நகுலன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்துவிட்டு, "டாடி.. விடுங்க டாடி.. அவங்க போகட்டும்.. என்று தலையை சாய்த்து, கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். அந்தக் காரில் இருந்த பெண் எட்டிப் பார்த்தாள். அவளின் பயம் புன்னகையாய் உருமாறி இருந்தது. அவர்களின் கார் பறந்தது.

நகுலன் கொஞ்சம் களைத்துப் போய் இருந்தான். "டாடி அம்மா வாசிச்ச கவிதைய போடுங்க டாடி என்றான். அவள் நீட்சே, நகுலன், பிரமிள், ஆத்மாராம், நெருதா போன்றவர்களின் கவிதையை வாசித்து பதிவு செய்து தினமும் காரில் கேட்டுக் கொண்டே செல்வது வழக்கம். கார் முழுவதும், மங்கிய வெளிச்சத்தில், அவளின் மெல்லிய குரலில் கவிதைகள் இசைக்கத் தொடங்கின. நகுலன் உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். "கா" அவளை தேடிக் கொண்டிருந்தான். அந்தக் கவிதைகள் முழுவதும் ஒரு வித மௌனம் ஆட்கொண்டிருந்தது. அவனையறியாமல் கண்கள் பனிக்க ஆரம்பித்தது.

அவள் நினைவுகள் அவனுக்குள் நங்கூரமிட்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அவள் கண்ணக்குழிக்குள் அவன் தன் வாழ்தலின் அர்த்தத்தை அது தரும் மாய சுகத்தை உணர்ந்துக் கொண்டிருந்தான். இன்று அவள் இல்லை. அவனும் இல்லை. தன் நினைவுகளால் மட்டுமே இன்னும் அவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் கரங்கள் வழுவிழப்பதை அவன் எங்கோ ஒரு புள்ளியில் உணர தொடங்கினான். அவள் நினைவுகளின் வலிமை அவனை வழுவிழக்க செய்துக் கொண்டிருந்தது.

அடுத்த நொடியில் மலையே அதிரும் வண்ணம் ஒரு கார் "காவின்" காரை முந்திக் கொண்டு சென்றது. அந்த அதிர்வில் நகுலன் சட்டென்று முழித்துக் கொண்டான். நகுலனைப் பார்த்த கா அவனின் சோகம் புரிந்து காரை வேகப்படுத்தினான். ஆனால் அவன் இப்போது தன் வழுவை இழந்து ஒரு பொதிமாடாய் ஓய்ந்துப் போய் இருந்தான். இருந்தாலும் முடிந்த வரை காரை வேகமாக செலுத்தினான். நகுலன் ஜன்னல் வழியே அடிக்கடி எட்டிப் பார்த்தான். ஒரு கார் வேகமாய் துரத்துவதையும், சிறுவன் எட்டி எட்டிப் பார்ப்பதையும் முன்னே சென்றுக் கொண்டிருந்த காரின் ஓட்டுனர் பார்த்துக் கொண்டே இருந்தார். ஏதோ புரிந்தனவாய் தனது காரின் வேகத்தை கொஞ்சமாய் கட்டுப்படுத்தினான். காவின் கார் முந்தியது. ஆனால் "கா"விற்கு புரிந்துப் போனது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான். அந்த காரை செலுத்தியவன் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.

எதிரே வந்த கண ஊர்தி அடித்து நொறுக்கி எங்கு வீசி எரிந்தது என்று தெரியவில்லை. பின்னால் வந்த காரை செலுத்தியவன் மனமுடைந்துப் போனான். காவும் நகுலனும், மலைச் சரிவில் உருண்டு கொண்டிருப்பதை ஆங்காங்கே சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறென்ன செய்து விட முடியும் என்கிற தொனியில்.

கார் வெடித்துடைக்கும் சில மணித் துளிகளுக்கு முன்னர் காரில் வானதியின் குரலில் நகுலனின் கவிதை ஒலித்துக் கொண்டிருந்தது கர கர குரலில்..

"எனக்காக யாரும் இல்லை,

ஏன்

நான் கூட இல்லை"

Tuesday, March 15, 2011

அஞ்சல் பெட்டி - சிறுகதை


ஒற்றை மார்பை மறைக்கும் மேல்துண்டு, வத்திப்போன வயிற்றை கொடிமலர் போல சுற்றிக் கொண்டிருக்கும் அரைஞான் கயிறு, அதுப் பிடித்துக் கொண்டிருக்கும் அரை முழ வேட்டி என வாழ்வாங்கு வாழ்பவர் தாத்தா.

