Monday, August 23, 2010

நாயகன்


ஒரு விழாவை, அதுவும் பொது விழாவை நடத்தி முடிப்பது எத்தகைய சிரமம் என்பதை அது தொடர்பானவர்கள் அறிந்திருப்பர். ஆனால் எனக்கு ஒரு விழாவை திறம்பட நடத்தி முடிப்பதில் எவ்வித சிரமும் இருப்பதில்லை. காரணம் மாதத்திற்கு இரண்டு மூன்று நிகழ்வை தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடத்துவதால் அதில் ஏற்படும், சங்கடங்கள், தடங்கல்கள் என அனைத்தையும் யூகித்தே அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதனையும் தாண்டி ஒரு சில குழப்பங்களும், சொதப்பல்களும் நேர்ந்து விடுவதை மறுப்பதற்கில்லை.


லெனின் எனும் ஒரு மாபெரும் சகாப்தத்தை சந்திக்கும் வரை குறும்படங்கள் மீதான பார்வையும், அவரை சந்தித்த பிறகான குறும்பட பார்வையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டது. புகழின் உச்சியில் இருந்த மனிதன், ஒரு படத்தின் வெற்றியையே தனது விரல் நுனியில் நிர்னைக்கும் திறமைமிக்க ஒரு படைப்பாளி எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு குறும்படத் துறை மீது தனது பார்வையை செலுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அது எல்லோராலும் முடிகிற காரியமுமல்ல. ஆனால் லெனின் என்கிற சகாப்தத்தால் மட்டுமே அது முடியும். அவர் இயக்கிய நாக் அவுட் என்கிற படமே தமிழின் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் இயக்கிய முதல் குறும்படம். இது சார்ந்து நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. லெனின் முதலில் குறும்படம் எடுக்கவில்லை. முன்னரே யாரோ ஒருவர் எடுத்திருக்கிறார் என்று போகிற போக்கில் திரியைக் கொளுத்திப் போட்டு செல்லும் சில சோக்காளிகள் இந்த சர்ச்சையை கிளப்பி செல்கிறார்கள்.


ஒரு கல்யாண வீட்டில் யாரோ ஒருவர் மணப் பெண்ணை பார்த்து இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்கேயோ பார்த்து இருக்கிறேனோ என்று கூற அவர் பக்கத்தில் இருந்தவன், தன் நண்பரிடம் யோவ் இந்த பொண்ண இந்த ஆளு இதுக்கு முன்னாடி யாரோ ஒரு பயன் கூட பார்த்து இருக்கிறாராம் யா என்று ஊதிவிட்டு அந்தப் பெண்ணின் திருமணத்தையே நிறுத்திவிடும் வித்தை தெரிந்தவர்கள் இங்கே பலர். அப்படிதான் போகிற போக்கில் எந்த அடிப்படை வரலாறும் தெரியாமல் லெனின் எடுத்தது தமிழின் முதல் குறும்படம் அல்ல என்று சொல்வதும்.. அப்படி சொல்பவர்கள் அதற்கான ஆதாராத்தோடு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் சார்பில் வெகுமதி உண்டு.


குறும்படத் துறையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதும், தமிழின் குறும்பட வளர்ச்சிக்காக தன்னுடைய தொழிலை உதறித் தள்ளிவிட்டு குறும்படங்களுக்கு இலவசமாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை செய்துக் கொடுப்பதையும், மும்பை, டெல்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் நடக்கும் குறும்பட விழாக்களுக்கு ஆர்வமுள்ளவர்களை தன் சொந்த செலவிலேயே அழைத்து சென்று ராஜ மரியாதை கொடுப்பதும் லெனின் அவர்களை தவிர வேறு யாரால் முடியும். குறும்படம் சார்ந்தே இயங்கும் நாங்கலல்லாமல் அவரை வேறு யார் சிறப்பிக்க முடியும். எவ்வித புகழையோ, பணத்தையோ, எதிர்பார்க்காமல் குறும்படம் சார்ந்த ஒரு விழாவிற்கு அழைத்தால் ஆட்டோ அல்லது பைக்கில் யாருடனோ ஒட்டிக் கொண்டு வரும் எளிமை வேறு யாரிடத்தில் நீங்கள் பார்த்துவிட முடியும். எல்லாமும் தாண்டி நல்லப் படங்கள் பற்றி இங்கே மணிக்கணக்கில் நீங்கள் விவாதிக்க வேண்டுமானால், நல்ல படங்கள் சார்ந்து ஒரு புரிதல் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் லெனின் அவர்கள் இல்லமே.


எனவே அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது என்றும், அடுத்த வருடம் அவர் பெயரிலான ஒரு விருதை குறும்படத் துறைக்காக பாடுபடும் ஒருவருக்கு கொடுப்பது என்றும் முடிவு செய்தோம். லெனின் இதனை விரும்பமாட்டார் முன்னரே அறிந்திருந்தோம். இருந்தும் அவர் விரும்பாததால் அவருக்கு நாங்கள் செய்ய வேண்டிய மரியாதையை எப்படி செய்யாமல் இருப்பது.. துணிந்து இறங்கினோம்.


எப்படியும் அவர் பற்றிய புரிதலை குறும்படத் துறையில் இயங்கும் ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திவிட வேண்டும். அவரின் நிறை குறை என எல்லாவற்றையும் துறை சார்ந்த கலைஞர்களுடன் விவாதிக்க வேண்டும். என எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம் நீண்டுக்கொண்டே போனது.


இறுதியாக தொடர்ந்து குறும்படங்களை ஏழு நாட்கள் வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் ஒளிப்பரப்புவது, ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினருடன், குறும்படங்கள் சார்ந்தும், லெனின் அவர்களின் ஆளுமை சார்ந்தும் விவாதிப்பது, பின்னர் எட்டாவது நாள் விருது தொடக்க விழா, மற்றும் லெனின் அவர்களுக்கு விருது கொடுக்கும் விழாவை நடத்துவது என்று முடிவு செய்தோம்.


அதற்கு முன்னர் விருதிற்காக கொடுக்கப்படும் பண முடிப்பு பத்தாயிரம் ரூபாயை எவ்வாறு திரட்டுவது என்று சிந்தனையில் உதித்தது விழா நிர்வாகக் குழு சிந்தனை. இதன் படி தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாட்டில் ஆர்வம் செலுத்தும் பத்து நல்ல உள்ளங்களை இணைத்து லெனின் விருது விழாவின் விழா நிர்வாகக் குழுவின் அனைத்து அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து ஆயிரம் ரூபாய் வாங்கி பத்தாயிரம் திரட்டுவது என்று முடிவானது. அதன்படி பத்துப் போரையும், பத்தாயிரம் ரூபாயையும் திரட்டினோம். மற்ற செலவுகளை நானும் குணாவும் செய்வது என்று முடிவானது.


எல்லாம் சரி விழாவை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தபோது லெனின் அவர்களின் பிறந்த நாளே இதற்கு சரியான நாள் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டோம்.


தொடரும்...

Monday, February 1, 2010

வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..

(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)

புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை.
விலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)


நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


"cheeta fight" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.


எந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.


ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். "வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்."


திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.


மதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.


"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்."


மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.


சென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல்லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.


ஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.


நாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.


முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

எல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்.

Thursday, September 17, 2009

சொல்லத் துடிக்குது மனசு...


நட்பு என்னும் ஒற்றை சொல்லில் எத்துனை ஆயிரம்
அர்த்தங்கள்...அபத்தங்கள்..அற்புதங்கள்..சுகங்கள்.. சுவடுகள்..சுமைகள்..காயங்கள்..


எப்போதும், நாம் யாரும், இவருடன் தான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி செல்வது கிடையாது. அது தானாக கனியும் மாயக் கனி. தொடக்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும், இரு உள்ளங்கள் காலம் என்னும் காற்றில் கரைந்து போய்.. நட்பு எனும் சாற்றை பருக தன்னை தயார் படுத்தி கொள்கின்றன. சிறு வயதில் ஏற்பட்ட பல இழப்புகள் எனக்கு எதன் மீதும் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. கடற்கரையின் மிக அருகில் என் வீடு.. பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவர்கள் என் வீட்டிற்கு வந்து வாடா பீச்சுக்கு போயிட்டு வரலாம் என்று என்னை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தாலும் கூட ஒரு குழுவாக கடற்கரைக்கோ, அல்லது வேறு எங்கோ எனக்கு செல்வதில் அப்போது உடபாடு ஏற்பட்டதில்லை.


என் மனம் அப்போது தனிமையைத்தான் அதிகம் விரும்பியது. ஆனால் காலப் போக்கில் மனதில் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய மறைய, மனதுக்குள் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய ஏதோ ஒரு புதிய உறவு தேவைப்பட்டது. அது சக மனிதர்களாக இருக்கலாம். புத்தகங்களாக இருக்கலாம். புதிய இடமாக இருக்கலாம். புதிய பள்ளியாக இருக்கலாம். ஏதோ ஒன்று மனம் புதிதாய் விரும்பியது. அந்த நேரத்தில் எனக்கு பெரிதும் கைக் கொடுத்தது புத்தகங்கள். என்னுடைய முதல் நண்பன் இவன்தான் யாராலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. காரணம் சிறு வயதிலேயே நாம் பலருடன் நட்பை கொண்டாடி இருப்போம், அது நட்பு என்று தெரியாமலேயே!!


அப்படிதான் எனக்கும், ஆனால் எனக்கு நினைவுத் தெரிந்து நான் பெற்ற முதல் நண்பன் வீரா. அவன் மரணத்திற்கு பின்னர் அந்த இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது. மனம் சகித்துக் கொண்ட அத்துனை துயரங்களுக்கும் பின்னாளில் மருந்தாய் அமைந்தது புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்கள் மட்டுமே ஓரளவிற்கு என் நண்பன் வீராவின் இடத்தை பூர்த்தி செய்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.


நமக்கு இருக்கும் அதே பழக்கங்கள் நாம் சந்திக்கும் வேறு யாருக்காவது இருக்குமானால் நாம் அவரை மனதளவில் நேசிக்கத் தொடங்கி விடுவோம். அதற்கு உறவு முறை பின்னாளில் தான் தெரிய வரும். அப்படி எனக்கு கிடைத்த நண்பன் அய்யனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு ஜூனியராய் இருந்தவன். எதையோ கற்றுக் கொள்ள வேண்டும், புதிது புதிதாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எங்கள் இருவரையும் இணைத்த, பிணைத்த பொருளானது.
அணுகுண்டு தயாரிப்பது, லேசர் கருவிகள் செயல்படும் விதம் என அறிவியலின் சகல பரிமாணங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அப்போது எங்களுக்கு கட்டுக்கடங்காமல் இருந்தது. அதற்காகவே நூலகத்திற்கு சென்று பல புத்தகங்களை புரட்டி பார்த்ததுண்டு.


நான் ஒரு தலைப்பு கொடுப்பதும், அந்த தலைப்பின் கீழ் அய்யனார் ஒரு கட்டுரை எழுதி, சில நாட்கள் கழித்து என்னிடம் கொடுப்பதும், என எங்கள் அறிவுப் பசிக்கு அளவே இல்லாமல் போனது. பொதுவாக அறிவியலில் கேள்வி கேட்கும் தன்மையை ஒரு நிலைக்கு மேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கே கேள்விக் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை. சகல விசயங்களையும் கேள்விக் கேட்டு அதற்கான விடை தேடும் பணியை முடுக்கி விடுவோம்.


வானம் என்கிற ஒன்றே இல்லையென்றும், அண்டம் என்பது எல்லைகளற்ற ஒரு வெளி என்றும் அப்போதே நாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருந்தோம். எரி நட்ச்சத்திரங்கள், வால் நட்ச்சித்திரங்கள் என்று பல அண்ட ஆச்சரியங்களை ஆராய்ந்துக் கொண்டே எங்களின் பல இரவுப் பொழுதுகள் கழிந்ததுண்டு.


சுஜாதாவின் அறிவியல் புத்தகங்களை அப்போது தேடி தேடித் படிக்கலானோம். ஆனால் சிலக் காலங்களில் அறிவியலின் மீது இருந்த அதிகப்படியான காதல் கொஞ்சம் குறைந்து இலக்கியங்கள் மீது கொஞ்சம் ஆர்வம் திரும்பியது. மு. வரதராசனார் எழுதிய அகல்விளக்கு நாவலை நாங்கள் இருவரும் படித்தது இன்றி பலர் படிக்கவும் காரணமாய் இருந்தோம். இன்று வரை அந்த நாவலை குறைந்த பட்சம் மூன்று, முறையாவது படித்து இருப்பேன். அப்துல் ரகுமானின் பித்தன், ஆலாபனை கவிதைகளை ஒவ்வொரு வரிகளாக சொல்லி அதன் சுவையை அள்ளி அள்ளி பருகினோம். காம உச்சத்தில் காதலியின் இதழில் வடியும் உமிழ் நீரின் சுகத்தை எங்களுக்கு இலக்கியங்கள் கொடுத்தது.


இன்றும் எங்களின் நட்பின் அடி நாதமாய் திகழ்வது புத்தகங்களுமே, நல்ல எண்ணங்களுமே..
நான் பட்டப் படிப்பு முடித்ததும், எங்களின் குடும்பத்தின் வறுமை கோடுகள் பெரிதாக ஆரம்பித்தது. இருக்க இடம் கூட இன்றி நாடோடிகளாய் கொஞ்சக் காலம் திரிந்தோம். (வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். போக இடமின்றி ஆளுக்கு ஒரு இடமாய் திரிந்த அந்த நொடிப் பொழுதுகள் இன்னும் மனதுக்குள் கனன்றுக் கொண்டே இருக்கிறது)


அப்போது நான் என் அக்கா வீட்டில் இருந்தேன். என் அம்மா அப்பா எல்லோரும் என் அத்தையின் வீட்டில் இருந்தார்கள். ஒரு இரவில் நான் இருக்கும் தெருவில் இரண்டு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொள்ளப்பட அந்த தெருவே போர்க்களமாய் மாறியது.
அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது.. நண்பன் அய்யனாரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும், அந்த நேரத்தில் நான் அவன் அருகில் இருக்க வேண்டும் என்றும் அந்த அழைப்பு பணித்தது. மரணத்தின் வலிகளை, அது தரும் வேதனைகளை மிக நன்றாக அனுபவித்தவன் நான். நெஞ்சம் பட படைக்க உடனே அவனை பார்ப்பதற்காக கிளம்பினேன். ஆனால் எங்கள் தெருவில் நடந்த பிரச்சனைகளால் என்னால் இரவில் வெளியே செல்ல இயலவில்லை. மனம் முழுதும் நண்பனின் சோக முகமே நிரம்பி இருந்தது. காலை விடிந்த உடன் அவரசரமாய் கிளம்பினேன்..
அப்போதும் ஒரு அழைப்பு..


அன்று காலை பத்து மணியளவில் ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்விற்காக வர சொல்லி பணித்தது அந்த அழைப்பு.. நிலைமையை எடுத்து கூறியும் இன்றே கடைசி நாள்.. என்று கூறி விட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த வேலை உணவுக்காக அல்லல் பட்டுக்கொண்டிருந்த காலம் அது. உடனடியாக நண்பன் வீட்டிற்கு சென்றேன். மருத்துவ மணியில் இருந்து இன்னுமா வரவில்லை என்று சொன்னார்கள். சரி அதற்குள் நேர்முகத் தேர்வை முடித்து விடலாம் என்று ஓடினேன். திரும்பி வந்து பார்த்த போது, சடங்குகள் முடிந்து விட்டது. இறுதி வரை அவன் தந்தையின் முகத்தை கூட நான் பார்க்க வில்லை. துக்க நேரத்தில் என் நண்பன் சாய்ந்துக் கொள்ளும் அளவிற்கு என் தோள்கள் வரம் பெற்று வர வில்லை போல் இருக்கிறது. வாழ்க்கையின் வசீகர விளையாட்டில் நாங்க இருவர் மட்டுமே அடிக்கடி சிக்கிக் கொள்வது எனக்கு கொஞ்ச வியப்பாகவே இருந்தது.


ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி தன்னுடைய பட்டப் படிப்பை மிக வெற்றிகரமாய் முடித்த என் நண்பன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சமபளத்தில் வேலைக்கு சேர்ந்தான். மிக வறுமையான சூழலில் அவன் படித்து அந்த நிலையை எட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவன் முடித்தான். அந்த நொடிப் பொழுது என் மனதில் நம்பிக்கை எனும் வண்ணத்து பூச்சி வெவ்வேறு வண்ணங்களுடன் சிறகடித்துப் பறந்தது. அவன் பெற்ற நான் பெற்ற வெற்றியாகவே எனக்கு பட்டது.


இக்கட்டான காலத்தில் அவனுக்கு ஆறுதல் கூட சொல்ல இயலாத நான் எப்படி இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னை இணைத்துக் கொள்வது.. என்று மனம் ஒவ்வொரு முறையும் என்னை கேள்வி கேட்கும். இப்போதும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மானம் கூனிக் குருகும். காரணம் மிக தேவையான ஒரு சூழ்நிலையில் நான் அவன் தேடும் நிலையில் நடந்துக் கொண்டேனே.. அவன் கரங்கள் பற்றி நானல்லாவா அவனுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும்.. என்று மனம் இப்போதும் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து கொண்டே இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் என் நண்பனை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவன் தன்னம்பிக்கைக்கும், விடா முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.. இன்னொரு முறை இதே நண்பனைப் பற்றி மீண்டும் எழுதுகின்றேன்.


Thursday, August 6, 2009

வாசமில்லா மலர்கள்...



நீ எனக்கு நிழல் கொடுக்காத மரம்,
என்றாலும் பல பேருக்கு நான்
நிழல் கொடுக்க காரணமாய்
அமைந்தாய்..



சில மனிதர்களை பார்த்த அடுத்த கணமே நமக்கு பிடித்து விடும். ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பழகினாலும் மனம் ஒன்றாமலேயே அவர்களுடன் பழகிக் கொண்டிருப்போம்.
ஒருவர் மீது நமக்கு காதலோ, மதிப்போ ஏற்பட எது காரணமாய் இருக்கிறது என்பதை யாராலும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. நாம் ஒருவர் மீது அதீத பாசத்துடன் இருப்போம். ஆனால் அவரோ நம்மிடம் ஏனோ தானோ என்றுதான் பழகுவார்.


நாம் அவர் மீது பாசத்தை பொழியவும், அவர் நம் மீது வெறுப்பை உமிழவும் சில நேரங்களில் காரணமே இல்லாமல் போகலாம். எந்த ஒரு மனிதரும் நம்முடன் இறுதி வரை வந்துவிடுவது இல்லை என்கிற ஒரே ஒருக் கூற்றை நம் மனதில் பதிய வைத்துக் கொண்டால் பல நேரங்களில்
வாழ்வில் சிக்கலே இருக்காது.


நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தும்போது எங்கள் பள்ளிக்கு புதிதாக ஒரு தமிழாசிரியர் வந்தார். உத்திராபதி. இதேப் பெயர்தான் எனது சித்தப்பாவுக்கும். ஆனால் அது வரை இந்தப் பெயரை பற்றி சிந்தித்தது இல்லை. காரணம் என் சித்தப்பா எனக்குள் ஹீரோவாக இல்லை. சிறுவர்கள் மனதில் நாம் ஹீரோவாக நாமும் சிறுவர்களாக மாற வேண்டி இருக்கும். தந்தை, மகன் என்ற பாகுபாடின்றி பழகும் குடும்பத்தில் பையனுக்கு அவனது அப்பாதான் எப்போதுமே ஹீரோவாக இருப்பார். காரணம் அப்பா, தன்னை மகன் வயதுக்காரராகவே மாறி இருப்பார்.


ஆனால் ஒருவர் மனதில் நாம் ஹீரோ வாக வேண்டுமென்றால் அவர்கள் வயதுக்கு நாம் மாற வேண்டும் என்பது மட்டுமே நியதி இல்லை. சில நேரங்களில் நாம் அவர்கள் வயதுக் காரர்கள் அல்ல என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வயதுக் காரர்கள் உலகமும் வெவ்வோறு. குழந்தைகள் உலக இதில் தனித்துவமானது. அதில் ஒருபோதும் உங்களால் நுழைய இயலாது. அதில் நீங்கள் நுழையாத வரைதான் குழந்தைகள் மனதில் ஹீரோ.


என் தமிழாசிரியரும் அப்படியே. அவர் ஆசிரியர் என்பதை மறந்து மாணவர்களுடன் மாணவராகவே பழகி வந்தார். ஒன்பதாம் வகுப்பில் அவர் தமிழ் பாடம் எடுக்கும்போது சில மாணவர்கள் தங்களை மறந்து அவரது பாடத்தினை கவனிப்பார்கள். அதில் நானும் ஒருவன். அவரது கம்பீரமும், பலத்த துறை அறிவும் எங்களை வியக்க வைத்தது. போகிற போக்கில் பல விசயங்களை அள்ளித் தெளித்துவிட்டு செல்வார். பாடத்திற்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல விசயங்களை உள் நுழைப்பார்.


வடக்கே வீசும் வாடை, தெற்கே வீசும் தென்றல். என்று ஒரு நாள் மிக வேகமாக ஏதோ ஒரு பாடம் எடுக்கும்போது கூறி சென்றார். எனக்கு மிக வியப்பாக இருந்தது. காற்றில் இதமான தென்றல் என்றால் எந்தப் பக்கம் இருந்து வரும், வாட்டி வதைக்கும் வாடைக் காற்று எந்தப் பக்கம் வரும் என்பதெல்லாம் அந்த வயதில் எங்களுக்கு மிகப் புதிதான செய்திகள்.


மிக வெகுளியாக நான் இருந்த அந்தக் காலக் கட்டத்தில் ஒரு சிலருக்கு என் மேல் கோபம் மட்டுமே வரும். ஒன்னும் தெரியாத வெகுளி என்று எல்லோரும் என்னை ஏளனம் செய்வார்கள். ஆனால் எனது வெகுளித் தனத்திற்கு கூட மிக லாவகமாக கையாண்டவர் அவர். எல்லோரும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்றுக் கூறும்போது, "என்ன அவனுக்கு தெரியாது.. உனக்கு எல்லாமே தெரியுமா? அவன் ஒரு பெக்கூலியர் டைப் உன் வேலையப் பாரு டா என்பார். அந்த வயதில் எனக்கு பெக்கூலியர் என்றால் என்ன என்றேத் தெரியாது. இவரும் நம்மை ஏதோ திட்டுகிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இன்னொரு ஆசிரியரிடம் அதற்கான விளக்கத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்ட பின்னர் தான் எனக்கு அவர் மேல் இன்னும் மதிப்பு கூடியது. என் சக மாணவன் ஆனந்த் அந்த வயதில் படு சுட்டியாகவும், சுறு சுறுப்பாகவும் இருப்பான். நல்ல நிறம், நல்ல அழகு என என்னிடம் இல்லாத அனைத்தும் அவனிடம் இருந்தது. என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று நன்றாக படிப்பேன். ஆனால் அது அவனிடமும் இருந்தது. அவனும் நன்றாக படிப்பான்.


பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவனை மிக நன்றாகத் தெரியும். என்னை சக மாணவர்களுக்கே யார் எனத் தெரியாது. ஆனால் இந்த நிலை எதிர்பாராத விதமாக வகுப்பின் மாணவத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்படியே மாறிப் போனது. நானும் பள்ளி அனைவரது மனதிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கியக் காரணம் ஒன்பதாம் வகுப்பின் என்னுடைய் வகுப்பு ஆசிரியர் திரு. பிலிப், மற்றும் தமிழாசிரியர் திரு. உத்திராபதி இருவரும் என்றால் மிகையாகாது. (இவர்கள் எல்லோரையும் தாண்டி என நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் என் ஆசிரியர் திருமதி புஷ்பராணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.)


எல்லோரும் ஆனந்த் புகழ் பாட என் தமிழ் ஆசிரியரும், வகுப்பாசிரியரும் மட்டுமே என்னை முன்னிலைப் படுத்தினார்கள். எனது தேர்வுத் தாள் திருத்தும்போது என் தமிழாசிரியர் என்னை அழைத்து எங்கே என்ன பிழை செய்துள்ளேன். எதனால் மதிப்பெண்கள் குறைகின்றன என பல ஆலோசனைகள் வழங்குவார். என்னை அழைக்கும்போது ஆனந்த் கூட வருவான். "உன்ன யாரு வர சொன்னா. நீ போ" என்று கூறிவிட்டு, நீதான் அவன கூட்டிட்டு வந்தியா? என்று என்னிடம் செல்லமாகக் கோபப் படுவார். எல்லோரும் முன்னிலைப் படுத்தும் ஒருவனை ஒதுக்கிவிட்டு இவர் என்னை முன்னிலைப் படுத்தும்போது என் மனதில் இனம் புரியாத ஒருவித மகிழ்ச்சி ஏற்படும்.


நீ போ. என்று அவனை சொல்லும்போது என் உதடுகளில் பூக்கும் அந்த மெல்லியப் புன்னகை என் வில்லத்தனத்தின் சான்று. எனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க செய்வதற்காகத்தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார் அப்போது எனக்கு தெரியாது. இப்போது உணர்கிறேன்.


ஒரு முறை பள்ளியில் இருந்து இன்ப சுற்றுலா சென்று இருந்தோம். எந்த இடம் என்பது சரியாக நினைவில் இல்லை. திருச்சியாக இருக்கும் என்று ஒரு உள்ளனர்வு. அன்று ஒரு இரவில் எங்கள் அனைவரையும் ஒரு கோவிலில் தங்க வைத்தனர். எல்லா மாணவர்களும் தூங்கிவிட்டனர். நான், ஆனந்த் தமிழாசிரியர் மூவர் மற்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு பன்னிரண்டு மணி, நல்ல குளிர். "போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசிரியர் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். சக மாணவர்கள் நின்றுப் பேசவேப் பயப்படும் ஒருவர், யாராவது முழித்து இருந்தால் கூட டேய் தூங்கு என்று அதட்டுவார். அவரே எங்களை டீ குடிக்க அழைத்து சென்றது எனக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது. நல்லக் குளிர் காலம், லேசான சாரல். இரவு பன்னிரண்டு மணி. மூவரும் டீ குடிக்க கிளம்பினோம். ஆனால் கோவில் கதவு சாத்தப்பட்டிருந்தது. வேறு ஒரு ஆசிரியரிடம் சாவி இருந்தது. யாரையும் எழுப்ப விரும்பாததால் என் தமிழாசிரியர் இருவரையும் எகிறிக் குதிங்கடா என்றார். ஆனந்த் எகிறிக் குதித்துவிட்டான். ஆனால் என்னால் முடிய வில்லை. எங்கே கதவின் கம்பிகள் என்னைக் கிழித்து விடுமோ என்று பயந்து கொண்டு "நான் வரல சார்.. நீங்கப் போயிட்டு வாங்க என்றேன்" ஒரு பார்வை மட்டுமே பார்த்தார். அடுத்த கணம் நான் கேட்டிற்கு அடுத்தப் பக்கம் நின்று இருந்தேன்.


சாரல் மழையில், நடுங்கும் குளிரில், டீ குடித்துக் கொண்டே மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அப்போது இசைப் பற்றி ஓரளவிற்கு அறிவு இருந்தது. ஆனந்திற்கு இசைப் பற்றி ஒன்றும் தெரியாது. வேண்டும் என்றே நான் இசைப் பற்றி பேச்சு எடுத்தேன். இளையராஜா பற்றி நானும் தமிழாசிரியரும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தோம். இளையராஜா அன்னக்கிளி படத்தில் அறிமுகம் ஆனதில் இருந்து சிம்பனி இசையமைக்க சென்றது வரை பேசிக் கொண்டிருந்தோம். சிம்பனி என்றால் என்ன என்று ஆனந்த் கேட்க காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நான் அவனுக்க விளக்க ஆரம்பித்தேன்.


"இளையராஜாவின் புகழ் எல்லாம் தேவா வெள்ளையம்மா (படம் பெயர் சரியாக நினைவில் இல்லை) படத்தில் அறிமுகம் ஆகிற வரைக்கும் தாண்டா" என்று என் தமிழாரிசியர் பேச்சை தொடர்ந்தார். அவர் தேவா ரசிகர் என்பது எனக்கு பின்னர்தான் எனக்கு தெரியும். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வரும் "ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற பாடலை அவர் ரசித்துப் பாடும்போது நாங்களே மெய் மறந்துப் போவோம். தேவாப் பற்றி தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.


டீக் குடித்து முடித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழித்துக் கொண்டிருப்பவனுக்கு இரவு நீண்டதாகத் தெரியும் என்பார் புத்தர். ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன், மனம் விரும்பும் செயல்களை செய்துக் கொண்டிருந்தால் ஒரு இரவல்ல அனைத்து இரவுமே நமக்கு நொடிப் போல் நகர்ந்து விடும்.


இசை, அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகள் பற்றியும் அன்று நாங்க விவாதம் நடத்தினோம் (அது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்) முழு அளவில் இல்லை என்றாலும் கூட எங்களுக்கு தெரிந்தது வரை பேசிக் கொண்டிருந்தோம்.


இன்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள என் தமிழாசிரியர் என் மனதில் தன்னம்பிக்கை உதிக்கவும், என்னை நானே உணரவும் காரணமாய் இருந்தவர்.


பின் தங்கி இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் இதுப் போன்று ஒரு ஆசிரியர் கிடைப்பார் என்றால் படிப்பு எல்லா மாணவர்களுக்கும் சுகமாய் இருக்கும். சுவையாய் இருக்கும்.


அவர் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவர் பற்றி பேசுவோம்.


Sunday, August 2, 2009

சலனமற்ற வார்த்தைகள்



வார்த்தைகள் வசீகரமானவை. அவை வக்கிரமானவையும் கூட. வார்த்தைகள் வாசமிக்கவை. அவை வலுவானவையும் கூட. வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சலனமுள்ள வார்த்தைகள் சில நேரங்களில் சலனமற்றும் போய் விடுகின்றன.


தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் எந்த ஒரு பொருளும், உயிரும் மிக அழகானதாக தோற்றமளிக்கக் கூடியவை. சூரியன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது சூரியன். இல்லையேல் அது மடிந்துப் போன நட்சத்திரம். மனிதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அவன் மனிதன். இல்லையேல் அவன் பிணம். இயங்கிக் கொண்டே இருபது அழகு என்றாலும் ஒருவகையில் இயங்காமல் இருப்பதும் அழகுதான். குட்டைபோல் தேங்கி இருக்கும் நீரும், தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நதி நீரும் ஒரே குணங்கள் கொண்டவைதான். இருக்கும் இடங்களும் அதன் இயக்கமும் தான் வேறுபடுகின்றது. வார்த்தைகளும் அப்படிதான். இயங்கிக் கொண்டே இருக்கும் வார்த்தைகள். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள். இரண்டும் ஒரே பண்புக் கொண்டவைதான். ஆனால் அவை உபயோகிக்கப்படும் இடங்களை பொருத்து அதன் பண்புகள் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.



பெண்களிடம் திருமணத்திற்கு முன்னர் நாம் பேசும் வார்த்தைகளுக்கும், திருமணத்திற்கு பின்பு நாம் பேசும் வார்த்தைகளுக்கும் அதீத வேறுபாட்டை உணர முடியும். வார்த்தை ஒன்றுதான். ஆனால் காலம் மாறும்போது அவற்றின் குணமும் மாறுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஒரு சில வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகிக்க முடியாது. ஒரு சில வார்த்தைகளை அந்தரங்கமாக பயன்படுத்த முடியாது. ஒரு சில வார்த்தைகளை தாய் தந்தையுடன் உரையாட எடுத்தாள முடியாது. உறவு முறையைப் பொருத்து நாம் வார்த்தைகளையும் மாற்றிப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். சலனமற்றுக் கிடக்கும் வார்த்தைகள்தான் சில நேரங்களில் மனிதர்களை மாக்களாக மாற்றுகின்றன.


பொது இடங்களில் தனிப்பட்ட மனிதனையோ, ஒரு குழுவையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தகாத வார்த்தைகளால் திட்டினால் அது ஏற்படுத்தும் விபரீதம் அளவிட முடியாதது. வெறும் வார்த்தைகள் தானே விட்டுவிடுவோம் என்று யாரும் நினைப்பதில்லை. காரணம் வார்த்தைகள் சலனமற்று இருந்தாலும், அவை பேசுபவர்களை சலனப் படுத்தி விடும் வல்லமை பெற்றவை.


கோபத்தில் பேசிவிட்டேன். வாய்தவறி பேசிவிட்டேன் என்று சொல்வது எல்லாம் ஒரு விதமான பம்மாத்து வேலை. ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் நமது எண்ணங்களே நமது வார்த்தைகளை ஒழுங்கமைக்கிறது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கணவன் மனைவி இடமோ, அல்லது மனைவி கணவனிடமோ ஒரு முறை கூறினால் பேச்சு வாக்கில் வந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திவிட்டு கோபத்தில் பேசிவிட்டேன் என்றோ, வாய்தவறி வந்து விட்டது என்றோ கூறினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.


சில நேரங்களில் இந்த வார்த்தையை பேசினால் கேட்பவர் மனம் புண்படுமே என்று நாம் பேசுவதை தவிர்த்து இருப்போம். ஆனால் மிக உக்கிரமான வேளையில் அந்த வார்த்தைகள் நம்மை தாண்டி வெளியே வந்து குதித்து விடுகின்றன. இது அந்த நொடியில் ஏதோ தானாக வந்துக் குதித்த வார்த்தைகள் அல்ல. நம் ஆழ் மனதின் தவிப்பை கட்டுக்கடங்க செய்யும் வார்த்தைகளின் வேலைதான் இது. சில நேரங்களில் வார்த்தைகள்தான் நம்மை ஒழுங்கமைக்கின்றன. நமது கோபத்திற்கு வார்த்தைகள்தான் வடிக்காலாக இருக்கின்றன. ஆனால் அந்த வார்த்தைகள் யாரை சென்று சேர்கிறதோ அவரின் மனம் படும் பாட்டை நாம் ஒருநாளு உணர்ந்ததில்லை. உணரப் போவதும் இல்லை.


மன்னிப்பு என்பதும் வார்த்தைதான். மன்னித்துவிட்டேன் என்பதும் வார்த்தைதான். ஆனால் நம்மில் எத்துனை பேர் இந்த வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துகிறோம். தெருவில் நடந்துப் போகும் போது, தெரியாமல் யார் காலையாவது மிதித்துவிட்டால் நம்மையறியாமல் நமது வாயில் இருந்து மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தை உதிர்ந்துவிடுகிறது. அவர்களும் இதழோர சிரிப்பின் மூலம் மன்னித்துவிட்டேன் என்கிற வார்த்தையை நம்மிடம் உதிர்க்கிறார்கள்.



யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் காலை மிதித்ததற்கே மன்னிப்பு கேட்கும் நாம், நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர், தாய், தந்தை, என நெருங்கியவர்களிடம் பேசும் தகாத வார்த்தைகளுக்கு என்றாவது ஒருநாள் மன்னித்துவிடுங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்போமா? ஒரு பைசாவிற்கு பயன்படாத மன்னித்துவிடுங்கள் என்கிற வார்த்தையை நாம் ஏன் பயன்படுத்த மறுக்கிறோம். காரணம் ஈகோ என்பார்கள். நம்மை நேசிக்கும் சிலரை நாம் காயப்படுத்தும்போது சில நேரங்களில் அவர்கள் நம்மிடம் முன்புபோல் சரியாக பேசாமல் வார்த்தைகளை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் தவறு செய்யும் நம்மில் எத்துனை பேர் அதனைப் புரிந்துக் கொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி இருப்போம்.


வெறும் வார்த்தைகளை பயன்படுத்தி மட்டுமே பயன்படுத்தி ஒருவனை வாழ்நாள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். ஆனால் நாம் யாரும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவதில்லை. உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் ஒருவர் உங்களிடம் சரியாகப் பேசாமல் போனால் ஒரு நாள் முழுவதும் அவரிடம் அன்பாகப் பேசுங்கள். வெறும் வார்த்தையை மட்டும் பயன்படுத்துங்கள். பணம், பொருள் எதுவும் வேண்டாம். அடுத்த நாள் உங்கள் உறவின் பலம் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும். சலனமற்ற வார்த்தைகள் சில நேரங்களில் சலனத்தை மட்டுமல்ல, மிகப் பெரிய மாறுதலையும் ஏற்படுத்தும். வார்த்தைகளை வாசமிக்கதாக மாற்றுவதும், துர்நாற்றம் வீசுவதாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளதேத் தவிர வார்த்தைகள் ஒருபோதும் தங்களை எப்படியும் மாற்றிக் கொள்வது இல்லை. நாமும் வார்த்தைகளாக இருப்போம். சலனத்துடன்.