அது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அரசாங்கப் பொதுத்தேர்வு என்று மற்ற மாணவர்கள் எல்லோரும் எப்போது புத்தகம் கையுமாய் திரிந்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் சென்னையில் எங்கெங்கு எல்லாம் அரசாங்க நூலகங்கள் இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருந்தேன். காரணம் பாடப் புத்தகங்கள் தாண்டியும், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன என்று என் உள்மனது சொன்னதன் விளைவே நூலகங்களை தேடிச் சென்றேன்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவான்மியூர் பகுதியில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகம். முதன் முதலாக இந்த நூலகத்தின் வாயிலில் நான் நுழைந்தபோது மனதில் ஒருவித பயம் மட்டுமே தோன்றியது. காரணம் எனது பள்ளிக் கூடத்தில் கூட பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் என்றாவது அந்த புத்தகங்களை தொட்டால் எனது தலைமை ஆசிரியர் என்னை விரட்டி அடிப்பார். இத்தனைக்கும் நானும் எனது நண்பனும் தான் அப்போது அந்தப் பள்ளி மாணவத் தலைவர்கள். பாடப் புத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் நம்மைப் போன்ற மாணவர்கள் படிக்கக் கூடாதோ என்று என் மனதில் ஒரு வித எண்ணம் கூட தோன்றியது உண்டு. ஆனால் எனது ஆசிரியர் ஒருவர்தான் திருவான்மியூர் நூலகம் பற்றி என்னிடம் கூறினார். அங்கே சென்று உறுப்பினர் ஆகி தினமும் நிறையப் புத்தகங்கள் படி என்று எனக்கு அறிவுரை கூறினார். எப்போதும் நூலகங்களில் உறுப்பினர் அல்லாதவர்களும் படிக்க தினசரிகள், வாராந்தரிகள், மாத இதழ்கள், மற்றும் ஒரு சில சிற்றிதழ்களும் ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் உறுப்பினர் ஆகாமல் நாம் எந்தப் புத்தகங்களையும் படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் அங்கிருக்கும் அலுவலர்கள் யாராவது நம்மை அடிப்பார்கள் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. எனவே முதலில் நூலகத்தின் உறுப்பினராகி விட வேண்டும் நினைத்துக் கொண்டேன். அதுப போன்றே, நூலகரிடம் விண்ணப்பப் படிவம் வாங்கி அதனைப் பூர்த்தி செய்து எனது தலைமை ஆசிரியரின் கையொப்பம் வாங்கி அந்த நூலகத்தின் உறுப்பினர் ஆனேன். (அரசாங்கத்தை பொறுத்தவரை எந்த ஒரு சேர்க்கைக்கும் ஒரு அரசாங்க உயர் அதிகாரியின் அதாவது பச்சைப் பேனாவால் கையொப்பம் இடக் கூடிய அதிகாரியின் கையொப்பம் தேவை. எனவே தான் எனது தலைமையாசிரியரின் கையொப்பம் தேவைப்பட்டது. ஆனால் அவர் கையொப்பம் போட மறுத்ததும், பின்னர் எனது ஆசிரியரின் வேண்டுகோளுக்கேற்ப அவர் கையொப்பம் போட்டது தனிக்கதை.)