ஈரைந்துப் பருவத்தின் சுட்டித் தனம், வெள்ளைநிற மேலாடை, பட்டில்லாத ஆனால் பட்டுப் போகாத, பட்டு மாதிரியான ஒரு பாவாடை கட்டி, தன் பருவத்தின் சுமையை சுமை என்றே தெரியாமல் பருகும் யாழினி. தாத்தாக் கைப்பிடித்து நடக்கையில் அவரது வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தடுமாறினாலும், ஒரு நாளும் "மெதுவாப் போ" தாத்தா என்று கூக்குரல் எழுப்பாதவள். எப்படியாவது ஒரு நாளாவது தன் தாத்தாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து நடந்துவிட வேண்டும் என்று அவள் மனம் முழுக்க ஆசைகளை ஆர்த்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருப்பாள். அந்த நேரத்தில் எதுப் பற்றியும் கவலைப் படாமல் வேகமாக நடக்கும் தன் தாத்தாவின் முகம் பார்த்து தன் நேரிழையை சரி செய்துக் கொண்டு மீண்டும் வேகமாக நடக்க முயர்ச்சிப்பாள்.

அவள் எப்போதும் தன் தாத்தாவின் எல்லா குறைகளையும் நிறையாகவே பார்த்து பழக்கப்பட்டவள். கன்னங்கள் ஒட்டிப் போய், ஜீவனற்று கிடக்கும் அந்த முகம், துருத்திக் கொண்டிருக்கும் அந்த பற்கள், மதர்த்து எழும் அந்த வயிறு என தாத்தாவின் அந்திமக் கால அழகு அவளுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு இரவும், தன் தாத்தா சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே அந்த கதையின் உலகத்திற்குள் சென்று உறங்கி விட்டாலும், மறுநாள் அவளுக்கு வேறொரு கதை தேவைப்படும். பேய்க் கதைகளை சொல்லும்போது இருளின் குரூரத்தில் தாத்தாவின் ஒற்றைப் பல் கொடுக்கும் பயம் அவளை இருண்மையின் அகலாத பக்கங்களுக்கு கொண்டு சென்றாலும், ஆற்றவொண்ணா வலியை ஏற்படுத்தினாலும், அவளுக்கு மீண்டும் அதைவிட குரூரமான பேய்க் கதை தேவைப்படும்.

"அண்ட சராசரமே அடங்கி நிற்க... மரம், பறவை, எல்லாம் ஒடுங்கிப் போக... டக்...டக்..டக்.. நு ஒரு சத்தம்..அப்படியே ஒரு பெரிய அமைதி... உஸ்... உஸ்ஸ்.. காத்து மெதுவா அடிக்க ஆரம்பிக்குது.. திடீர்னு கதவு மூடுது. சன்னலெல்லாம் அடிச்சி அடிச்சி சாத்துது. மறுபடியும் அப்படியே ஒரு பெரிய அமைதி.. அஞ்சு நிமிஷம் எதுவும் ஆடாம அசையாம நிக்குது. அடுத்த நொடியில பேய் உள்ள வந்து.. வந்து.. என்று தாத்தா தன் நீண்ட விரல்களை யாழினியிடம் கொண்டு செல்வதற்குள் அவள் பயத்தில் அலற மறுநாள் காய்ச்சலே வந்துவிடும். அதற்கு தாத்தா வேறொரு கதை சொல்லி காய்ச்சலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வித்தையையும் கற்று வைத்திருந்தார். மலைமேல் அமைந்துள்ள குடிசையில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர தாத்தாவுக்கு ஒரு பெரிய வேலை உண்டு. ஒவ்வொரு முறையும் கடிதம் வரும்போது தாத்தா யாழிணியைக் கூட்டிக் கொண்டே மலை முகட்டில் இறங்கி தினையூர் கிராமத்து கணக்கு வாத்தியார் சிவதாணுப் பிள்ளையிடம் சென்று பணம் வாங்கி வருவார். அடுத்த ஒரு மாதத்திற்கு அதுதான் அவர்களுக்கு உணவளிக்கும் காருண்யம்.

கிளிங்...கிளிங்..மணியோசை சப்தத்தோடு 'போஸ்ட்'... என்று கூறிக் கொண்டே தாத்தா வருமுன்னரே தூக்கி எறிந்துவிட்டு அனாயசமாக பறந்து சென்றுவிட்டார் போஸ்ட்மேன். வயதான காலத்தில் தட்டு தடுமாறி ஓடி வருவதற்குள் அவர் முகத்தில் பட்டு கீழே விழுந்த காகித பட்சிகள் அவரை ஏளனம் செய்வது போல் சிரித்து நின்றன.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன. ஒவ்வொரு முறையும் தபால்காரர் தூக்கி எறிவதும், தாத்தா பொருக்கி எடுப்பதுமாக இருப்பதை யாழினி தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு வேலை போஸ்ட்மேன் மாமாவுக்கும், தாத்தாவுக்கும் ஏதோ சண்டையாக இருக்குமோ என்று அவள் மனதுக்கு சமாதானம் சொன்னாலும், அந்த சின்ன அறிவு சனாதானமாய் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தாத்தா தினையூர் நோக்கி புறப்பட்டார். பேத்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவர் நடக்கும் அழகே தனி. இறங்கி செல்லும் சாலைகளில் பேத்தி சறுக்கி விழுந்துவிடுவாலோ என்று தன உள்ளங்கைக்குள் அவள் விரல்களைப் பதித்துக் கொண்டு முகட்டில் அவர் இறங்கி செல்வதை மற்றவர்கள் எப்போதும் கேலிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

"பாரு கிழவன் பேத்திய மாட்ட இழுத்துப் போரதுப் போல் இழுத்துட்டுப் போறான்"

அன்று தினையூர் நோக்கி செல்கையில் தான் யாழினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். எப்போதும் அவள் வீட்டில் கடிதத்தை தூக்கி எரிந்து விட்டு செல்லும் போஸ்ட்மேன், கோந்து மாமா (எப்போதும், யாரிடம் பேசினாலும் கோந்து போல் ஒட்டிக் கொண்டிவிடுவதால் கிராமத்தில் அவருக்கு அந்த பெயர், ஊரில்) வீட்டில் மட்டும் வண்டியை விட்டு இறங்கி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு போவத்தைப் பார்த்தாள். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லையென்றாலும், மீண்டும் ஒரு முறை தாத்தாவின் கை இடுக்கையில் இருந்து திரும்ப முடியாமல் மெதுவாக திரும்பி பார்த்தாள். மெதுவாய்.. மெதுவாய்.. இன்னும் மெதுவாய்..கால்கள் தட்டுதடுமாறி முன்னோக்கி சென்றன.

மறுநாள் குப்பைகளில் இருந்து நிறைய காகித அட்டைகளை அவள் பொருக்கி எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்த தாத்தா "ஏ ஆத்தா என்ன பண்ற அங்க.. அங்கன எல்லாம் போகக் கூடாது வா இங்கன" என்றார்.

தாத்தாவின் அழைப்பை நிராகரித்தவளாய் மீண்டும் அட்டைகளை தேடிக் கொண்டிருந்தாள். முக்குக்கு சென்று கோந்து மாமா வீட்டில் இருந்த அஞ்சல் பெட்டியை ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தாள். மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து அட்டைகளை பல்வேறு அளவுகளில், வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டாள். பிஞ்சுக் கைகளில் கத்தரிக் கூட பிடிக்க இயலாமல் காய்கறி வெட்டும் கத்தியில் அட்டைகளை கத்தரித்தாள். ஒரே ஒரு அட்டையில் துளையிடும்போது கையில் கத்திப் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. ஆனால் அதனை பெரிய விடயமாக பாவிக்காத அவள் காரியமே கண்ணாய் இருந்தாள். வெட்டிய அட்டைகளை ஒவ்வொன்றாக இணைக்க பசை தேவைப்பட்டது. ஆனால் பசை வாங்க தாத்தாவை காசு கேட்டால் திட்டுவார் என்று அவளாகவே யூகித்துக் கொண்டு, சோற்றுப் பருக்கைகள் கொண்டு அட்டைகளை ஒட்டினாள். இருந்தாலும் அவை சரியாக ஒட்டிக் கொள்ளவில்லை. பூவில் வந்தமரும் பட்டாம்பூச்சி தேனெடுக்க பல்வேறு கோணங்களில் அமர்ந்துப் பார்த்தப் பின்னர் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து அமருவது போல் அட்டைகளை ஒட்ட பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியாக வெள்ளைத்தாள்களை இணைப்பானாக பயன்படுத்தினாள்.

அவை, அட்டைகளை ஒரு வழியாக இணைத்தது. இன்னும் அவள் நினைத்த வடிவத்தில் அந்த அட்டைகள் அமரவில்லை. அதற்கு இன்னும் அட்டைகள் தேவைப்படவே, தனது பள்ளிக்கூட நோட்டிலிருந்து சில அட்டைகளை கிழித்து பயன்படுத்தினாள். பேத்தி விளையாடக் கூட செல்லாமல் ஏதோ அட்டைகளை வைத்து செய்வதை பார்த்த தாத்தா முதலில் வையத்தான் செய்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அது ஒரு வடிவத்திற்கு வருவதைப் பார்த்ததும், அமைதியானார். அன்று அவள் நினைத்த உருவத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். உண்ண வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளையும் சேர்த்து இதற்காக பயன்படுத்தினாள். இப்போது பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே ஒரு சின்ன புன்னகை மட்டுமே பூத்திருந்தது. ஒற்றைப் பல்லை துருத்திக் கொண்டு தாத்தா சிரிக்க, வெட்கப் பட்டுக் கீழே குனிந்துக் கொண்டு பேத்தி சிரிக்க மீட்டப்படாத வீணை ஒன்று மீட்டப்பட்டது போல் ஒரு உணர்வில் தத்தா கொக்கரித்தார்.

இப்போது மீண்டும் முக்கில் இருக்கும் கோந்து மாமா வீட்டிற்கு சென்று அஞ்சல் பெட்டியைப் பார்த்து வந்தாள். அவளுக்கு இப்போது தேவை சிகப்பு வண்ண தாள்கள். அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தாத்தா தானாகவே கடைக்கு சென்று சிகப்பு வண்ணத் தாள்களை வாங்கிக் கொண்டு வந்து பேத்தியின் அருகே வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து சிரித்தார். அவளுக்கு சிரிக்க நேரம் இல்லை போலும், தாத்தாவை மேற்கொண்டு பார்க்காமல் வேலையைத் தொடங்கினாள். மிக நேர்த்தியாக கோந்து மாமா வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு அஞ்சல் பெட்டியை அவளும் செய்து விட்டாள்.

ஆனால் அதை இப்போது எங்கே வைப்பது என்று யோசித்தால். நாயக்கர் மாமா வீட்டில் இருப்பது போன்ற அகன்ற கதவு இல்லை. அவளுக்கு தெரியவில்லை, முதலில் அவர்களுக்கு இருப்பது போன்ற வீடே நமக்கு இல்லை என்று. ஆனால் அவளுக்கு கதவு இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. இப்போது அந்த அஞ்சல் பெட்டியை எங்கே தொங்கவிடுவது?.. வாசலருகே பதின்பருவ பெண் போல் வளர்ந்திருந்த வேப்பம் மரத்தில் ஒரு ஆணி அடித்து அதில் தொங்கவிட்டாள். அது போஸ்ட்மேன் மாமா வண்டி ஓட்டிட்டு வர ரோட்டுக்கு மிக அருகாமையிலேயே இருந்தது அவளுக்கு மகிழ்ச்சி.
கரு தரித்த பெண் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருப்பது போல் போஸ்ட்மேன் மாமா எப்போது வருவார் என்ற ஆவலுடன் யாழினி காத்திருந்தாள்.

அன்று காலை, வாசலின், வேப்பமரத்து நிழலில் தன் தோழிகளுடன் பாண்டியாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். ஒற்றைக் காலில் மீனுக்காக தவமிருக்கும் கொக்கு போல் மிக லாவகமாக பாண்டியாட்டத்தில் ஒற்றைக் காலில் அவள் ஆடும் அழகை வச்சக் கண் வாங்காமல் தாத்தா மட்டுமின்றி அந்த கிராமமே பார்த்து லயிக்கும். கைகளால் பாவாடையை முழங்கால் வரைத் தூக்கிக் கொண்டு, கழுத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு, சிறிய கல்லை இடது காலின் பெருவிரலில் பொருத்திக் கொண்டு, கல் கீழே விழாமல் அடுத்தப் பகுதிக்கு அவள் சென்று முடிக்கும் வரை பார்ப்பவர்களுக்கு நெஞ்சு பட படவென்று இருக்கும். பாருக்கும் எல்லோரையும் வயது வித்தியாசமின்றி தனது ஆட்ட நேர்த்தியால், உள்ளே இழுத்து சொக்க வைக்கும் பெருந்திராணி பெற்றவள் அவள்.

