Tuesday, May 26, 2009

என் சகோதரன் (சக உதிரன்)



மரணம். மாறாத ரணத்தை எற்படுத்துவதாலேயே அதற்கு மரணம் என்று பெயர் வந்ததோ என்னவோ. ஒரு சில மரணங்கள் ஒரு சிலரது வாழ்க்கையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை கொண்டது. ஆதிகாலத்தில் மரணம் குறித்த பயம் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுள்ள குடும்பப் பிணைப்பு அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உறவுகள்தான், இந்த அன்புதான் நம்மை நிலைகுலைய செய்கின்றன. 

அது, நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் சொந்த வீட்டை விற்று பல வருடங்கள் கழித்து தற்போதுள்ள தரமணியில் 1400 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக குடிசைக் கட்டிக்கொண்டு குடியமர்ந்தோம். அன்றைய நாளில் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சுகம் ஏற்பட்டது. மீண்டும் சொந்த வீடு. மிக அழகான இடத்தில். நல்லக் காற்று, பக்கத்தில் கல்லுக்குட்டை எனப்படும் ஆறு, மிக ரம்மியமாக இடம். முதல் வேளையாக ஒரு செடியை வைத்து அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கினேன். அங்கு அப்போது தண்ணீர் வேண்டுமென்றால் அவரவர் இடத்தில் கிணறு தோன்டிக்கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் வீட்டில் பின்புறத்தில் கிணறு தோண்ட ஆயத்தப்பட்டோம். என் ஆசைக்காக முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு வைத்திருந்தார்கள். நான் செடி வளர்ப்பதற்காக அந்த இடத்தை விட்டு வைக்க சொன்னேன். நிறைய செடிகள் நட்டு வைத்து பக்கத்து கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினேன். எங்கள் கிணறு தோண்டும் பணி பாதி நிறைவடைந்தது. அப்போது எனக்கு தெரியாது கிணறுத் தோண்டும் பணி இதோடு நின்று விடும் என்று. 

தரமணியில் இடம் வாங்கிவிட்டு குடிசைக்கட்ட அப்போது என் தந்தை ஒருவரிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில நாட்கள் கழித்து கடன் கொடுத்தவர் வந்து என் அம்மாவிடம் கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டி விட்டு சென்றார். இதனை கண்ட என் மூத்த அண்ணன் எப்படியாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். முதலில் சொன்னது போல் என் மூத்த அண்ணனுக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதனால் அவரை யாரும் வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது இல்லை. ஆனால் நிலைமையை உணர்ந்து அவரே அந்த வேலைக்கு சென்றார். 

நானும் பள்ளிக்கூடம் செல்வதற்காக கிளம்பினேன். . அதுவரை மகிழ்ச்சியாக இருந்த மனம் அன்று கொஞ்சம் துவண்டது. காரணம் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். மிக நீண்ட தொலைவு. நடந்து வரும் வழி ஒரு காடு. அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவு. ஒருவித பயம் என்னை ஆட்க்கொண்டிருந்தது. நடந்து நடந்து கால்கள் வலிக்க பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் சாயங்காலம் இதே தொலைவு நடக்க வேண்டுமே என்கிற பயம் என் மனது முழுதும் நிறைந்திருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு மீண்டும் நான் செல்ல மாட்டேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அன்று மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு நானு என் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் அயர்ந்த நான் பள்ளிக்கூட திண்ணையில் போய் அமர்ந்தேன். அந்த சமயம் சாலையில் சைக்கிளில் வந்த ஒருவர் (முன்னரே சொன்னது போல் பள்ளிக்கூடம் சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.) 

"டேய் உன் பேரு அருண் தானே.. உங்க அண்ணன் பேரு வேலு தானே என்றார். ஆமாம்" என்றேன்.

உடனே என்கூட வாடா என்றார். ஸ்கூல் இருக்கு இப்ப வர முடியாது என்று சொன்னேன். அவரின் கண்கள் கலங்கியது. "டேய் உங்க அண்ணன் செத்துக் கிடக்கிறான் டா என்றார். வார்த்தைகளை சரியாக உள்வாங்காத நான் அப்படியா நான் ஸ்கூல் முடிஞ்சதும் வரேன்" என்று அப்பாவித் தனமாய் கூறி நின்ற கணம் எனக்குள் இன்றும் வலிக்கிறது. 

பிறகு அவரே என்னை சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு என் அம்மாவை பார்க்க சென்றார். காரணம் புது இடம் அவருக்கு தெரியாது. எனவே நான் படிக்கும் பள்ளிக்கு வந்து என்னை எங்கள் புது வீட்டை காட்ட அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் முன்னர் வசித்த களத்து மேட்டுத் தெருவில் இருந்த மக்கள் என் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சென்று விட்டார்கள். 

எனவே இறந்துப் போன என் அண்ணனை நான்தான் முதலில் பார்க்க சென்றேன். இன்றைய கந்தன்சாவடியில் உள்ள சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும்போது லுங்கியை தூக்கிக் கட்ட கைகளை பின்னே எடுத்தபோது, அருகிலிருந்த மின்கம்பிகள் தாக்கி அவர் இறந்துபோனார் என்று தெரியவந்தது. ஆனால் அப்போதும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இது எங்க அண்ணன் இல்லை. அவர் காலையில் ஷேவிங் செய்துக் கொள்ளவில்லை. முகத்தில் தாடி இருந்தது. என்று கேனைத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் தான் எனக்கு தெரியும் மின்சாரம் தாக்கி அவர் முகம் அவ்வாறானது என்று. 

சோகத்தின் சுவடுகள் என் நெஞ்சில் பதிய ஆரம்பித்த முதல் கணம் அது. அதுவரை பொருளாதார ரீதியில் மட்டுமே சரிவைக் கண்ட என் குடும்பம் முதன்முதலாய் ஒரு உயிரையும் இழந்து நின்றது. அண்ணனை அந்தக் கோலத்தில் கண்டதும் என் அம்மா கதறி அழுத நினைவுகள் இன்றும் என் நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றன. 