பின்னர் முதல் நாள் தயங்கி, தயங்கி நூலகத்தின் உள்ளே சென்று தினசரி நாளிதழ்களான தினத்தந்தி, தினமலர், தினமணி போன்றவற்றை படிக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி நாம் படிக்க வேண்டிய புத்தங்கள் நிறைய இருக்கின்றன என்ற என் உள்மனதின் நினைப்பு நியாயமாகப்பட்டது. பின்னர் தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அந்த நூலகத்திற்கு சென்று விடுவேன். தொடர்ந்து நான் அந்த நூலகத்திலேயே உட்கார்ந்து நீண்ட நேரம் படித்துக் கொண்டிருப்பதை பார்த்த அந்த நூலகத்தின் நூலகர் திரு. இளங்கோ என்பவர் எனக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் அவரே எடுத்துக் கொடுத்து படிக்க சொல்வார். நான் சோர்ந்து போகும் நேரங்களில் எனக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து, சோர்வை போக்கி என்னை மேலும் படிக்கத் தூண்டுவார். பள்ளியைக் காட்டிலும் நூலகத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களே மிக அதிகம். ஆனால் எல்லோரும் என்னைவிட வயதில் பல மடங்கு மூத்தவர்கள். அந்த நூலகத்திற்கு சென்று படிப்பவர்களில் நான் மட்டுமே மாணவன். காரணம் வேறெந்த மாணவனுக்கும் தெரியாது இது போன்ற நூலகங்களைப் பற்றி. எனது ஆர்வத்தால் நூலகத்திற்கு எப்படி புத்தகங்கள் வருகின்றன. யார் அதனைக் கொடுப்பார்கள். தொலைந்துப் போனால் என்ன செய்வார்கள். பழையப் புத்தங்களை என்ன செய்வார்கள் என்று அந்த நூலகரிடம் கேள்விகள் கேட்டு தொலைத்தேடுப்பேன். அவரும் எனக்கு பொறுமையாக பதில் சொல்லுவார்.
ஒரு முறை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு அழைத்து சென்று புத்தகங்களை அரசாங்கம் நூலகத்திற்கு வழங்கும் முறை உள்ளிட்ட முறைகளை நேரில் விளக்கினார். அப்போது மைய நூலகத்திலிருந்து சில ஆயிரம் புத்தங்களை திருவான்மியூர் நூலகத்திற்கு பிரித்துக் கொடுத்தனர். அந்த நூல்களை ஆட்டோவில் எடுத்துக் கொண்டு நானும், நூலகரும் ஆட்டோவில் திருவான்மியூர் வந்தடைந்தோம். அரை மணி நேரப் பயணத்தில் ஆயிரக் கணக்கான புத்தகங்களுக்கு நடுவே நான் பயணித்த அந்த மணித் துளிகளில் நான் அடைந்த மகிழ்ச்சி பற்றி சொல்லில் விவரிக்க இயலாது. நூலகங்கள் எப்படி இயங்குகின்றன. நூல்களை எப்படி பதிப்பகத்தாரிடம் இருந்து வாங்குகிறார்கள், எப்படி நூல்களை நூலகத்தில் வரிசைப் படுத்துகிறார்கள், நூல்களுக்கு எப்படி வரிசை எண் அளிக்கிறார்கள் போன்ற பல விசயங்களை அந்த நேரங்களில் நான் தெரிந்துக் கொண்டேன். நூல்கள் எனது அந்தரங்க நண்பனாகவே விளங்கியது. சுஜாதா, கல்கி, வரதராசனார், ஜெயகாந்தன், ஜானகிராமன், கீரா, என்று நான் பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் படித்த எழுத்தாளர்கள் பலர்.