அவள் ஆட்டம் முடிந்ததும், போஸ்ட் மேன் மாமா தூர வருவதை பார்த்துவிட்டாள். பேத்தியாட்டம் முடிந்ததும், தாத்தா உள்ளே சென்றுவிட்டார். எல்லா சப்தங்களும், நின்றுப் போய், எல்லா அசை பொருட்களும் அசைவற்றுப் போய் ஒட்டுமொத்தமாக போஸ்ட் மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்தவாறே இருந்தது. அவள் போஸ்ட் மேனை பார்க்காமல் திரும்பிக் கொண்டிருந்தாள். போஸ்ட்மேன் அவளைத் தாண்டியதும், மெதுவாய் தலைத் திருப்பிப் பார்த்தால். போஸ்ட்மேன் வேப்ப மரத்தினருகே வந்துவிட்டார். டக்.டக்.. ட..ட..என்று இதயத் துடிப்பும் மிக மெதுவானது.... விழிகளோ இமை இருப்பதையே மறந்துப் போனது.

இந்த முறை அவள் வீட்டிற்கு கடிதம் வரவில்லை.. போஸ்ட்மேன் வேகமாக சென்றுவிட்டார். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, ச்ச... என்று வாயை சுழித்திக் கொண்டாள். உள்ளே ஓடிப் போய் "ஏன் தாத்தா இந்த மாசம் நமக்கு கடிதாசி வரல" என்றாள். எனக்கு எப்படிமா தெரியும். நாளைக்கு வருமோ என்னவோ? அதெல்லாம் வந்தா ஆச்சி.. இல்லனா ஒன்னும் பண்ண முடியாது மா",

"அப்போ நாம இந்த மாசம் தினையூர் போக மாட்டோமா", என்றாள்.

இந்த வாரம் முழுக்க கடிதாசி வரலானா, அடுத்த வாரம் நேர்ல போய் பார்க்கலாம் மா"

ஆசை ஆசையாய் செய்த அஞ்சல் பெட்டிக்கு என்றாவது ஒரு நாள் போஸ்ட்மேன் மாமா கடிதாசி கொண்டுவார் என்று அவள் காத்திருந்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு கடிதாசி வரவில்லை. போஸ்ட் மேன் அவ்வழியே செல்லும்போதெல்லாம் ஓடி வந்து அவர் கடிதாசியை அஞ்சல் பெட்டியில் போடுவாரா, என்று பார்த்து, ஏமாந்து முகத்தை கீழே புதைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுவாள்.

அந்த அஞ்சல் பெட்டி செய்ய அவள் செலுத்திய உழைப்பைக் காட்டிலும், அதனை தனது தாத்தாவுக்கான பெரிய அடையாளமாக அவள் கருதினாள். இனி தாத்தாவும் ஓடோடி சென்று கடிதாசி வாங்க வேண்டாம். போஸ்ட் மேன் மாமாவும் கடிதாசியை தூக்கிப் போடா வேண்டாம். கடிதாசியும் ஒரு போதும் ஈரத்தில் விழாது என்றும் அவள் மனதுக்குள் மத்தாப்பூ பூத்து, நொடிக்குள் அடங்கி போனது போல் ஆனது. என்றாவது கடிதாசி வருமென்று அவள் காத்திருந்தாள்.

ஒரு மழைக்காலத்தில் அட்டையாலான அஞ்சல் பெட்டி முழுக்க நைந்துப் போனது. பல மாதங்களாய் கடிதாசியும் வரவில்லை. இனி அஞ்சல் பெட்டி எதற்கு என்று அவளும் அதை அப்படியே தூக்கி எரிந்து விட்டு குடிசைக்குள் செல்கையில்.. "பெரியவரே போஸ்ட்" என்று கடிதாசியை வீட்டுக்குள் தூக்கி போட்டுவிட்டு போஸ்ட்மேன் சென்றுவிட்டார். மழையின் ஈரத்தை உள்வாங்கி இருந்த தரையில் பட்ட கடுதாசியில் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. தாத்தா ஓடி வந்தார்.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன.

யாழினியின் கண்கள் குப்பையில் தூக்கி எறியப்பட்ட அட்டையாலான அஞ்சல் பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தது. உதடுகளை சுழித்துக் கொண்டு மீண்டும்
தன் நோட்டுப் புத்தகங்களை எடுக்க விரைந்தாள். நாளை மற்றுமொரு நாளே..