விவரம் தெரியாத நான் இது அண்ணனாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டி நின்றேன். நெஞ்சம் தேம்பி தேம்பி அழ நினைத்தாலும் கண்கள் வறண்டுப் போனதால் பிரமை பிடித்து மரம் போல் நின்றுக் கொண்டிருந்தார் என் தந்தை. சரியாக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது. அவரது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணப் பேச்சு எடுக்கலாம் என்று அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். என் காளான் காத்திருக்கவில்லை. ஒரு அனாதை விடுதியில் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தான் அம்மா அப்பா பாசம் தெரியும். அப்போதுதான் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். அவர் ஆசைப்படியே அனாதை விடுதியிலேயே பெண் பார்க்கலாம் என்று அவர்களும் நினைத்திருந்தனர். நான் விவரம் தெரிந்து என் மூத்த அண்ணனுடன் வாழ்ந்தக் காலங்கள் கொஞ்சம் தான். என் அவர்தான் எனது ரோல் மாடெல். அவர் உயரியதை மட்டுமே சிந்தித்தார். எறும்புக் கடித்தால் அதைக்கூட சாகடிக்காமல் அதற்கும் வலிக்காமல் தன் உடம்பிலிருந்து அதை அழகாக தூக்கி எறிவார். 

அவரது விழிகள் மாசுபட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போது ஒரு ஒளி அவரின் விழியில் குடிக்கொண்டிருக்கும். கடவுள் நல்லவர்களை மிக சீக்கிரமே தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போது எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இப்போதும் உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது.)

"நீ இருந்து எனக்கு கொள்ளை வச்சி, காரியம் செய்யணும். ஆனால் நீ இறந்து உனக்கு என்ன கொல்லி வைக்க வச்சிட்டேயேடா".. என்று இறுதியில் என் தந்தை கதறி அழுத அந்த காட்சி என் மனதுக்குள் பந்தல் போட்டு குடியேறிவிட்டன. 

மிக சந்தோஷமாய் நண்பர்கள் போல் வாழ்ந்துக் கொண்டு இருந்த எங்களுக்குள் அப்போதிருந்து ஒரு இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்பா பேசுவதே அரிதானது. அதன் பின்னர் தரமணி வீடு என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியாது. ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அம்மாவும் அப்பாவும் அதை அப்படியே விட்டது விட்டார்கள் ராசியில்லாத வீடு என்று. 

இதை எழுதும் இந்த நொடியிலும் கண்களில் நீர் கசிகிறது. 

Sunday, May 10, 2009

சுதா என்கிற மந்திரச் சொல்..


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண்ணின் பங்கு மிக இன்றியமையாதது. எனது வாழ்விலும் மூன்று பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒன்று எனது தாய். அடுத்து என் ஆசிரியர். மற்றோவர் என் அக்கா. இந்த மூவரையும் பற்றி பார்க்குமுன்.. நான்காவதாக ஒரு பெண் என் வாழ்வின் திசையை சற்றே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அவர் திருமதி சுதா. என் அம்மா, ஆசிரியர், அக்கா போன்றோர்கள் என் வாழ்வில் வெகு தூரம் என்னோடு பயணித்து வந்தவர்கள். ஆனால் திருமதி சுதாவோ நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போன்று என் வாழ்வில் தோன்றி மறைந்தவர். ஆனால் மின்னலின் வீரியம் போன்றே அவரும் வீரியம் மிக்கவர். எந்தவித குறிக்கோளும் இன்றி மிக சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை ஒரு திசை நோக்கி செலுத்தியவர். என்னை ஒருங்குப்படுத்தியவர். மிகப் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதித்தவன் இல்லையென்றாலும், மிக மோசமாய் வாழும் நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு. 

ஆரம்பத்தில் சொன்னது போன்று, நான் மிகப்பெரிய விஞ்ஞானியோ, தலைவனோ, ஒரு நிறுவனத்தை கட்டியாளும் மேதையோ அல்ல. மிகப் பெரிய அளவில் சாதித்தவனும் அல்ல. ஆனால் மிகப் பெரிய அளவில் சோதனைகளை சந்தித்தவன். தொடர் தோல்விகள், தொடர் துயரங்கள் என்று நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.  என்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இந்தப் பதிவுகள் அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்று துயரங்களோ, தோல்விகளோ நேர்ந்திருந்தால் அதை மறக்க செய்யும் ஆர்வமே இந்தப் பதிவு. துயரங்களோ, தோல்விகளோ ஒரு மனித வாழ்க்கையின் முடிவல்ல.. யாரோ ஒருவர் சொன்னது போல் "இதுவும் கடந்துப் போகும்" என்கிற வாசகம் எதற்கும் பொருந்தும். அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற துன்பமும் நிச்சயம் கடந்துப் போய் அடுத்த நிலைக்கு நம்மை இட்டு செல்லும். அதை நிரூபிக்கும் விதமாக நான் எழுதும் இந்தப் பதிவுகளை கருதுகிறேன். எனவே இவன் என்ன சாதித்துவிட்டான் இவன் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், பதிவுகளில் உள்ள பாசிடிவ் அம்சங்களை மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் சுதாவைத் தொடர்வோம். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு குடும்ப சூழ்நிலைக் கருதி கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். கொரியெர் கம்பெனி, பி. பி. ஒ. கம்பெனி, எப். எம். சி. ஜி. மார்கெடிங், என்று கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சில காலம் கழித்துவிட்டு, மனம் ஒன்றாமல் அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளிவிட்டு இறுதியாக பி.பி.ஒ தொழில் சில காலம் பணிபுரிந்தேன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஏக்கக் கனவுகள் மட்டுமே என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அதை விட குடும்ப சந்தோஷம் முக்கியம் எனக் கருதி, பணத்தேவைக்காக இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தக் காலமிது. மிக சாதாரணமான சம்பளம்தான். ஆனால் அதுதான் முதல் முறையாக நான் வாங்கிய மிகப் பெரிய சம்பளம். 2500/- ரூபாய். இரண்டாயிரம் ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை மாதம் முழுவதும் கை செலவிற்கு வைத்துக் கொள்வேன்.

அந்தக் கம்பென்யில் நேர்காணலுக்கு சென்றபோது ஒரு பெண்மணி கையில் ஒரு பையுடன், பார்ப்பதற்கு ஒரு மத்திய வயதுப் பெண்மணியாய் காட்சியளித்தார். அப்போது நான் அவரை சரியாக கவனிக்கவில்லை. வயது அப்படி. இளம் பெண்ணாக இருந்தால் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவரை எப்படிப் பார்ப்பது. ஆனால் சில நாட்கள் கழித்து அவரும் என் டீமில்தான் சேர்ந்தார். என்னோடுதான் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். திருமணமானப் பெண் என்பதனால் அவரிடம் அவ்வளவாக நான் பேசியதுக் கிடையாது. 

நாளடைவில் அவர்தான் நல்ல நட்பு ஏற்பட்டது. எப்போதும் ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கு ஒரு நல்ல ஆலோசகராய் மாறினார். ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கை கதைகள் கூறியும், திசைகள் இன்றி சுற்றித் திரிந்த என் மனதை ஒரு குறிக்கோளை சுற்றித் திரிய விட்டதும் அவரது வார்த்தைகள்தான். சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால் என்னை அடுத்தக் கட்டத்துக்கு என்னை அழைத்து சென்ற நொடிப் பொழுதுகள் அவை. அவர் எனக்கு ஆதரவாய் பேசுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பின்னாளில் நிஜமாயின. 

நான் விரும்பியப் படிப்பை பல ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் படிப்பு எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் திருமதி. சுதா தொடர்ந்து எனக்கு நம்பிக்கையளித்தார். ஏதேதோ ஆலோசனைகள் கூறினார். இறுதியில் எனக்கு அந்தப் பணம் கிடைத்தது. சில வருடங்களுக்கு மின்சாரம் தாக்கி எனது மூத்த சகோதரர் இறந்துப் போனார். அதற்காக மின்சார வாரியம் கொடுத்த நஷ்ட ஈடுதான் என்னையும் என் குடும்பத்தையும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. நானும் விரும்பிய அந்தப் படிப்பை படித்தேன். முதல் முறையாக நான் கண்ட கனவு நிறைவேறியது. அதன் பின்னர் எனக்கு திருமதி சுதாவின் வார்த்தைகள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது தம்பி, தங்கைகள் யாவரும் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு அடுத்து அந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது அவரது வார்த்தை. தொடர் தோல்விகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்ட காலம் திருமதி. சுதா என்னோடு பழகியக் காலம். 

கடவும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எஅன்க்குள் ஒரு மாய உணர்வு ஏற்பட்டது. தொடர் வெற்றிகள். தொடர் சந்தோசங்கள். யார் இவர் உண்மையில் எனது நாத்திகத்தை உடைக்க வந்த கடவுளா? அல்லது கடவுளின் தூதரா? குழப்பங்கள் எனக்குள் குடைப்பிடிக்கத் தொடங்கியது. வெற்றி மேல் வெற்றியாக நான் திக்குமுக்காடிப் போனேன். இறுதியாக ஆசைப்பாட்ட வண்டி, அழகிய வீடு சின்னதுதான் என்றாலும் சொந்த வீடு என்று தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இறுதியில் நான் ஆசைப்பட்ட அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் எனக்கும் வேலைக் கிடைத்தது. 

ஆனால் ஏனோ அவரின் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை. அவரின் முகவரியோ, தொலைபேசி என்னோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி தகல்வல்கள் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் இன்றும் சிந்திக்கிறேன்..ஏன் அவர் பற்றிய தகவல்கள் எதுவமே என்னிடம் இல்லை. உள்ளங்கைக்குள் உலகம் என்றாகிவிட்ட இந்த சூழலிலும் ஏன் என்னால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த மாயத் தேவதையை..


Sunday, April 26, 2009

ஏன் படிக்க வேண்டும்?



அகன்ற சாலை. சாலையின் இருமங்கிலும் வரிசை வரிசையாய் வாகனங்கள். குண்டூசி நுழைவதற்கே இடம் தேடும் நெருக்கடியில் சாலையின் மறுபக்கத்தை அடைய நினைக்கும் பார்வையற்றோரின் கையைப் பிடித்து, சாலையின் மறுபக்கத்தை அடைய உதவினால்.. அது ஒரு நிமிட உதவி ஆயினும், அந்த நேரத்தில் அது பேருதவி. வாழ்க்கையின் ஒவ்வொரு அடர்ந்த கணத்திலும், சுற்றி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட புத்தகங்கள் நமக்கு அத்தகைய உதவியை செய்கிறது. ஆனால் இன்னும் பலர் அதை சரியாக உணரவில்லை.

புத்தகம் படிப்பது என்பது ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டிய ஒரு சராசரியான நிகழ்வு. ஆனால் இன்றைய சமூகத்தில் புத்தகம் படிப்பவர் என்றால் மற்றவர்கள் அவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும்... என்னவென்று சொல்ல..

புத்தகம் படிப்பவர்களின் மனம், அறிவு எல்லாம் ஒரு தூய நிலையை அடைகிறது என்றால் மிகையல்ல.. குழந்தைகளின் கண்களில் உள்ளது போன்று ஒரு தெளிவு, புத்தகம் படிப்பவர்களின் அறிவிலும், மனதிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும். படித்தவர்கள்தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் என்றொரு வாதம் இங்கு எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. படித்தவர்கள் என்ற சொல்லே கடந்த காலத்தைக் குறிக்கிறது. அவர்களின் அறிவும் அவர்களை விட்டுக் கடந்துப் போய்விட்டது என்றே பொருள். தொடர்ந்து படிக்கும் யாரும் பிறருக்கு தீங்கு இழைக்கும் தவறுகளை செய்வது இல்லை. அவர்கள் நிகழ்காலத்தின் விண்மீன்கள். தங்களை எப்போதும் பெரிதுப் படுத்திக் காட்டிக் கொள்வதில்லை.



ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவிட்டு, புத்தகங்களை மூட்டைக் கட்டிவைத்து கடமையை சரிபார்க்கும் சராசரி மனிதர்கள், படித்தவர்கள் எனும் உயரிய சொல்லுக்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்கள் படிக்காத பாமர மக்களை விட சற்றே ஆபத்தானவர்கள். தவறான சூழ்நிலையில் தங்கள் படிப்பை அதன் பயனை வெளிப்படுத்த நினைக்கும் இவர்களின் போக்கே இந்த சமூதாயத்தை பலமுறை தவறான பாதைக்கு இட்டு சென்று விடுகின்றன.

பறந்து விரிந்த இந்த உலகின் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப் படவேண்டியவை. என்றோ படித்து வாங்கிய பட்டம் ஒரு நாளும் உங்கள் உதவிக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளை பெற்றோர் அவர்களுக்கு தொடர்ந்து ஒரு சில வருடம் மட்டும் உணவு கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பற்றி அக்கறை இன்றி திரிந்தால் அவர்கள் மனுதர்ம சட்டப்படி தண்டனைக்குரியவர்கள். அது போலத்தான் உங்கள் அறிவும் ஒரு பட்டப் படிப்போ, பட்ட மேற் படிப்போ உங்கள் அறிவிற்கு நீங்கள் கொடுக்கும் சரியான உணவல்ல.. தொடர்ந்து அதற்கான உணவு பரிமாறப் படவேண்டும். அது சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம். அனைத்து தரப்பட்ட புத்தங்களையும் வாசிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.



புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தினை புரட்டும்போதும், வாழ்வின் ஒவ்வொரும் பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இதைத் தெரிந்துக் கொண்டு நான் என்ன பண்ண போகிறேன் என்கிற எண்ணமே உங்கள் முன்னேற்றத்தின் முதல் எதிரி. கற்றுக் கொள்ளத் துடிக்கும் ஆர்வமே உங்கள் முதலீடு. உலகின் உள்ள அனைத்தையும், அனைத்தின் இயக்கங்களையும் தெரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கு புத்தகங்கள் உங்களுக்கு சிறு அளவிலாவது உதவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ளுங்கள். அதனை ஒரு பணியாகவே நினைத்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு பழக்கமாகிப் போகும். ஒரு பொருளுக்கு அடிமையாவது இப்படித்தான். நீங்கள் புத்தகத்துக்கு அடிமையாகுங்கள். உலகம் உங்களுக்கு அடிமையாகும். உங்கள் அன்புக்கு அடிமையாகும்.

ஏன் படிக்க வேண்டும்?


உலகில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூலக் காரணமே புரிந்துணர்வு இல்லாமையே. பாரம்பரியம் மிக்க பாரத தேசத்தில் கூட லட்சக் கணக்கில் விவாகரத்து வழக்குகள், கொலை, கொள்ளை, தீய எண்ணங்கள் போன்ற பல எதிர்வினை செயல்களுக்கு மூலக் காரணமே ஒரு சிலரின் மனம் பன்படாமையே. 

காய்ந்துக் கிடக்கும் களிமண்ணைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நீருடன் அவற்றை கலந்து இலகுவாக்கி பின்னர்தான் நாம் நினைத்த வடிவில் அவற்றை கொண்டு வர முடியும். அது போலதான் களிமண்ணாய் இருக்கும் மனித மனமும் பண்பட படிப்பு எனும் நீர் கலக்க வேண்டும். 

படி (படிப்பு) என்ற சொல்லை மேலோட்டமாக பார்த்தல் அது ஒரு சாதாரண வார்த்தைதான். ஆனால் அதன் ஆழத்தை உணர்ந்துக் கொண்டால் நாமும் ஆழ உழலாம். 

சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!


இவ்வுலகம் எப்படி படிப்படியாய் நாகரீக வளர்ச்சி அடைந்து இன்று தொழில்நுட்பத்தில் அரக்கனாக இருக்கிறது என்றால் என்ன காரணம்? யாரோ ஒரு மேதாவி படித்ததனால். யாரோ ஒருவன் தன் அறிவை விசாலப் படுத்த விரும்பியதால். படிப்பு உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றி உள்ள இந்த சமூகத்தையும் சேர்ந்தே களை எடுக்கிறது. 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் இல்லை.. ஆர்வமும் இல்லையே?


புகைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவன் மனதில் தோன்றக் காரணம் அவனை சுற்றி உள்ள சமூகம். அது ஒரு தனி மனித விருப்பமல்ல. ஆனால் புகைக்க ஆரம்பித்தால் அதனை எளிதில் யாரும் விடுவதில்லை. கெடுதல் தரக் கூடிய ஒரு நஞ்சே மனித மனதில் ஆழப் பதியும்போது ஏன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் பதியாது?

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்துப் பாருங்கள். அடுத்த நாள் அதற்கு நீங்கள் அடிமை. கடமையே என தினமும் ஒரு பதினைந்து நிமிடமாவது படியுங்கள். படிப்பதற்கும் ஒரு பயிற்சி தேவை. முதலில் உங்களுக்கு பிடித்த செய்திகள், திரைப்படம், அரசியல், பொது அறிவு என படியுங்கள். பின்னர் இலக்கியங்கள் மீது உங்களுக்கு தானாகவே ஆர்வம் ஏற்படும். 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் நேரம் ஒரு பொருட்டல்ல. கழிவறையில் அமர்ந்திருக்கும் அந்த நேரத்தை படிக்க செலவிடுங்கள். உங்கள் உடலின் கழிவுகள் மட்டுமல்ல. மனதின் கழிவுகளும் சேர்ந்தே அகற்றப்படும். 

படித்துப் பாருங்கள். உங்கள் சினம் தணியும். உங்கள் மனம் பண்படும். உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் சுகமாக மாறும். எதையும் உங்கள் மனம் இலகுவாக எடுத்துக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பறவைப் போல உங்கள் மனம் அந்தரத்தில் பறக்கும். உங்கள் அகம் அழகாகும். 

கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். உங்கள் பாரம் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.  இந்த உலகம் உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும்.


Thursday, April 23, 2009

பகுதி 6 - என் ஆசிரி(யை)யர்



சோகம் மட்டுமே புயலாய் வீசிய என் வாழ்வில் சில நேரங்களில் வசந்தமும் தென்றலாய் வந்து என்னை வருடியதுண்டு. இந்த வசந்த காலம், பனி மீது இருக்கும் மழைத்துளி போன்றது. நொடியில் கரைந்துப்போகும். 

அன்று ஆறாம் வகுப்பின் முதல் நாள். யூனிபார்ம் இல்லாமல் சுமாரான ஒரு ஆடை உடுத்திக்கொண்டு நானும் என் அக்காவும் பள்ளிக்கு சென்றோம். முதல் நாள் முதல் வகுப்பு எனக்கு பிடிக்காத ஆங்கிலப் பாடவேலை. வழக்கம் போல் அட்டெண்டன்ஸ் எடுத்துவிட்டு, ஒரு ஆங்கிலப் பாடலை (Poem) பாடம் எடுக்கத் தொடங்கினார் என் ஆசிரியர். எதேச்சையாக யாருக்காவது இந்தப் பாடல் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்தால் படியுங்கள் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் எழுந்துப் படிக்கத் தொடங்கினேன். காரணம் என் பெரிய அண்ணன் விடுமுறை நாட்களிலேயே எனக்கு அந்தப் பாடலை மனனம் செய்யும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார். எனவே அந்தப் பாடலை பார்க்காமலும் என்னால் சொல்ல இயலும். அப்புறம் பார்த்துப் படிக்க சொன்னால் விட்டு விடுவேனா.. துணிந்து  எழுந்து நின்று படித்தேன். 

அந்தப் பாடல்,

I know a face.. I love a face..  எந்தப் பிசிறும் இல்லாமல், தெளிந்த நீரோடைப் சொல்ல மிக அழகாக அந்தப் பாடலை பாடியாதாக பின்னாளில் என் ஆசிரியர் கூறக் கேட்டுள்ளேன்.  அந்தப் பாடல் தான் என்னை என் ஆசிரியருக்கும், என் ஆசிரியரை எனக்கும் அடையாளம் காட்டிய பாடல். இதோ இன்று வரை கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக தொட்டுத் தொடரும் ஒரு தெய்வீக உறவாகத் தொடர்கிறது. எனக்கு எழுத்தரிவைத் தந்த, அறியாமைப் பிணியைப் போக்கும் கல்வி எனும் அருமருந்தைத் தந்த அந்த மா ஆசிரியரை என் நெஞ்சக் கோவிலில் அனையா தீபமாக ஏற்றி வைத்துள்ளேன். எனக்கும் அவர்களுக்கும், கருத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், மாணவன் ஆசிரியர் என்கிற உறவில் ஒருபோதும் முரண் ஏற்படுத்தியதில்லை. காரணம் அவர்கள் கருத்தில் நான் மாறுபடக் காரணமே அவர்கள் கொடுத்த அந்தக் கல்வியறிவு தானே.

ஆறாம் வகுப்புத் தொடங்கி கல்லூரிப் பட்டப் படிப்பு வரை என் படிப்பு செலவை ஏற்றதோடு மட்டுமல்லாமல் ஆசிரியராய் எனக்கு  வழிகாட்டியாகவும், தாயாய் என்னிடம் பரிவுக் காட்டியும், பல நேரங்களில் நண்பனாய் என்னை தட்டிக் கொடுத்தும் என்னை ஒரு சிலையாய் வடித்த சிற்பி என் ஆசிரியை. திருமதி. புஷ்பராணி. திக்குத் தெரியாமல் திரிந்துக் கொண்டிருந்த என் வாழக்கையில் என் கைப்பிடித்து போக வேண்டியப் பாதைக்கு என்ன அழைத்த் சென்றவர் அவர். இன்னும் நான் போக வேண்டிய பாதை வெகு தூரம் என்றாலும் அதற்கான ஆற்றலை, உத்வேகத்தை எனக்களித்த பெருந்தகை அவர். 

என் ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறும் ஒரு கதை. 

ஒரு கட்ட பொம்மை (wood doll), பஞ்சு பொம்மை, களிமண் பொம்மை, சர்க்கரை பொம்மை அதாவது அந்தந்தப் பொருட்களால் செய்த பொம்மைகள். இந்த நான்கு பொம்மைகளையும் வைத்திருப்பவன் ஒரு நாள் அந்த நான்கு பொம்மைகளையும் தெரியாமல் தண்ணீரில் போட்டுவிட்டான். கட்ட பொம்மை நீரிலேயே மிதந்தது. பஞ்சு பொம்மை அணைத்து தண்ணீரையும் உறிஞ்சிக்கொண்டது. களிமண் பொம்மை மற்றும் சர்க்கரை பொம்மை இரண்டும் அந்த தண்ணீரிலேயே கரைந்துப் போனது. இதிலிருந்து உனக்கு எண்ணத் தெரிகிறது என்று என் ஆசிரியர் கேட்பார். பொம்மைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது என்று பதிலுரைத்திருக்கிறேன். பின்னர் என் ஆசிரியர் தொடர்வார். 

"அப்படி இல்லடா, கட்ட பொம்மை அந்த தண்ணீரிலேயே மிதக்குது இல்லையா, அதுக்கு தண்ணியப் பத்தியும் கவலை இல்லை. தன்னைப் பத்தியும் கவலை இல்ல. அந்த பொம்மைதான்  நீ னு நினைச்சுக்கோ, எப்பவுமோ இந்த சமூதாயம் வேற நாம வேற னு  நினைக்காம சமூதாயத்துக்கு தேவையான எல்லா நல்லதும் செய்யணும். அடுத்து பஞ்சு பொம்மை இருக்கிற தண்ணி எல்லாத்தையும் உரிஞ்சிக்கிட்டது இல்லையா.. அது மனிதர்களோட சுயநலத்தை காட்டுது. நீ அந்த மாதிரி சுயநலவாதியா இந்த சமூதாயத்திலிருந்து எல்லாத்தியும் உறிஞ்சிக்கிட்டு ஒதுங்கிவிடக்கூடாது. அடுத்ததா களிமண் பொம்மை, தீய வழியிலப் பொய் உன்னையும் கெடுத்துக்கிட்டு, இந்த சமூகத்தையும் கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடாது. களிமண் பொம்மை தண்ணியில கரைஞ்சி தன்னையும் அழிச்சிக்கிட்டு அந்தத் தன்னியவும் கெடுத்த மாதிரி, அடுத்து சர்க்கரை பொம்மை. இந்த மாதிரிதான் நாம வாழனும். நாம அழிஞ்சாலும் இந்த சமூதாத்துக்கு நல்ல விசயங்கள விட்டுட்டுப் போகணும். சர்க்கரை பொம்ம கரைந்தாலும், நல்ல இனிப்பானத் தண்ணிய கொடுத்துட்டுப் போன மாதிரி. என்பார் என் ஆசிரியர். 

இன்றும் இந்தக் கதை என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது என் ஆசிரியரின் மகள் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். காலம் சுழல்கிறது. இன்னும் பதிமூன்று நாட்களில் மகள் பதவியுடன், மனைவி என்கிறப் பதவியையும் சேர்த்து வகிக்கப்போகிறாள். மாப்பிள்ளை U.K. வில் கணினிப் பொறியாளராக இருக்கிறார். என் ஆசிரியரின் சொந்த அண்ணனின் மகன். காத்திருக்கிறேன் என் ஆசிரியரின் முகத்தில் பூக்கப் போகும் அந்தப் புன்னகைக்காக!

தொடரும்...


Tuesday, April 21, 2009

பகுதி 5 - உருண்டை சோறு



இளமையில் வறுமை கொடிது... என்றார் அவ்வையார். இளமையை எட்டிப்பார்க்காத வயதில் வறுமை கொடிதினும் கொடிது... 

அதுவரை செல்வசெழிப்பாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமையின் கோரதாண்டவத்தை பார்க்க நேர்ந்தது. வாழ்ந்து கெட்டவன் கதையானது எங்கள் குடும்பக் கதை. தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக எங்களுக்கு இருந்த நிலங்கள், வீடு என அனைத்தையும் விற்று கடனை அடைத்துவிட்டு, எங்கள் வீட்டின் வாசலில் என் தாயின் சேலையைப் பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் நான் நின்ற அந்தக் கணங்கள் இன்றும் நெஞ்சில் கணக்கிறது. 

இருக்கும் பொருட்கள் அணைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு போகும் வழித் தெரியாமல், வாடகை வீட்டுக்கு போகக் கூட நாதியின்றி நிர்கதியாய் நின்ற எங்களுக்கு அந்நேரத்தில் தனது இடத்தைக் கொடுத்து உதவியது, வேறு யாருமல்ல.. தனது இரண்டு கிரவுன்ட் நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள பணித்த என் தந்தையின் நண்பர்தான். அந்த நிலத்தை வாங்காததன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

அடிமேல் அடியாக கொட்டிவாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியின் கட்டிட வேளையில் ஈடுப்பட்ட என் தந்தை மேல் தளத்திருந்து கீழே விழுந்து விட கால் முறிந்து போனது. மருத்துவ செலவு, குடும்பத்தின் குறைந்த பட்ச உணவு செலவு என அனைத்துக்கும் மாற்று நபர் இல்லாமல் திண்டாடியது என் குடும்பம். என் பெரிய அண்ணன் படிப்பை விடுத்து கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன அண்ணன் பத்து வயதிலேயே கார் மெக்கானிக் செட்டில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்னொரு அண்ணன் சினிமா ஆர்வத்தில் கதை எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவரது ஆர்வத்தை கெடுக்க என் பெற்றோர்கள் நினைக்கவில்லை. ஆனால் வருமானம் போதாதக் காரணத்தால் என் அம்மாவும், அருகிலுள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 

அந்நாளில் இரவு நேரத்தில் மட்டுமே எங்களுக்கு ஒரு கை சோறு கிடைக்கும். பகல் நேரத்தில் ஒரே ஒரு வாழைப்பழம் மட்டுமே. வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சமைத்து பெரிய தட்டில் சோற்றை போட்டு அதில் குழம்பை குழைத்து சிறிய உருண்டையாக உருட்டி எங்கள் அனைவருக்கும் ஒரு கை கொடுத்துவிட்டு, ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்துவிட்டு, இறுதியாக இருக்கும் கொஞ்சம் சோற்றை மட்டுமே என் அம்மா உண்பார். நிலவு வெளிச்சத்தில், தாயின் அன்பில் நல்ல வேப்ப மரக் காற்றில், எனக்கு கிடைத்த அந்த ஒரு கை சோற்றின் சுகம் எத்துனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் இந்த அருமை அப்போது தெரியவில்லை. வறுமையில் எங்கே அருமை தெரிவது. 

கடைக்குட்டி என்பதால் எனக்கு மட்டும் சில வசதிகள் எப்போதும் உண்டு. வீட்டில் யாருக்கும் உணவு இல்லையென்றாலும், எனக்கு மட்டுமே அருகில் உள்ளவர்களிடம் கேட்டு வாங்கிக்கொடுப்பார்கள். பசி எடுத்தால், தட்டை கையில் எடுத்துக்கொண்டு, ஓங்கி மணி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருப்பேன். திட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். சில நாள் எனக்கு என்று சொல்லி வாங்கி வரும் சாப்பாடே எங்கள் அணைவருக்கும் ஒரு கை உருண்டை சோறாக அமைந்துவிடும். 

மறு நாள் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள். அரசாங்கப் பள்ளிதான் என்றாலும் அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் இல்லாததால் என் படிப்பும், அக்காவின் படிப்பும் கேள்விக்குறியானது. ஆனால் அந்த ஆறாம் வகுப்பின் முதல் நாள், முதல் வகுப்பில் நான் சந்திக்கும் ஒரு நபர்தான் என் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நல்லார் ஒருவர் உளரே.. அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை.. எனக்கு 
மட்டுமே பெய்யாமால் போய்விடுமா என்ன?

தொடரும்...


Sunday, April 19, 2009

பகுதி 4 - எங்கள் வீடு


பள்ளி நினைவுகள்தான் களம் என்றாலும் அதன் ஊடாக நான் தொட்டு செல்ல நினைக்கும் நினைவுகளில் முக்கியமானவை ஒரு சில.. அவற்றில் ஒன்று எங்கள் கொட்டிவாக்கம் வீடு.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை அடையாறுக்கும், அடையாரில் இருந்து கொட்டிவாக்கதிற்கும் குடிபெயர்ந்ததை முன்னரே பகிர்ந்து இருந்தேன். கொட்டிவாக்கத்தில் சுமார் 2400 சதுர அடியில் (ஒரு கிரவுன்ட்) இடம் வாங்கிக்கொண்டு மிக அழகாக ஒரு வீடும் கட்டிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தோம். எங்களுக்கு ஒரு வீடும் வாடகைக்கு விட மூன்று வீடுகளும் கட்டி இருந்தார்கள். மிக அழகாக பூந்தோட்டம், சிறிய அளவிலான கோழிப் பண்ணை, அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா, நான் என மிக அழகானதொரு குடும்பமாக குடியேறினோம். 

சில நாட்கள் கழித்து தோட்டத்தில் ஒரு வெண்டைக்காய் செடி வைத்து விட்டு அது முளைத்து வெளியில் வரும் வரை, தோட்டம்தான் நன் கண் முழிக்கும் இடம். சில நாட்கள் கழித்து முளை விட்டு வெளியில் வந்தது நான் விதைத்த விதை. ஏதோ சாதித்த விட்டது போன்ற ஒரு பிரம்மிப்பு. ஓ என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் வந்தேன். பளார் என்றொரு அரை விட்டார் என் தந்தை. (அதிகாலை நேரம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் தந்தை நான் கத்தியது கண்டு பயந்து, அந்தக் கோபத்தில் தான் என்னை அறைந்தார் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்). உலகையே மறந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன நான், தந்தை விட்ட அறையில் நொடிந்துப் போய் நின்றேன். பின்னர் அம்மா வந்து சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். 

அதன் பின்னர் பல் துலக்குவது, சாப்பிடுவது என பல நேரங்களை என் வெண்டைக்காய் செடியுடன்தான் கழித்தேன். விதை முளைத்து, செடியாகி, வெண்டை காய்த்து அதை பலமுறை நான் வெறும் வாயிலே தின்று இருக்கிறேன். வெண்டைக்காய் தின்றால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அம்மா சொல்லுமுன்னரே, பச்சை வெண்டைக்காயை தின்னப் பழக்கப்பட்டிருந்தேன் நான். நினைவு தெரிந்து நான் முதல் முதலாக விதைத்து, நன்றாக வளர்ந்து வந்த வெண்டைக்காய் செடியின் வளர்ச்சியை அணு அணுவாக ரசித்தேன். 

தோட்டம், கோழிப் பண்ணை என மிக அழகாக நகர்ந்த நாட்களின் கவர்ச்சி இன்னும் குறையாமல் என் மனதை ஆட்டுவிக்கின்றன. அந்நாளில் கொட்டிவாக்கம் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே மெத்தை வீடு. பக்கத்திலேயே தென்னை தோப்பு, அதனருகில் அழகிய ஒரு குட்டை (சிறிய நீர்நிலை). அதில் தண்ணீர் குறைந்து நான் பார்த்தது இல்லை. அந்நாளில் அந்த தெருவில் அதிக வீடுகளும் இல்லை. நாங்கள் வருவதற்கு முன்னர் அந்தத் தெருவில் விவசாயம் கூட நடைபெற்றதாக கேள்விப்பட்டேன். அந்த தெருவின் பெயரே களத்து மேட்டுத் தெரு. இவ்வளவு பெருமைகளும் வாய்க்கப்பெற்ற அந்தத் தெருவின் இன்றைய நிலையைப் பார்த்தால் நெஞ்சம் ஏனோ கணக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் ஒருத் தெருவையோ இந்த அளவு பாதிக்கும்போது நாடு என்ன ஆவது? இயற்கை னா என்னமா? என்று வருங்காலக் குழந்தைகள் கேள்வி கேட்காமல் இருந்தால் சரி.

எங்கள் வீட்டின் முன்புறம் கொஞ்சம் வளர்ந்திருந்த ஒரு வேப்ப மரமும் இருந்தது. அந்த அருமையான நிழலில் ஊஞ்சல் கட்டி ஆடியப் பொழுதுகளை களவாடிய காலத்தின் மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது. அந்த தெரு வழியேப் போகும் பலருக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது அந்த மரம். 

மரமும் நீர்நிலைகளும் சூழ்ந்த அந்த இடத்தில் அன்று வாடகைக்கு வரவே ஆள் இல்லை. பின்னர் மதுரையிலிருந்து எங்களைப் போன்றே புலம் பெயர்ந்த ஒரு குடும்பம், எங்கள் வீட்டில் வாடகைக்கு வந்தனர். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் படிப்புக்காக ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார் என் தந்தை. தமிழில் க ங் ச ந கூட தெரியாமல் இருந்த என்னை என் மூத்த அண்ணன் செதுக்கிய இடம் அந்த அறை. இரவு முழுவதும் கண் விழித்து என்னைப் படிக்க வைத்து என்னை மெருகேற்றிய இடம் அது. அந்நாட்களில் என் மூத்த அண்ணன் மீது எனக்கு ஏகக் கோபம் இருந்தது. விழுந்த அடி அப்படி. இன்று உணர்கிறேன் அந்த இரவுப் பொழுதுகளின் அருமையை. என் அண்ணனின் தியாகத்தை. ஆனால் அவரின் தியாகத்தை உணரும் இந்நாளில் அவர் எங்களுடன் இல்லை. 

இருந்தாலும் தமிழில் கொஞ்சம் தேறிய எனக்கு ஆங்கிலம் அடிபணியவில்லை. ஐந்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வில் ஒருத் தாளைக் கொடுத்து கேள்விகளுக்கு பதிலை குறிக்க சொல்வார்கள். ஆங்கிலத் தேர்வு முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். மற்றத் தேர்வுகளுக்கு விடைத்தாள், வினாத்தாள் வேறு வேறாக இருக்கும். ஆங்கிலத் தேர்வில் இரண்டுமே ஒன்றுதான். விடையைக் குறிக்க வேண்டும் அவ்வளவுதான். சத்தியாமாக சொல்கிறேன். ஒரு வினாவிற்கு கூட எனக்கு விடைத் தெரியாது. முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விட்டாச்சு. 

இதற்கு இடையில் அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிரவுண்டு நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுமாறு என் தந்தையை அவர் நண்பர் கேட்டுக் கொண்டார். என்ன காரணமோ என் தந்தை அதை வாங்காமல் இருந்து விட்டார். இதன் விளைவை பின்னாளில் அனுபவித்தோம். 

இப்போது இருக்கும் வீட்டில் இருந்து நடுத்தெருவுக்கு வருவோம் என்றோ, கறியும் மீனும் சாப்பிட்டு சுகமாய் வாழ்ந்த நாங்கள் ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை ஒரே ஒரு கை சாம்பார் சாதம் தின்று ஒரு வாழைப் பழத்துடன் சில மாதங்களை கழிப்போம் என்றோ அப்போது கனவிலும் நினைக்கவில்லை. காலம் சுழலும் வேகத்தில் யார் எங்கே தூக்கி எறியப்படுவார்களோ யார் அறிவது. விதி வலியது. என் தாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை அது. 

தொடரும்....


Friday, April 17, 2009

பகுதி 3 - கொல்லாம்பழம் (முந்திரிப்பழம்)



கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அன்றைய நாளில் முந்திரித் தோப்புகள் அதிகம் இருந்தன. அடுப்பெரிக்க சுளி (விறகு) பொறுக்க போகும்போது ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் முந்திரிப் பழங்களை பொருக்கி எடுத்து சாப்பிட்டுவிட்டு அதனால் ஏற்படும் தொண்டை கரகரப்பை ரசித்து வரவேற்று இருக்கிறேன். முந்திரிப் பழங்களை சாப்பிடும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சுகத்தை மனம் உணரும். இரண்டுப் பழங்கள் சாப்பிட்டாலே தொண்டை வறண்டு உள்ளுக்குள் ஏதேதோ செய்யும். அத்தனையும் மறந்து விட்டு மனம் மீண்டும் முந்திரிப் பழத்தை தேடும்.

பள்ளி வளாகத்தில் அதிகப்படியாக விற்கப்படும் பழங்களில் இதுவும் ஒன்று. என்னதான் காசு கொடுக்காமல் சுளி பொறுக்கும் இடங்களில் பொருக்கி தின்றாலும் பள்ளியில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து காசு கொடுத்து வாங்கித் தின்னும்போது அதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடியது போல் தோன்றும்.

முந்திரிப்பழம் விற்கும் ஆயா ஒரு அகன்ற பாத்திரம் முழுதும் (அந்தப் பாத்திரத்தை இங்கு அண்டா என்பார்கள்) முந்திரிப் பழங்கள் கொண்டு வந்து பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடி கீழ் விற்றுக் கொண்டிருப்பார்கள். அது உடம்புக்கு நல்லதல்ல. அதிகமாக யாரும் அதை வாங்கி தின்னாதீர்கள் என்று ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார்கள். படிப்பதற்காக பள்ளி செல்கிறோமோ இல்லையோ நானும் என் நண்பர்களும் பள்ளியில் உள்ள தின்பண்டங்களை வாங்கித் தின்பதற்காகவே நாள் தவறாமல் பள்ளிக்கு செல்வோம். அதற்கே தடை விதித்தால் எப்படி? ஒரு போதும் அவர்கள் சொல்லை நாங்கள் கேட்டதே இல்லை.

பாலவாக்கம் பள்ளி அப்போது ஓரளவுக்கு பெரிய பரப்பளவு கொண்டு இருந்தது. ஆனால் கட்டிடங்கள் அவ்வளவாக இல்லை. எனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மரத்தடி நிழலில்தான் பாடம் நடக்கும். முதலில் பள்ளிக்கு செல்லவே பயந்த என் மனம் பிறகு பள்ளிக்கு செல்ல விருப்பப்பட்டதற்கு காரணம் இந்த மரத்தடியில் பாடம் எடுத்ததால்தான். ஆசிரியர் பக்கத்து வகுப்பு ஆசிரியருடன் பேசிக்கொண்டிருப்பார். நானும் நண்பர்களும் மணலில் விளையாடிக் கொண்டு இருப்போம். பக்கத்திலேயே முந்திரிப் பழம் விற்கும் ஆயாவும் கடை போட்டிருக்கும். ஆசிரியருக்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுவிட்டு பக்கத்தில் இருக்கும் இன்னொரு பையனின் சட்டையில் கையைத் துடைத்துவிட்டு மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடர்வோம். (முந்திரிப் பழத்தில் ஒரு வித பிசு பிசுப்பான சாறு அதிகமாக வெளிவரும்).

பள்ளிக்கூடம் சாலையோரம் அமைந்திருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிப் பார்த்து விளையாடும் விளையாட்டு எங்களுக்கு சலிப்பேர்ப்படுத்தாத ஒரு முக்கியமான விளையாட்டு. அப்போது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை சாலையில் சிகப்பு நிற காரை பார்த்துவிட்டால் அன்றைக்கு எப்படியும் வீட்டில் இனிப்பு செய்து வைப்பார்கள் என்பது.  பல முறை அப்படி நடந்ததும் உண்டு. 

அன்றும் அப்படிதான். ஆசிரியர்க்கு தெரியாமல் முந்திரிப் பழம் வாங்கித் தின்னுக்கொண்டே சாலையில் போகும் வாகனங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். சிகப்பு நிறக் காரை வேறு பார்த்துவிட்டோம். வீட்டில் எப்படியும் இனிப்பு செய்து வைத்திருப்பார்கள் என்கிற மகிழ்ச்சி. மேலும் விளையாட்டில் அதிக கவனம் இருந்ததால் பழக்க தோசத்தில் கையில் ஒழுகும் சாற்றை பக்கத்தில் இருந்த பையனின் சட்டையில் துடைப்பதற்கு பதிலாக ஒரு பெண்ணின் சட்டையில் (அப்போது நான் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இரண்டாம் வகுப்பு) துடைத்துவிட்டேன். இதை என் ஆசிரியர் தற்செயலாக பார்த்துவிட்டார்.  பிரம்பெடுத்து என்னை பிண்னி எடுத்துவிட்டார் (அன்றோடு சிகப்பு நிறக் கார் நம்பிக்கை உடைந்துப் போனது). இதுதான் ஒரு ஆசிரியரிடம் படிக்கும் காலத்தில் நான் வாங்கிய முதல் மற்றும் கடைசி அடி. இன்னும் நான்கு வருடங்கள் கழித்து இதே பள்ளியில் அனைவரும் மெச்சும் அளவிற்கு நான் மாறுவேன் என்பதை அப்போது நானறியேன்.  

தொடரும்...