ஆனால் இவர்கள் அனைவரும் எழுத்துலக ஜாம்பவான்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒவ்வொருவரின் எழுத்து நடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கிராமத்தில் பார்த்த பல விசயங்களை கீரா தனது சொல்லில் வடித்திருப்பார். எனக்கு அவரது எழுத்தைப் படிக்கும்போது எண் கிராமத்து மனிதர்களிடையே வாழ்வது போன்ற ஒரு எண்ணம் ஏற்படும். கல்கியின் கள்வனின் காதலி புத்தகத்தை படிக்கும்போது அவர் விவரிக்கும் காட்சிகள் எண் கண் முன்னே விரியும். இதுதான் எனக்கு கல்கியிடம் பரிச்சயமான முதல் புத்தகம். அதன் பின்னர் தான் அவரது மற்றப் புத்தகங்களையும் தேடித் படித்தேன். மு. வரதராசனாரின் "அகல் விளக்கு" நாவல் எனக்கு ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. நான் இப்போதும் சோர்வடையும் நேரங்களில் அந்தப் புத்தகத்தைதான் எடுத்துப் படிப்பேன். அந்த சமயங்களில் நூலகரைத் தவிர வேறு யாரும் என்னை அப்போது ஊக்கப்படுத்தவில்லை. எனது உடற்கல்வி ஆசிரியர் என்னை அப்போது உற்சாகப் படுத்துவார். நான் படித்த பல புத்தங்கள் பற்றி என் சக நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் விவாதிப்பேன். ஆனால் இவர்கள் யாரும் நான் படித்த புத்தகங்களை படித்திருக்க மாட்டார்கள். சில நேரங்களில் நான் சொல்லும் புத்தகத்தின் பெயரைக் கூட என் ஆசிரியர்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை பாடப் புத்தகங்கள்தான் புத்தகங்கள். அதை அச்சுப் பிழை இல்லாமல் எழுதுபவன்தான் உண்மையான மாணவன். ஒரு முறை தமிழில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது நான் புத்தகத்தை தவிர்த்துவிட்டு எனது எழுத்து நடையில் பதில் எழுதி இருந்தேன். பல மேற்கோள்கள் இட்டு நான் எழுதிய அந்தப் பதிலுக்கு கிடைத்த மதிப்பெண் பூஜ்ஜியம்தான். காரணம் சில ஆசிரியர்களின் உலகமே பாடப் புத்தகங்கள்தான். பின்னர்தான் தெரிந்துக் கொண்டேன். பாடப் புத்தகத்தை மனப்பாடம் செய்யத் தெரிந்தவன்தான் உண்மையான மாணவன் என்று. இதற்கடுத்து நான் என் எழுத்து நடையை விட்டு புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினேன். பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு முன்னர் மிகப் பெரிய இழப்பை (மரணத்தை) சந்தித்தாலும் நான்தான் அந்தப் பள்ளியின் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற மாணவன். அன்று நான் எழுதிய என் சுய எழுத்து நடைக்கு நல்ல மதிப்பெண் கிடைத்து இருந்தால் நான் ஊக்கம் அடைந்திருப்பேன். இன்னும் பல படிகள் மேலே நின்றிருப்பேன். ஆசிரியர்கள், அரசாங்கம் என யாரும் மாணவர்களின் பொது அறிவைப் பற்றி சிந்திப்பதில்லை. பாடப் புத்தகங்கள் தாண்டியும் அவன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது என்று யாருக்கும் தெரிவதில்லை.
பத்து வருடத்திற்கு முன் ஒரு நூலகம் பற்றி நான் எப்படியெல்லாம் அச்சம் கொண்டு இருந்தேனோ, இன்னமும் பல மாணவர்கள் அப்படியே தான் இருக்கின்றனர். நூலகங்களை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள் யார். ஆசிரியர்களா? பெற்றோர்களா? அரசாங்கமா? நூலகம் என்றால் என்ன என்றுக் கூட தெரியாத பல மாணவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நான் படித்த பள்ளியில் முதன் முதலில் நூலக உறுப்பினர் ஆனது நான் தான். அதன் பின்னர் என் நண்பர்கள் சிலருக்கு பரிந்துரைத்தேன். பல ஆயிரம் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு சென்றிருக்கும் அந்தப் பள்ளியில் இருந்து நூலகத்தில் உறுப்பினராக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை பத்தை கூட தாண்டி இருக்காது. ஒவ்வொரு மாணவனும் நூலகத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தை அவனுக்குள் விதைக்க வேண்டும். இதனை மிரட்டி செய்திடல் ஆகாது. நூலகம் பற்றிய நல்ல எண்ணத்தை அவனுக்குள் விதைக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். பாடப் புத்தகங்களுடன் சேர்த்து மற்றப் புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று அவனை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் படிப்பது என்றென்றும் சுகமே...

2 comments:
அருமை
நன்றி ஞானசேகரன்.. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment